2010

2010

சட்டம் எவரின் தராதரத்தையும் அந்தஸ்தையும் கருத்திற்கொண்டு செயற்படுவதில்லை

rohitha.jpgஇலங்கை யில் நடைமுறையிலுள்ள சட்டம் அனைவருக்கும் பொதுவானது. அது எவருடைய தராதரத்தையும், அந்தஸ்தையும் கருத்திற்கொண்டு செயற்படுவதில்லை. அத்துடன் அரசாங்கம் எவரையும் அரசியல் பழிவாங்கும் எண்ணத்தில் செயற்படவும் இல்லை என வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார். சுயாதீனமாக இயங்கும் சிவில் நீதிமன்ற நடைமுறையும் இராணுவ நீதிமன்ற நடைமுறையும் எமது சட்டவாக்கத்துள் இருக்கிறது என்றும் அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.

தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள கொன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த பிரிட்டனின் நிழல் பாதுகாப்பு அமைச்சரான லியாம் பொக்ஸ் வெளிவிவகார அமைச்சரை நேற்று மாலை அமைச்சு அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பேசிய லியாம் பொக்ஸ் கைது செய்யப் பட்டுள்ள ஜெனரல் சரத்பொன்சேகா சிவில் நீதிமன்றம் ஊடாகவே விசாரிக்கப்பட வேண்டும் என்றும், அவரது விசாரணை வெளிப்படையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இதற்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் போகொல்லாகம மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரிட்டனுக்கும் இலங்கைக்கும் இடையே உறவுகள் குறித்தும் பேசிய இருவரும், இரண்டாவது முறையாகவும் 58 வீத வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரிட்டன் சார்பிலும், கொன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் சார்பிலும் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.

வேட்புமனுத் தாக்கல் நாளை ஆரம்பம்

srilanka_parliament_02.jpgவேட்பாளர் நியமனப்பத்திரங்களைத் தயாரிக்கும் பரபரப்புக்கு மத்தியிலும், தேர்தலில் போட்டியிடும் சின்னத்தைத் தெரிவு செய்வதில் சிறு அரசியல் கட்சிகள் இன்னமும் முடிவெடுக்க முடியாத நிலையில் இறுதி நேர பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளன.

பெரிய அரசியல் கட்சிகள் வேட்பாளர் நியமனப் பத்திரங்களைத் தயாரிக்கும் இறுதிக்கட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. அதேநேரம் சிறிய கட்சிகளுக்கு ஆசனங்களை ஒதுக்கிக் கொடுப்பதில் முனைப்புக் காட்டியுள்ளன.

இந்த நிலையில் பெரிய கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்திருக்கும் சில அரசியல் கட்சிகள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதா அல்லது இணைந்தே போட்டியிடுவதா என்பதில் இன்னமும் தெளிவான முடிவை எடுக்க முடியாத நிலையில் உள்ளன.

யாழ்ப்பாணத்தில் தனித்துப் போட்டியிடுவதெனவும் அதேநேரம் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் நட்புறவுடன் செயற்படுவதெனவும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) தீர்மானித்திருக்கிறது. எனினும், அரச தரப்புடன் நேற்றைய தினமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகக் கட்சியின் பேச்சாளரொருவர் தினகரனுக்குத் தெரிவித்தார்.

அரசாங்க ஆதரவு கட்சியாகத் தேர்தலில் களமிறங்குவதுடன், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து போட்டியிடுவதனை விடவும், தனித்து வீணைச் சின்னத்தில் போட்டியிடுவது சாதகமானது என ஈ.பி.டி.பி. நம்புகிறது.

இதேபோன்று ஆளுந்தரப்பில் உள்ள மலையக மக்கள் முன்னணி நுவரெலியா, பதுளை மாவட்டங்களில் தனித்து கட்சியின் மண்வெட்டிச் சின்னத்தில் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவித்தன. அமரர் பெ. சந்திரசேகரனின் பாரியார் சாந்தினி சந்திரசேகரனின் தலைமையில் நுவரெலியா மாவட்டத்திலும், மாகாண சபை உறுப்பினர் எஸ். அரவிந்த்குமார் தலைமையில் பதுளை மாவட்டத்திலும் மலையக மக்கள் முன்னணி களமிறங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இறுதிக் கட்டத்திலும் அரச தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை, தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நேற்றும் கூடி ஆராய்ந்துள்ளது. இம்முறை கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் பலருக்குப் போட்டியிட வாய்ப்பளிக்காதிருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக எம்.கே. சிவாஜிலிங்கம், என்.ஸ்ரீகாந்தா ஆகியோருக்கு வாய்ப்பளிக்கக் கூடாதெனக் கூட்டமைப்பின் பெரும்பாலானோர் கூறியுள்ளனர்.

இந்நிலையில், சிவாஜிலிங்கமும், ஸ்ரீகாந்தாவும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தலைமையிலான புதிய இடதுசாரி விடுதலை முன்னணி கட்சியில் போட்டியிடுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் முடிவுக்கு எதிரான உச்சமன்ற மனு: கணனி மூலம் திரிபு படுத்தப்பட்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டை மனுவில் சேர்க்காதது ஏன்?

laxman.jpgஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் கணனி மூலம் திரிபுபடுத்தப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டும் எதிர்க்கட்சிகள், உச்ச நீதிமன்றத்திற்கு தாக்கல்செய்துள்ள தேர்தல் முடிவுகளுக்கு எதிரான மனுவில் அதனைக் குறிப்பிடாததேன் என ஊடகத் துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கேள்வியெழுப்பினார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் இது குறித்து தெரிவித்த அமைச்சர், நாட்டு மக்களும் சர்வதேசமும் நீதியானதென ஏற்றுக் கொண்ட தேர்தலை மோசடி என்று கூறுபவர்கள் பொதுத் தேர்தலில் இதைவிட மோசமான படுதோல்வியைச் சந்திப்பது நிச்சயமெனவும் குறிப்பிட்டார்.  தகவல் ஊடகத்துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

நடந்து முடிந்த தேர்தல் நீதியானதென ஐரோப்பிய ஆணைக் குழு உறுதிப்படுத்தியுள்ளது. அதற்கான சான்றிதழையும் வழங்கியுள்ளது. தேர்தல் வாக்களிப்பு முடிவடைந்த அன்றைய தினம் 4.00 மணிக்கு அத்தேர்தல் நீதியானதும் அமைதியுமானதுமெனக் கூறிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அது தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தமது நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.

எனினும், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் அவருடன் இணைந்திருந்த ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க கணனி மோசடியொன்று இடம்பெற்றதாகக் குறிப்பிட்டார். நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனுவில் அரச வளங்கள் உபயோகப்படுத்தப்பட்டதாகவும் மேலும் சில குற்றச்சாட்டுக்களையும் குறிப்பிட்டுள்ளவர்கள் ஏன் கணனி மோசடி என் பதைக் குறிப்பிடவில்லை. இதன் மூலம் இவர்கள் அடுத்துவரும் தேர்தலுக்கான சூழ்ச்சிகளை இப்போதிருந்தே ஆரம்பித்துள்ளமையே தெளிவாகிறது.

வீண் பிரசாரங்களை விட்டுவிட்டு நியாயமான அத்தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ளுமாறு நாம் கேட்டுக் கொள்கிறோம்.

பொதுநலவாய அமைப்பின் கூற்று தேர்தல் ஜனநாயக ரீதியில் நடைபெறவில்லை எனத் தெரிவிக்கின்றதே என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், ஐரோப்பிய ஆணைக் குழு போன்ற பிரசித்திபெற்ற அமைப்புக்கள் நியாயமான தேர்தல் என குறிப்பிடும் போது சில அமைப்புக்கள் சில சக்திகளுக்கு சார்பாக அதற்கெதிரான கூற்றுக்களைத் தெரிவிப்பதை நாம் பெரிதுபடுத்த முடியாது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் 150 ஆசனங்களைப் பெற்று அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வந்து நல்லாட்சி யொன்றை அமைக்க முற்படும் அரசாங் கத்துக்கு மக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டுமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்

10 இலட்சம் கையெழுத்துக்கள் திரட்டும் நடவடிக்கை நேற்று ஆரம்பம்

ranil.jpgஇராணுவப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக்கோரி நாடு முழுவதிலும் 10 இலட்சம் கையெழுத்துக்களைத் திரட்டும் நடவடிக்கை நேற்று ஆரம்பமானது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்வின் தலைமையில் இந்நிகழ்வு கேம்பிட்ஜ் ரெரஸில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி. , ஸ்ரீ லங்க முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு, இடதுசாரி முன்னணி, ஐக்கிய சோஷலிசக் கட்சி, புதிய சிஹல உறுமய, மற்றும் பெருந்தோட்டத் துறையை பிரதிநிதித்துவப்படுத்துகிற தொழிற்சங்கங்கள், புத்திஜீவிகள் அமைப்பு, ஜனநாயகக் குழுக்கள் ஆகிய அமைப்புகள் ஊடாக இந்த கையெழுத்து திரட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. 

இஸ்ரேல் மீது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் குற்றச்சாட்டு

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் பாலத்தீனர்களின் வாழ்க்கையை மிகவும் மோசமாக்கும் நடவடிக்கைகளில் இஸ்ரேல் தொடர்ச்சியாக ஈடுபடுவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.

இஸ்ரேலிய கொள்கையை மிகவும் கடுமையாக விமர்சிக்கும் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஒரு அறிக்கை, சுமூகமான வாழ்க்கையை வாழ்வது என்பது பல பாலத்தீனர்களுக்கு அங்கு முடியாத காரியமாகிவிட்டிருக்கிறது என்று கூறுகிறது.

டொயோட்டா மேலும் சில கார்களை திரும்பப் பெற ஆலோசனை

toyota-corolla.jpgஜப்பானிய டொயோட்டா கார் உற்பத்தி நிறுவனம் தமது கார்களில் சிலவற்றை மீளப்பெறும் மற்றுமொரு நடவடிக்கை குறித்து தாம் கவனம் செலுத்துவதாக கூறுகிறது.

இந்தத்தடவை தமது பிரபலமான டொயோட்டா கொரலா கார்களில் பவர் ஸ்டியரிங்குகளில் ஏற்பட்ட பிரச்சினைகளாலேயே கார்கள் திரும்பப்பெறப்படவுள்ளன.

என்ன தவறு நேர்ந்திருக்கிறது என்ற விபரம் இன்னமும் தெளிவாகவில்லை என்று கூறியுள்ள ஒரு மூத்த டொயோட்டா அதிகாரி, அவை குறித்து நூற்றுக்கும் குறைவான முறைப்பாடுகளே வந்துள்ளதாகவும் கூறுகிறார்.

தமிழ் மக்களைப் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு எதற்கும் விலைபோக முடியாத கொள்கையில் உறுதிப்பாடு கொண்டவர்களே தேவை.- முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்

அரசியலில் இறங்கும் உத்தேசம் எதுவும் தனக்கு இல்லையென்று உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் புதுமுகங்களைக் களமிறக்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்திருப்பதாகவும் அதில் நீதியரசர் விக்னேஸ்வரன் , பேராசிரியர் சி.கே.சிற்றம்பலம் மற்றும் யாழ்.மாநகரசபை முன்னாள் ஆணையாளர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் அடங்கியிருப்பதாகவும் சில ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் தொடர்பாக தற்போது தமிழகத்தில் இருக்கும் முன்னாள் நீதியரசர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் சார்பிலான பொது வேட்பாளராக போட்டியிட முன்வருமாறு தன்னிடம் கேட்கப்பட்டதைப் போன்றே பொதுத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட முன்வருமாறு கேட்கப்பட்டதாகவும் எந்தத் தேர்தலிலும் போட்டியிடும் உத்தேசம் தனக்கு இல்லையென்றும் திட்டவட்டமாகப் பதிலளித்துவிட்டதாகவும் நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனுதாபிகளான முக்கியஸ்தர்கள் சிலர் தன்னை அணுகி தேர்தலில் போட்டியிட முன்வருமாறு கேட்டபோது அவர்களிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய அளவுகோல் குறித்து சில ஆலோசனைகளை முன்வைத்ததாகக் கூறிய விக்னேஸ்வரன் “பெரும் இக்கட்டான சூழ்நிலையில் தமிழ் மக்களைப் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு எதற்கும் விலைபோக முடியாத கொள்கையில் உறுதிப்பாடு கொண்டவர்களே தேவை. அதனால், அத்தகைய குணாதிசயங்களைக் கொண்ட கற்றறிந்த பிரமுகர்களையே வேட்பாளர்களாக தேர்தலில் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் குறிப்பிட்டார்.

சரத் பொன்சேகாவிடம் வாக்குமூலம் பெறப்பட்டது: குற்றத் தடுப்புப் பிரிவினர்

sarath.jpgஜெனரல் சரத் பொன்சேகாவிடம் இருந்து வாக்கு மூலத்தினை பதிவு செய்துள்ளதாக குற்றத் தடுப்புப் பிரிவினர் நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இராணுவத்தில் கடமையாற்றிய வேளை 4 ஆயுதக் கொள்வனவுகளில் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் ஊழல் மோசடிகள் குறித்தே குற்றத்தடுப்புப் பிரிவினர் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.

ஹய் கோப் நிறுவனத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட ஆயுதக்கொள்வனவு மோசடி தொடர்பான வழக்கினை கொழும்பு மஜிஸ்ரேட் நீதவான் லங்கா ஜெரத்ன நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவிடம் இருந்து கடந்து ஞாயிற்றுக்கிழமை வாக்கு மூலத்தை பதிவு செய்ததாகத் தெரிவித்த குற்றத்தடுப்புப் பிரிவினர்,பிரிடிஷ் போர்னியோ டிபன்ஸ் கம்பனி மற்றும் ஹய் கோப் கம்பனிகள் குறித்து தாம் அறிந்திருக்கவில்லை என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர். எனினும் 4 ஆயுதக் கொள்வனவுகளின் போதும் தாம் முறையான விதிமுறைகளை பின்பற்றியுள்ளதாக ஜெனரல் சரத் பொன்சேகா வாக்குமூலத்தல் தெரிவித்ததாக குற்றத்தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வாக்கு எண்ணும் நிலையங்களில் கண்காணிப்பாளருக்கு அனுமதி?

electionவாக் கெண்ணும் நிலையங்களில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட அனுமதி வழங்கும் படி தேர்தல் ஆணையாளரிடம் கோர பெப்ரல் அமைப்பும், தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையமும் தீர்மானித்துள்ளன. இந்த விடயம் தொடர்பாக தேர்தல் ஆணையாளருடன் அடுத்துவரும் தினங்களில் கலந்துரையாடவிருப்பதாக அந்த அமைப்பு க்களின் முக்கியஸ்தர்கள் நேற்றுக் கூறினர். எமது இக்கோரிக்கைக்குத் தேர்தல் ஆணையாளர் திருப்திகரமான பதிலை அளிப்பார் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

இதேவேளை, வாக்களிப்பு நிலையங்களுக்குள் இருந்தபடி தேர்தல் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையாளர் இவ்விரு அமைப்புக்களுக்கும் ஏற்கனவே அனுமதி வழங்கி இருப்பது தெரிந்ததே. இதேநேரம் பெப்ரல் அமை ப்பு நாளை மறுதினம் சனிக்கிழமை தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்கவுடன் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

வடக்கு, கிழக்கில் தொ. நு. கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் – கொரிய வங்கி 9 கோடி டொலர் கடனுதவி

வடக்கு கிழக்கு மாகாணங்களில் தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி மத்திய நிலையங்கள் அமைப்பதற்காக கொரிய ஏற்றுமதி இறக்குமதி வங்கி 9 கோடி அமெரிக்க டொலர்களை கடனுதவியாக வழங்கியுள் ளதாக தொழில் மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சு தெரிவித்தது.

இந்தத் கடனுதவியினூடாக கல்குடா, மன்னார் ஆகிய இடங்களில் தொழில்நுட்பக் கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளதோடு திருகோணமலை, வவுனியா, சேருநுவர ஆகிய இடங்களில் தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கவும் திட்டமிட்டுள்ளதாக அமைச்சு கூறியது.

மேற்படி கடனுதவியை பெறுவது தொடர்பான ஒப்பந்தம் அண்மையில் கைச்சாத்திடப்பட்டது. இதன்படி, வடக்கு கிழக்கில் புதிதாக பல தொழில் நுட்பக் கல்லூரிகள், தொழிற் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. அதற்கான இடங்களை அடையாளங்கண்டு சாத்தியக் கூற்று அறிக்கை தயாரிப்பதற்காக கொரியாவில் இருந்து குழுவொன்று விரைவில் இலங்கை வர உள்ளதாகவும் அமைச்சு கூறியது. மோதல் காரணமாக வடக்கு, கிழக்கில் இருந்த தொழில் பயிற்சி நிலையங்கள் சேதமாகின.