குற்றச் செயல்களை, சமூகச் சிரழிவு நடவடிக்கைளை துணியுடன் கண்டிக்க, தட்டிக் கேட்க விழையும் நீதிபதிகள் திடீரென இடமாற்றம் செய்யப்படுவது அதிர்ச்சியளிக்கும் விடயம் என ஒய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். காலஞ்சென்ற சட்டத்தரணி எஸ்.ஆர் கனகநாயகத்தின் உருவப்படம் நேற்று (June 24 2010) மாலை யாழ். நீதிமன்றக் கட்டடத்தொகுதியில் அமைந்துள்ள யாழ்.சட்ட நூலகத்தில் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக கலந்துகெண்டு உருவப்படத்தை திரை நீக்கம் செய்து நிகழ்த்திய நீண்ட உரையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
”‘ஏசியா நியூஸ்’ என்ற ஊடகத்திற்கு மனித உரிமைகள் பணியாளரும், சட்ட சமூக நம்பிக்கையகப் பணிப்பாளருமான ஒரு சிங்கள சகோதரர் ருக்~ன் பெர்னாண்டொ வடமாகாணத்தில் இராணுவ ரீதியான தாக்குதல்களுக்கு பதிலாக கலாசார, மதரீதியான தாக்குதல்கள் நடைபெறுவதாகவும், வடமாகாணம் சிங்கள மயமாதலை எதிர்கொண்டுள்ளதெனவும் கூறி அது பற்றிய விபரங்களையும் கூறியிருந்தார்.
இப்படியான ஒரு சூழலில் யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக கொலை. கொள்ளை, கற்பழிப்பு, மற்றும் கலாசார சிரழிவுகள் நடைபெற்று வருவருவதை நீங்களும் அறிவீர்கள். தெற்கிலிருந்து விலைமாதர்களும் கொண்டுவரப்பட்டு எமது இளைஞர்களுக்கு வலைவிரிப்பதாகவும், போதைப் பொருட்கள் கல்விக் கூடங்களுக்கு அருகில் விற்பனைக்கு விடப்படுவதாகவும் அறியக்கிடைத்தது.
எமது சொந்த தமிழ் இரத்தங்களும் இப்பேர்பட்ட சமூகச் சீரழிவு நடவடிக்கைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டிருக்கின்றார்கள் என்று கேள்விப்படுகின்றபோது மனவேதனை ஏற்படுகின்றது. இவ்வாறான சமூகச் சீரழிவுகளை துணிச்சலுடன் கண்டிக்கும் நீதிபதிகள் திடீரென இடமாற்றம் செய்யப்படுகின்றமை அதிhச்சியளிக்கின்றது. எனினும், இந்த அழிவுகளிலிருந்து குடாநாட்டை மீடபதற்கு நீதிபதிகள், சட்டத்தரணிகள் ஆகியோரின் ஒன்றிணைந்த துணிச்சலான பங்களிப்பு முக்கியமானது.
பின்னணியில் வன்முறைகளைக் கையாள்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு அதிகாரத்திலுள்ளவர்கள் துணை போகின்றார்கள் எனப் பயந்து சட்ட நடவடிக்கைகளைக் கைவிடக்கூடாது. எமது சூழலில் நடப்பவை நீதிமன்றங்களில் எதிரொலித்தால் தான் வெளிநாட்டவர் கூட அவற்றைக் கவனத்தில் எடுப்பர்.”
இவ்வாறு ஒய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வீ.விக்னேஸ்வரன் தனது உரையில் தெரிவித்தார்.
