எஸ். பி ஜமால்தீன் படுகொலைக்கு 10 இலட்சம் ரூபா கொந்தராத்து – பொலிஸ் விசாரணையில் அம்பலம்; மூவர் கைது

jamaldeen.jpgகல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரி பணிப்பாளராயிருந்த பொலிஸ் அத்தியட்சகர் எச்.எல். ஜமால்தீன் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான சந்தேகத்தின்பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காரைதீவு விசேட அதிரடிப்படையினர் (14ம் திகதி) இம் மூவரையும் கைது செய்துள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 5ம் திகதி மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் பள்ளிவாசல் அருகில் வைத்து பொலிஸ் அத்தியட்சகர் ஜமால்தீன் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இக்கொலை தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டிருந்த நிலையில் விசேட அதிரடிப் படையினர் முக்கிய சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர். மருதமுனை அல்-ராஜ் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரான சுலைமா லெவ்வை நஜிமுல் றகுமான், மத்திய முகாம் 13ம் கொலனியைச் சேர்ந்த செல்லத்தம்பி தேவேந்திரன் (வீரா புலி உறுப்பினர்) நற்பிட்டிமுனை முகம்மது காசிம் ஹம்ஸா ஆகியோரே கைது செய்யப்பட்டவர்களாவர். இச்சம்பவம் தொடர்பாக கல்முனைப் பொலிஸார் தகவல் தருகையில்:

கொந்தராத்து அடிப்படையில் 10 இலட்சம் ரூபா வழங்கப்பட்டு புலி உறுப்பினரொருவரால் ஜமால்தீன் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார். இதற்காக மருதமுனை அல்ராஜ் முகவரான சுலைமா லெவ்வை நஜிமுல் றஹ்மான் என்பவர், புலி உறுப்பினரான வீரா என அழைக்கப்படும் 13ம் கொலனியைச் சேர்ந்த செல்லத்தம்பி தேவேந்திரன் என்பவருக்கு 10 இலட்சம் ரூபா கொந்தராத்து வழங்கியுள்ளாரென விசாரணைகளில் அம்பலமாகியிருக்கிறது.

கொந்தராத்தாகக் கொடுக்கப்பட்ட தொகை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த முகம்மது காசிம் ஹம்ஸா, என்பவரூடாக அல்ராஜ் உரிமையாளர் வழங்கியுள்ளார். நற்பிட்டிமுனை காசிமே 10 இலட்சம் ரூபாவை புலி உறுப்பினரான செல்லத்தம்பி தேவேந்திரனிடம் கையளித்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளதென கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் அத்தியட்சகர் ஜமால்தீனை அல்-ராஜ் முகவர் நிலைய உரிமையாளரான நஜிமுல் றகுமானின் கட்டளைப் பிரகாரம் தான்தான் சுட்டுக் கொலை செய்ததாக புலி உறுப்பினரான வீரா என்றழைக்கப்படும் செல்லத்தம்பி தேவேந்திரன் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். காரைதீவு விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்ட மூவரும் கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு மேலதிக விசாரணைக்காக கல்முனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *