2010

2010

பாகிஸ்தானில் வெள்ளப் பாதிப்பு: – 15 பேர் கொண்ட இலங்கை மருத்துவக் குழு பாக். பயணம்

doctor.jpgபாகிஸ் தானின் பல பிரதேசங்களில் அண்மையில் பெய்த அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் 12 இலட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.

இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளவர்களிடையே தொற்று நோய்கள் பரவக் கூடும் என்பதால் அதற்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ள இலங்கையிலிருந்து விசேட மருத்துவ குழுவொன்றை அனுப்பிவைக்க சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிரிசேன நடவடிக்கை எடுத்துள்ளார். அதற்கேற்ப 15 பேரைக் கொண்ட விசேட மருத்துவ குழுவை எதிர்வரும் மூன்று நாட்களுக்குள் பாகிஸ்தானுக்கு அனுப்ப தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் 6 இலங்கையர்கள் கைது

தமிழ்நாடு கன்னியாகுமரி விடுதியொன்றில் தங்கியிருந்த 6 இலங்கையர்களை தமிழக பொலீஸார் வௌ்ளியிரவு கைது செய்துள்ளனர். தமிழக பொலிஸ் உயர் அதிகாரி பி.சக்திவேலின் தகவலின் படி இலங்கையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஜொன்ஸன் (20), அருள் பிரதாப் (24), ஜீவா (30), சதீஷ் (22), விமல் ராஜ் (25), ஜெயச்சந்திரன் (26) ஆகியோரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்

5800 இலங்கையருக்கு இம்முறை ஹஜ்ஜை நிறைவேற்ற வாய்ப்பு பெளசிக்கு சவூதி அமைச்சர் அறிவிப்பு

haji.jpgஹஜ் கடமையை நிறைவேற்ற இம்முறை 5800 இலங்கையருக்கு வாய்ப்புக் கிடைத்திருப்பதாக இடர் முகாமைத்துவ அமைச்சர் ஏ. எச்.எம். பெளசி தெரிவித்தார்.

கோட்டா அடிப்படையில் இலங்கையர் 2800 பேருக்கே புனித ஹஜ்ஜை நிறைவேற்ற சவூதி அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது. இலங்கையிலிருந்து ஹஜ் நிறைவேற்ற செல்வோரின் தொகையை அதிகரித்துத் தருமாறு அமைச்சர் ஏ. எச். எம். பெளசி சவூதி அரசிடம் விடுத்த

வேண்டுகோளுக்கமையவே இவ்வதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் பெளஸி தலைமையிலான குழுவினர் அண்மையில் சவூதி அரேபியா சென்று சவூதி மன்னர், ஹஜ்ஜுக்குப் பொறுப்பான அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

சவூதி அரேபியாவின் ஹஜ்ஜுக்குப் பொறுப்பான அமைச்சர் புசூட் பின் அப்துல் கலாம் அல் பாரிஸ் இத்தகவலை அமைச்சர் ஏ. எச். எம். பெளசிக்கு அறிவித்துள்ளார்.  ஹஜ்ஜாஜிகளின் தொகையை அதிகரித்து தந்ததற்காக அமைச்சர் பெளஸி, சவூதி மன்னர் மற்றும் ஹஜ்ஜுக்குப் பொறுப்பான அமைச்சர், அதிகாரிகளுக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

வடக்கில் 1000 வீடமைப்பு திட்டம்; முழுமையான மதிப்பீட்டு அறிக்கை இன்று இந்தியாவிடம் கையளிப்பு

வடக்கில் மீளக் குடியமர்த்தப்படும் மக்களுக்கு இந்திய அரசின் உதவியின் முதற்கட்டமாக கட்டிக்கொடுக்கப்படவுள்ள 1000 மாதிரி வீடமைப்புத் திட்டத்திற்கான முழுமையான மதிப்பீட்டு அறிக்கை இன்று இந்திய அரசிடம் கையளிக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

வட மாகாண அபிவிருத்தி மற்றும் மீள்குடியேற்றத்துக்கான செயலணி இந்த அறிக்கையை இந்திய அரசிடம் கையளிக்கவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள பிரதேச செயலக பிரிவுகளில் இந்த வீடுகள் கட்டிக்கொடுக்கப்படவுள்ளன.

யாழ்ப்பாணத்தில் இரண்டு பிரதேச பிரிவுகளில் 150 வீடுகளும் வவுனியா வடக்கில் மூன்று பிரதேச பிரிவுகளில் 175 வீடுகளும், மன்னாரில் மடு மற்றும் மாந்தை பிரதேச பிரிவுகளில் 175 வீடுகளும், கிளிநொச்சியில் மூன்று பிரதேச பிரிவுகளில் 250 வீடுகளும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மூன்று பிரதேச பிரிவுகளில் 250 வீடுகளும் இந்தியா முதற் கட்டமாக கட்டிக்கொடுக்கவுள்ளது.

மாதிரி வீடமைப்புத் திட்டத்திற்கான இடங்கள் மற்றும் வீடுகள் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டிய மக்கள் யார் யார் என்பது பற்றிய சகல விபரங்களும் திரட்டப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

இந்தியா இலங்கையில் உள்ள வடபகுதி மக்களுக்கு 51000 வீடுகளை கட்டிக் கொடுக்கவுள்ளது. இதில் முதற் கட்டமாக 1000 வீடுகளை கட்டிக் கொடுக்கவுள்ளதால் அதற்கான மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்க ப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அடுத்த கட்டமாக இந்தியா கட்டிக்கொடுக்கவுள்ள 50,000 வீடுகளுக்கான மதிப்பீட்டு அறிக்கைகளை தயாரிக்கும் வேலைகளையும் ஜனாதிபதி செயலணி ஆரம்பித்துள்ளதென்றும் அவர் தெரிவித்தார்.

இதே போன்று மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் மீளக்குடியமர்த்தப்படும் மக்களுக்கு இந்தியா வழங்கும் வீடுகள் பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சவூதியில் நிர்க்கதியான பணிப்பெண்களை உடன் அழைத்துவர ஏற்பாடு

sri-lankan-maids.jpgசவூதி அரேபியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருக்கும் பணிப்பெண்களை இலங்கைக்கு அழைத்துவர விசேட விமான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக பொது முகாமையாளர் எல். கே. ருகுணுகே தெரிவித்தார்.

இதன் முதற்கட்டமாக இன்று 44 பணிப்பெண்களும் நாளை மறுதினம் (11) 100 பணிப்பெண்களும் சவூதி அரேபியாவிலிருந்து இலங்கை அழைத்து வர ஏற்பாடாகியுள்ளது.

பல்வேறு பிரச்சினைகள் காரணமாக சவூதி அரேபியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருக்கும் இலங்கைப் பணிப்பெண்களை அழைத்து வருவதற்காக விசேடமாக மிஹின் லங்கா விமானம் தயார் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இலங்கையைச் சேர்ந்த 250 பணிப்பெண்கள் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக தமது வேலையைக் கை விட்டுவிட்டு சவூதி அரசாங்கத்தின் கீழ் நடத்தப்பட்டு வரும் நலன்புரி நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர். இவர்கள் சவூதியில் சிறை வைக்கப்பட்டிருப்பதாகவும் சொந்த நாட்டுக்கு அழைத்து வருவதற்கு அரசாங்கம் எவ்வித ஏற்பாடுகளையும் முன் னெடுக்கவில்லையெனவும் பல ஊடகங்கள் குற்றம் சுமத்தியிருந்தன. உண்மையில், அவர்கள் அங்கு சிறைவைக்கப்படவில்லை. சகல வசதிகளுடனுமே தங்கவைக்கப்பட்டுள்ளனர். விமான இருக்கை ஒதுக்கீட்டில் ஏற்பட்ட கால தாமதமே அவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதில் தாமதத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக வேலைவாய்ப்பு பணியகத்தின் முயற்சியாலும் அரசாங்கத்தின் ஏற்பாட்டினாலும் மிஹின் லங்கா விமானம் மூலம் ஒரே தடவையில் நாளை மறுதினம் 100 பேர் அழைத்து வரப்படவிருப்பதாகவும் எல். கே. ருகுணுகே கூறினார்.

இன்று காலை 2.30 மணிக்கு 44 பணிப்பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைய ஏற்பாடாகியிருப்பதாகவும் அவர் நேற்றுத் தெரிவித்தார்.

ஒஸ்லோவில் இரு தமிழ் குழுக்களுக்கிடையே மோதல்

நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இரு தமிழ் குழுக்களுக்கிடையே மோதலை அடுத்து மூன்று இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட இந்துமத நிகழ்வென்றின் போது ஏற்பட்ட தகராறின் போது கைது செய்யப்பட்ட இவர்கள் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

க.பொ.த. உ/த பரீட்சை இன்று முதல் ஆரம்பம் – நாடுபூராவும் 1931 பரீட்சை நிலையங்கள்

exam.jpgக.பொ.த. உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகின்றது. செப்டம்பர் 3ம் திகதி வரை பரீட்சை நடைபெறும். நாடளாவிய ரீதியில் 1931 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் அநுர எதிரிசிங்க தெரிவித்தார். க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு 2 இலட்சத்து 69 ஆயிரம் பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர். இவர்களுள் 64 ஆயிரம் பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் என்று ஆணையாளர் கூறினார்.

இதேவேளை, மோதல்களின் போது படையினரிடம் சரணடைந்த முன்னாள் புலி உறுப்பினர்கள் 400 பேரும் இன்று ஆரம்பமாகவிருக்கும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதாகவும் ஆணையாளர் அநுர எதிரிசிங்க தெரிவித்தார். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலும் வழமை போலவே பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மோசமான நிலைமையில் இலங்கையர் உட்பட 76 குடியேற்றவாசிகள் மெக்ஸிக்கோவில் மீட்பு

மெக்ஸிக்கோவில் பெட்டி இணைக்கப்பட்ட வாகனமொன்றில் உடலில் நீர்வரட்சியேற்பட்ட மோசமான நிலைமையில் இலங்கையர்கள் உட்பட 76 குடியேற்றவாசிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.மெக்ஸிக்கோவின் தென் கிழக்கு மாநிலமான சியாபாஸில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட பெட்டி இணைக்கப்பட்ட வாகனத்திலேயே இலங்கை மத்திய அமெரிக்காவைச் சேர்ந்த குடியேற்றவாசிகள் 76 பேர் மீட்கப்பட்டனர்.

இவர்களிடம் ஆவணங்கள் எதுவும் இருக்கவில்லையென உத்தியோகபூர்வ வட்டாரங்களை மேற்கோள்காட்டி லத்தீன் அமெரிக்கா ஹெல்ட் ரிபியூன் தெரிவித்தது. இந்த வாகனம் நெடுஞ்சாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

28 அடி நீளமும் 10 அடி அகலமுள்ள இந்த வாகனத்திற்குள் இருந்த 76 குடியேற்றவாசிகளின் நிலைமை தொடர்பாக இனந்தெரியாத செய்தியொன்று அதிகாரிகளுக்கு எச்சரிக்கை செய்திருக்கிறது. உடலில் நீர் வரட்சியுடன் அவர்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டரீதியாக தாங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களென நிரூபிக்கும் அத்தாட்சி எதனையும் அந்தக் குடியேற்றவாசிகள் கொண்டிருக்கவில்லை. குவாட்டமாலா, ஸிசல்வடோர்,ஹொன்ரோஸ், இலங்கை ஆகிய நாடுகளைத் தாங்கள் சேர்ந்தவர்கள் என்று அவர்கள் கூறியுள்ளனர். இந்த ஒவ்வொரு நாடுகளையும் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை, எத்தனை ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்ற விபரம் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்குவதற்கு ஜனாதிபதி தயார் – அமைச்சர் நிமல்

nimal1.jpgவட பகுதியில் மீள் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அரசியல் தீர்வு ஒன்றையும் அரசாங்கம் வழங்குமென்று பாராளுமன்ற சபை முதல்வரும், நீர்ப்பாசன, நீர் முகாமைத்துவ அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்று வழங்கப்படவேண்டுமென்பதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாகக் கூறிய அமைச்சர் சில்வா, அதனை வழங்க ஜனாதிபதி தயாராக இருக்கிறாரென்றும் குறிப்பிட்டார்.

“இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு அவசியம் என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஜனாதிபதி இது தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார். தனி ஈழத்தைத் தருவதற்கு எவரும் இணங்கமாட்டார்கள். ஆனால், தமிழ் மக்களுக்குத் தீர்வொன்றை வழங்க வேண்டுமென்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஜனாதிபதியும் அதற்குத் தயாராக இருக்கிறார்” என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

புலிகள் இயக்கத்துடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டபோது அரசாங்கக் குழுவிற்குத் தலைமை தாங்கியவர். அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா என்பது குறிப்பிடத்தக்கது.

எயிட்ஸ் நோயாளர் எண்ணிக்கை 1249 ஆக அதிகரிப்பு

aids-virus.jpgஇலங்கையில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை இவ்வருடம் 1249 ஆக அதிகரித்துள்ளதென்று எயிட்ஸ் நோய் தடுப்புப் பிரிவின் விசேட மருத்துவ நிபுணர் ஸ்ரீயகாந்தி பெனரகம தெரிவித்துள்ளார்.

கடந்த (2009) வருடம் ஜூன் மாதத்தில் 153 நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டிருந் ததோடு மொத்தமாக மூவாயிரம் பேர் பதிவாகியிருந்தனர். ஆனால் இவ்வருடம் 743 ஆண்களும் 506 பெண்களும் பதிவாகியுள்ளனர்.