35 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் கூடைப்பந்தாட்டம் மற்றும் ஜூடோப் போட்டி என்பன கடந்த வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் ஆரம்பமானது. தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாகக் நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.
ஒன்பது மாகாணங்களையும் சேர்ந்த அணிகள் மட்டக்களப்பை வந்தடைந்த நிலையில், ஜூடோ போட்டி மட்டக்களப்பு நகர மண்டபத்தில் கூடைப்பந்தாட்டப் போட்டி மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை மைதானத்திலும் சென் மைக்கல்ஸ் தேசிய பாடசாலை மைதானத்திலும் ஆரம்பமானது.
இந்நிகழ்வுகளை அமைச்சர் வி.முரளிதரன் ஆரம்பித்து வைத்ததுடன் 35 ஆவது தேசிய விளையாட்டு விழாவினை முன்னிட்டு மட்டக்களப்பு புனித சிசிலியா புதிய பெண்கள் பாடசாலை, சென்.மைக்கல் தேசிய பாடசாலையிலும் கூடைப்பந்தாட்ட மைதானம் புனரமைப்புச் செய்ததுடன் கிரான் மகா வித்தியாலயத்தில் புதிய கூடைப்பந்தாட்ட மைதானமும் அமைக்கப்பட்டது.
மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் பாடசாலையில் இடம்பெற்ற 35 ஆவது தேசிய விளையாட்டு விழா ஆரம்ப வைபவத்தில் புனரமைக்கப்பட்ட மைதானத்தை அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் திறந்து வைத்ததுடன் விளையாட்டினையும் ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீர்த்தா பிரபாகரன் விளையாட்டுத் துறை அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் டீ.வீ.தஸா நாயக்க, அரசாங்க அதிபர் எஸ்.அருமைநாயகம் உட்பட பல உயரதிகாரிகள், அரச அதிகாரிகள், கல்வித் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.