கிழக்கு மாகாணத்தில் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் அலுவலகங்கள் நேற்று திங்கள் கிழமையுடன் மூடப்பட்டுள்ளது.அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் பேரிலேயே கிழக்கு மாகாணத்திலுள்ள அலுவலகங்களையும் உப அலுவலகங்களையும் மூடி விட தீர்மானிக்கப்பட்டதாக அந்த அமைப்பு கூறுகின்றது.
இதன் பிரகாரம் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை அலுவலகங்களும் ,மூதூர் மற்றும் அக்கரைப்பற்று உப அலுவலகங்களும் நேற்றுடன் மூடப்பட்டு பரிதான நுழைவாயிலில் பூட்டுக்களும் போடப்பட்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மட்டுமே அங்கு கடமையில் காணப்படுகின்றனர்.
இலங்கையில் தனது நடவடிக்கைகள் குறைக்கப்படுமென சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம். அறிவித்திருந்தமைக்கு இணங்க கடந்த வெள்ளிக்கிழமை முதல் கிழக்கில் அதன் பணிகளை முடிவுக்குக் கொண்டு வந்ததயைடுத்தே நேற்றுடன் அலுவலகங்களையும் மூடியுள்ளது.
கிழக்கில் தமது பணிகள் முடிவிற்கு கொண்டு வரப்பட்டு அலுவலகங்களும் நேற்றுடன் மூடப்பட்டுள்ளதை சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் பேச்சாளரான சரசி விஜேரட்ண உறுதிப்படுத்தியுள்ள அதேவேளை இடம்பெயர்ந்த மக்களுக்கு சேவை செய்யும் உறுதிப்பாட்டை தமது அமைப்பு மீள் வலியுறுத்துவதாகவும் கூறியுள்ளார்.