August

August

எஸ். பி ஜமால்தீன் படுகொலைக்கு 10 இலட்சம் ரூபா கொந்தராத்து – பொலிஸ் விசாரணையில் அம்பலம்; மூவர் கைது

jamaldeen.jpgகல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரி பணிப்பாளராயிருந்த பொலிஸ் அத்தியட்சகர் எச்.எல். ஜமால்தீன் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான சந்தேகத்தின்பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காரைதீவு விசேட அதிரடிப்படையினர் (14ம் திகதி) இம் மூவரையும் கைது செய்துள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 5ம் திகதி மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் பள்ளிவாசல் அருகில் வைத்து பொலிஸ் அத்தியட்சகர் ஜமால்தீன் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இக்கொலை தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டிருந்த நிலையில் விசேட அதிரடிப் படையினர் முக்கிய சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர். மருதமுனை அல்-ராஜ் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரான சுலைமா லெவ்வை நஜிமுல் றகுமான், மத்திய முகாம் 13ம் கொலனியைச் சேர்ந்த செல்லத்தம்பி தேவேந்திரன் (வீரா புலி உறுப்பினர்) நற்பிட்டிமுனை முகம்மது காசிம் ஹம்ஸா ஆகியோரே கைது செய்யப்பட்டவர்களாவர். இச்சம்பவம் தொடர்பாக கல்முனைப் பொலிஸார் தகவல் தருகையில்:

கொந்தராத்து அடிப்படையில் 10 இலட்சம் ரூபா வழங்கப்பட்டு புலி உறுப்பினரொருவரால் ஜமால்தீன் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார். இதற்காக மருதமுனை அல்ராஜ் முகவரான சுலைமா லெவ்வை நஜிமுல் றஹ்மான் என்பவர், புலி உறுப்பினரான வீரா என அழைக்கப்படும் 13ம் கொலனியைச் சேர்ந்த செல்லத்தம்பி தேவேந்திரன் என்பவருக்கு 10 இலட்சம் ரூபா கொந்தராத்து வழங்கியுள்ளாரென விசாரணைகளில் அம்பலமாகியிருக்கிறது.

கொந்தராத்தாகக் கொடுக்கப்பட்ட தொகை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த முகம்மது காசிம் ஹம்ஸா, என்பவரூடாக அல்ராஜ் உரிமையாளர் வழங்கியுள்ளார். நற்பிட்டிமுனை காசிமே 10 இலட்சம் ரூபாவை புலி உறுப்பினரான செல்லத்தம்பி தேவேந்திரனிடம் கையளித்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளதென கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் அத்தியட்சகர் ஜமால்தீனை அல்-ராஜ் முகவர் நிலைய உரிமையாளரான நஜிமுல் றகுமானின் கட்டளைப் பிரகாரம் தான்தான் சுட்டுக் கொலை செய்ததாக புலி உறுப்பினரான வீரா என்றழைக்கப்படும் செல்லத்தம்பி தேவேந்திரன் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். காரைதீவு விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்ட மூவரும் கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு மேலதிக விசாரணைக்காக கல்முனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பெற்ற குழந்தைக்கு தாய்ப்பாலுடன் விஷம் கலந்து கொடுத்த பே(தா)ய் – குழந்தைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை

தான் பெற்றெடுத்த குழந்தையொன்றுக்கு தாய்ப்பாலுடன் விசத்தைக் கலந்துகொடுத்து குழந்தையை கொலைசெய்ய முயற்சிசெய்த தாயை கண்டி பொலிஸார் நேற்று முன்தினம் (14) கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டிருக்கும் துனுவில பிரதேசத்தைச் சேர்ந்த கீதாகுமாரி ரத்நாயக்க (29) என்ற திருமணமாகாத அப்பெண்ணை பொலிஸார் கண்டி மஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.

கண்டி பெரியாஸ்பத்திரியில் குறை மாத நிலையில் பிரசவித்த இக்குழந்தை மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளது.

இச்சந்தர்ப்பத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் வழங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த தாயினால் பெறப்படும் தாய்ப்பால், தாதி ஒருவரினூடாக குழந்தைக்கு ஊட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வேளை குறித்த தாயினால் தாதியிடம் வழங்கப்பட்ட தாய்ப்பால் நிரம்பிய போத்தலில் தாதிக்கு ஏற்பட்ட சந்தேகத்தையடுத்து குறித்து தாய்ப்பால் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. அதனையடுத்து தாயிடமிருந்து விசப் போத்தலொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட பெண்ணின் சகோதரி வெளிநாடொன்றுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக சென்றுள்ளார். வெளிநாட்டில் இருக்கும் பெண்ணின் பிள்ளைகளுக்கு பணிசெய்வதற்காக அக்காவின் வீட்டில் குறித்த பெண் சிறிது காலம் வாழ்ந்து வந்துள்ளார். இவ்வேளை இத்தாய்க்கும் அக்காவின் கணவருக்குமிடையில் தொடர்பு ஏற்பட்டிருக்கலாமென்றும் இதனூடாக இக்குழந்தை பிறந்திருக்காமென்றும் பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

குறைந்தபட்ச புரிந்தணர்வை ஏற்படுத்துவதற்கான வரையறையை நிர்ணயம் செய்தல் : சந்திப்பின் தொகுப்பு : த ஜெயபாலன்

02Aug09_Audienceஒற்றைப் பரிமாண ஏக தலைமைத்துவ அரசியல் இயக்கம் மே 18ல் தனது வரலாற்று முடிவைச் சந்தித்ததைத் தொடர்ந்து பன்மைத்துவ அரசியல் செயற்பாடுகள் தீவிரமாகி உள்ளது. உறங்கு நிலையில் தங்கள் அரசியல் அபிலாசைகளை தக்க வைத்துக் கொண்டவர்கள் பலரும் தற்போதுள்ள சூழலை சாதகமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதில் மிகக் கவனமாக உள்ளனர்.

புலிகளின் தலைமை அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்பும் முயற்சியில் புலிகளும் புலிகள் அல்லாத பிரிவினரும் ஈடுபட்ட உள்ளனர். இவர்களை பெரும்பாலும் மூன்று வகைக்குள் கொண்டுவரமுடியும்.
அ) புலி ஆதரவாளர்கள் – தேசியத் தலைவர் வே பிரபாகரனின் விட்டுச் சென்ற இடத்தில் இருந்து அவர் கொள்கை வழி செல்ல வேண்டுமென்பவர்கள்.
ஆ) அரச ஆதரவு சக்திகள் – இலங்கை அரசுடன் அனுசரித்து நடந்தே தீர்வை ஏற்படுத்த முடியும் என நம்புகின்றனர்.
இ) அரசுடனும் புலிகளுடனும் தங்களை அடையாளப்படுத்தாத அணி சேரா அணி.

இம் மூன்று அரசியல் பிரிவுகளைச் சார்ந்தவர்களும் வெவ்வேறு வகையான தீர்வுகளை நோக்கி செயற்படுகின்றனர்.
அ) தமிழீழ் – புலிகள் தங்களுக்குள் முரண்பட்டாலும் கொள்கையளவில் தமிழீழத்தைக் கைவிடவில்லை. அவ்வாறு கைவிடும் பட்சத்தில் அவர்கள் புலிகள் என்ற அடையாளத்தைக் கொண்டிருக்க முடியாது. அதே சமயம் புலிகளுடனும் அரசுடனும் அணி சேரா அணியில் உள்ள சிறு பிரிவினரும் கொள்கையளவில் தமிழிழத்தை தொடர்ந்தும் வைத்துள்ளனர்.
ஆ) ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் தீர்வு – புலிகளுடனும் அரசுடனும் அணி சேரா அணியில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் இம்முடிவிலேயே ஏற்கனவே இருந்தனர். இன்று இவர்கள் தீவிரமாக இதனை வலியுறுத்துகின்றனர். அதேசமயம் புலிகளின் தோல்வியால் ஏற்பட்ட விரக்தி தமிழீழம் சாத்தியப்படாது என்ற முடிவுக்கு இன்னும் சிலரை நிர்ப்பந்தித்து உள்ளது.
இ) இலங்கை அரசு தருவதை பெற்றுக் கொண்டு நகர்வது – இயலாமையின் மொத்தத் தீர்வாக இது உள்ளது. பெரும்பாலும் தீவிர புலி எதிர்பாளர்களும் அரச ஆதரவு அணியினரும் இந்நிலையில் உள்ளனர்.

02Aug09_Audienceஇம்முரண்பட்ட அரசியல் பிரிவினர் முரண்பட்ட அரசியல் முடிவுகளுடன் உள்ளனர். இவ்வாறான தமிழ் அரசியல் சக்திகளிடையே குறைந்தபட்ச புரிந்தணர்வை ஏற்படுத்தி தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் தொடர்பான குறைந்தபட்ச வரையறையை நிர்ணயம் செய்வது இன்று காலத்தின் அவசியமாக உள்ளது. இதன் மூலம் பல்வேறு முரண்பட்ட அரசியல் சக்திகள் தற்போதுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்ப முற்பட்டாலும் அவர்கள் குறைந்தபட்ச வரையறைக்குக் கீழ் செல்வதை தமிழ் அரசியல் சமூகம் தடுத்து நிறுத்த முடியும்.

இதையொட்டிய இரு சந்திப்புக்களை தேசம்நெற் ஒழுங்கு செய்திருந்தது. முதலாவது சந்திப்பு யூன் 21இலும் இரண்டாவது சந்திப்பு ஓகஸ்ட் 2 இலும் இடம்பெற்றது. இவ்விரு நிகழ்வுகளுக்கும் பேரின்பநாதன் தலைமை வகித்தார்.

._._._._._.

யூன் 21ல் இடம்பெற்ற முதற் சந்திப்பு அடுத்த கட்ட நகர்வை நோக்கிய பன்மைத்துவ அரசியல் கலந்துரையாடல் என்ற தலைப்பில் இடம்பெற்றது. பல்வேறு அரசியல் தளங்களில் இருந்தும் 40க்கும் மேற்பட்டவர்கள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர். இக்கலந்துரையாடலில் பின்வரும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.

அ)
வசந்தன் : கடந்த காலப் போராட்டம் பௌத்த பிக்குக்களையும் இஸ்லாமியரையும் மற்றும் பலரையும் துரோகிகள் ஆக்கிவிட்டது. எங்களுடைய அரசியல் முன்னெடுப்பிற்கு தமிழீழம் என்பதே முட்டுக்கட்டையாக அமைந்தது.

பாண்டியன் : ஒரு சமூகம் தான் தன்னை எவ்வாறு அடையாளப்படுத்த வேண்டும் என்பதனைத் தீர்மானிக்க வேண்டும். தமிழ் மக்களுக்கு தமிழீழம் வேண்டுமா இல்லையா என்பதை தமிழ் மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். அரசாங்கத்தக்கு வேண்டாம் என்பதற்காக எங்களுக்கும் வேண்டாம் என்ற முடிவுக்கு நாங்கள் வர வேண்டியதில்லை. குறிப்பாக பின்வரும் விடயங்கள் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். 1) உண்மையறியும் குழுவொன்று அவசியம். 2) ஆயுதப் போராட்டம் தேவையா? இல்லையா? 3) அதிகாரப் பரவலாக்கம் தமிழ் மக்களுக்கு மட்டுமா? அல்லது அனைவருக்குமா? 4) 13வது திருத்தச் சட்டம் ஏற்கனவே உள்ளது.  5) குடியேற்றம்

ரவி சுந்தரலிங்கம் : தமிழ் மக்கள் தேசிய இனமா என்பதில் எனக்கு கேள்விகள் உண்டு. இலங்கை மக்களுக்கு பொதுவான பிரச்சினைகள் பல உண்டு. அவர்கள் தங்களை பொதுவாகவும் அடையாளம் காண்கிறார்கள். ஒரு பொதுத் தேசியம் ஒன்றை உருவாக்குவது பற்றி நாங்கள் சிந்திக்க வேண்டும்.

நிஸ்தார் மொகமட்: ரிஎன்ஏ தங்கள் பதவிகளைத் துறந்து மறு தேர்தலுக்கு தயாராக வேண்டும். ரெடிமேட் தீர்வுகள் எதுவும் சரிவராது. அனைவரையும் உள்வாங்கிய ஒரு தீர்வுக்கு தயாராக வேண்டும்.

சார்ள்ஸ் : இலங்கையில் தமிழர்கள் தமிழன் என்ற காரணத்தினாலேயே ஒடுக்கப்படுகிறார்கள். புலிகளுடைய தோல்வி செப்ரம்பர் 11க்குப் பின்னர் விடுதலை அமைப்புகளுக்கு ஏற்பட்ட தோல்வியின் தொடர்ச்சியே. தமிழர்களுடைய போராட்டம் இன்னமும் முடிவடையவில்லை.

பாலசுகுமார் : ஊரில் உள்ளவர்கள் கோபத்துடன் உள்ளார்கள். அவர்களது கோபம் நியாயமானது. இதுவெல்லம் ஏன் நடந்தது எனக் கேட்கிறார்கள். ஊரில் உள்ளவர்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பது மிக முக்கியம்.

கணநாதன்: தமிழர்களுடைய போராட்டம் இன்னமும் முடிவடையவில்லை. தமிழீழ விடுதலைப் போராட்டம் சரியானதா இல்லையா என்பதை எப்படி தீர்மானிப்பது?  மக்கள் இன்னமும் மிகுந்த ஒடுக்கு முறைக்குள் தள்ளப்பட்டு உள்ளார்கள். இலங்கை அரசு தற்போது தனது ஒடுக்குமுறையை மேலும் தூண்டியுள்ளது. தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளுக்கான எந்தத் தீர்வையும் இலங்கை அரசு முன்வைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. இடம்பெயர்ந்து முகாம்களில் அடைக்கப்பட்டு உள்ளவர்களின் தேவைகள் உடனடியானது. அவசியம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

சேனன் : இன்று நாங்கள் எந்தக் கட்டத்திற்கு வந்திருக்கின்றோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். பல்வேறு அடையாளங்களாகப் பிளவுபடத்தப்பட்டு அவை கூர்மைப்படுத்தப்பட்டும் உள்ளது. பொதுத் தேசியத்தை அமைப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. மேலும் சிங்கள அரசுடன் – இலங்கை அரசுடன் சேர்ந்து செயற்படுவது ஆபத்தானது.

நித்தி : அரசாங்கம் ஏதோ ஒரு தீர்வை முன்வைக்க முயற்சிக்கிறது. அதில் நாம் கூடிய தீர்வைப் பெறுவதற்கு ரிஎன்ஏயைப் பலப்படுத்த வேண்டும்.

ராஜேஸ் பாலா: முதலில் இந்த தமிழீழம், ஈழம் என்ற கதைகளை நாங்கள் விட வேணும். அங்குள்ள இடம்பெயர்ந்த முகாம்களில் உள்ள மக்களின் நலன்கள் தான் இப்பொழுது முக்கியம். நாங்கள் முரண்டு பிடித்து அரசியல் செய்து எதையும் சாதிக்கவில்லை. இனிமேல் இலங்கை அரசுடன் இணைந்து செயற்படுவதன் மூலமே தமிழ் மக்களுக்கு எதையாவது செய்ய முடியும்.

சிறி : தமிழ் மக்களுடைய அரசியல் அரங்கு பலவீனமாக உள்ளது. மேலும் பல்வேறு மூலதனங்கள் நாட்டினுள் நுழைந்து இலங்கை மக்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது. இவற்றுக்கான ஒன்றுபட்ட போராட்டங்கள் பற்றி சிந்திக்க வேண்டும்.

நடாமோகன் : நான் மனைவி பிள்ளை என்று வாழ்கிறேன். என்னைப் போன்று என் மொழி பேசுபவர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

ஆ)
ஆர் ஜெயதேவன்: நாங்கள் எவ்வளவுதான் கூட்டம் போட்டு பேசினாலும் இந்தியாவின் நிலைப்பாடு முக்கியமானது. இப்போது நடந்து முடிந்த அவலம் எதிர்பார்க்கப்பட்டது தான். பிரபாவும் – பொட்டரும் செய்த அரசியலின் விளைவு இது. புலம்பெயர்ந்தவர்களின் குரல்கள் டெல்லியை நோக்கிச் செல்ல வேண்டும். இது தொடர்பாக நான் இந்திய அதிகாரிகளிடமும் பேசி உள்ளளேன்.

ரவி சுந்தரலிங்கம் : இந்தியாவின் பாத்திரம் முக்கியமானது. பிந்திரன் வாலேயை உருவாக்கி சீக்கிய தேசியத்தை அதன் உச்சத்திற்குக் கொண்டு சென்று வேரறுத்தது இந்தியா. அதுவே முள்ளிவாய்க்காலிலும் நடந்தது. சிங்கள தேசியத்தின் உச்சத்திற்குச் செல்லும் மகிந்த ராஜபக்சவிற்கும் இது நடக்காது என்றில்லை. புலம்பெயர்ந்தவர்கள் இந்தியாவின் பாத்திரத்தை அசட்டை செய்ய முடியாது.

சையட் பசீர் : தமிழர்கள் என்று மட்டுமல்ல முஸ்லீம்கள் என்றும் சேர்த்துப் பேசப்பட வேண்டும். இப்போது முகாம்களில் உள்ள மக்களின் அவலம் வேதனையானது. அவர்கள் மீளவும்குடியமர்த்தப்பட வேண்டும். அதேசமயம் பலவருடங்களுக்கு முன் யாழில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்கள் இன்னமும் புத்தளம் முகாம்களில் தான் வாழ்கிறார்கள். அதற்காக எந்தக் கூட்டமும் கலந்துரையாடலும் நடாத்தப்படாதது மனவருத்தமானது.

போல் சத்தியநேசன்: புத்தளம் முகாமில் உள்ளவர்களின் விடயங்கள் பேசப்படாதது வேதனையானதே. அனால் இன்றுள்ள ஊடகத் தொழில்நுட்ப வளர்ச்சிகள் அன்றிருக்கவில்லை. இன்றைய அவலம் உடனுக்குடன் வந்தடைவதால் அதற்கான பிரதிபலிப்புகளும் உடனடியானவையாக உள்ளது. ஆனால் இங்குள்ள எல்லோருமே புத்தளம் முகாம்களில் உள்ளவர்கள் மீது அனுதாபமுடையவர்களே. அவர்களுக்காகக் குரல் கொடுப்பவர்களுமே.

எஸ் வசந்தி : இலங்கையின் நிலை அதன் பிராந்திய நிலைகளாலும் தான் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் இலங்கையின் அரசியல் சூழலில் இந்தியாவின் தாக்கம் முக்கியமானது.

எஸ் அரவிந்தன் : நாங்கள் எந்த அடிப்படையில் வேலை செய்ய முற்படுகிறோம் என்பதை நிர்ணயித்த பின்னரே பிராந்திய அடிப்படையில் எவ்வாறு செயற்படப் போகின்றோம் என்ற முடிவுக்கு வர முடியும்.

கணநாதன் : இந்தியா தொடர்பாக தலைமுறையாக எங்களுக்குள் பிளவு உள்ளது. சிவசங்கர் மேனனைக் கொண்டு இந்தியாவைக் கையாள முடியாது என்றே நினைக்கிறேன். இலங்கை இந்தியாவின் விளையாட்டு மைதானம். ராஜபக்சவுக்கு ஒரு அதிஸ்டம் அடித்தள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்தியாவை வைத்து அரசியல் நகர்த்துவது தவறானது என்றே நான் கருதுகிறேன்.

பாலா : இந்தியாவில் தமிழ் நாட்டிலும் ஏராளமான தமிழ் மக்கள் வாழ்கின்றனர். இந்தியாவில் தங்கி நிற்கும் வணங்கா மண் கப்பலில் உள்ள பொருட்களை அங்குள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கே கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

சையட் பசீர் : நாங்கள் இலங்கையர் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்தியா போன்ற நாடுகளை வைத்துக் கொண்டு இலங்கைப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. இலங்கைப் பிரச்சினைக்கான உள்ளுர்த் தீர்வு, சுய தீர்வு ஒன்றே பொருத்தமானது.

இ)
போல் சத்தியநேசன் : இடைக்கால அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன் மூலமே தற்போதுள்ள நிலையில் இருந்து மீட்சி பெறமுடியும். நாங்கள் முன்நோக்கி நகர்வது பற்றி சிந்திக்க வேண்டும்.

ரவி சுந்தரலிங்கம் : தாயகத்தில் உள்ளவர்கள் சமூக மாற்றம் ஒன்றிற்கு உள்ளாகி உள்ளனர். அவர்களுடைய வர்க்க நிலையும் மாற்றமடைந்துள்ளது. இவற்றை கவனத்திற் கொள்ள வேண்டும்.

ஆர் ஜெயதேவன் : இலங்கையில் உள்ள அமைப்புகள் மிகுந்த கஸ்டத்தை எதிர்நோக்குகின்றன. அரசாங்கம் மோசமான அழுத்தங்களை வழங்குகிறது. அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. ஒரு இனக்கலப்பான சமூகம் ஒன்றை உருவாக்கவும் அரசு முயல்கிறது.

வாசுதேவன் : பொது வேலைத் திட்டம் ஒன்றின் கீழ் நாங்கள் இணைந்து பணியாற்ற முன்வர வேண்டும். இதுவரை இருந்த ஏகபிரதிநிதித்துவம் ஜனநாயக மறுப்பு என்பவற்றைக் கடந்து பொது வேலைத்திட்டத்திக் கீழ் செயற்பட வேண்டிய காலம் இது.

ஆர் யூட் : இதுவரை காலமும் நடந்த செயற்பாடுகள் எங்களை இரகசிய சமூகமாக மாற்றி விட்டது. ஒருவரை ஒருவர் நம்ப முடியாத புலனாய்வுச் சமூகமாக நாம் இருந்துவிட்டோம். மனம் திறந்து பேசுவதற்கான சூழல் உருவாக்கப்பட வேண்டும்.

பாலசுகுமார் : பொது வேலைத்திட்டத்தின் கீழேயே நாங்கள் அடுத்த கட்ட நகர்வுக்குச் செல்ல முடியும்.

சார்ள்ஸ் : சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் பொது வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்கிச் செயற்பட வேண்டும்.

சுகுண சபேசன் : புலம்பெயர்ந்தவர்களுக்கு கடமையொன்று உள்ளது. அவர்கள் ஜனநாயகச் செயன்முறையை ஊக்குவிக்க வேண்டும்.

தயா : இப்போது இங்குள்ள இணைவும் இணக்கப்பாடும் இன்னும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.

சேனன் : ஜனநாயக நடைமுறையை ஜனநாயகச் செயன்முறையூடாகவே ஏற்படுத்த முடியும். மக்களை ஜனநாயகச் செயன்முறையில் எப்படி ஈடுபடுத்துவது என்பது பற்றி நாங்கள் கவனமெடுக்க வேண்டும்.

எம் பாலன் : பொது அடிப்படையில் ஒரு உடன்பாடு எட்டப்படுவது அவசியம்.

பாலமுரளி: தமிழ் அரசியல் அமைப்புகளிடையே குறைந்தபட்ச உடன்பாடு ஒன்று எட்டப்பட வேண்டும்.

பாண்டியன் : தாயகத்தில் உள்ள மக்களைப் பலப்படுத்துவதற்கான பொது வேலைத்திட்டம் ஒன்று அவசியம். காலப் போக்கில் அவர்களுக்கு என்ன தேவையோ அதை அவர்களே பெற்றுக் கொள்வதற்கான வழிவகைகளைச் செய்வார்கள்.

ரவி சுந்தரலிங்கம் : எங்களுக்கு கலாச்சாரப் புரட்சி ஒன்று அவசியமாகத் தேவைப்படுகிறது. அதன் மூலமாக ஒரு சமூக மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும்.

இக்கலந்துரையாடலில் தமிழ் மக்களுடைய அரசியல் அவர்களுடைய எதிர்காலம் பற்றி பல்வேறு முரண்பட்ட கருத்துக்கள் வெளியிடப்பட்டது. ஆயினும் பொது இணக்கப்பாடும் பொது வேலைத்திட்டத்தின் அவசியத்தையும் பலரும் பல்வேறு வகைகளில் வெளிப்படுத்தி இருந்தனர். அதன் அடிப்படையில் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள அரசியல் சக்திகளுக்கு இடையே புரிந்தணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை அனைவரும் வலியுறுத்தினர். அதற்கு குறைந்த பட்ச புரிந்துணர்வு எட்டப்பட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. 

இக்கூட்டத்தின் தொடர்ச்சியாக  குறைந்தபட்ச புரிந்துணர்வு எட்டப்பட வேண்டிய விடயங்கள் அதன் வரையறைகள் பற்றி கலந்தரையாடுவது என்று முடிவெடுக்கப்பட்டது.  அம்முடிவின் அடிப்படையில் ஓகஸ்ட் 2ல் ‘தமிழர்களுடைய அரசியல் எதிர்காலத்தின் குறைந்தபட்ச வரையறை’ என்ற தலைப்பில் இரண்டாவது சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பில் 70 பதுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்தக்களைப் பகிர்ந்து கொண்டனர். இச்சந்திப்பிற்கும் பேரின்பநாதன் தலைமை தாங்கினார்.

._._._._._.

RahumanJan_Jeyabalan_Perinbanathanஓகஸ்ட் 2ல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  ‘தமிழர்களுடைய அரசியல் எதிர்காலத்தின் குறைந்தபட்ச வரையறை’ என்ற தலைப்பிலான சந்திப்பில் தமிழீழ விடுதலைப் போராட்ட ஆரம்பகால உறுப்பினரும் பின்னர் தீப்பொறிக் குழுவாகச் செயற்பட்டவரும் தீப்பொறியின் வெளியீடாக அமைந்த உயிர்ப்பு சஞ்சிகையின் ஆசிரியருமான ரகுமான் ஜான் (ஜான் மாஸ்ரர்) ஆரம்ப உரையை வழங்கினார்.

”இலங்கைத் தமிழர்களின் அரசியல் தீர்வு விடயத்தில் அரசுடன் இணைந்து செயற்படுவது முதல் தனியாகப் பிரிந்து சென்று தனியரசு அமைப்பது வரை பல்வேறு சாத்தியக்கூறுகள் உண்டு. கிராம சபை மாவட்ட சபை, 13வது திருத்தச் சட்டம், அதிகாரப் பகிர்வு, அதிகாரப் பரவலாக்கம், சமஸ்டி என்று   இவற்றை விரித்துச் செல்லலாம்” என்று குறிப்பிட்ட ரகுமான் ஜான் ”நாங்கள் குறைந்தபட்சம் எதற்குச் செல்லலாம்” என்பது பற்றி முடிவெடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ”பொதுப் புத்தியில் உள்ள விடயங்கள் ஆதிக்க சித்தாந்தத்தினாலேயே நிர்ணயம் செய்யப்படுகின்றது. கருத்துத்தளத்தில் பேரினவாதம் கட்டமைத்த சொல்லாடல்களே மேலாண்மை செலுத்துகின்றது.” என்றும் தெரிவித்தார். ”குறைந்தபட்ச வரையறையைச் செய்யும் போது பேரினவாதம் கட்டமைக்கின்ற கருத்தியல் மேலாண்மையை தகர்க்கின்ற கருத்தியல் மேலாண்மையை நாங்கள் ஏற்படுத்த வேண்டும்” என அவர் தனது உரையின் இறுதியில் குறிப்பிட்டார். அவருடைய உரை முழுமையாக வெளியிடப்பட உள்ளதால் அதற்குள் செல்வது இங்கு தவிர்க்கப்பட்டு உள்ளது.

ரகுமான் ஜானுடைய உரையைத் தொடர்ந்து கலந்துரையாடல் இடம்பெற்றது.

எஸ் தவராஜா: தமிழ் சூழலில் தற்போது கவனிக்கப்பட வேண்டிய விடயங்கள் 1) அகதிகள் 2) சமூகத்தை –  குழுக்களை ஒன்றிணைப்பது 3) உரிமைகள். தமிழ் சமூகத்தில் உள்ள அடிப்படைத் தவறு வேறுபாடுகளுக்கு மத்தியில் எவ்வாறு வாழ்வது என்பதை அவர்கள் புரிந்துகொள்ளாமை. 1977க்குப் பின்னர் மாறிய சூழலில் மக்கள் அபிப்பிராயம் என்ன என்று கேட்கப்படவில்லை. அடிப்படையில் ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வே பொருத்தமான தீர்வாக அமையும். எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

எம் ஜெயக்குமார் : புலிகளுடைய அழிவு அவர்கள் தேடிக்கொண்டது. எதிர்பார்க்கப்பட்டது. அதற்காக தமிழர்களுடைய அரசியல் அபிலாசைகள் அடைய முடியாதவை என்றாகிவிடாது. அவற்றை அடையலாம் என்பதில் இன்றும் எனக்கு நம்பிக்கையுண்டு. எதிர்காலத்தில் போராட்டங்கள் சிங்கள பெரும்பான்மை மக்களையும் இணைத்து மேற்கொள்ளப்பட வேண்டும்.

பாண்டியன் : சிறுபான்மை இன மக்களுக்கு இனிரீதியான ஒடுக்குமுறையுள்ளது. அன்று புலிகள் இருக்கும் போது பயன்படுத்திய கொத்தை நாங்கள் தொடர்ந்தும் பயன்படுத்த முடியாது. நியாயமான கொத்தை பயன்படுத்த வேண்டும்.

சஞ்ஜீவ் ராஜ்: புலம்பெயர்ந்து வாழ்ந்ததால் புலத்தில் உள்ளவர்களுக்கு தாயகத்தில் உள்ள மக்கள் பற்றி பேச உரிமையில்லை என்கிறார்கள். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. இலங்கையில் நடைபெறும் தேர்தல் தொடர்பாக லண்டனிலும் பிரச்சாரங்கள் செய்யப்படுகிறது. யாருக்கு வாக்களிக்க வேண்டும் எனச் சொல்லும்படி பிரச்சாரம் செய்யப்படுகிறது. தற்போதுள்ள நிலையில் புலம்பெயர்ந்து வாழும் மக்களே அங்குள்ளவர்களுக்கு குரல்கொடுக்க முடியும்.

தனபாலன் : 98 வீதமான மக்களுக்கு அரசியல் அறிவு இல்லை. நாங்கள் நகர்சார்ந்த மனோ நிலையில் இருந்து சிந்திக்கிறோம். ஆனால் கிராமங்களில் வாழும் மக்களின் மனோநிலை வேறு.

வாசுதேவன்: கடந்த கால எங்கள் தேசிய விடுதலைப் போராட்டம் பற்றிப் பார்க்க வேண்டும். எங்கள் பலத்தையும் பலவீனத்தையும் ஆராய வேண்டும். பொருளாதார பலத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். இலங்கை அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

ப்பாமி மொகமட்: MOU வரை நிறைய திட்டங்கள் தமிழ் மக்கள் மத்தியில் வந்தள்ளது. நீலன் திருச்செல்வம் அவர்கள் வரைந்த தீர்வுப் பொதி மிகச் சிறந்தது. ஆனால் அவரும் கொல்லப்பட்டார். வரதராஜப் பெருமாள் மாகாண சபையை நடத்துவதில் இருந்து தடுக்கப்பட்டார். இந்த நிலையில் இருந்து தமிழ் சமூகம் மாற வேண்டும்.

கணநாதன்: தமிழர்களுடைய உரிமைப் போராட்டம் பின்னடிக்கப்பட்டதாகச் சொல்லப்படுவதில் எனக்கு உடன்பாடில்லை. சர்வதேசச் சூழல் எமக்கு எதிராகவும் ராஜபக்ச அரசுக்கு சாதகமாகவும் அமைந்துவிட்டது. இந்நிலை இப்படியே நீடிக்கப் போவதில்லை. சர்வதேச அரங்கிற்கு அழுத்தங்களைக் கொடுத்து இலங்கை அரசுக்கு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும்.

டேவிட் ஜெயம் : தமிழ் கடற்தொழிலாளர்கள் பாரம்பரியமாக கடற்தொழில் செய்த இடங்களில் தற்போது சிங்கள மீனவர்கள் தொழில் செய்கின்றனர். இதனால் இன முரண்பாடுகள் இன்னமும் கூர்மையாகின்றது. மேலும் பல ஆண்டுகளாக நீடித்த மீன் பிடித்தடை நீக்கப்பட்ட போதும் தமிழ் மீனவர்களுடைய பொருளாதாரத்தில் அது முன்னேற்றத்தை ஏற்படுத்தவில்லை.

Shanmugaratnam Nசண்முகரட்ணம் : இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் ஆவணங்களை முற்றாக இழந்துள்ளனர். மேலும் விடுதலைப் புலிகளால் மக்களுக்கு கையளிக்கப்பட்ட காணிகளில் அரச காணிகளும் அடங்குகிறது. இவையெல்லாம் வன்னி முகாம்களில் உள்ள மக்களின் பிரச்சினையாக உள்ளது. இவை பற்றி கவனிக்கப்பட வேண்டும். இலங்கை அரசின் தன்மை தவறான வழியில் இறுக்கமடைந்துள்ளது. இலங்கை அரசின் பிரச்சினை ஒற்றையாட்சி அல்ல. அரசைப் பற்றிய அறிவு, சீர் திருத்தம், இராணுவ மயமாக்கல் போக்கு பற்றிய விடயங்களில் கவனமெடுக்க வேண்டும்.

சையட் பசீர் : திம்புப் பேச்சுவார்த்தை, ஒஸ்லோ உடன்படிக்கை எதிலுமே முஸ்லீம்களின் பிரதிநிதித்துவம் இருக்கவில்லை. பாலஸ்தீனப் பிரச்சினையை நீங்கள் விளங்கிக் கொண்ட விதத்தில் இஸ்ரேலை ஒத்த அரசக் கட்டமைப்பையே தமிழர்கள் உதாரணத்திற்கு எடுக்கின்றார்கள். உதாரணத்திற்குக் கூட பாலஸ்தீனியர்களின் வாழ்நிலை கவனத்திற்கு எடுக்கப்படவில்லை. இந்தச் சிந்தனைமுறையே தவறானது.

வி சிவலிங்கம் : சிங்கள மக்களுடனும் ஏனைய சிறுபான்மையின மக்களுடனும் இணைந்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். இலங்கை அரசில் மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் போராட்ட தந்திரோபாயங்களை வகுக்க வேண்டும்.

வரதகுமார்: குறைந்தபட்ச புரிந்தணர்வை ஏற்படுத்தவதற்கான வரையறையை நிர்ணயிப்பது இன்றைய சூழலில் மிக முக்கியமானது. ஆனால் அதுவொரு பாரிய வேலை. அதனைச் செய்வதன் மூலமே தமிழ் அரசியல் தளத்தைப் பலப்படத்த முடியும். இன்றைய நிலையில் இலங்கை இனப் பிரச்சினைக்கு குறைந்தபட்ச தீர்வு காணப்பட வேண்டுமானாலும் இன்றுள்ள இலங்கை அரசியல் அமைப்பில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும்.

._._._._._.

ஓகஸ்ட் 2ல் ‘தமிழர்களுடைய அரசியல் எதிர்காலத்தின் குறைந்தபட்ச வரையறை’ என்ற தலைப்பிலான ஐந்து மணி நேரம் வரை நீடித்த இக்கலந்தரையாடலில் பின்வரும் எட்டு விடயங்களில் குறைந்தபட்ச புரிந்தணர்வு ஏற்பட வேண்டும் என உடன்பாடு காணப்பட்டது.

1. முகாம்களில் உள்ள மக்களது மீள்குடியேற்றம்
2. இராணுவ மயமாக்கலை அகற்றுவது
3. மனித உரிமைகளை மேம்படுத்துவது
4. தமிழ் மக்களின் அரசியலை ஜனநாயகப்படுத்துவது
5. வடக்கு – கிழக்கு முஸ்லீம் மக்கள்
6. குடியேற்றம் – வளங்கலும் குடிபரம்பலும்
7. மனிதவள விருத்தி – அபிவிருத்தி
8. அரசியல் தீர்வு

இவ்விடயங்கள் தொடர்பான வரையறைகளை வகுப்பதற்கு செயற்குழு உருவாக்கப்பட்டது. அவர்கள் ஒவ்வொரு விடயத்தையும் தனித் தனியாக ஆராய்ந்து அறிக்கையைத் தயாரிப்பார்கள். அதில் குறைந்த பட்ச வரையறையையும் நிர்ணயிப்பார்கள்.

செயற்குழுவில் உள்ள அங்கத்தவர்கள் வருமாறு:

என் சண்முகரட்ணம்
வி சிவலிங்கம்
நிஸ்தார் மொகமட்
ரவி சுந்தரலிங்கம்
ஏ கனநாதன்
வரதகுமார்
ஜோசப் ஜெயம்
எஸ் தவராஜா
பேரின்பநாதன்
அரோ தீபன்
எஸ் வசந்தி
மாசில் பாலன்
ப்பாமி மொகமட்
ரி சோதிலிங்கம்
ஜெயக்குமார் மகாதேவா
த ஜெயபாலன் (ஒருங்கிணைப்பாளர்)

கலந்துரையாடலின் முடிவில் செயற்குழு ஒரு  குறுகிய சந்திப்பொன்றை மேற்கொண்டது. அவர்கள் குறைந்தபட்ச புரிந்துணர்வை எட்டவேண்டிய விடயங்கள் தொடர்பான அறிக்கையை தயாரிப்பதற்கான தலைப்புகளை ஏற்றுக் கொண்டனர்.

துரோகிப்பட்டம் வழங்கிய ஐபிசி வானொலியின் துரோகத்தனங்கள் : ரி சோதிலிங்கம்

ibc_logoஜபிசி வானொலி ஆரம்பித்த காலங்களில் இது ஒரு தமிழர் வானொலியாக வளரும் என்ற நம்பிக்கை துளிர்த்தது. இது ஆரம்பித்த சில காலங்களுக்குள்ளேயே புலிகளின் வக்காளத்து வானொலியாக மாறத் தொடங்கியது. இப்படி புலிகளுக்கு வக்காளத்து வேலை ஒன்றினாலேயே தமது பிழைப்பை நடத்தலாம் என்பதை பல ஊடகங்கள் அறிந்திருந்த போதும் அன்றைய ஜபிசியும் ரிரிஎன்னும் தாமே தலைவரின் புலிகளின் ஒட்டுமொத்த குத்தகைக்காரர்கள் என்றும் அதைவிட தமது சண்டித்தனங்களுக்கும் வசைபாடல்களுக்கும் குறைவில்லாமல் தாமே புலிகளாயினர். (வன்னி அவலமும் ஜிரிவி, தீபம், ஐபிசி, ஒரு பேப்பர் புலிகளுடன் செய்த கூட்டுக் கலவியும்.)

புலிகள் இயக்கம் எப்படி கொலைகள் மூலம் மற்றைய அமைப்புக்களையும், ஜனநாயக நடைமுறைகளையும் மறுத்து தாமே தம்மை தமிழர்களின் பிரதிநிதியாக்கி கொலைப் பயமுறுத்தல்கள் மூலம் முழு தமிழர்களையும் தமது கட்டுப்பாட்டில் இருத்தி தமது பயங்கரவாதங்களை செய்தனரோ அதே போல, ஜபிசியும் தமிழரின் சுதந்திர ஊடக செயற்பாட்டை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். அதற்காக புலிகளின் பயங்கரவாத்தை லண்டன் உட்பட வெளிநாடுகளிலும் பயன்படுத்தினர். எப்படி புலிகள் நாட்டில் மாற்று இயக்கத்தவரை தமக்கு பிடிக்காதவர்களை துரோகிப்பட்டம் சூட்டினரோ அதேபோல, இங்கு ஜபிசி தமது வியாபார விரோதிகளையும் தமது புலி எஜமானர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை எடுத்துக்காட்ட தாமும் தாளம் போட்டனர். இவர்களின் துரோகிப்பட்டத்தில் சங்கரி, டக்ளஸ், கருணா, பிள்ளையான், புளொட் ,ரெலோ, ஈபிஆர்எல்எப் மிகமுக்கியமானவர்கள். இவர்கள் பற்றிய செய்திகள் துரும்புகள் கிடைத்தபோதேல்லாம் இவர்களை துரோகிகளாக்கி தமது தொலைபேசியில் வரும் வாடிக்கையாளர்களை மகிழ்வித்துக் கொண்டிருந்தனர். தமது செய்திகளிலும் செய்தித் தயாரிப்புக்களிலும் திட்டமிட்டு புலிகளுடன் கருத்து முரண்பட்டவர்களை துரோகிகளாக்கி தமிழினத்தை இரண்டாக ,மூன்றாக உடைத்த வரலாறு இந்த ஜபிசியையும் சாரும். ஜபிசி யில் இந்த துரோகிப்பட்டம் வழங்கலை மிக உன்னதமாக நின்று செய்தவர்களினது வாயில் வெளிவந்த பேச்சுக்கள் இன்றும் பல தமிழர்கள் கைகளில் பதிவு செய்யப்பட்டு இருப்பது முக்கியமானது. இப்படியான பதிவு செய்யப்பட்ட பல பதிவுகள் இவர்களிடம் நியாயம் கேட்கும்காலம் வரையில் பொறுத்திருக்கும்.

இதைவிட தொலைபேசியில் வரும் போராட்டம் பற்றிய அறிவே இல்லாத இளைஞர் கூட்டத்தை பயன்படுத்தி தமது பிரச்சாரத்தையும் புலிகளுக்கு சளைத்தவர்கள் தாம் இல்லை என்று ‘board’ போட்டு துரோகிப்பட்டம் வழங்கியவர்களாகும்.

இவர்களால் வழங்கப்பட்ட இந்த துரோகப் பட்டமும் இவர்களால் செய்யப்பட்ட காட்டிக் கொடுப்பும் இந்த ஜபிசி ரேடியோ பெயர் இருக்கும் வரை இவர்களிடம் நியாயம் கேட்டபடியேதான் இருக்கும். அதிலும் இந்த தயாரிப்பாளர்கள் அறிவிப்பாளர்களை விமர்சிப்பதிலும் பின்னின்றுவிடாது.

கடந்த காலங்களில் பாராளுமன்ற முன்றலில் நடந்த போராட்டங்களின் போது செய்த உசுப்பேத்தும் நடவடிக்கைகளின் போது ‘இந்த பாராளுமன்ற சதுக்கத்திற்கு வந்து போராட்டத்தில் பங்காற்றினால் துரோகிகள் மன்னிக்கப்படுவர்’ என்ற ஜெகனின் ‘புரட்சிகர அழைப்பு’ இன்றும் எமது காதுகளில் ஒலிக்கிறது. இந்த அழைப்பு ‘இந்திய உளவாளிகளே, துரோகிகளே சரணடையுங்கள் அல்லது நீங்கள் சுட்டுக்கொல்லப்படுவர்’ என்ற புலிகளின் கூக்குரலுக்கு ஒப்பானவையாகவே பார்க்க வேண்டி இருக்கிறது. பாராளுமன்றப் போராட்டத்திற்கு ஏமாற்றி அழைக்கப்பட்ட மக்கள்தொகை எத்தனை ஆயிரம். இவர்களுக்கு சொல்லப்பட்ட பொய்கள் எத்தனை. பேய்க்காட்டல்கள் எத்தனை. இவையாவும் புலிகள் முள்ளிவாய்க்காலில் தாம் இறக்க முன்பு தமிழர்களுக்கு செய்த துரோகங்களுக்கு ஒப்பானவைகளே. இந்த துரோகங்களுக்கு எப்படி புலிகளும் புலிகள் இயக்கமும் புலிக்கொடியும் தப்பி விடமுடியாதோ அதேபோல இந்த ஜபிசியும் தனது பங்குக்கு செய்த துரோகங்களிலிருந்து தப்பிவிடமுடியாது.  தலைவர்கள் அமிர்தலிங்கம், பத்மநாபா, சிறீசபாரத்தினம், நீலன் திருச்செல்வம் போன்றோரது கொலைகளுக்கு இறுதிவரை நியாயம் கற்பித்தது இந்த ஜபிசி நிறுவனம்.

இந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டாளர்களாக புலிகளின் வன்னிப்பிரதிநிதி அமர்த்தப்பட்டபின்பு இந்த ஜபிசி நிறுவனத்தின் செயற்பாடுகள் மேலும் பல மடங்கு மாற்று இயக்கத்தவர்கள் மீது பழிபோடுதல், குற்றம் சுமத்துதல், போராட்டத்திற்கு வராதவர்களை வசைபாடுதல் போன்ற ஊடக தர்மத்திற்கு முரணான செயல்களில் இயங்கி வந்தமை பல தடவைகள் பலரால் வானொலி கட்டுப்பாட்டாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டும் பதிவுகள் கையளிக்கப்பட்டும் இருந்ததே.

எப்படி புலிகளும் புலிகளின் கையாட்களும் நிதி சேகரிப்பில் ஈடுபட்டு மொத்தப்பணத்தை தமது பணமாக கையாடினரோ அதே போல இந்த ஜபிசி நிறுவனமும் தமிழ் தேசிய வானொலி என்ற பெயரில் வர்த்தக நிறுவனங்களிடம் நிதி வசூலித்தது. இந்த நிறுவனமும் புலிகள் நிறுவனம்போன்றே இன்றுவரை தமிழீழ மக்கள் போராட்டம் என்ற சொல்லின் உதவியுடன் புலம்பெயர் மக்களிடம் பல மில்லியன் தொகைகளை கையாடிவிட்டு இன்று வரை இதற்கும் தாம் எந்த பொறுப்பும் அற்றவர்கள் போலவே நடக்கின்றனர்.
 
இவர்கள் போரட்டம் என்பது என்ன? இது எப்படியான சர்வதேச நடத்தைகளுடன் ஈடுபடுகின்றது? இந்தியாவின் செயற்ப்பாடுகள் என்ன? என்பதை என்றுமே அறியாமல் இருந்துள்ளனர். இதன் காரணமாக பலராலும் எதிர்வு கூறப்பட்டது போல் புலிகள் இயக்கம் தனது அழிவின்போது மிகச் சில காலங்களில் அழிந்து போகும் தன்மை கொண்டது என்பதையும் அறிந்திலர்.

இவர்களும் புலிகளின் ஆதரவாளர்கள் போலவே புலிகளின் இழப்பில் திண்டாடிவிட்டு இன்று ஒன்றும் தெரியாததவர்கள் போல் மீண்டும் புதியவர்கள் போல் எழுந்து நிற்கின்றனர். முள்ளிவாய்க்காலில் எம் தொப்புள்கொடி உறவுகளைப் பணயம் வைத்தது புலிகள் மட்டுமல்ல ஐபிசி, ரிரிஎன், தீபம், ஈழமுரசு, ஒரு பேப்பர் போன்ற ஊடகங்களும்தான். அங்கு மக்கள் ஆயிரம் ஆயிரமாக மரணிக்க தமிழீழத்தை நெருங்கிவிட்டோம் என்று றன்னிங் ஸ்கோர் கொடுத்த இந்த ஊடகங்களின் உப்புச் சப்பற்ற ஈவிரக்கமற்ற இதயமற்றவர்களின் அரசியல் ஆய்வுகளை என்னவென்பது. இவர்கள் தங்கள் பழைய பிளாவில் புதுக் கள்ளு அருந்துவதற்கு தங்களை தயாராக்கிக் கொண்டு இருக்கிறார்கள். (ஐபிசி மற்றும் புலி ஊடக ‘அரசியல் ஆய்வாளர்கள்’ : ஆர் யூட்)

இதன் ஒரு கட்டமே ஜபிசி ரேடியோ திங்கள் 17ம்திகதி முதல் காலையில் 3 மணி நேர ஒலிபரப்பு ஆரம்பமாக உள்ளது என்ற அறிவிப்பாகும். இந்த 3 மணி நேர காலை ஒலிபரப்பு பற்றிய அறிவிப்பை ஜபிசி கடந்த ஒரு வார காலமாக செய்துவருகிறது.

தற்போது இந்த வானொலி அடிக்கடி தாம் ‘போரை வெறுப்பவர்கள் பாடல்களை’ பாடவிட ஆரம்பித்துள்ளனர். அதேவேளை எடுத்தகாரியம் யாவினும் வெற்றி என்ற வாக்கியத்தையும் இடைக்கிடை விடுகின்றனர்.

ஆனால் நேற்று 14ம்திகதி மாலை புலிஆதரவாளர் கோமதி என அழைத்தவர் ‘அண்ணை நீங்கள் இப்ப தலைவர்  பாடல்கள் தேசிய எழுச்சிப் பாடல்கள் போடுவதில்லை காயங்களை அவ்வளவு கெதியாக மறந்துவிட்டீர்கள்’ என்ற போது அறிவிப்பாளர் இதுதான் மக்கள் விருப்பம் அந்த மக்களின் விருப்பத்தையே நாம் வழங்க வேண்டியிருக்கின்றது  என்றார். இந்த மக்கள் விருப்பம் என்று கூறிய இந்த ஜபிசி அன்று மக்கள் தம்மை வெளியே விட அனுமதிக்கும்படி கேட்டபோது தலைவரை விட்டுவிட்டுவரும் துரோகிகள் என தூற்றிய ஐபிசி வானொலி இன்று மட்டும் என்ன மக்கள் விருப்பம் என்று சொல்லுகிறார்கள்.

இப்போது ஜபிசி தேசிய எழுச்சிப்பாடல்கள் தேசியப்பாடகரின் வரிகள் ஆணிவேர்கள் எல்லாம் குப்பையில் போட்டுவிட்டு இந்திய சினிமா குப்பைகளை கிண்ட ஆரம்பித்துவிட்டனர் என்பது வெள்ளிடைமலை.

இன்று 15ம்திகதி மாலை இன்னுமொரு நேயர் இந்த புதிய ஒலிபரப்பினை வரவேற்று கருத்து சொல்ல ஜபிசியினால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று வந்து நீங்கள் இப்போ சினிமாப்பாடல்களை என்று பேசத்தொடங்கியதும் ‘இல்லை நாங்கள் அரசியல் சினிமா போன்ற செய்திகளை மாலை நிகழ்ச்சியில் கொண்டுவருவோம்’ என்று தானே முடித்துவிட்டு தொலைபேசியை வைக்கிறார். இந்த நேயர்கள் எல்லோருமே இந்த ஜபிசி வானொலியின் நிரந்தர நேயர்களும் ஜபிசியின் செய்திகளை நம்பி தமது ஈழ அரசியல் பற்றிய, புலிகள் பற்றிய முடிவுகளை எடுத்திருந்தவர்கள் என்பதும் மிகவும் முக்கியமானது. அதைவிட இந்த ஜபிசி வானொலி புலிகளின் குரலுக்கு அடுத்து இவர்களது நம்பிக்கைக்குரிய வானொலியாகவும் இருந்ததாகும். இன்றும் இந்த வானொலி தமக்கு வன்னி மற்றும் முகாம்களில் உள்ள மக்கள் பற்றிய செய்திகள் தமக்காக அர்ப்பணித்த புலிப் புபோராளிகள் பற்றிய செய்திகள் இல்லாதிரப்பதில் ஏமாற்றம் காணபவர்களாய் இருப்பவர்களாகும்.

கடந்தகாலங்களில் ஜபிசி போன்ற பலர் தாம் கூறிய, பேசிய பேச்சுக்களின் தாக்கத்தை இன்றும் புரியாமலே இருப்பதும் தவறான போராட்டம் பயங்கரவாதத்திற்கு துணை போனதும் தமது சுயலாபத்திற்காக இந்த தமிழர் போரட்டத்தையும் புலிப்போராளிகளின் வீர மரணத்தையும் தமது சுயலாபத்துக்குமாய் பிரயோகித்துவிட்ட இவர்கள்  இன்றும் ஜரோப்பிய புலம் பெயர் நாடுகளில் திரிய ஆரம்பித்துவிட்டனர்.

ஜபிசியில் வந்து போர்க்காலங்களில் தமது பெயர்கள் தொலைபேசி இலக்கங்களை கொடுத்து பேசியவர்களின் இலக்கங்கள் இன்று தொடர்பில்லாமல் இருப்பதும் இவர்களால் வழங்கப்பட்ட பல ஈமெயில்கள் செயலற்று இருப்பதும் (பிரிஎப் அங்கத்துவ விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட ஈமெயில்கள் தொலைபேசி இலக்கங்களில் 40 சதவிகிதமானவைகள் உண்மையல்ல என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்)

தலைவன், சூரியத்தேவன், தேசியத்தலைவன் என்றெல்லாம் வர்ணித்தும் ‘தலைவா ஆணையிடு’ ‘இன்றே புலிகள் வென்றுவருவர்’ என்று கர்ச்சித்த ஜபிசி இன்று அந்த தலைவனின் மறைவில் அஞ்சலி  செலுத்தினால் விளம்பரதாரர்களின் நிதிவசூல் வீழ்ந்துவிடும் என்பதற்காக மௌனம் காக்கிறது. வன்னியில் தமிழ் மக்கள் ஆயிரக் கணக்கில் கொல்லப்பட்டால் சர்வதேச நாடுகள் தலையிட்டு தமிழீழம் பெற்றுத்தரும் என்று உலறிய இவர்கள் ‘எடுத்த காரியம் யாவிலும் வெற்றி’ என்ற கோசத்துடன் மீண்டும் தமது சுயலாபமீட்டும் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்துள்ளது. கடந்த காலம் நடந்தது நடந்து போச்சு இனி என்ன என்று விட்டுச் செல்ல இயலாது.

கடந்தகாலங்களில் போராட்டம் என்ற பெயரில் தமிழர்கள் பெயரில் நடாத்தப்பட்ட கொலைகள் மனிதாபிமானமற்ற செயல்களுக்கெல்லாம் விமர்சனங்களும் பதில்களும் இல்லாமல் மீண்டும் தமிழர்க்காக செயற்ப்படுகிறேன் என்பதை அனுமதிக்க முடியாது.

கடந்தகால தவறுகளை அப்படியே புதைத்துவிட்டு அதன் மேல் மீண்டும் ஒரு சமாதிகட்ட அனுமதி கிடைக்கும் என்ற தப்பாக நினைத்துவிடக் கூடாது.

ஐந்து இலட்சம் பக்தர்கள் மடு உற்சவத்தில் பங்கேற்பு

madhush_2.jpgமடுத் திருத்தலத்தின் ஆவணி மாதத் திருவிழா நேற்று வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. பூரண பாதுகாப்புடனும் அரச அனுசரணையுடனும் இடம்பெற்ற இத்திருவிழாவில் நாடளாவிய ரீதியிலிருந்து சுமார் ஐந்து இலட்சம் மக்கள் கலந்துகொண்டு மடு மாதாவைத் தரிசித்தனர்.

மடுத் திருப்பதிக்குச் செல்லும் பாதைகள் புனரமைக்கப்பட்டு மின்சாரம் உட்பட சகல வசதிகளும் வழங்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் பயமின்றி இந்தத் திருவிழாவில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது. நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற வெஸ்பர்ஸ் ஆராதனையும் நேற்று விமரிசையாக நடத்தப்பட்டது.

மடு மாதா திருவிழாவிலும் கொழும்பு மறை மாவட்டப் பேராயர் பேரருட்திரு மெல்கம் ரஞ்சித் கலந்து கொண்டு திருப்பலியை நிறைவேற்றினார். அத்துடன் கொழும்பு மறை மாவட்ட முன்னாள் பேராயர் பேரருட் திரு ஒஸ்வோல்ட் கோமிஸ், யாழ். ஆயர் பேரருட்திரு தோமஸ் செளந்தரநாயகம் ஆகியோர் கலந்துகொண்டு ஆராதனைகளை நடத்தினர். கடந்த பல வருடங்களுக்குப்பின் தடையின்றியும் அச்சமின்றியும் மடுத்திருவிழாவைத் தரிசிக்கக் கிடைத்தமைக்காக மக்கள், அரசாங்கத்திற்கும் பாதுகாப்புப் படையினருக்கும் நன்றி தெரிவித்தனர்.

கடந்த காலங்கள் போலவே மக்கள் மடுத்திருப்பதி வளவில் கூடாரங்களை அமைத்து குடும்பத்துடன் மடுமாதா திருவைக் கண்டுகளித்தமை குறிப்பிடத்தக்கது. வாகனப் போக்குவரத்துக்கள், யாத்திரிகளுக்குத் தேவையான பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கான கடைகள் உட்பட சகல வசதிகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. மக்களுக் கான முழுமையான பாதுகாப்பினை பொலிசாரும், இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இத்திருவிழாவில் மறையுரையாற்றிய யாழ். ஆயர் தோமஸ் செளந்தரநாயகம், மடுத்திருப்பதியில் மீண்டும் விமரிசையாக திரு விழாவை நடத்தும் சூழலை ஏற்படுத்தித் தந்த இலங்கை அரசாங்கத்துக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்.

அவர் தமது மறையுரையில் மேலும் தெரிவித்ததாவது :-மருத மடுத் திருப்பதி பல யுத்தங்களைக் கண்டுள்ளது. அமைதியாக இருந்த பூமி யுத்த பூமியாக மாறியது. எனினும் நீண்டகாலத்திற்குப் பின் வடக்கு கிழக்கு மட்டுமன்றி நாடளாவிய ரீதியிலிருந்து மக்கள் பங்கேற்கும் சிறப்புத் திருவிழா இம்முறை கொண்டாடப்படுகிறது.

ஆலயமே தகர்ந்து விடுமோ என்ற ஒரு அச்சமான சூழ்நிலையிலிருந்து இத்திருப்பதி மீட்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஆலயத்தை மீள புனரமைத்துப் பாதுகாப்பு வழங்கி நாடளாவிய ரீதியிலிருந்து மக்கள் இங்கு வருவதற்கு வழியமைத்த படையினருக்கும் எமது பாராட்டுக்களும் அன்னையின் ஆசீர்வாதமும் உரித்தாகட்டும். இத்திருநாள் இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகின்ற திருநாள். கொழும்பு மறை மாவட்டத்திற்கு புதிய ஆயர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவரின் தலைமையில் இத்திருவிழா நடக்கிறது.

அதேவேளை நாடளாவிய ரீதியிலிருந்து மீண் டும் அனைத்து மக்களும் கலந்துகொண்டு அன்னையின் ஆசீர்வாதத்தைப் பெறும் பெருவிழாவாக இது நிகழ்கிறது.

எனினும் எமது மனங்களில் கவலை உள்ளது. இந்தப் பிரதேசத்தில் வாழும் மக்கள் இத்திருவிழாவில் பங்கு பற்ற முடியாமல் அவர்கள் அகதிகளாக முகாம்களில் தங்கியுள்ளமையே அந்த தந்தயே தனக்குக் காரணம். இம்மக்கள் விரைவாக மீளக் குடியமர்த்தப்பட வேண்டும். அதற்காக அன்னையின் ஆசீரை வேண்டி நிற்போம் எனவும் யாழ். ஆயர் மேலும் தெரிவித்தார்.

‘வணங்கா மண்’ நிவாரணப்பொருட்கள் விநியோகிப்பதில் புதிய சிக்கல்:இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தகவல்

containers.jpgசென்னை யிலிருந்து ‘கொலராடோ’ கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டு கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக்கிடக்கும் நிவாரணப் பொருட்களை கொழும்புத் துறைமுகத்தில் இருந்து வெளியகற்றுவதில் புதிய சிக்கல் தோன்றியுள்ளதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் சுரேன் பீரிஸ் தெரிவித்தார். இதன் காரணமாக, புலம்பெயர்ந்த மக்களால் இடம்பெயர்ந்த மக்களுக்காக அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்களை வவுனியாவுக்கு கொண்டு செல்வதில் மேலும் சில தினங்களுக்கு தாமதம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதென்றும் அவர் குறிப்பிட்டார். இந்நடவடிக்கை தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், புலம்பெயர்ந்த மக்களால் சேகரித்து அனுப்பப்பட்ட 880 மெற்றிக் தொன் நிறையுள்ள நிவாரணப் பொருட்கள் 27 கொள்கலன்களில் அடைக்கப்பட்ட நிலையில் கொழும்பு துறைமுகத்தில் பல நாட்களாக தேங்கிக் கிடக்கின்றன. இந்த பொருட்களை வவுனியாவுக்குக் கொண்டு சென்று சேர்ப்பதற்காக மிகவும் பிரயத்தனங்களை எடுத்துள்ளோம்.

துறைமுகத்தில் இருந்து பொருட்களை வெளியகற்றுவதற்கான சகல பணிகளும் முடிவடைந்தவுடன் இவ்வார இறுதிக்குள் அவற்றை வவுனியாவுக்குக் கொண்டு செல்ல ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தோம். ஆயினும், கொழும்பு துறை முகத்திற்கு வந்துள்ள பொருட்கள் தொடர்பாக இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தினால் அனுப்பப்பட்டுள்ள ஆவணங்கள் பூரணத்துவமானவையாக இல்லை என்பதால் புதிய சிக்கல் தோன்றிள்ளது.

அதாவது, இந்தக் கப்பலில் மருந்துப்பொருட்கள், உணவுப் பொருட்கள் போன்றவை ஏற்றப்பட்டுள்ளதாக இந்திய செஞ்சிலுவைச் சங்கம் அனுப்பிய ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, அதில் என்னென்ன மருந்துகள் எவ்வளவு அளவில் இருக்கின்றன? என்ன உணவுப் பொருட்கள் உள்ளடங்கியுள்ளன? இவை அனைத்தும் பாவனைக்கு உகந்தவையாகவும் தரமானதாகவும் இருக்கின்றனவா? – போன்ற முழுமையான விபரங்கள் குறிப்பிடப்படவில்லை. அத்துடன் எந்தக் கொள்கலனில் என்ன பொருள் இருக்கின்றது என்ற குறிப்பும் எழுதப்படவில்லை.

எனவே, இப்பொருட்களை வவுனியா மக்களுக்கு விநியோகிப்பதற்கு முன்னர் அவற்றின் தரம் மற்றும் அளவு தொடர்பான தெளிவைப் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளதாகச் சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் எமக்கு அறிவித்துள்ளார். ஒவ்வொரு கொள்கலனையும் திறந்து பார்த்து மேற்படி விபரங்களை பெறவேண்டியுள்ளதால் கொழும்பு துறைமுகத்தில் இருந்து பொருட்களை வெளியகற்றுவதற்கு இன்னும் சில தினங்கள் செல்லலாம்.

இந்திய செஞ்சிலுவைச் சங்கம் விட்ட இந்த தவறின் விளைவாக இப்படியொரு புதிய பிரச்சினை தலைதூக்கியுள்ளதுடன் அடுத்த வாரம் நடுப்பகுதியிலேயே நிவாரண பொருட்களை வவுனியாவுக்குக் கொண்டு செல்லக் கூடியதாக இருக்கும் என நினைக்கிறோம். எவ்வாறிருந்தபோதிலும் இப்பணிகளை முடிந்தளவு துரிதப்படுத்துவதற்காக, சுகாதார அமைச்சுக்கு சென்று சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் பலரிடம் இது விடயமாகப் பேசியுள்ளேன்” என்றார்.

லண்டனிலிருந்து கப்டன் அலி கப்பல் மூலம் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட ‘வணங்கா மண்’ என்ற பெயரில் இங்கு வந்த கப்பல் நிவாரணப் பொருட்கள், பின்னர் சென்னை துறைமுகத்தில் இறக்கப்பட்டன. அங்கிருந்து கொலராடோ கப்பல் மூலம் மீண்டும் இந்த நிவாரணப் பொருட்கள் கொழும்பு துறைமுகத்திற்கு எடுத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

தமிழ்நாடு, காங்கிரஸ் அலுவலகத்தில் பாதி எரிந்த சோனியா உருவப்படத்தின் மேல் பிரபாகரன் படம்

கடலூர் மாவட்ட, காங்கிரஸ் அலுவலகத்தில் சோனியா காந்தியின் உருவப்படம் பாதி எரிந்த நிலையில், அதன்மேல் விடுதலைப்புலிகளின் தேசியக்கொடி மற்றும் தலைவர் பிரபாகரனின் படம் இருக்கக்  காணப்பட்ட சம்பவத்தால், அங்கு பதட்டம் ஏற்பட்டது.
கடலூர் கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில், மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் உள்ளது. சுதந்தின விழா கொண்டாடுவதற்காக, 14 ம் திகதி கொடி மேடை வெள்ளையடித்து காங்., கொடி தோரணம் கட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.

பின்னர் அலுவலக நிர்வாகி பக்தவத்சலம் இரவு அலுவலகத்தை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை 7 மணிக்கு பக்தவத்சலம் காங்கிரஸ் அலுவலகத்தை திறந்த போது தோரணங்களில் இருந்த காங்கிரஸ் கொடி எரிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் கொடி மேடை அருகே, சோனியாவின் உருவப்படம் பாதி எரிந்த நிலையில் கிடந்தது. அதன் மீது விடுதலைப்புலிகளின் கொடி மற்றும் பிரபாகரன் படம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, முன்னாள் எம்.பி., பி.ஆர்.எஸ்.வெங்கடேசன், மாவட்டத் தலைவர் நெடுஞ்செழியன் உள்ளிட்டவர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

சுதந்திர தின விழா நடைபெறுவதால், தாமதமாக பொலிஸாருக்கு புகார் தெரிவித்தனர். அதன்பேரில் பொலிஸார் நேற்று காலை 11 மணிக்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் கொடி எரிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு விசாரித்தனர். இச்சம்பவம் நேற்று அதிகாலை 5 மணி அளவில் நடந்திருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது.

இந்தியாவுக்கு 4.78 பில்லியன் டாலர் ஐஎம்எப் உதவி!

பொருளா தார நெருக்கடியைச் சமாளிக்க ஐஎம்எப்பிடமிருந்து சிறப்பு எடுப்பு உரிமை மூலம் 4.78 பில்லியன் டாலர் நிதியைப் பெறுகிறது இந்தியா. உலகம் முழுக்க நிலவும் பொருளாதார மந்தத்தைப் போக்க, 250 பில்லியன் டாலர் அளவுக்கு நிதியை வழங்குகிறது ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நிதி அமைப்பு.

ஐஎம்எப்பில் அதன் உறுப்பு நாடுகள் வைத்துள்ள அந்நியச் செலாவணி இருப்பிலிருந்து 74 சதவிகிதம் அளவுக்கு இந்த முறை நிதி உதவி அளிக்கப்படுகிறது. இது தவிர சிறப்பு எஸ்டிஆர் உதவி மூலம் 33 பில்லியன் டாலர் அளவுக்கு நிதியுதவியும் வழங்கப்படுகிறது. இதற்காக ஐஎம்எப்பின் சில விதிகள் திருத்தப்பட்டுள்ளன.

இந்த இருவித நிதி உதவி மூலம், உலக நாடுகள் மொத்தம் 316 பில்லியன் டாலர்கள் நிதி உதவியைப் பெறுகின்றன. உலகம் முழுக்க பொருளாதார மந்தத்தால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும், உலக நாடுகளின் கூட்டு முயற்சியே இந்த நிலை மாற உதவும் என்பதையும் புரிந்து கொள்ள ஐஎம்எப்பின் இந்த நடவடிக்கை உதவும் என பொருளாதார அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வவுனியா அகதி முகாம்களில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் அவதி: 3 வது நாளாகவும் கடும் மழை

flood.jpgவவுனி யாவில் நேற்றும் 3 வது நாளாகவும் தொடர்ந்து கடும் மழை பெய்ததினால் அகதி முகாம்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் மக்கள் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்கி வருவதாக வவுனியா செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த மக்கள் உணவு, குடிநீர் பெறமுடியாமல் அவதியுறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது

சுவாமிநாதனுக்கு பதிலாக புதிய விஞ்ஞானிகள் குழு

இலங்கையின் வடகிழக்கில் விவசாய பணிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட எம்.எஸ்.சுவாமிநாதன் மறுத்துவிட்டதை அடுத்து வேறு குழுவை இலங்கைக்கு அனுப்ப இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. போர் நடந்த வடகிழக்கு பகுதியில் விவசாய பணிகளை சீரமைக்கும் நோக்கில் இலங்கை அரசு வடக்கின் வசந்தம் என்ற திட்டத்தை துவக்க முயற்சித்து வருகிறது.

இந்த திட்டத்துக்கு உதவ வேண்டும் என இலங்கை அரசு, இந்திய பசுமை புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதனை கேட்டு கொண்டது. அவரும் ராஜபக்சேவை சந்தித்ததாக கூறப்பட்டதை அடுத்து அவருக்கு எதிராக போராட்டம் நடத்த போவதாக தமிழ் ஆதரவாளர்கள் சிலர் தெரிவித்தனர். இந்நிலையில் வடகிழக்கில் தமிழர்களின் துயர் தீரும் வரை அந்த திட்டத்துக்காக நான் இலங்கைக்குப் போக மாட்டேன் என எம்.எஸ். சுவாமிநாதன் உறுதியாக கூறிவிட்டார்.

இதையடுத்து தற்போது இந்திய விவசாய ஆராய்ச்சி கழகத்தை சேர்ந்த சில விஞ்ஞானிகளை கொண்ட குழுவை அனுப்ப இந்திய அரசு முடிவு செய்துள்ளது. விரைவில் இலங்கையில் விளைச்சலுக்கான சீசன் துவங்குவதாலும், வட கிழக்கு பகுதியில் கன்னிவெடிகளை அகற்றும் பணி வேகமாக நடந்து வருவதாலும் இந்த குழுவினர் இந்த மாத இறுதியில் இலங்கை செல்வார்கள் என கூறப்படுகிறது.

அவர்கள் வடகிழக்கில் மண்ணின் தரம், விவசாய வசதிகள், வானிலை ஆராய்ச்சி போன்றவை தொடர்பாக இலங்கை அரசுக்கு ஆலோசனை தர இருக்கிறார்கள்.