இராணுவத்திலிருந்து தப்பிச்சென்ற அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பாக அரசு ஆராய்ந்து வருவதாக ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொறகொட, வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்று அங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ள படையில் இருந்து வெளியேறிய பலரையும் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியதையடுத்தே இது தொடர்பாக அரசு உயர்மட்டத்தில் ஆராயப்பட்டு வருகின்றது.
நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சராக இரு வாரங்களுக்கு முன்னர் பொறுப்பேற்றுக்கொண்ட மிலிந்த மொறகொட சில நாட்களுக்கு முன்னர் முதல் தடவையாக வெலிக்கடைச் சிறைச்சாலைக்குச் சென்றிருந்தார். அப்போது அங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ள படையில் இருந்து தப்பிச்சென்றவர்கள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு பதிலளித்த அமைச்சர் மொறகொட, இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் தான் ஆராய்வதாகத் தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பான யோசனை ஒன்றை மிலிந்த மொறகொட அரசிடம் முன்வைத்திருப்பதாகவும் அது தொடர்பாக அரச தலைவர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறும் உயர்மட்டப் பாது?காப்பு அதிகாரிகளின் தலைமையிலான கூட்டம் ஒன்றில் ஆராயப்படும் எனவும் தெரியவருவதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
போர் நடைபெற்ற காலப்பகுதியில் சுமார் 65 ஆயிரம் பேர் படையணிகளில் இருந்து தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதில் 2 பேர் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் இராணுவ நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். சரணடைபவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படும் என அரச பல சந்தர்ப்பங்களில் அறிவித்திருந்த போதிலும், அரசு எதிர்பார்த்தளவுக்கு அதிகமானவர்கள் சரணடையவில்லை.
படையினரில் இருந்து தப்பிச் சென்றவர்களில் பெருபாலானவர்கள் தலைமறைவாகவே இருப்பதுடன், பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி குற்றச்செயல்களில் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் இவர்களுக்குப் பொதுமன்னிப்பை வழங்குவதன் மூலமாக மட்டுமே இவர்கள் தவறான பாதையில் செல்வதைத் தடுத்து நிறுத்தி சமூகத்தில் அவர்களை மீண்டும் இணைத்துக்கொள்ள முடியும் என மிலிந்த மொறகொட ஆலோசனை தெரிவிக்கின்றார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.