மும் பையில் நேற்று முதல் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. இந்த நிலையில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்று பிற்பகலில் ராட்சத அலைகள் தாக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் மும்பை கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அகற்றப்பட்டு வருகின்றனர். மும்பையில், நேற்று முதல் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. பல பகுதிகளில் நகருக்குள் கடல் நீர் புகுந்ததால் மக்கள் பீதியடைந்தனர்.
மும்பையி்ல 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை கடல் சீற்றம் கடுமையாக இருக்கும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அதற்கேற்ப நேற்று கடும் சீற்றத்துடன் காணப்பட்டது கடல். கடல் நீர் பல பகுதிகளில் ஊருக்குள் புகுந்ததால் மக்கள் பீதியடைந்தனர். கொலாபா, தாதர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது. பல இடங்களில் கடல் அலைகள் பெரிய அளவில் எழுந்தபடி இருந்தன.பல இடங்களில் கடல் நீர் புகுந்ததால் சாலையில் வெள்ளம் என கடல் நீர் ஓடியது. கொலாபா, கீதா நகர் பகுதியில் புகுந்த கடல் நீரால் பல வீடுகளுக்குள் தணணீர் புகுந்தது. சில குடிசைகள் அடித்துச் செல்லப்பட்டன.
இந்த நிலையில், இன்று பிற்பகல் 2 மணியளவில் 5 மீட்டர் உயரத்திற்கு ராட்சத அலைகள் எழும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் இந்த அளவுக்கு பெரிய அலைகள் வந்ததில்லை என்பதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தீயணைப்புப் படையினர், கடலோரக் காவல் படையினர், கடற்படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். நீச்சல் வீரர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். செய்தித் தாள்கள், டிவி, ரேடியோக்கள் மூலம் மக்களுக்கு எச்சரிக்கைச் செய்திகள் விடப்பட்டுள்ளன. கடலோரம் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. நகர் முழுவதும் ஒருவித அச்ச நிலை காணப்படுகிறது.