தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகி ஐந்து மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அது இன்னமும் புதுப்பிக்கப்படாமல் உள்ளது.
இது தொடர்பாக அடுத்த வாரமளவில் தொழிற்சங்கங்கள் கூடி ஆராயுவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.
இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துடனான கூட்டு ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது குறித்து அதில் கைச்சாத்திடும் சங்கங்கள் சம்மேளனத்துடன் ஒரு சுற்றுப் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளன. அதன்போது தொழிலாளர்களின் நாட் சம்பளத்தை ஐநூறு ரூபாவாக அதிகரிக்க வேண்டுமென சங்கங்கள் கோரிக்கை முன்வைத்துள்ளன.
எனினும், இதனை நிராகரித்த முதலாளிமார் சம்மேளனம், நாளொன்றுக்கு 200 ரூபாவை வழங்க முடியுமெனத் தெரிவித்துவிட்டது. இது குறித்து தொழிற் சங்கங்கள் மீண்டும் அடுத்த வாரம் கூடி ஆராய்ந்து சம்மேளனத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படுமென்று காங்கிரஸ் தலைவர் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.
சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது குறித்து நடவடிக்கைகளை எடுத்து வந்த நிலையில், சங்கங்கள் ஊவா மாகாண சபைத் தேர்தலில் மூழ்கிவிட்டன. தற்போது தேர்தல் முடிவடைந்த நிலையில் மீண்டும் கூட்டு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கப்போவதாக பிரதியமைச்சர் சிவலிங்கம் தெரிவித்தார்.
முதலாளிமார் சம்மேளனத்துடனான கூட்டு ஒப்பந்தத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், தோட்டத் தொழிற்சங்கக் கூட்டுக்கமிட்டி ஆகிய அமைப்புகள் கைச்சாத்திட்டு வருகின்றன.
இந்தச் சங்கங்கள் அடுத்த வாரம் கூடி ஆராய்ந்து மீண்டும் பேச்சுவார்த்தையை உயிர்ப்பிக்கவுள்ளதாக பிரதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.
தோட்டத் தொழிற்சங்கக் கூட்டுக் கமிட்டியில் பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.