சர்வதேச சட்டவிதிகளை மீறி இலங்கையின் கடற்பரப்புக்குள் பிரவேசித்தமைக்காக கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்கள் இலங்கை அரசினால் நேற்று அந்நாட்டின் கரையோரப் பாதுகாப்புப் படையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையின் கடல் எல்லைக்குள் சட்ட விரோதமாக நுழைந்த இந்த 21 இந்திய மீனவர்களும் கடந்த 04ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இலங்கை அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்ட இந்த மீனவர்கள் நேற்று மாலை இந்தியாவின் மண்டபம் பகுதியிலுள்ள கரையோரப் பாதுகாப்பு நிலையத்துக்குக் கொண்டுவரப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். இலங்கை அரசாங்கம் இவர்களைக் கடந்த வாரமே விடுவிக்கத் திட்டமிடப்பட்டிருந்தபோதும் கடும் கடல் கொந்தளிப்பின் காரணமாக இந்நடவடிக்கை தாமதமானதாகவும் அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.