2010

2010

நெதர்லாந்திலிருந்து வந்த மாப்பிள்ளை திருமணக் கோலத்திலேயே நீதிமன்றில் நிறுத்தப்பட்டார்!

ஒன்பது வருடங்களுக்கு முன்பு நெதர்லாந்தில் திருமணம் முடித்துவிட்டு தற்போது யாழ்ப்பாணத்தில் இன்னொரு திருமணம் செய்யமுற்பட்டதாகக் கூறப்படும் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு,  மாப்பிள்ளை கோலத்தில் நீதிமன்றில் நிறுத்தப்பட்டார். கடந்த 12ம் திகதி மல்லாகம் மாவட்ட நீதிமன்றில் மல்லாக நீதிமன்ற நீதவான் ஜே.கஜநிதிபாலன் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணை நடைபெற்றது.

குறித்த நபர் நெதர்லாந்திலிருந்து வருகை தந்தவர் எனவும், குறித்த 12ம் திகதி அவருக்கு திருமணம் நடைபெறவிருந்ததாகவும், அவ்வேளையில் தெல்லிப்பழை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. குறித்த நபர் ஒன்பது வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திலிருந்து பெண்ணொருவரை நெதர்லாந்திற்கு அழைத்துச்சென்று சம்பிரதாய முறைப்படி திருமணம் செய்தவர் என அவரது முன்னைய மனைவியின் சகோதரர் வழங்கிய முறைப்பாட்டையடுத்தே அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட்டார்.

விசாரணைகளின் போது, தான் முன்னர் சட்டபூர்வமாகத் திருமணம் முடிக்கவில்லை எனக்கூற, மனைவியின் சகோதரர் எனக் குறிப்பிடப்பட்டவரால் திருமணப் புகைப்படங்கள் சில நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டன. அப்படங்களில் ஒன்றில் குறிப்பட்ட நபர் பெண்ணிற்கு தாலிகட்டும் படமும் காணப்பட்டது. அத்தோடு, திருமணத்திற்காக அச்சிடப்பட்ட அழைப்பிதழ்களும் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டன.

விசாரணைகளின் போது, அந்தப்படத்திலுள்ள பெண் தனது ஒன்றுவிட்ட சகோதரி எனவும், அவரை நெதர்லாந்திற்கு அழைத்துச் செல்வதற்காகவே திருமணம் செய்வது போன்று நடித்ததாகவும்,  அப்பெண்ணின் குடும்பத்தவர்களின் நன்மைக்காகவே அவ்வாறு செய்ததாகவும் கூறினார்.

நீதவான் சில கேள்விகளை அவரிடம் தொடர்ந்து கேட்டபோது அதற்குப் பதில் கூறமுடியாமல் முரண்பாடான பதில்களை கூறியதையடுத்து குறித்த நபரை எச்சரித்த நீதிபதி ஒரு லட்சம் ரூபா பிணையில் செல்லுமாறும், கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறும், ஞாயிற்றுக்கிழமை தோறும் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று கையெழுத்திடுமாறும் உத்தரவிட்டு வழக்கை அடுத்த தவணைக்கு ஒத்திவைத்தார்.

தடுத்து வைக்கப்பட்டிருந்த வேலணை வைத்தியர் பிணையில் விடுவிப்பு!

வேலணை மருத்துவமாது தர்சிகாவின் மரணம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட வைத்தியர் பிரியந்த செனவிரட்ண இன்று (16-07-2010)பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழப்பாண உயர் நீதிமன்றினால் இன்று இவருக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 10ம் திகதி வேலணை மருத்தவமனையில் மருத்துவ மாதுவாகப் பணியாற்றிய செல்வி சரவணை தர்சிகாவின் மரணத்தில் தொடர்பு பட்டதான சந்தேகத்தில் இவ்வைத்தியர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.  யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர் இன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னைய செய்தி: மருத்துவமாதுவின் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வைத்தியருக்கு எற்பட்டுள்ள நோய் குறித்து தெளிவில்லையாம்!

மருத்துவமாது சரவணை தர்சிகாவின் மரணம் தொடர்பாக சந்தேகத்தில் பேரில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வைத்தியர் செனவிரட்ன தற்போது யாழ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு என்ன நோய் என்பது குறித்து கண்டுபிடிக்க முடியாதுள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். யாழ்.சிறைச்சாலையில் இருந்தபோது. சிலரால் தான் தாக்கப்பட்டதாக முதலில் அவர் கூறியிருந்தார்.  பின் தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருக்கின்றார்.

யாழ்.சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட இவர் கடந்த பதன்கிழமை இரவு 8.30 மணியளவில் யாழ்.மருத்தவமனைக்கு கொண்டுவரப்பட்டு அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், தடுப்புக்காவலில் உள்ள குறிப்பிட்ட மருத்துவரான பிரியந்த செனவிரட்ன யாழ்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டமை தொடர்பில் அவரின் உடல் நிலைப்பாதிப்பு குறித்து எதிர்வரும் 19ம் திகதி நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்.போதனா மருத்துவமனை வைத்திய அதிகாரிக்கு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் ஆர்.வசந்தசேனன் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபரான வைத்தியரின் பாதுகாப்பு காரணங்களுக்காக அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்ற அனுமதி வழங்குமாறு பொலிஸார் நீதிமன்றிடம் விடுத்த கோரிக்கையை நீதவான் மறுத்துள்ளார். அவரை யாழ். சிறைச்சாலையில் விசேட பாதுகாப்புடன் எதிர்வரும் 21ம் திகதி வரை தடுத்து வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

வவுனியா செட்டிக்குளத்தில் இடம்பெயர்ந்தோர் முகாம்கள் அமைந்திருந்த நிலப்பரப்புக்களை ஆக்கிரமிக்க சிலர் முயற்சி!

IDP_Campஇறுதிக் கட்டப் போரின் போது வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா செட்டிக்குளம் பகுதியிலுள்ள ‘மெனிக்பாம்’ முகாமில் தங்கியிருந்த மக்கள் கட்டம் கட்டமாக சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட்டு வருகின்ற நிலையில், அம்முகாம்கள் அமைக்கப்பட்டிருந்த பாரிய நிலப்பரப்பை ஆக்கிரமிக்க அரசாங்கத்துடன் அங்கம் வகிப்பவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்கள் முதலானோர் அதிகம் முனைப்புக் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடர்ந்த காடுகளாக இருந்த அப்பகுதிகள் இடம்பெயர்ந்தோருக்கான முகாம்கள் அமைக்கப்படுவதற்காக காடுகள் அழிக்கப்பட்டு துப்புரவாக்கப்பட்டன. அப்பகுதிகளில் பல கட்டிடங்கள். குழாய் நீர் அமைப்பு என்பனவும் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு வகையில் அந்நிலப்பரப்பு சிறந்த விவசாய நிலமாகவும் மக்கள் குடியிருக்கக்கூடிய பகுதிகளாகவும் மாற்றப்பட்டுள்ளன.

IDP_Campஇடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டு வரும் வேளையில், இந்நிலப்பரப்புக்கள் சிங்கள மக்களின் குடியேற்ற நிலமாக மாற்றப்படலாம் என்கிற தகவல்கள் முன்னரே வெளியாகியிருந்தன. இதேவேளை, அம்முகாம்களில் தங்கியிருந்த வன்னி மக்களில் சிலர் அப்பகுதிகளில் தங்களுக்கு காணிகள் வழங்கப்பட்டால் அங்கு நிரந்தரமாக தங்கவதற்கு விருப்பமான நிலையிலும் காணப்பட்டனர். ஆனால், தற்போது அரசாங்கத்தோடு தொடர்புடைய சிலர் சொந்த நிலமாக அதனை ஆக்கிரமிக்கும் நோக்கில் முயன்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பான சந்தேகமே ஐ.தே.க.வுடன் ஆளும்தரப்பு பேசுவதற்குக் காரணம் தயாசிறி ஜயசேகர

அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து சாதகமான சமிக்ஞை கிட்டாமல் போகலாமென்ற சந்தேகம் எழுந்ததன் காரணமாகவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக ஐக்கிய தேசியக்கட்சியுடன் பேசுவதற்கு முன்வந்தார் எனத் தெரிவித்த குருநாகல் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நாம் மீண்டுமொரு தடவை கைகளைச் சுட்டுக்கொள்ளாத விதத்தில் நிதானமாகச் செயற்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

அன்று எம்பக்கமிருந்த 17 பேரை இழுத்தெடுப்பதற்கு அவர் மேடையேற்றியநாடகத்தை நாம் மறந்துவிடக்கூடாது எனவும் ஜனாதிபதி நம்பகத்தன்மையோடு நடந்து கொள்வதை உறுதி செய்து கொண்டே பேச்சுகளை தொடரவேண்டுமெனவும் தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டினார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்திய ரூபாவுக்கும் குறியீடு

rupee.jpgஉலகளாவிய ரீதியில் நாடுகளின் பணத்தைக் குறிக்கும் வகையில் பல்வேறு குறியீடுகள் இருப்பது போல இந்திய நாணயத்திற்கும் புதிய குறியீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இனிமேல் இந்திய பணத்திற்கு இந்த குறியீடுதான் பயன்படுத்தப்படும்.இந்த ரூபாய் அடையாள குறியீட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தத் தகவலை மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அம்பிகாசோனி டில்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

சர்வதேச நாணயங்களான அமெரிக்க டொலருக்கு யூரோவுக்கு பவுண்ஸுக்கு ஜப்பான் யென் அடையாள குறியீடு இருப்பது போல இந்திய ரூபாய்க்கும் அடையாள குறியீடு வழங்கப்பட மத்திய அரசு முடிவு எடுத்தது.

நிதிக்கம்பனிகள் சட்டத்தை நீக்கிவிட நடவடிக்கை

நாட்டில் சட்டவிரோதமாக இயங்கும் நிதி நிறுவனங்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக நடைமுறையில் உள்ள நிதிக்கம்பனிகளின் சட்டத்தை நீக்குவதற்கான நடவடிக்கைகளை இலங்கை மத்திய வங்கி மேற்கொள்ளவுள்ளது.

இந்த வருடம் டிசம்பரில் நடைமுறையிலுள்ள நிதிக் கம்பனிகள் சட்டத்தை மத்திய வங்கி அகற்றிவிடும் என்று விபரங்களை வெளியிடுவதற்கு அதிகாரம் வழங்கப்படாத அதிகாரியொருவர் டெய்லிமிரர் இணையத்தளத்திற்குக் கூறியுள்ளார்.

உத்தேச நிதி,வர்த்தக சட்டமூலமானது சட்டவிரோதமாக இயங்கும் நிதிநிறுவனங்களுக்கு எதிராகக் கடுமையான விதத்தில் செயற்படுவதற்கான ஏற்பாடுகளைக் கொண்டதாக அமையும். சக்விதி போன்ற மோசடி நிறுவனங்களிலிருந்து முதலீட்டாளர்களைப் பாதுகாப்பதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

முரளிதரன் பந்து வீச்சில் குறையில்லை வோர்ன் தெரிவிப்பு

muralitharan.jpgஇலங்கை சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் பந்து வீச்சில் எந்தக் குறையும் இல்லை அவர் முறையாகவே பந்து வீசுகிறார் என்றார் அவுஸ்திரேலியாவின் வோர்ன்.

இலங்கை அணியின் சுழல் மன்னன் முத்தையா முரளிதரன் உலக அரங்கில் டெஸ்ட் (132 போட்டி, 792 விக்.) மற்றும் ஒரு நாள் (337 போட்டி 515 விக்.) போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இவர் வரும் 18ம் திகதி காலியில் நடக்க உள்ள இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற உள்ளார்.

பந்து வீச்சு சர்ச்சை கடந்த 1995ல் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது, முரளிதரன் பந்தை எறிவதாக நடுவர் டெரல் ஹேயர் குற்றம் சாட்டினார்.

களுவாஞ்சிக்குடியில் தேசிய சேமிப்பு வங்கியின் 30 இலட்சம் ரூபா கொள்ளை

களுவாஞ்சிக்குடி தேசிய சேமிப்பு வங்கிக்குச் சொந்தமான முப்பது இலட்சம் ரூபா பணம் நேற்று வியாழக்கிழமை காலை களுவாஞ்சிக்குடியில் வைத்துக் கொள்ளையிடப்பட்டுள்ளது.

தேசிய சேமிப்பு வங்கியின் களுவாஞ்சிக்குடிக் கிளையின் உத்தியோகத்தர்கள், களுவாஞ்சிக்குடியிலுள்ள இலங்கை வங்கியிலிருந்து தேசிய சேமிப்பு வங்கிக்குச் சொந்தமான முப்பது இலட்சம் ரூபா பணத்தை எடுத்துக் கொண்டு முச்சக்கர வண்டியில் தேசிய சேமிப்பு வங்கியின் களுவாஞ்சிக்குடி கிளையை நோக்கி சென்றுகொண்டிருந்த போது மணல் வீதி எனுமிடத்தில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் முச்சக்கரவண்டியை மறித்துத் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி முப்பது இலட்சம் ரூபா பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இதையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த களுவாஞ்சிக்குடிப் பொலிஸார் விசாரணைகளை நடத்தியதோடு தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.மணல் வீதி என்னுமிடத்தில் ஏற்கனவே பொலிஸ் சோதனைச் சாவடி ஒன்று இருந்து பின்னர் அது அகற்றப்பட்டது.இச்சம்பவம் தொடர்பாக வங்கி உத்தியோகத்தர்கள் களுவாஞ்சிக்குடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை – துடுப்பாட்டத்தில் டோனி பந்துவீச்சில் விட்டோரி முதலிடம்

dhoni.jpgசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ. சி. சி.) ஒரு நாள் போட்டியின் அடிப்படையில் வீரர்களின் தர வரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திய அணி கப்டன் டோனி 807 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார்.

தென்னாபிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் அவரை நெருங்கிய நிலையில் உள்ளார். டிவில்லியர்ஸ் 805 புள்ளிகள் பெற்று 2வது இடத்திலும், மைக்ஹசி (அவுஸ்திரேலியா) 792 புள்ளிகள் பெற்று 3வது இடத்திலும் உள்ளனர்.

மற்ற இந்திய வீரர்களில் தெண்டுல்கர் 6வது இடத்திலும் கோலி 16வது இடத்திலும், யுவராஜ் சிங் 17வது இடத்திலும் ஷெவாக் 18வது இடத்திலும் உள்ளனர். பந்துவீச்சில் நியூசிலாந்து கப்டன் வெட்டோரி முதல் இடத்திலும் பங்களாதேஷ் வீரர் சகீப் அல்-ஹசன் 2வது இடத்திலும் உள்ளனர்.

இந்திய வீரர்களில் ஹர்பஜன்சிங் 11வது இடத்திலும் பிரவின்குமார் 15வது இடத்திலும் உள்ளனர்.

போலி நாணயத் தாள் அச்சிட்ட 2 பேர் கைது

ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான போலி நாணயத் தாள்களை அச்சிட்ட இருவர் கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்களிட மிருந்து ஒரு இலட்சத்து 77 ஆயிரம் ரூபா பெறுமதியான போலி நாணயத் தாள்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

விஸ்வமடு, முல்லைத்தீவைச் சேர்ந்த இருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஆயிரம் மற்றும் 2 ஆயிரம் ரூபா பெறுமதியான போலி நாணயத் தாள்களை அச்சிட்டு பல்வேறு இடங்களுக்கும் விநியோகித்து வந்துள்ளனர்.

ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து இவர்கள் வவுனியாவில் வைத்தே போலி நாணயத் தாள்களை அச்சிட்ட பின்னர் கிளிநொச்சிக்கு எடுத்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.