24

24

27 கொழும்பு பாடசாலைகளில் நாளை டெங்கு ஒழிப்புத் திட்ட வேலைகள் ஆரம்பம்

mosquitfora.jpgடெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் மாத்திரம் நுளம்புகளை ஒழிப்பதற்குரிய நடவடிக்கைகளில் ஈடுபடாமல் முற்றாகவே டெங்கு நுளம்புகளை ஒழிப்பதற்கு அனைத்து தரப்பும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனத் தெரிவித்துள்ள கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, நாளை சனிக்கிழமை கொழும்பில் 27 பாடசாலைகளில் டெங்கு ஒழிப்புத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். கிளாசோ, ஸ்மித்கிளைன், ஸ்ரீலங்கா ரெலிகொம் ஆகிய நிறுவனங்களின் அனுசரணையுடன் கொழும்பு மாநகர சபையும் இணைந்து நாடளாவிய ரீதியிலான டெங்கு ஒழிப்புத் திட்டத்தை ஆரம்பித்துள்ளன.

இது தொடர்பான செய்தியாளர் மாநாடு கொழும்பு மாநகர சபையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றபோது அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;  நாடளாவிய ரீதியில் கடந்த சில மாதங்களாக டெங்கு காய்ச்சல் தொடர்பாக பரவலாகப் பேசப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வருகின்றது. இலங்கையில் மட்டுமல்ல ஏனைய உலக நாடுகள் சிலவற்றிலும் டெங்கின் தாக்கம் இருந்து வருகின்றது. கியூபாவை எடுத்துக் கொண்டால் இலங்கையைவிட மோசமான நிலையில் டெங்கின் தாக்கம் இருந்துள்ளது. ஆனால், அந்நாட்டில் டெங்கினை ஒழிப்பதற்கு பரவலான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு அந்நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டதன் மூலம் அந்நாட்டில் டெங்கு ஒழிக்கப்பட்டது.

இதன் காரணமாகவே கியூபாவைச் சேர்ந்த இரு நிபுணர்கள் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் சேவை எமக்கு இன்றியமையாததாக உள்ளது. நாட்டில் இதுவரை 18 ஆயிரத்து 452 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் டெங்கினை ஒழிப்பதற்கு பல்வேறு திட்டங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கொழும்பு மாநகரசபையுடன் இணைந்து டெங்கினை ஒழிப்பதற்கு கிளாசோ ஸ்மித்கிளைன் மற்றும் ரோட்டறிக் கழகம் இணைந்துள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும்.

பொதுவேலைத்திட்டம் ஒன்றிற்காக அரசுடன் தனியார் நிறுவனங்கள் இணைந்து செயற்படுவது வரவேற்கத்தக்க விடயம். 25 ஆம் திகதி சனிக்கிழமை (நாளை) கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட 27 பாடசாலைகளில் இந்த டெங்கு ஒழிப்புத் திட்டம் ஆரம்பிக்கப்படுகின்றது.

பின்னர் தொடர்ச்சியாக இத்திட்டம் நாடளாவிய ரீதியில் நடைமுறைப் படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ரோட்டரிக் கழக உறுப்பினர்களும் நலன்விரும்பிகளும் கலந்துகொண்டு ஐந்து குழுக்களாகப் பிரிக்கப்படுவர்.

இதில் ஒரு குழுவினர் பாடசாலையையும் அதன் சுற்றுப்புறத்தையும் சுத்திகரிக்கும் பணியில் ஈடுபட ஏனைய 4 குழுவும் பாடசாலையை சுற்றிய 300 மீற்றருக்குட்பட்ட ஏனைய பிரதேசங்களை சுத்திகரிப்பர்.

இவ்வாறாக 27 பாடசாலைகளிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தலா ஐந்து குழுக்கள் செயற்படும். டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 40 வீதமானோர் பாடசாலை மாணவர்களாகவே உள்ள அதேவேளை மரணவீதமும் கடந்த வருடத்திலும் பார்க்க இவ்வருடம் அதிகரித்துள்ளது.

மரண வீதத்திலும் வயதுவந்தவர்களைவிட சிறுவர்களே அதிகளவில் காணப்படுகின்றனர். இந்நிலையில் 8 வாரகால டெங்கு ஒழிப்புத் திட்டத்தில் அனைவரும் கலந்து டெங்கினை ஒழிக்க ஒன்று சேரவேண்டுமெனத் தெரிவித்தார்.

மறைந்த எம்.பி.க்கள் நால்வருக்கு அனுதாபப் பிரேரணை

26parliament.jpgமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர் மீதான அனுதாபப் பிரேரணைகள் சபையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றன.  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான அலிக் அலுவிகார, ஹரேந்திரகொரயா, ஐயூப், ராஜா குலதிலக ஆகியோர் மீதான அனுதாபப் பிரேரணைகளே இடம்பெற்றன.

இந்த அனுதாபப் பிரேரணையில் அமைச்சர்களான தினேஷ் குணவர்தன, ரிசாட் பதியுதீன், நியோமல் பெரேரா, எம்.பிக்களான ஜோசப்மைக்கல் பெரேரா, லக்ஷ்மன் செனவிரட்ன, ரவூப்ஹக்கீம், இபாம், ஸ்ரீகாந்தா உட்பட பலர் உரையாற்றினர்.

வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சிறுமி படுகொலை அம்பாறை மத்திய முகாம் பகுதியில் கொடூரம்

images000.jpgஅம்பாறை மத்திய முகாம் 4 ஆம் கொலனி பகுதியில் நேற்று முன் தினம் புதன்கிழமை பிற்பகல் பாடசாலைச் சிறுமியொருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு பின்னர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

4 ஆம் கொலனியில் வசிக்கும், வேப்பையடி வாணி வித்தியாலய 7 ஆம் தர மாணவியான மோகன் மதுனுஷியா (வயது 12) என்ற சிறுமியே இந்தப் பரிதாபத்துக்குள்ளாகியுள்ளார்.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது;

பிற்பகல் 2 மணியளவில் இந்த மாணவி தனது வீட்டிலிருந்து அருகிலுள்ள கடைக்குச் சென்றுள்ளார். எனினும் நீண்ட நேரமாகியும் அவர் வீடுதிரும்பாததால் உறவினர்கள் அவரைத் தேடியுள்ளனர்.

மாலை 6 மணியளவில் அந்தப் பகுதியில் வீதியோர மதகொன்றின் கீழ் கிடந்த இவரை கண்டவர்கள் உடனடியாக அவரை மத்திய முகாம் மாவட்ட ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர்.

குற்றுயிராகக் கிடந்த அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்கையில் உயிரிழந்துவிட்டார். இவரது கழுத்திலும் வயிற்றுப்பகுதியிலும் ஆழமான கத்திக் குத்துக் காயங்களும் காணப்பட்டன.

இதையடுத்து இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அதற்குரிய உபகரணங்கள் இல்லாததால் உடல் அம்பாறை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது.

இவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட பின்ன கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையின் பின் தெரிவிக்கப்பட்டது.

இதுபற்றி தெரியவரவே பொதுமக்கள் கடும் சினமடைந்ததுடன் இதற்கு காரணமானவனெனக் கூறப்படும் “ரவுடி பாவா’ (கிருஷ்ணகுமார்35 வயது) என்பவரை தேடத் தொடங்கினர்.

மாணவியின் படுகொலையை அடுத்து அவர் கல்விகற்ற பாடசாலையும் நேற்று மூட்பட்டிருந்தது.

நேற்றுக் காலை சந்தேகத்தின் பேரில் இருவரைக் கைது செய்த மத்திய முகாம் பொலிஸார் பிரதான குற்றவாளியெனச் சந்தேகிக்கப்பட்ட ரவுடி பாவாவைத் தீவிரமாகத் தேடினர்.

இந்த நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் 4 ஆம் கொலனி வயல் பகுதியில் ரவுடி பாவா மறைந்திருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து அங்கு திரண்டு சென்ற மக்கள் அவனை மடக்கிப் பிடித்ததுடன் அவனை மிகக் கடுமையாகத் தாக்கிய பின் மத்திய முகாம் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மும்பையில் கடும் கடல் சீற்றம்-இன்று பிற்பகல் ராட்சத அலை?

marine-drive-mumbai.jpgமும் பையில் நேற்று முதல் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. இந்த நிலையில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்று பிற்பகலில் ராட்சத அலைகள் தாக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் மும்பை கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அகற்றப்பட்டு வருகின்றனர். மும்பையில், நேற்று முதல் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. பல பகுதிகளில் நகருக்குள் கடல் நீர் புகுந்ததால் மக்கள் பீதியடைந்தனர்.

மும்பையி்ல 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை கடல் சீற்றம் கடுமையாக இருக்கும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அதற்கேற்ப நேற்று கடும் சீற்றத்துடன் காணப்பட்டது கடல். கடல் நீர் பல பகுதிகளில் ஊருக்குள் புகுந்ததால் மக்கள் பீதியடைந்தனர். கொலாபா, தாதர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது. பல இடங்களில் கடல் அலைகள் பெரிய அளவில் எழுந்தபடி இருந்தன.பல இடங்களில் கடல் நீர் புகுந்ததால் சாலையில் வெள்ளம் என கடல் நீர் ஓடியது. கொலாபா, கீதா நகர் பகுதியில் புகுந்த கடல் நீரால் பல வீடுகளுக்குள் தணணீர் புகுந்தது. சில குடிசைகள் அடித்துச் செல்லப்பட்டன.

இந்த நிலையில், இன்று பிற்பகல் 2 மணியளவில் 5 மீட்டர் உயரத்திற்கு ராட்சத அலைகள் எழும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் இந்த அளவுக்கு பெரிய அலைகள் வந்ததில்லை என்பதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தீயணைப்புப் படையினர், கடலோரக் காவல் படையினர், கடற்படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். நீச்சல் வீரர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். செய்தித் தாள்கள், டிவி, ரேடியோக்கள் மூலம் மக்களுக்கு எச்சரிக்கைச் செய்திகள் விடப்பட்டுள்ளன. கடலோரம் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. நகர் முழுவதும் ஒருவித அச்ச நிலை காணப்படுகிறது.

விமான தாக்குதலில் பின்லாடனின் மகன் பலி!

osama_son.jpgஒசாமா பின்லாடனின் மகன்களில் ஒருவரான சாத், அமெரிக்க விமான தாக்குதலில் பலியானார். அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு காரணமான கூறப்படும் ஒசாமா பின்லாடன், ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் நாடுகளின் எல்லையில் உள்ள மலைப் பகுதிகளில் ஒளிந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக பாகிஸ்தான் எல்லையில், அமெரிக்க ஆளில்லா விமானங்கள் தொடர்ந்து குண்டுகளை வீசி வருகின்றன. கடந்த ஓராண்டில் 50க்கும் அதிகமான தாக்குதல்களில், 470 பேர் பலியாகியுள்ளனர்.

இது போன்று அமெரிக்க விமானம் குண்டு வீசிய போது, அந்த வழியாக எதேச்சையாக வந்த ஒசாமாவின் மகன் சாத், குண்டு வீச்சில் சிக்கி பலியானதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாக, அமெரிக்க வானொலி தெரிவித்துள்ளது. ஈரான் நாட்டில் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்த சாத் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தனது தந்தை ஒசாமாவை பார்க்க வந்த போது குண்டு வீச்சில் சிக்கி பலியானதாக அமெரிக்க அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

ஒசாமாவின் மகனை ஒரு பொருட்டாகக் கருதவில்லை என்றும் அவரை கொல்லும் நோக்கம் எதுவும் இல்லை என்றும் குண்டு வீச்சில் தற்செயலாக அவர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவிக்கின்றது. சாத் கொல்லப்பட்ட பகுதி அருகே தான் ஒசாமா பதுங்கி இருக்க வேண்டும் என சந்தேகிப்பதாக அமெரிக்க அதிகாரிகள சந்தேகிக்கின்றனர்

கைது செய்யப்பட்டிருந்த 21 இந்திய மீனவர்கள் இலங்கையினால் விடுவிப்பு – இந்தியன் எக்ஸ்பிரஸ்

_fisherman.jpgசர்வதேச சட்டவிதிகளை மீறி இலங்கையின் கடற்பரப்புக்குள் பிரவேசித்தமைக்காக கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்கள் இலங்கை அரசினால் நேற்று அந்நாட்டின் கரையோரப் பாதுகாப்புப் படையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையின் கடல் எல்லைக்குள் சட்ட விரோதமாக நுழைந்த இந்த 21 இந்திய மீனவர்களும் கடந்த 04ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இலங்கை அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்ட இந்த மீனவர்கள் நேற்று மாலை இந்தியாவின் மண்டபம் பகுதியிலுள்ள கரையோரப் பாதுகாப்பு நிலையத்துக்குக் கொண்டுவரப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். இலங்கை அரசாங்கம் இவர்களைக் கடந்த வாரமே விடுவிக்கத் திட்டமிடப்பட்டிருந்தபோதும் கடும் கடல் கொந்தளிப்பின் காரணமாக இந்நடவடிக்கை தாமதமானதாகவும் அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இறைமை, ஆட்புல ஒருமைப்பாட்டுக்கு எதிராக எவர் செயற்பட்டாலும் அவர்கள் தேசத்துரோகிகள்- பாராளுமன்றத்தில் பிரதமர்

pmsrilaka.jpgநாட்டின் இறைமை, ஆட்புல ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயற்படுபவர்கள் எந்த தராதரத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் தேசத் துரோகிகளாகவே கருதப்படுபவர்களென்று பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க செவ்வாய்க்கிழமை சபையில் தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் சட்டத்தரணிகள் தொடர்பாக கடந்த ஜூலை மாதம் 10 ஆம் திகதி வெளியாகியிருந்த செய்தி தொடர்பாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான ஜோசப் மைக்கல் பெரேரா பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே பிரதமர் விக்கிரமநாயக்க மேற்கண்வாறு கூறினார்.

ஜோசப் மைக்கல் பெரேரா தமது கேள்வியில்; பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷவினால் சண்டேலீடர் பத்திரிகை மற்றும் அதன் மறைந்த ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க மீது தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கில், பத்திரிகை சார்பாக ஆஜராண சட்டத்தரணிகள் நால்வரும் கறுப்பு அங்கி அணியும் தேசத் துரோகிகலென அவர்களது பெயர் குறிப்பிட்டு மேற்குறித்த தினத்தில் பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இதன் மூலம் அரசியலமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நீதிமன்ற சுயாதீனம், சட்ட ஆதிக்கம் மற்றும் வழக்கொன்றில் சட்டத்தரணியொருவர் ஆஜராக இருக்கும் உரிமை போன்றன முழுமையாக மீறப்பட்டுள்ளன. இது சட்டத்தரணிகளுக்கு மட்டுமல்லாது மறைமுகமாக நீதிமன்றத்துக்கு விடுவிக்கப்பட்டிருக்கும் அச்சுறுத்தலாகும் என்று கூறினார்.

இதற்கு பதிலளித்து பிரதமர் பேசுகையில்;  பாதுகாப்பு அமைச்சின் உத்தயோகபூர்வ இணையத்தளமானது ஒரு இலத்திரினியல் ஊடகமே. அதுவும் ஊடகத் துறையின் ஒரு அங்கமே. இதற்கும் ஊடகச் சுகந்திரம், உரிமை, பொறுப்பு என்பன இருக்கிறது. இவை அரசியலமைப்பின் பிரகாரம் வழங்கப்பட்டவையாகும். பிரஜைகளின் / பொதுமக்களின் அடிப்படை பொறுப்பு என்பனவற்றினூடாக வழங்கப்பட்டிருக்கும் பொறுப்புகளை பாதுகாக்க வேண்டியதும் சகலரினதும் கடமையாகும்.

இந்த பொறுப்புகளை பாதுகாக்கும் போது சாதாரண பிரஜையாக இருந்தாலும் சரி அல்லது சட்டத்தரணி, டாக்டர், வர்த்தகர் என எந்த தரத்திலானவர்களாக இருந்தாலும் சரி அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் அடிப்படை பொறுப்புகளை பாதுகாக்கவும் கடைபிடிக்கவும் கடமைப்பட்டுள்ளவர்களாகவே இருக்கின்றனர். மேற்படி அடிப்படை பொறுப்புகள் அரசியலமைப்பின் அடிப்படையில் தேசிய பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு என்பனவற்றின் ஊடாக உரித்தாக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், சட்டத்தரணி ஒருவர் தொடர்பாக நோக்கும் போது மேற்குறிப்பிடப்பட்ட அடிப்படை பொறுப்புகளுக்கு மேலதிகமாக அரசியலமைப்பின் ஊடாகவும், உயர் நீதிமன்ற சட்டங்கள் மூலமாகவும் அடிப்படை பொறுப்புகள், கடமைகள் தொடர்பாக குறிப்பிடப்பட்டிருகிறது. ஒருவர் சட்டத்தரணியாக பதவியேற்கும் போது செய்யப்படும் சத்தியப்பிரமாணத்தின் ஊடாகவும் இது குறிப்பிடப்படுகிறது. எனவே, அரசியலமைப்பின் பிரகாரம் நாட்டின் இறைமை, ஆட்புல ஒருமைப்பாடு என்பனவற்றையும் பாதுகாக்க வேண்டியது சகல பிரஜைகளினதும் பொறுப்பாகும். அதை புறக்கணித்து செயற்படுபவர்கள் எந்த தரத்திலானவர்களாக இருப்பினும் அவர்கள் தேசத் துரோகிகளாகவே கருதப்படுவார்கள். இதன் பிரகாரம், பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் வெளியான விடயத்தில் தவறில்லை என்று தெரிவித்தார்.

தெற்கு அதிவேகப் பாதை நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த ஜனாதிபதி பணிப்புரை

mahinda-rajapa.jpgதெற்கு அதிவேகப் பாதைகளின் நிர்மாணப் பணிகளைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். அலரி மாளிகையில் நடைபெற்ற வீதி அபிவிருத்தி அமைச்சின் நடவடிக்கைகள் பற்றிய மீளாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்த அதிவேகப் பாதையில் உரிய நியமங்களுக்கு குறைந்த வகையில் அமைக்கப்பட்டுள்ள பாலங்களுக்குப் பதிலாக புதிய பாலங்களை நிர்மாணிப்பது குறித்து இக்கூட்டத்தில் கவனம் செலுத்திய ஜனாதிபதி, நிர்மாணப் பணிகளில் பல்வேறு கட்டட நிறுவனங்கள் ஈடுபட்டபோதும் அமைச்சு மட்டத்தில் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.  நாட்டிலுள்ள வீதிகளைப் பராமரிப்பதற்கு அரசாங்கம் வருடாந்தம் பெருமளவு நிதியைச் செலவிடுகிறது. கிராமப்புற வீதி அபிவிருத்தியின்போது பொதுமக்களின் பங்களிப்புக்களைப் பெறுவதன்மூலம் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியும்.

கடந்த காலங்களில் அபிவிருத்திப் பணிகளுக்கு அச்சுறுத்தலாக இனங்காணப்பட்ட இடங்களுக்கு வடக்கின் வசந்தம் மற்றும் கிழக்கின் உதயம் வேலைத் திட்டங்களின் கீழ் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். வீதி அபிவிருத்தித் திட்டங்களுக்காக இவ்வருடம் ஆகக்கூடிய நிதியாக 77,128 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

இந்தக் கூட்டத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் டி.பி. ஏக்கநாயக்க,  பிரதி அமைச்சர் டபிள்யூ.பீ. ஏக்கநாயக்க மற்றும் அமைச்சின் செயலாளர் அட்மிரல் வசந்த கரண்ணகொட ஆகியோருடன் தெற்கு அதிவேகப் பாதை அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாகவுள்ள ஒப்பந்தக்காரர்கள் மற்றும் நிர்மாண கம்பனிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டதாக மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அக்கரைப்பற்று வைத்தியசாலைக்கு 883 மில் ரூபா

nimal_siripala_de_silva.jpgஅக்கரைப் பற்று தள வைத்தியசாலையின் அபிவிருத்திப் பணிகளுக்காக 883 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.

சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் போஷாக்குத் தறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார். அதன்படி குறிப்பிட்ட வைத்தியசாலையின் வார்ட்கள் தொகுதி,  விசாரணைக் கூடம் மற்றும் மருந்தகம் போன்றவற்றை அமைக்க 8 கோடியே 83 இலட்சத்து 88 ஆயிரத்து 996 ரூபா வழங்கப்பட உள்ளது.

இலங்கை அணி கஸ்டமான நிலையில் – இரண்டாவது இனிங்சில் 183 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்கள்

pakisthan-cri.jpgபாகிஸ் தான் அணியுடனான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவதற்கு 492 ஓட்டங்களை இலக்காகக்கொண்டு துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி நேற்று நான்காவது நாள் போட்டி போட்டி நேர முடிவின்போது 3 விக்கட் இழப்பிற்கு 183 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணியுடன் 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி பங்கேற்றுள்ளது. முதல் இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் மூன்றாவது போட்டியிலேனும் தனது ஆறுதல் வெற்றியைப் பெறும் நோக்கில் பாகிஸ்தான் அணி சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடி தனது இரண்டாவது இன்னிங்சுக்காக அதிக ஓட்டங்களைக் குவித்துள்ளது.

இப்போட்டியில் தனது முதலாவது இன்னிங்ஸில் 299 ஓட்டங்களைப் பெற்ற பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கட் இழப்புக்கு 425 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது. இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸில் 233 ஓட்டங்களையே பெற்றது. முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணியை விட 66 ஓட்டங்களைக் குறைவாகப் பெற்றிருந்த இலங்கை அணி தற்போது 492 எனும் ஓட்டங்களை இலக்காகக்கொண்டு துடுப்பெடுத்தாடி வருகிறது.

நேற்றைய தினம் இலங்கை அணி ஆட்டநேர முடிவின்போது 03 விக்கட்டுக்களை இழந்து 183 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களான வர்ணபுர 31 ஓட்டங்களுடனும் பரணவிதாரண 73 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். கிரிக்கட் ரசிகர்களால் மஹேல ஜயவர்தன நேற்றைய தினம் சிறப்பாக ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்டபோதிலும்கூட அவரால் இரண்டு ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.  ஓப்சைட்டில் சென்ற பந்திற்கு பெட்டை நீட்டியதால் அக்மலிடம் பிடிகொடுத்து இரு ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். ஆட்டமிழக்காது அணித் தலைவர் சங்கக்கார 50 ஓட்டங்களையும் சமரவீர 20 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

இன்று 5வதும் இறுதியுமான நாளாகும். முதலாவது இனிங்ஸ் துடுப்பாட்டத்தின்போது நெற்றியில் காயமேற்பட்டுள்ள டில்சான் இரண்டாவது இனங்சில் துடுப்பெடுத்தாடுவாரா என்று நேற்று மாலை வரை உறுதிப்படுத்தப்படவில்லை. எஸ்.எஸ்.ஸி மைதானமானது ஐந்தாவது நாள் பந்து வீச்சாளர்களுக்கு சார்பாக இருக்குமென கிரிக்கட் அவதானிகள் தெரிவிக்கின்றனர். எனவே இன்று ஆரம்பமாகும் இரண்டாவது இனிங்சில் இலங்கை தனது வெற்றியிலக்கை அடையுமா என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. நேற்றைய ஸ்கோர் விபரம் வருமாறு:

 PAKISTAN 2ND INNINGS (overnight 300-5):
Khurram Manzoor b Herath     2
Fawad Alam c and b Thushara     16
Younus Khan lbw b Kulasekera    19
Mohammad Yousuf c Sangakkara b Herath   23
Misbah-ul Haq c Sangakkara b Mathews   65
Shoaib Malik c sub (Lakmal) b Herath   134
Kamran Akmal c Jayawardene b Kulasekera   74
Umar Gul c Vaas b Herath    46
Danish Kaneria c Thushara b Herath    5
Mohammad Aamer not out     22
Saeed Ajmal not out      3
Extras: (b10, lb2, nb2, w2)    16
Total (for 9 wkts decl, 123 overs)   425
Fall of wickets: 1-16 (Manzoor), 2-22 (Alam), 3-54 (Younus), 4-67 (Yousuf),
5-186 (Misbah), 6-319 (Akmal), 7-371 (Malik), 8-399 (Gul), 9-405 (Kaneria).
Bowling: Kulasekera 20-5-55-2 (w1), Thushara 28-2-121-1 (nb2, w1),
Herath 46-6-157-5, Vaas 19-6-47-0, Mathews 10-1-33-1

SRI LANKA 2ND INNINGS:
T. Paranavitana c Alam b Malik   73
M. Warnapura c Malik b Kaneria   31
K. Sangakkara not out    50
M. Jayawardene c Akmal b Kaneria   2
T. Samaraweera not out    20
Extras: (lb5, nb2)    7
Total (for 3 wkts, 59 overs)   183
To bat: Tillakaratne Dilshan, Angelo Mathews, Rangana Herath, Chaminda Vaas, Thilan Thushara, Nuwan Kulasekera.
Fall of wickets: 1-83 (Warnapura), 2-139 (Paranavitana), 3-155 (Jayawardene).
Bowling: Gul 6-0-27-0 (nb1), Aamer 9-0-20-0, Younus 3-0-16-0, Ajmal 16-1-36-0, Malik 9-1-23-1 (nb1), Kaneria 16-1-56-2.