August

August

ஒற்றுமை ஏன் எதற்காக? : அழகி

Pongu Thamil Kudaiஎமது தமிழ் தொலைக்காட்சிகளைத் திறந்தாலே அங்கே பேசப்படுவது தமிழர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லை, அதனால்தான் எமது போராட்டம் இவ்வளவு அழிவுகளையும் சந்தித்து தோற்றுக் கொண்டு இருக்கிறது என்பதேயாகும். பல நேரடி நிகழ்சிகளிலும் கூட பல தமிழர்கள் தொலைபேசியூடாக வந்து ஒற்றுமையில்லை – தமிழினத்தைக் காட்டிக் கொடுக்கிறார்கள் – ஒட்டுக்குழுக்கள் பணத்திற்காக எதையும் செய்வார்கள் – எமது ஊர்வலங்களிலும் பார்த்த முகங்களையே காணக்கூடியதாக இருந்தது – எமது தலைவர் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளுவார் என இப்படியே மாரடிக்கும், அரசியல் அறிவைப் பெறாமல் இவ்வளவு காலமும் இந்த தொலைக்காட்சிகள் ஊடாக பிதற்றி வந்திருக்கிறார்கள்.

1986 ம் ஆண்டே ரெலோ போராளிகளை ரயர் போட்டு கொளுத்தி எந்த தார்மீகங்களுக்கும் மதிப்பழிக்காது கொன்று குவித்த அன்றே தமிழர் போராட்டம் பகிரங்கமாக இந்த உலகிற்கு காட்டிக் கொடுக்கப்பட்டு விட்டது என்பதை ஒற்றுமை இல்லை எனப் புலம்பும் இந்த பிரகிருதிகளுக்கு ஒரு போதும் உறைக்கவில்லை.

இதைவிட மேலும் நகைப்பிற்குரிய விடயம் இவர்கள் எல்லாம் உலக அரசியல் பேசுவதுதான். அமெரிக்க அரசியல், இங்கிலாந்து அரசியல் இந்திய அரசியல், உலக ராணுவ அரசியல் எல்லாவற்றையும் தண்ணீர்பட்ட பாடாக பேசிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் பேசிய தமிழ் ஈழ அரசியல் புலி அரசியல் தலைவர் அரசியல் – எங்கட தலைவர் அரசியல் எல்லாம் வேரோடு பிடுங்கப்பட்டு புதை குழி தோண்டிப் புதைக்கப்பட்டு மண்ணோடு மண்ணாக கரைத்து இவர்களுடைய சாம்பலையும் கடலிலே வீசி விட்டார்கள். இவர்களுக்கு நடந்தது முன்னமே பல தடவைகள் வரலாற்றில் நிகழ்ந்தவைதான். ஆனால் எல்லா அரசியலும் பேசிய இவர்களுக்கும் அதே வரலாறு ஏன் நிகழ்ந்தது?

ஏன் இவர்களுடைய அரசியல் இப்படி பரிதாபமாகரமான நிலைக்கு சென்றது? எதற்காக? எமது அப்பாவி தமிழினத்தின் உயிர்களோடும் உடமைகளோடும் பெண்களோடும் குழந்தைகளோடும் விளையாடினார்கள்? இவர்கள் விடை சொல்லியே ஆக வேண்டும். எமது மக்களை இந்த இழிநிலைக்கு கூண்டோடு கொண்டு சென்றது ஏன்? தமிழினம் தமது வரலாற்றில் ஒரு நேர உணவுக்கும், குடி நீருக்கும், உடுபுடவைக்கும் ஏங்கும் நிலைக்கு ஏன் கொண்டு வந்து விட்டார்கள்?

தியாகம் என்பது என்ன? மற்றவர்கள் துன்பப்படும் போது அந்த துன்பத்தை போக்கி தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து அவர்களுடைய முகங்களிலே மகிழ்ச்சியை உருவாக்கி தானும் மகிழ்ச்சியடைபவனே தியாகி. ஆனால் எமது போராட்டத்திற்குள் வந்தவர்கள் (ஒரு சிலரை தவிர) இப்படி நடந்தார்களா? ஈழ மக்களின் குருதியை குடித்தார்கள். அவர்களின் உழைப்பையெல்லாம் தட்டிப் பறித்தார்கள். ரௌடித்தனத்தாலும், கொலைகளாலும், பாலியல் வன்புணர்வுகளாலும் வாழ்க்கையின் சுக போகங்களை அடைவதற்கெனவே இயக்கங்களுக்கு சேர்ந்தவர்கள் பலர். இவர்களால் மக்களுக்கு விடிவை ஏற்படுத்தி விட முடியுமா?

புலம்பெயர் தமிழர்களை நோக்கினாலோ அவர்கள் பல வகையினர். 1986 ம் ஆண்டு ஈழப் போராட்டம் உச்சத்தில் இருந்த நேரம். போராட்டத்தை மாற்று இயக்கங்கள் மீது புலிகள் படுகொலைகளைப் புரிந்து காட்டிக் கொடுத்தபோது இதில் இருந்து தப்பி வந்தவர்கள். இவர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

1) உண்மையான போராளிகள்.
2) இயக்கப் பணத்தைக் கொள்ளையடித்து வெளிநாடு வந்தவர்கள்.
3) இவர்கள் எப்போதும் சுயநலம் மிக்கவர்கள்.

இயக்கப் பணத்தைக் கொள்ளையடித்தவர்களும் சுயநலம் மிக்கவர்களும் இங்கு ஒன்று சேர்ந்தார்கள். எந்த அரசியல் நோக்கும் இல்லாமல் தங்களை மேலும் வளர்த்துக் கொள்வதற்காக பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டும் கொலைகள் செய்தும் கப்பம் வாங்கியும் எமது போராட்டததை வலுவிழக்கச் செய்து விட்டார்கள். மக்கள் எல்லோரையும் புலிகள் ஈழத்திலே கொன்றொழிக்க உறுதுணையாக இணையம் மூலமும், வானொலி, தொலைக்காட்சி, ஊர்வலங்கள், பொதுக் கூட்டஙகள், கொண்டாட்டங்கள், கோயில்கள், தமிழ் பாடசாலைகள், பொது அமைப்புக்கள், நிதி சேகரிப்பு, வியாபார நிறுவனங்கள் என சமூகத்தின மூலை முடுக்கெல்லாம் நுழைந்து செயற்பட்டுள்ளார்கள். இவற்றையெல்லாம் புலம்பெயர் மக்கள் சிந்திக்க தவறி விட்டார்கள்.

ஆனால் இன்று ஒற்றுமை இல்லை, தோற்று விட்டோம் என நேரலைகளில் வந்து கூப்பாடு போடுகிறார்கள்!

இப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்? முதலில் விடப்பட்ட தவறுகள் என்ன என்பதை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். தவறு விட்டவர்கள் தமது தவறுகளை மனந்துணிந்து அதே தொலைக்காட்சிகள் ஊடாக மன்னிப்பு கோர வேண்டும். புலம்பெயர் தமிழர்களை மிகவும் தவறாக வழிநடத்திய தீபம், தினேஸ், அனாஸ், டாக்டர் மூர்த்தி, இராஜமனோகரன், குமார் போன்ற முன்னணியில் நின்றவர்களும் இவர்களுக்கு பின்னணியில் நின்றவர்களும் அரசியலைக் கரைத்துக் குடித்த இவர்களைப் போன்றவர்கள் முரண்டு பிடிக்காமல் அரசியலில் இருந்து பேசாமல் ஒதுங்க வேண்டும். புலம்பெயர் நாடுகளில் சேர்க்கப்பட்ட பணம் முழுவதும் அந்தந்த நாட்டு முகவர்கள் ஊடாக திருப்பி வழங்கப்பட வேண்டும். இவர்கள் விட்ட தவறுகளுக்கு மனம் வருந்த வேண்டும். புலம்பெயர் நாடுகளில் வீதி வீதியாக கத்திக் குழறி, உண்ணாவிரதம் இருந்து மிரட்டி, பாதைகளை மறித்து ஆட்டம் போட்டும் முள்ளிவாய்க்காலில் தலைவரோடு, ஆயிரக்கணக்கான மக்களையும் சேர்த்து பலியிட்டதற்கு, ஏன் அப்படி நடந்தது என்பதற்கு, இன்னமும் தொலைக்காட்சிகளில் ஒன்றும் தெரியாதவர்கள் மாதிரி ஆய்வுகளும் காரணங்களும் தேடிக் கொண்டிருப்பதை நிறுத்த வேண்டும்.

இதை விடுத்து ஒற்றுமை இல்லை, ஒற்றுமை இல்லை என திரும்ப திரும்ப சொல்லக் கூடாது. தமிழ் மக்களின் ஐக்கியத்தை தாங்களே ஒட்டுக்குழு துரோகிகள் என பிரித்து விட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். ஒற்றுமை என்றால் என்ன? தம் தவறுகளை உணர்ந்து திருந்தி மன்னிப்புக் கேட்டு மனிதர்களாக செயற்பட வேண்டும். நல்ல காரியங்கள் நல்ல மனிதர்களால் முன்னெடுக்கப்பட வேண்டும். பெரும்பான்மையான மக்களால் அவர்களின் விருப்புக்களோடு 100 வீதம் செயற்பட வேண்டும். எமது சமூகம் நற்சிந்தனைகளால் வளர்க்கப்பட வேண்டும். ஒருவன் இன்னொருவனை ஏமாற்றினால் ஒவ்வொருவனும் தலைகுனிய வேண்டும். ஏமாற்றுபவனைத் திருத்த முற்பட வேண்டும். ஏமாற்ற நினைப்பவனுக்கு ஊக்கம் கொடுத்து தங்கள் நலன்களை வளர்த்துக் கொண்டதால் ஒரு இனமே இன்று கண்முன் அழிந்து கொண்டிருக்கிறது.

நாம் ஓரளவிற்கேனும் ஜனநாயகம் இருக்கும் ஐரோப்பிய நாடுகளில் வசிக்கிறோம். இந்த நாடுகளில் இருந்து நல்லவற்றைக் கற்றுக் கொண்டே ஆக வேண்டும். பொது விடயங்களில் எப்படி நடக்க வேண்டும், பொதுப் பணத்தை எப்படி கையாள வேண்டும் (கையாட அல்ல) என்பவற்றைக் கற்றுக் கொண்டாலே எமது மக்களுக்கு நல்லது செய்ய முடியும்.

விடுதலை என்ற பெயரில் தமிழ் மக்களை கொன்றொழித்த பிரபாகரனுக்கு பின்னால் அணிதிரளுங்கள் என்று சொன்னதும் – சொல்வதும் மிகவும் வேதனையான விடயமே. ஏழை, எளிய மக்களின் பிள்ளைகளுக்கு தற்கொலைக் குண்டுகளைக் கட்டி விட்டு; தமது பிள்ளைகளை அரச பரம்பரை மாதிரி வளர்த்ததற்கு பெயர் போராட்டமா?

இறுதியாக ஒற்றுமை ஒற்றுமை என போலியாக கூக்குரல் இடுபவர்கள் தமது உள்ளங்கiளில் கை வைத்து சொல்லட்டும் – என்னத்திற்கு ஒற்றுமை வேண்டும்? இப்பொழுதாவது தமிழ் மக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும். சுயமாக சிந்திக்க வேண்டும். எமது சமூகத்தை சுயநலமற்ற தமது வாழ்க்கைக்கு பொதுப் பணத்தை கையாடாத நல்லவர்களை முன்னிறித்தி சரியான சிந்தனைகளோடு எமது போராட்டத்தை முன்னெடுத்து செல்லலாம். இப்பொழுதும் நாம் சிந்திக்கவில்லையென்றால் இப்போதிருந்து எமது ஈழத்தில் எமக்கான நிலம் இல்லாமலே போய்விடும். தயை செய்து புலம் பெயர் தமிழர்கள் விழித்து செயற்படுங்கள்.

சர்வதேச இடதுகை பழக்கமுடையோர் தினம் International Lefthanders Day – புன்னியாமீன்

lefthandersday.jpgசர்வதேச இடதுகை பழக்கமுடையோர் தினம் 1976ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும்  ஆகஸ்ட் 13ஆம் திகதி கொண்டாடப்பட்டு வருகின்றது. சர்வதேச இடக்கை பழக்கத்தவரின் நிறுவனம் இத்தினத்தை அனுஸ்டிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

உலகளாவிய ரீதியில் நோக்குமிடத்து அதிகமானோர் தமது அன்றாட பிரதான தேவைகளை வலக்கையாலேயே நிறைவேற்றுவர். குறிப்பாக எழுதுவது, முக்கியமான வேலைகளை செய்வது போன்றவற்றில் வலக்கையே பிரதானப்படுத்தப்படும். அதேநேரம்,  வலக்கையால் செய்யப்படும் சில வேலைகளை சிலர் இடது கையால் செய்து வருகின்றனர். குறிப்பாக எழுதுவதற்கு பயன்படுத்தப்படும் கை இடது கையாக அமைந்து காணப்படும். உலகளாவிய ரீதியில் நோக்கும்போது மொத்த சனத்தொகையில் 7 – 10 வீதத்தினரே இடது கை பழக்கமுள்ளவர்கள் என கணிப்பீடுகள் குறிப்பிடுகின்றன.

எனவே, ஒப்பீட்டு ரீதியாக இந்த இடதுகை பழக்கமுடையவர்கள் சிறுபான்மையாளராக இருப்பதனால் சமூகத்தில் பல்வேறு பட்ட அவஸ்தைகளை எதிர் நோக்க வேண்டி ஏற்படுகின்றது. எந்த ஒரு பொருளும் வலதுகை பழக்கம் உடையவர்களுக்கு மட்டுமே தயாராகிறது,  இடது கை பழக்கம் உள்ளவர்களை மனதில் வைத்துத் தயாரிக்கப்படுவதில்லை.

இந்த அடிப்படையில் இடது கை பழக்கம் உடையவர்கள் உபயோகிக்க கஷ்டப்படும் சில பொருட்களை உதாரணமாகக் குறிப்பிடலாம். கத்தரிகோல்,  ஹாக்கி மட்டை,  கிடார், மண்டபங்களில்  இருக்கையுடன் அமர்ந்து இணைக்கப்பட்டு இருக்கும் மேசை,  இது இடது கை பழக்கம் உள்ளவர்களுக்கு என்று கிடைப்பது அரிது. உணவு மேசையில் ஏற்கனவே பரிமாறப்பட்டு இருக்கும் உணவு வலது கை பழக்கம் உள்ளவர்களுக்காகவே இருக்கும். நவீன காலத்தில் கணனி கூட வலக்கை பாவனைக்கேற்ற முறையிலேயே அதன் மவுஸ் பிரயோகத்திற்கான வசதிகள் செய்யப்பட்டிருப்பதைக் காண்கின்றோம். இது மாத்திரமன்றி கதவுகளைத் திறக்கும்போது,  குழாய்த் தண்ணீர் திறக்கும்போது வலக்கை பாவனைக்கேற்ற முறையிலேயே அவை செய்யப்பட்டுள்ளன. இவை மட்டுமன்றி பொதுவாக நாம் பயன்படுத்தும் அநேக பொருட்களில் இதனை நாம் காண்கின்றோம்.

இது கைப் பழக்கம் பிறப்பிலே சில மனிதர்களுக்கு ஏற்படுகின்றது. நமது மூளை மூளையம், மூளி சிறுமூளை மற்றும் நீள்வளைய மையவிழையம் என மூன்று பகுதிகளை கொண்டுள்ளது. இதில் மூளையம் (பெருமூளை) இரண்டு அரைக்கோள வடிவில் உள்ளது. இடதுபக்க அரைக்கோளம் உடலின் வலதுப்பக்க உறுப்புகளையும்,  வலதுப்பக்க அரைக்கோளம் உடலின் இடப்பக்க உறுப்புகளையும் இயக்குகின்றன. இதில் பெரும்பாலானோருக்கு இடப்பக்க அரைக்கோளம் சற்று மேலோங்கியதாக இருக்கும். இதனால் அவர்களுக்கு வலப்பக்க உறுப்புகள் சிறப்பாக செயல்படுகின்றன. ஆனால் ஒரு சிலருக்கு வலப்பக்க அரைக்கோளம் மேலோங்கி செயல்படுவதால் இடது கை பழக்கம் ஏற்படுகிறது.

 இடக்கைப் பழக்கமுள்ள குழந்தைகளை சில பெற்றோர்கள் குழந்தைப் பருவத்திலேயே வலக்கைக்கு மாற்றுவதற்கான பிரயத்தனங்களை மேற்கொள்வர். தற்போது கிராமிய மட்டங்களில் இடக்கைப் பழக்கமென்பது ஒரு வெறுக்கத்தக்க பழக்கமாக காணப்படுகின்றது. இந்தப் பழக்கத்தை இவர்கள் மாற்ற முயற்சி செய்தால் பேச்சிலும்,  பார்வையிலும் குறைபாடுகள் ஏற்படலாம் என்கிறது அறிவியல்.

ஆனால்,  நவீன கால விஞ்ஞான விளக்கங்களின்படி இடக்கைப் பழக்கமுள்ளோர் விவேகத்திறன் கூடியவர்கள் என்று கூறப்படுகின்றது. அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள ஒபாமா இடது கை பழக்கம் உள்ளவர். இடது கையால் கையெழுத்திட்டே பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். இவர் தவிர அமெரிக்க ஜனாதிபதியாகப்  பதவி வகித்த ஜோர்ஜ் புஷ் (சீனியர்),  பில் கிளிண்டன், ஜெரால்ட் ஃபோர்ட்,  ஜேம்ஸ் கார்ஃபில்ட்,  தொமஸ் ஜெபர்சன்,  ரொனால்ட் ரீகன்,  ஹாரி ட்ரூமேன் ஆகியோரும்,  அமெரிக்க துணை ஜனாதிபதியாக இருந்த நெல்சன் ராக்ஃபெல்லர் , ஹென்றி வாலேஸ் ஆகியோரும் இடது கைப்பழக்கம் உடையவர்கள்தான். இந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்தி,  நெப்போலியன் போனாபர்ட்,  அவரது மனைவி ஜோசப்பின்,  ஜூலியஸ் சீசர்,  மாவீரன் அலெக்ஸாண்டர்,  தத்துவமேதை அரிஸ்டாட்டில்,  பிரிட்டன் பிரதமராக இருந்த வின்சென்ட் சர்ச்சில்,  சாரணர் இயக்கத்தைத் தோற்றுவித்த  பேடன்பாவெல் ,  கியூபா அதிபராக இருந்த பிடல் காஸ்ட்ரோ,  விஞ்ஞானி ஆல்பிரட் ஐன்ஸ்டீன்,  ஃபோர்டு கார் தயாரிப்பு ஆலையைத் தோற்றுவித்த ஹென்றி ஃபோர்டு,  இங்கிலாந்து மன்னர்களாக இருந்த 3-வது,  8-வது எட்வர்ட்,  2-வது,  4-வது,  6-வது ஜார்ஜ் ஆகியோர் உள்பட வரலாறு படைத்த பலர் இடது கைப்பழக்கம் உடையவர்களே.

இவ்வாறு பல பிரபல்யங்களைக் குறிக்கலாம். பொதுவாக சாதாரண ஒரு மனிதனின் பழக்கவழக்கத்திற்கும்,  குணாதிசயங்களுக்கும் இந்த கைப்பழக்கங்கள் வெகுவாக பாதிப்பை செலுத்துவதில்லை. எவ்வாறாயினும் அண்மைக்கால கட்டங்களில் வலது கை பழக்கத்துக்குப் பயன்படுத்தப்பட்டுவரும் பொருட்களை இடக்கைப் பழக்கமுள்ளோருக்கு ஏற்றவகையில் மாற்றியமைக்கப்பட்டு வருவதையும் நாம் அவதானிக்க முடியும்.

இடது கைப்பழக்கம் உள்ளவர்கள் பற்றி அண்மையில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஒரு ஆய்வு  நடத்தப்பட்டது. இந்த ஆய்வை நடத்திய பேராசிரியர் ஸ்டான்லி கோரன்,  இடது கைப் பழக்கம் உள்ள நூற்றுக் கணக்கானவர்களைச் சந்தித்தும்  இடது கைப் பழக்கம் கொண்ட இறந்தவர்கள் பற்றியும் ஆராய்ந்தும் தமது முடிவில்   இடது கைப் பழக்கம் உள்ளவர்களுக்கு சில குறைபாடுகள் இருப்பதைக் கண்டறிந்தார். இடது கைப்பழக்கம் உள்ளவர்கள் வலதுகைப் பழக்கம் கொண்ட வாழ்க்கைத் துணையுடன் சேர்ந்து வாழும்போது மிகவும் சிரமப்படுகிறார்களாம். தவிர,  வலது கைப் பழக்கம் கொண்டவர்களை விட இவர்களுக்கு சராசரியாக 9 வருடம் ஆயுள் குறைவாக இருப்பதாகவும் முடிவு வெளியிட்டார்.

இதற்கு முக்கியக்காரணம் இவர்கள் அதிக அளவில் விபத்துக்களில் சிக்கிக் கொள்வதுதான். ஏனெனில் உலகம் முழுவதும் வலதுகை பழக்கம் கொண்டவர்களுக்காகவே இயந்திரங்கள், தொழில் உபகரணங்கள்,  வாகனங்கள் தயாரிக்கப்பட்டிருப்பதால் அதை இடது கைப் பழக்கம் உள்ளவர்கள் கையாளும்போது அவர்களுக்குப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

சிலர் விதி விலக்காக இரண்டு கைகளாலும் சமனாக வேலை செய்யக்கூடிய ஆற்றல் உள்ளவர்களும் உளர்.  கலப்பு கை பழக்கம் (Mixed Handedness) அல்லது கலப்பு ஆதிக்கம் (Cross-Dominance)என்பது சில வேலைகளுக்கு ஒரு கையையும் பிற வேலைகளுக்கு மறு கையையும் மாறி மாறி பயன்படுத்தும் ஒரு வகையான தசை இயக்க வெளிப்பாடு ஆகும். எடுத்துக்காட்டுக்கு,  கலப்புக் கை பழக்கம் உடையோர் வலது கையில் எழுதினாலும் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு இடது கையைப் பயன்படுத்த இயலும். இது போல வெவ்வேறு செயல்களுக்கு வெவ்வேறு கைகளை பயன்படுத்துவர். இரு கை பழக்கம் (Ambidexterity) என்பது இந்த கலப்பு ஆதிக்கத்தின் ஒரு வகையாகும். இரு கை பழக்கமுடையோர் தனது இரு கைகளையும் சரி சமமாகப் பயன்படுத்துவர். எனினும் கலப்பு கை பழக்கம் உடையோர் குறிப்பிட்ட செயல்களுக்கு ஒரு கை பழக்கமுடையவராக இருப்பர். எனவே பிறர் அவரை குறிப்பிட்டு நோக்காதிருந்தால் அவரது பெரும்பான்மையான கை பழக்கத்தை கொண்டு இடது கை பழக்கமுடையவராகவோ வலது கை பழக்கமுடையவராகவோ தவறாக கண்டு கொள்வர்.

இந்த கலப்பு ஆதிக்கம் கண்,  காது,  கால்கள் போன்ற இட-வல வேறுபாடுகள் உடைய அனைத்து உடற்பாகங்களுக்கும் பொருந்தும். எனினும் இந்த கலப்பு ஆதிக்கம் குறி பார்க்கும் செயல்களில் சில நேரங்களில் தடுமாற்றத்தை ஏற்படுத்தலாம்

இடது கைப்பழக்கம் உள்ளவர்கள் வலது கைப் பழக்கம் உள்ளவர்களை விட விரைவாக சிந்திக்கிறார்கள் என்பது அவுஸ்திரேலிய விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவாகும். இடது கைப்பழக்கம் உள்ளவர்களால் மூளையின் இரண்டு பாகங்களையும் பயன்படுத்த முடிவதாகவும்,  விரைவாக தகவல்களை மூளைக்கு அனுப்பிப் பெற முடிவதாகவும் அவர்களுடைய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள்,  மூளையின் இரண்டு பாகத்துக்கும் தகவல்களை விரைவில் பரிமாறிக்கொள்ள இடது கைப் பழக்கம் உடையவர்களால் முடிகிறது என்றும் அதனால் நுட்பமான பணிகளையும்,  விளையாட்டு போன்ற துறைகளையும் அவர்களால் ஆக்கிரமிக்க முடியும் என்று தெரிவிக்கின்றனர். பார்வைக்குத் தேர்வு வைக்கும் பல விஷயங்களில் இடது கைப்பழக்கம் உடையவர்கள் மிகவும் சாமர்த்தியசாலிகளாய் இருப்பதாகவும் இவர்கள் ஆராய்ச்சியில் கூறியிருக்கிறார்கள்.

தனித்துவமான போக்கினைக் கொண்ட இடக்கைப் பழக்கமுள்ளோரின் செயற்பாடுகளை கௌரவிக்கவும் மானசீகமான தாக்கங்கள் ஏற்படாமல் காப்பதற்கும் இத்தினம் விசேடமாக அனுஸ்டிக்கப்படுகின்றது. குறிப்பாக இவர்கள் மத்தியில் போட்டி நிகழ்ச்சிகளை நடாத்துவதும்,  கருத்தரங்குகள்,  கூட்டங்கள் நடாத்துவது என்பன இத்தினத்தில் பிரதானமாக மேற்கொள்ளப்படுகின்றன. இத்தினத்தை அனுஸ்டிப்பதில் ஊடகங்களும் வெகுவாக அனுசரணைகளை வழங்கி வருவதை அவதானிக்க முடிகின்றது.

ஆங் சாங் சுயியை நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு ஐ. நா., ஐரோப்பிய யூனியன் கடும் அழுத்தம்

miyanmar_s.pngமியன்மார் ஜனநாயகக் கட்சியின் தலைவி ஆங் சாங்சுயி மீதான நீதிமன்றத் தீர்ப்பை அநீதியானதெனக் குறிப்பிட்ட அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அவரை உடனடியாக எவ் வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்யுமாறு கோரியுள்ளார்.

மியன்மார் இராணுவ அரசு தொடர்ந்தும் ஜனநாயக விரோதச் செயல்களை முன்னெடுப்பதை ஐ. நா. செயலாளர் பான் கீ மூன் கண்டித்துள்ளதுடன் ஐரோப்பியன் யூனியன் மியன்மார் மீது அவசரத் தடைகளைக் கொண்டு வர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது.

மியன்மார் ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஆங்சாங்சுயி (64) மேலும் 18 மாதங்களுக்கு தடுப்புக்காவலில் வைக்கப்பட வேண்டுமென நேற்று முன் தினம் மியன்மார் நீதி மன்றம் உத்தரவிட்டது.

தடுப்புக் காவலில் இருந்த வேளை தனது வீட்டுக்குள் அமெரிக்கர் ஒருவரை வைத்திருந்ததாகக் கூறியே இந்தப் புதிய தீர்ப்பை மியன்மார் நீதிமன்றம் வெளியிட்டது. சுமார் இருபது வருட அரசியல் வாழ்க்கையில் 14 வருடங்களை ஆங் சாங் சுயி சிறையிலும், வீட்டுக் காவலிலும் கடத்தி வருகின்றார்.

மியன்மாரில் 2010 ம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஆங் சாங்சுயியை போட்டியிடாமல் தடுக்கும் நோக்குடனே மியன்மார் இராணுவ அரசு இத் தீர்ப்பை வெளியிட்டுள்ளதாக உலக நாடுகள் விமர்சித்துள்ளன.  மியன்மார் மீதான கண்டனங்கள் அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்கா இது குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளது.

ஏழு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அமெரிக்கரையும் விடுதலை செய்யும்படி பராக் ஒபாமா கோரிக்கை விடுத்துள்ளார்.  மியன்மார் இராணுவ அரசின் மிலேச்சத்தனமான இந்நடவடிக்கைகளைக் கண்டித்து உலகத் தலைவர்கள் அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். நேற்று முன்தினம் இத் தீர்ப்பு வெளியானதையடுத்து ஐ. நா. செயலாளர் பான் கீ மூன் மியன்மார் அதிகாரிகளுடன் அவசரமாகத் தொடர்பு கொண்டு நீதி மன்றத் தீர்ப்பை நிராகரித்தார்.

பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுண் இத் தீர்ப்பைக் கேள்வியுற்றதும் தான் திடீரெனக் கோபமடைந்ததாகக் கூறினார்.  இவ்வாறான நிலைமையில் மியன்மார் மீது புதிய தடைகள், அழுத்தங்களைக் கொண்டு வர ஐ. நா., ஐரோப்பிய யூனியன் என்பன ஆலோசித்து வருகின்றன.  சீனா இவ்விடயத்தில் மியன்மாரின் பக்கம் சாய்ந்துள்ளமை அதன் நடவடிக்கைகளிலிருந்து தெரிய வருகிறது.

இலங்கையுடனான 20க்கு 20 போட்டியில் பாகிஸ்தான் 52 ஓட்டங்களால் வெற்றி

afridi.jpgபாகிஸ் தானுடனான முதல் 20க்கு 20 போட்டியில் 52 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது இலங்கை அணி. இலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதிய முதல் 20க்கு 20 போட்டி நேற்று கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டு மைதானத்தில் இரவுப் போட்டியாக நடைபெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றியிட்டிய பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றது.

பாகிஸ்தான் அணிக்கு சஹிட் அப்ரிடி தலைமை தாங்கினார் அவர் தலைமை தாங்கிய முதல் 20க்கு 20 போட்டியில் 37 பந்துகளை எதிர்கொண்டு 50 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். இதேவேளை இம்ரான் 28 பந்துகளை எதிர் கொண்டு 40 ஓட்டங்களையும் பெற்றார். இப்போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய உமர் அக்மல் 20 பந்துகளை எதிர் கொண்டு 30 ஓட்டங்களைப் பெற்றார். இலங்கை அணியின் பந்து வீச்சைப் பொறுத்தவரையில் துஷாரா 2 விக்கெட்டையும், குல சேகர, மெத்திவ், மலிங்க தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

பாகிஸ்தான் அணி 6.1 பந்துகளில் 50 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணி 100 ஓட்டங்களை 12.1 பந்துகளில் பெற்றது. இதேவேளை 4வது விக்கெட் இணைப்பாட்டமாக 50 ஓட்டங்கள் பெறப்பட்டது. அப்போது அப்ரிடி 21 ஓட்டங்களையும், உமல் அக்மல் 28 ஓட்டங்களையும் உதிரியாக ஒரு ஓட்டமும் பெறப்பட்டிருந்தது.பாகிஸ்தான் அணி 150 ஓட்டங்களை 17.5 பந்து களில் பெற்றது. 20 ஓவர் முடிவில் 172 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்தது.

173 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி எனப் பதிலெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 120 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி சார்பாக அணித் தலைவர் சங்கக்கார 38 ஓட்டங்களையும் ஜயசூரிய 23 ஓட்டங்களையும் பெற்றனர். எனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றனர்.

பந்து வீச்சில் நவிட் 3 விக்கெட்டையும் அஜ்மல் 3 விக்கெட்டையும் அப்ரிடி, ஆமிர், அன்ஜும் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதேவேளை பாகிஸ்தான் அணி நாங்கள் தான் 20க்கு 20 உலக சம்பியன் என்பதை மிண்டும் நிரூபித்துவிட்டது மட்டுமல்லாமல் இப்போட்டியில் வெற்றியீட்டி கிண்ணத்தைக் கைப்பற்றியது. ஆட்டநாயகனாக அப்ரிடி தெரிவானார்.

தொழிற் சங்கங்கள் அசமந்தம் அடுத்த வாரம் கூடி ஆராய முடிவு

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகி ஐந்து மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அது இன்னமும் புதுப்பிக்கப்படாமல் உள்ளது.

இது தொடர்பாக அடுத்த வாரமளவில் தொழிற்சங்கங்கள் கூடி ஆராயுவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துடனான கூட்டு ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது குறித்து அதில் கைச்சாத்திடும் சங்கங்கள் சம்மேளனத்துடன் ஒரு சுற்றுப் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளன. அதன்போது தொழிலாளர்களின் நாட் சம்பளத்தை ஐநூறு ரூபாவாக அதிகரிக்க வேண்டுமென சங்கங்கள் கோரிக்கை முன்வைத்துள்ளன.

எனினும், இதனை நிராகரித்த முதலாளிமார் சம்மேளனம், நாளொன்றுக்கு 200 ரூபாவை வழங்க முடியுமெனத் தெரிவித்துவிட்டது. இது குறித்து தொழிற் சங்கங்கள் மீண்டும் அடுத்த வாரம் கூடி ஆராய்ந்து சம்மேளனத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படுமென்று காங்கிரஸ் தலைவர் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது குறித்து நடவடிக்கைகளை எடுத்து வந்த நிலையில், சங்கங்கள் ஊவா மாகாண சபைத் தேர்தலில் மூழ்கிவிட்டன. தற்போது தேர்தல் முடிவடைந்த நிலையில் மீண்டும் கூட்டு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கப்போவதாக பிரதியமைச்சர் சிவலிங்கம் தெரிவித்தார்.

முதலாளிமார் சம்மேளனத்துடனான கூட்டு ஒப்பந்தத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், தோட்டத் தொழிற்சங்கக் கூட்டுக்கமிட்டி ஆகிய அமைப்புகள் கைச்சாத்திட்டு வருகின்றன.

இந்தச் சங்கங்கள் அடுத்த வாரம் கூடி ஆராய்ந்து மீண்டும் பேச்சுவார்த்தையை உயிர்ப்பிக்கவுள்ளதாக பிரதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தோட்டத் தொழிற்சங்கக் கூட்டுக் கமிட்டியில் பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு மணி நேரத்தில் 261 வாகனங்கள் நேற்று மடு பிரதேசத்தினுள் பிரவேசம்

madu_church.jpgமடு தேவாலய உற்சவத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ரயில் சேவைகள் நேற்றுக் காலை முதல் ஆரம்பமாகின. முதலாவது ரயில் நேற்றுக் காலை 7.45க்கு நீர்கொழும்பு ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றது.

இதேவேளை நேற்று மடு தேவாலயத்திற்குச் செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்ட ஒருமணி நேரத்துள்ளேயே 261 வாகனங்கள் மடு தேவாலய பகுதிக்குள் சென்றதாக தேவாலய தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமான சேவைகள் அமைச்சர் சரத் குமார குணரட்ண அவரது பாரியார் சகிதம் மடு புறப்பட்டுச் செல்லும் முதலாவது ரயிலில் பயணித்தனர். நீர்கொழும்பு ரயில் நிலையத்தில் நேற்றுக் காலை புறப்பட்டுச் செல்லும் யாத்திரிகர்களுக்கும், ரயிலுக்கும் ஆசிவேண்டி விசேட ஆராதனைகள் நடத்தப்பட்டதுடன் மடு மாதா மீதான துதிப்பாடல்களும் பாடப்பட்டன.

கொழும்பு கோட்டையிலிருந்தும் நேற்று விசேட ரயில்கள் புறப்பட்டுச் சென்றன. நாளை காலை கொழும்பு கோட்டையிலிருந்து காலை 5.45க்கும், 6.05க்கும், 8.45க்கும் பகல் 1.45க்கும் மாலை 4.20க்கும் இரவு 10.00 மணிக்கும் விசேட ரயில்கள் புறப்படுகின்றன.

குடாநாட்டிற்கு 6 மாதத்துக்கு தேவையான சீமெந்து தயாரிக்கக்கூடியளவுக்கு கிளிங்கர்

காங்கேசன்துறை லங்கா சீமெந்துத் தொழிற்சாலையில் தற்போது சுமார் 38 ஆயிரம் மெற்றிக்தொன் கிளிங்கர் இருப்பதாகவும் இதனை அரைக்கும் பட்சத்தில் சுமார் 6 மாத காலத்துக்கு யாழ்.மாவட்டத்தின் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்குமெனவும் லங்கா சீமெந்து நிறுவனப் பொறுப்பதிகாரி பி.விமலநாதன் தெரிவித்துள்ளார்.  சீமெந்துத் தொழிற்சாலையில் 19 வருடங்களுக்கு மேலாக இருப்பில் இருந்த கிளிங்கரின் மாதிரி பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டபோது அவை பாவிக்கக் கூடியதாக இருப்பதாகவும் அவற்றை அரைக்கும் இயந்திரத்தில் போட்டு அரைக்கும் பட்சத்தில் சுமார் 7 1/2 லட்சம் சீமெந்துப் பைக்கற்றுகள் பொதி செய்யலாமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

லங்கா சீமெந்து நிறுவனத்தை அடுத்த வருட முற் பகுதியில் மீண்டும் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெறும் நிலையில் இந்த கிளிங்கர் அங்கிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தற்போது ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நிவாரணக் கிராமங்களில் 4500 அரசாங்க ஊழியர்கள் பாதுகாப்பு அனுமதி கிடைத்ததும் மீளச் சேவையில் இணைக்க முடிவு -சரத் அமுனுகம

வன்னி யிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள அரச ஊழியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளும்போது பாதுகாப்பு அமைச்சின் பூரண அங்கீகாரத்துடனேயே அந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார்.

மேற்படி ஊழியர்களில் பிரதேச செயலாளர்கள், கிராமசேவகர்கள் உள்ளிட்ட பல்வேறுமட்டத்தினர் உள்ளனர். அவர்கள் வன்னியில் பல்வேறு பகுதிகளிலும் பணிபுரிந்தவர்கள் என்பதால் பாதுகாப்பு அமைச்சின் பொறுப்பில் அவர்கள் விசாரணை செய்யப்பட்டு அதன் அங்கீகாரத்துடனேயே மீள சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவரெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்; யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து 4500 அரச ஊழியர்கள் வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர். இவர்களுக்கான சம்பளம் மாதாந்தம் வழங்கப்பட்டு வருகிறது.

வடக்கில் சிவில் நிர்வாகத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கை யின் கீழ் இவர்கள் மீள அவர்கள் வகித்த பதவியில் நியமிக்கப்படுவர். எனினும், அவர்கள் பாதுகாப்பமைச்சினால் விசாரணைக்குட்படுத்தப்பட்ட பின்னர் அவ்வமைச்சின் சான்று ப்படுத்தலுடனேயே மீளச்சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

இவற்றுள் சிலர் தொடர்பான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

முன்னாள் இராணுவ தளபதி காலமானார்

nalin.jpgமுன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜி. டி. ஜி. நளின் செனவிரத்ன தனது 78 வது வயதில் நேற்றுக்காலை காலமானார். இலங்கை இராணுவத்தின் 10 வது தளபதியாக கடமையாற்றிய இவரது இறுதிக் கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை பொரளை கனத்தை மயானத்தில் பூரண இராணுவ மரியாதைகளுடன் இடம்பெறவுள்ளதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்தது.

1953 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 30 ஆம்திகதி இரண்டாவது லெப்டினன்டாக இராணுவத்தில் இணைந்து கொண்ட இவர் (1958) கெப்டன், (1963) மேஜர், (1971) லெப்டினன்ட் கேர்ணல், (1977) கேர்ணல், (1981) பிரிகேடியர், (1985) மேஜர் ஜெனரல் என்று தரமுயர்த்தப்பட்டார்.

இராணுவத்தின் பல முக்கிய பதவிகளை வகித்த இவர் 1984 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலுள்ள இராணுவத்தின் 54 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாக இருக்கும் காலத்தில் லெப்டினன்ட் ஜெனரலாக தரமுயர்த்தப்பட்டார்.

1985 ஆம் ஆண்டு பெப்ரவரி 11ம் திகதி இராணுவத்தின் 10 வது தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட ஜெனரல் செனவிரத்ன 1986 ஆம் ஆண்டு ஓய்வுபெற்றார்.

2007 ஆம் ஆண்டு ஒக்டோம்பர் மாதம் முதலாம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஜெனரலாக தரமுயர்த்தப்பட்டார்.

“அகதிகளாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் அதிதிகளாகச் சென்று குடியேறவேண்டும்’

அகதிகளாக வெளியேற்றப்பட்ட எம்மை அதிதிகளாகச் செல்வதற்கான வாய்ப்பை யாழ்.மாநகர சபைக்கு ஐந்து முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டதன் மூலம் இறைவன் ஏற்படுத்தித் தந்துள்ளதாக யாழ்.மாநகரசபைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தெரிவு செய்யப்பட்ட சட்டத்தரணி எம்.எம்.றமீஸ் நீர்கொழும்பு பெரியமுல்லையில் அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பின்போது கூறினார். இடம்பெயர்ந்து நீர்கொழும்பில் வாழும் யாழ்.முஸ்லிம்கள் ஏற்பாடு செய்த வரவேற்புக் கூட்டம் ஓய்வுபெற்ற ஆசிரியர் உமர்தீன் தலைமையில் பெரியமுல்லை றசாத் மண்டபத்தில் இடம்பெற்றது.

சட்டத்தரணி றமீஸ் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;

அமைச்சர்களான ரிஷாத் பதியுதீன், அமீர் அலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் ஒன்றிணைந்து சரியான முறையில் வியூகத்தை அமைத்து மக்களுக்குத் தெளிவுபடுத்தியதனால் வாக்குகள் சரியான முறையில் பாவிக்கப்பட்டு ஐ.ம.சு.மு. வில் போட்டியிட்ட 4 முஸ்லிம் உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். சுயேச்சைக் குழுவிலும் ஒரு முஸ்லிம் தெரிவு செய்யப்பட்டுள்ளதால் யாழ்.மாநகர சபைக்கு 5 முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு சரித்திரம் படைக்கப்பட்டுள்ளது.

சிறிய சிறிய பிரச்சினைகளைத் தவிர்த்துக் கொண்டு சரியான முறையில் திட்டமிட்டு ஒற்றுமையாகச் செயற்பட்டால் எதையும் சாதிக்க முடியும். முஸ்லிம்களின் வாக்குப் பலத்தின் மூலம் ஆட்சி அமைக்க முடியும் என்ற செய்தியை தெரியப்படுத்தியுள்ளோம். தீர்மானிக்கும் சக்தி முஸ்லிம்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளோம்.

1990 ஆம் ஆண்டு அகதிகளாக வெளியேற்றப்பட்ட எம்மை அதிதிகளாகச் சொந்த மண்ணான யாழ்ப்பாணம் செல்வதற்கான சந்தர்ப்பத்தை 5 முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டதன் மூலம் இறைவன் ஏற்படுத்தித் தந்துள்ளான்.

யாழ்ப்பாணத்திற்கு வெளியே நாட்டின் நாலாபாகங்களிலும் சிதறி வாழும் யாழ்.முஸ்லிம்களில் எமக்கு வாக்களித்த, வாக்களிக்காத சகலருக்கும் சேவை செய்ய நான் கடமைப்பட்டுள்ளேன். எனக்கு வாக்களிக்காவதர்களுடன் கோபிக்கமாட்டேன். அரசியலில் கருத்து வேறுபாடு இருப்பது சகஜம். இவற்றை மறந்து ஒற்றுமையாகச் செயல்படுவோம்.

“செடோ’ அமைப்பின் செயலாளர் அஜ்மல் பேசும்போது;

யாழ்.மாநகர சபையில் ஐ.ம.சு.மு. ஆட்சியமைக்கத் தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம் வாக்குகள் அமைந்துள்ளன. முஸ்லிம்கள் அரசுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்ற குற்றச்சாட்டு பொய்யென்பது யாழ்.தேர்தல் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் தீர்மானிக்கும் சக்தியாக மாறியுள்ளனர். பிரதிமேயர் பதவி முஸ்லிம் ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும். 1990 ஆம் ஆண்டு அகதிகளாக வெளியேறும் போது சட்டத்தரணி ரமீஸின் தந்தை பிரதிமேயராக இருந்தார். நாம் மீண்டும் மீள்குடியேறும் போது அவரது மகன் றமீஸ் பிரதிமேயராக இருக்க வேண்டும் என்றார்.

நீர்கொழும்பு மாநகர சபை உறுப்பினர் எம்.ஏ.இசட் பரீஸ் உரையாற்றும் போது; யாழ்.மாநகர சபைக்கு இரண்டு முஸ்லிம்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் 5 முஸ்லிம்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளவம மகிழ்ச்சியைத் தருகிறது. முஸ்லிம்கள் அரசுடன் இருக்கிறார்கள் என்பதற்கு இது நல்லதொரு எடுத்துக் காட்டாகும். இதனை முஸ்லிம்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். என்னால் முடிந்த உதவிகளை யாழ்.முஸ்லிம்களுக்காகச் செய்து தருவேன் என்றார்.