August

August

விமான நிலையத்தின் பார்வையாளர் கூடம் இன்று முதல் திறக்கப்படும்

27-air-arabia-a.jpgகட்டு நாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பார்வையாளர் கூடம் இன்று திங்கட்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படும் என்று விமான நிலையத்தின் நிர்வாகப் பிரிவு அறிவித்துள்ளது.

பாதுகாப்பு காரணங்களால் கடந்த சில வருடங்களாக மூடப்பட்டிருந்த குறித்த விமான நிலையதின் பார்வையாளர் கூடத்தை மீண்டும் திறப்பதற்கான அனுமதி பாதுகாப்பு தரப்பிடமிருந்து கிடைக்கப்பெற்றதை அடுத்தே மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் இலக்கு வைக்கப்பட்டதை அடுத்து விமான நிலையத்தின் பார்வையாளர் கூடம் மூடப்பட்டது. பார்வையாளர் கூடம் திறக்கப்பட்ட போதிலும் அக்கூடத்துக்கு செல்வதற்கான அனுமதியும் உரிய பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாகவே மேற்கொள்ளப்படவுள்ளன

35 ஆவது தேசிய விளையாட்டு போட்டியின் கூடைப்பந்தாட்ட போட்டி மட்டக்களப்பில்

basketball.jpg35 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் கூடைப்பந்தாட்டம் மற்றும் ஜூடோப் போட்டி என்பன கடந்த வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் ஆரம்பமானது. தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாகக் நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.

ஒன்பது மாகாணங்களையும் சேர்ந்த அணிகள் மட்டக்களப்பை வந்தடைந்த நிலையில், ஜூடோ போட்டி மட்டக்களப்பு நகர மண்டபத்தில் கூடைப்பந்தாட்டப் போட்டி மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை மைதானத்திலும் சென் மைக்கல்ஸ் தேசிய பாடசாலை மைதானத்திலும் ஆரம்பமானது.

இந்நிகழ்வுகளை அமைச்சர் வி.முரளிதரன் ஆரம்பித்து வைத்ததுடன் 35 ஆவது தேசிய விளையாட்டு விழாவினை முன்னிட்டு மட்டக்களப்பு புனித சிசிலியா புதிய பெண்கள் பாடசாலை, சென்.மைக்கல் தேசிய பாடசாலையிலும் கூடைப்பந்தாட்ட மைதானம் புனரமைப்புச் செய்ததுடன் கிரான் மகா வித்தியாலயத்தில் புதிய கூடைப்பந்தாட்ட மைதானமும் அமைக்கப்பட்டது.

மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் பாடசாலையில் இடம்பெற்ற 35 ஆவது தேசிய விளையாட்டு விழா ஆரம்ப வைபவத்தில் புனரமைக்கப்பட்ட மைதானத்தை அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் திறந்து வைத்ததுடன் விளையாட்டினையும் ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீர்த்தா பிரபாகரன் விளையாட்டுத் துறை அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் டீ.வீ.தஸா நாயக்க, அரசாங்க அதிபர் எஸ்.அருமைநாயகம் உட்பட பல உயரதிகாரிகள், அரச அதிகாரிகள், கல்வித் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சகல பிரதேசங்களுக்கும் சமமான சேவையை வழங்குவதே அரசின் நோக்கம் – ஜனாதிபதி

mahinda.jpgநாட்டில் இதற்கு முன்னர் எந்த அரசாங்கங்களும் நினைத்துக்கூட பார்க்க முடியாதவற்றை செய்து முடித்துள்ளோம் எனவும் தொடர்ந்தும் நாட்டு மக்களுக்காக எதையும் செய்யத்தயாராயுள்ளதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இன்று இந்நாட்டில் தமிழ், முஸ்லிம், சிங்களம் என சகல இன மத மக்களும் சுதந்திரமாக ஒரே கொடியின் கீழ் வாழும் சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளோம். வடக்கு, கிழக்கு, பெருந்தோட்டப் பகுதி ஒன்றில்லாமல் சகல பிரதேசங்களுக்கும் சமமான சேவைகளைப் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர, முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் மாபெரும் மக்கள் பேரணிக்கூட்டம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் புத்தள நகரில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது:-

நாட்டின் தேசிய பயணத்தைப் பலப்படுத்த நாட்டு மக்கள் அனைவரும் அரசாங்கத்துக்கு ஆணை வழங்கியுள்ளனர். இன்று நாட்டில் பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டு உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் சுதந்திர நாடு உரிமையாகியுள்ளது. வடக்கு, கிழக்கிலன்றி மொனராகலை புத்தல பிரதேசங்களிலும் மக்கள் பயங்கரவாத அச்சுறுத்தல்களுடனேயே வாழ்ந்துவந்தனர். புத்தள பகுதியிலும் பலர் கொல்லப்பட்டனர். பயங்கரவாதத்தை ஒழித்துவிட்டே நாம் உங்கள் முன்னிலைக்கு வந்துள்ளோம். இன்று நாட்டில் பயங்கரவாதம்

மட்டுமன்றி வேறு எந்த வாதமும் இல்லை. வெள்ளைக்கார ஏகாதிபத்தியம் எம் இனத்தை அழித்து வளங்களை சூறையாடிய யுகமொன்றிலிருந்தது. அன்று விவசாயிகள் தெருவில் விடப்பட்டனர். விவசாய வளங்கள் அழிக்கப்பட்டன. மக்கள் பெரும் பின்னடைவுக்குத் தள்ளப்பட்டனர். 16 வயதிற்குக் கீழுள்ள இளைஞர்கள் கொல்லப்பட்டனர். அந்த யுகத்துக்கு முடிவுகட்டப்பட்டுவிட்டது.

எனினும் அன்று அவ்வாறு செய்தவர்களுக்கு உதவியவர்கள் இன்று இந்த நாடு அபிவிருத்தியடைவதை விரும்பவில்லை. அதனால்தான் நாம் சர்வதேச கடன்களைப் பெறுவதற்கு அவர்கள் தடையாக நிற்கின்றனர். வடக்கிற்கோ, கிழக்கிற்கோ வேறு அபிவிருத்திகளுக்கோ வன்றி நமது சொந்த விடயங்களுக்காக நாம் வெளிநாட்டுக் கடன் பெறுவதாக அவர்கள் பிரசாரம் செய்கின்றனர். இதனை மக்கள் நம்பத்தயாரில்லை. ஏனெனில் நாடு முழுவதிலும் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. சமகாலத்தில் ஐந்து துறைமுகங்கள், மின் உற்பத்தி நிலையங்கள், விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகளென பாரிய அபிவிருத்திச் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. கிராமங்கள் பெரும் அபிவிருத்திக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன.

மொனராகலை மாவட்டத்தில் ஒரு கிராமத்திற்கு நான்கு கோடி என நிதி ஒதுக்கப்பட்டு அபிவிருத்திப் பணிகள் நடைபெறுகின்றன. எமக்குப் பல அழுத்தங்கள் வந்தன. அவ்வேளைகளில் நாம் அதற்கு அடிபணியவில்லை. ஒரு தடவையல்ல ஆயிரம் தடவையாயினும் நாம் தூக்குத் தண்டனை பெற தயார் என நாம் கூறினோம். பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட நிலையில் கஷ்டப் பிரதேசம் என்ற பெயரை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளிலேயே அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்தி வருகிறது ஏகாதிபத்தியவாதிகள் நம்மிடமிருந்து பறித்ததை நாம் மீளப்பெற வேண்டியுள்ளது.

மறந்து கிடந்த கிராமங்களை மீள அபிவிருத்தியில் கட்டியெழுப்ப வேண்டிய காலம் உருவாகியுள்ளது. எமது வளங்களைப் பாதுகாப்பதற்கு உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கொழும்பு மட்டுமன்றி சகல நகரங்களும், சகல கிராமங்களும் ஒரேவிதமாக அபிவிருத்தி செய்யப்படும். இதற்கான செயற்றிட்டங்கள் மாகாண சபைகள் மூலம் முன்னெடுக்கப்படவுள்ளன.

எமது மக்கள் எம்மீது நம்பிக்கை வைத்துள்ளனர். ஊவா மாகாண சபையிலும் நாம் அமோக வெற்றிபெற்று ஊவா மாகாணத்தைக் கட்டியெழுப்ப சகலரும் பூரண ஒத்துழைப்பு வழங்கவேண்டுமெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

பரக் ஒபாமா இந்தியா விஜயம்!

அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா இந்தியாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ராபர்ட் கிப்ஸ் தெரிவித்துள்ளார்.

ஒபாமா வெகுவிரைவில் இந்தியா செல்ல உள்ளதாகவும் அவருடைய இந்தியப் பயணம் 3 மாதங்கள் கழித்து இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் எதிர்வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை  மேற்கொள்ள உள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ 9 வீதியில் தனியார் பஸ் சேவை!

bus.jpgகண்டி யாழ்ப்பாணம் ஏ 9 வீதி பொது மக்களின் போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்படுமேயானால் 580 பஸ்களை சேவையில் ஈடுபடுத்த  தீர்மானித்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் யாழ். மாவட்டக் கிளைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

கடந்த பல வருடகாலமாக ஏ 9 வீதி மூடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது நாட்டில் சுமுக நிலை ஏற்பட்டுள்ளதால், ஏ 9 வீதியில் போக்குவரத்துக்கு திறந்தால் பஸ்களை சேவையில் ஈடுபடுத்த தயாராக உள்ளதாக கூறுகின்றார்.

அரச பஸ்களை மாத்திரம் பயன்படுத்திக் கொண்டு வடக்கு பகுதிகளில் இருந்து கொழும்பு நோக்கிய போக்குவரத்து சேவையை முழுமையாக ஈடுசெய்ய இயலாது. தனியார் பஸ்களின் சேவையும் அத்தியாவசியமாகும்.

எனவே, அரசாங்கம் அனுமதியளிக்கும் பட்சத்தில் சாதாரண கட்டணத்தில் யாழில் இருந்து கொழும்புக்கு தனியார் பஸ் சேவையினை வழங்க எமது சங்கம் தேவையான சகல ஏற்பாடுகளையும் மேற்கொள்ளும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நீச்சலில் 5 நாட்களில் 29 புதிய சாதனைகள்!

pelps2.jpgஇத்தாலி யில் நடைபெற்றுவரும் உலக சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியில் ஐந்து நாட்களில் 29 உலக சாதனைகள் முறியடிக்கப்படடன. தொடர்ந்து உலக சாதனைகள் முறியடிக்கப்பட்டு வருகின்றன. போட்டியின் 5 ஆவது நாளான நேற்று மாத்திரம் 7 உலக சாதனைகள் முறியடிக்கப்பட்டன. உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இதுவரை புதிதாக 29 உலக சாதனைகளின் நிலைநாட்டப் பட்டுள்ளன.  போட்டிகளில் மேலும் 3 நாட்கள் எஞ்சியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நேற்று முன்தினம் நடந்த ஆண்களுக்கான 200 மீற்றர் மெட்லே போட்டியில் அமெரிக்காவின் ரயான் லொச்டே 1 நிமிடம் 54.10 வினாடிகளில் போட்டித் தூரத்தை நீந்தி முடித்து ஒலிம்பிக் சாம்பியன் மைக்கல் பெல்பிஸின் உலக சாதனையை முறியடித்தார். பெல்ப்ஸ் இம்முறை தொடரில் பறிகொடுக்கும் இரண்டாவது உலக சாதனை இதுவாகும்.

இதனிடையே இம்முறை உலக சாதனைகள் முறியடிக்கும் வேகம் அதிகரிப்பதற்கு வீர, வீராங்கனைகள் உயரிய தொழிநுட்பத்திலான நீச்சல் உடைகளை பயன்படுத்துவதே காரணம் என்று பரவலாக விமர்சனம் எழுந்துள்ளது. இதற்கு முன்னாள் நீச்சல் வீரர்கள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். இம்முறை உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் உலக சாதனைகள் முறியடிக்கப்படாமல் முடிவடைந்த போட்டிகள் மிகக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கதாகும

வவுனியா நிவாரணக் கிராமம் – ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நிர்ப்பீடன மருந்து வழங்கல் இன்று

vaccine.jpgவவுனி யாவிலுள்ள நிவாரணக் கிராமங்களிலும், நலன்புரி நிலையங்களிலும் தங்கியுள்ள ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சின்னமுத்து மற்றும் போலியோ நோய்களுக்கான நிர்ப்பீடன மருந்துகளும் வயிற்றுப் புழுக்களுக்கான தடுப்பு மருந்தும் இன்று 3 ஆம் திகதி முதல் வழங்கப்படவுள்ளன.

வவுனியாவிலுள்ள நிவாரணக் கிராமங்களிலும், நலன்புரி நிலையங்களிலும் தங்கியுள்ள குழந்தைகளின் நலன்கருதி இந்நிர்ப்பீடன மருந்து வழங்கல் மற்றும் வயிற்று புழுக்களுக்கான மருந்து விநியோகத் திட்டம் இன்று முதல் மூன்று நாட்களுக்குச் செயற்படுத்தப்படவிருப்பதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சின் அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.

வவுனியாவுக்கு இடம்பெயர்ந்துள்ளவர்கள் புலிகளின் பிடியில் சிக்குண்டிருந்த சமயம் தமது குழந்தைகளுக்கு, நோய்த் தடுப்பு நிர்ப்பீடன மருந்துகளையோ, வயிற்று புழுக்களைத் தடுப்பதற்கான மருந்துகளையோ ஒழுங்கு முறையாக பெற்றுக் கொடுத்ததில்லை. இக்குழந்தை களின் நலன் கருதியே இத்திட்டத்தை சுகாதார அமைச்சு, யுனிசெப், உலக சுகாதார ஸ்தாபனத்துடன் இணைந்து செயற்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

இப்பணியில் 140 அரசாங்க மருத்துவ மாதுகள் ஈடுபடுத்தப்படவிருப்பதுடன் 130 நிலையங்களும் அமைக்கப் படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இத்திட்டத்தின் மூலம் இடம்பெயர்ந்துள்ள சுமார் 40 ஆயிரம் குழந்தைகள் நன்மை பெறுவர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தென் மாகாண எதிர்க்கட்சித் தலைவர் ஜஸ்டின் அரசுடன் இணைய தீர்மானம்

election_fingercolur.jpgதென் மாகாண சபை எதிர்க் கட்சித் தலைவரும் மாத்தறை தொகுதி ஐ. தே. கட்சி அமைப்பாளருமான ஜஸ்டின் கலப்பத்தி, அரசில் இணைய முடிவு செய்துள்ளார்.

தென் மாகாண சபை கலைக்கப்பட்டதும், தான் அரசாங்கத்துடன் இணைந்து, தென் மாகாண சபையின் அங்கத்துவம் பெற்று ஐ. ம. சு. முன்னணியில் தென் மாகாண சபைக்கு போட்டியிடப்போவதாகவும் தெரிவித்தார்.

அவரது இல்லத்தில் கடந்த 1 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில், உரை நிகழ்த்திய ஜஸ்டின் கலப்பத்தி கூறியதாவது:- யுத்தத்தை மூன்றே வருடங்களில் முடிவுக்கு கொண்டு வந்து, பிளவுபட்டிருந்த நாட்டை ஒன்றிணைத்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மக்களின் துயரங்களை போக்கி நாட்டில் சுபீட்சத்தை ஏற்படுத்துவார் என்ற நம்பிக்கை இருப்பதால், அவரின் கரங்களைப் பலப்படுத்தும் நோக்கில் தான் அரசுடன் இணைய தீர்மானித்ததாக அவர் கூறினார்.

சுற்றுலாத் துறையை மேம்படுத்த சங்காய் பிரதிநிதிகள் இலங்கை வருகை

kandy-parahara.jpgஇலங்கை, சீனா ஆகில நாடுகளுக்கிடையே சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் சங்காய் மாநகர சுற்றுலாப் பணியகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கை வந்துள்ளது.

சங்காய் மாநகர சுற்றுலாப் பணியகத்திலிருந்து நேற்று இலங்கை வந்திருக்கும் 10 பிரதிநிதிகளைக் கொண்ட குழு எதிர்வரும் 08 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்குமென வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இக்குழுவினர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், சங்காய் மாநகர சுற்றுலாப் பணியகம் மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புச் சபை ஆகியவற்றுக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலும், சீனாவில் இலங்கையின் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையிலும் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவிருப்பதாகவும் அமைச்சின் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, சங்காயிருந்து இலங்கை வந்திருக்கும் பிரதிநிதிகள் குழு சுற்றுலாத்துறை அமைச்சர், சுற்றுலாத்துறையுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்திப்பதுடன், கண்டி பெரஹெராவில் கலந்து கொள்வரெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.  சங்காய் மாநகர சுற்றுலாப் பணியகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு வருகை தந்திருப்பது இதுவே முதல் தடவையாகு மெனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

சவூதி அரேபியாவில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அலுவலகம்

iran-plane.jpgசவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் கீழ் செயற்படக் கூடியவகையில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அதன் உப அலுவலகங்களை சவூதி அரேபியாவின் வெவ்வேறு பிரதேசங்களில் அமைப்பதற்குத் தீர்மானித்துள்ளது.

சவூதி அரேபியாவில் பணிபுரியும் இலங்கையரின் நலன் கருதி இந்த உப அலுவலகங்களைத் திறப்பதற்கு முடிவு செய்திருப்பதாக பணியகத்தின் பேச்சாளர் நேற்றுத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், சுமார் ஆறு இலட்சம் இலங்கையர்கள் சவூதி அரேபியாவில் பணிபுரிகின்றனர். இவர்கள் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக ரியாத்திலுள்ள தூதரகத்துக்கோ அல்லது கிளையான தமாமுக்கோ செல்ல வேண்டிய நிலைமையுள்ளது.

இதனால் சவூதி அரேபியாவில் பணிபுரியும் இலங்கையர்கள் பல அசெளகரியங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் சவூதி அரேபியாவில் இலங்கையர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் தூதரகத்தின் கீழ் செயற்படக் கூடியவகையில் உப அலுவலகங்களை மேலும் திறக்கவும், அங்கு பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் முன்னெடுப்பதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தலைமையிலான குழு சவூதி சென்றுள்ளது.

இதேவேளை, பல்வேறு குற்றச் செயல்களை புரிந்துள்ளதாக காரணம் காட்டி தமாம் மற்றும் ரியாத் ஆகிய இடங்களிலுள்ள தற்காலிக முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சுமார் 250 இலங்கையர்களை விடுவிப்பதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் பணியகத்தின் தலைவர் முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.