July

July

ரூ. 2200 மில். செலவு ஊவா வெல்லஸ்ஸ பல்கலை ஆக. 5 ஜனாதிபதியால் திறப்பு

university-of-sri.jpgஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் எதிர்வரும் ஓகஸ்ட் 5 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்படவுள்ளது. இதற்கு 2200 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

மகாவலி நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, ஊவா மாகாணத்தின் கல்வி மற்றும் உயர் கல்வி மேம்பாட்டுக்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதன்படி, ஊவா பிரதேச மக்களின் நலனுக்கென அமைக்கப்பட்டுள்ள ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தை ஜனாதிபதி திறந்து வைக்கிறார். இங்கிருந்து பட்டம் பெற்று வெளியேறும் முதலாவது மாணவர் குழுவுக்கு இப்பொழுதே தொழில் கிடைத்துள்ளது என்றும் அவர் கூறினார்.

இலங்கைக்கு ஜி15 இன் தலைமைத்துவம்

இந்தியா உட்பட 15 வளரும் நாடுகளை உள்ளடக்கிய ஜி15 கூட்டமைப்பின் தலைவர் பதவியை ஏற்க இலங்கை இணங்கியுள்ளது. முதலீடு, வர்த்தகம், தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக உருவாக்கப்பட்ட கூட்டமைப்பாகும் இது. இந்த அமைப்பின் தலைவர் பதவி தற்போது இலங்கை வசம் வந்துள்ளது.

கடந்த 1989 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இந்த ஜி15 அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் நிறுவன உறுப்பினர்களில் ஒன்றாக இலங்கை உள்ளது.

இந்த அமைப்பில் இந்தியா, அல்ஜீரியா, ஆர்ஜென்ரீனா, பிரேசில், சிலி, எகிப்து, இந்தோனேசியா, ஈரான், ஜமேக்கா, கென்யா, மலேசியா, மெக்சிக்கோ, நைஜீரியா, பெரு, செனகல், வெனிசூலா, சிம்பாப்வே ஆகியவை உறுப்பினர்களாக உள்ளன.

சொஹைப் அக்தார் மீண்டும் சிக்கலில்…

cricket.jpgகிரிக்கெட் உலகில் அடிக்கடி பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ளும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சர்ச்சைக்குரிய வேகப்பந்து வீச்சாளர் சொஹைப் அக்தர் மீண்டும் ஒரு சிக்கலில் சிக்கி உள்ளார்.

சொஹைப் அக்தார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கருத்துத் தெரிவித்தது  பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் அனுமதி பெறாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கக் கூடாது என்ற விதிமுறையை அவர் மீறியதாகவும் அதற்கு விளக்கம் அளிக்கும்படியும் அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன் பதில் அளிக்குமாறு அக்தாரிடம் கோரப்பட்டுள்ளது. இந்நிலையில் அக்தரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாகவும்,  அதிசயம் நிகழ்ந்தால்தான் அவரால் தேசிய அணிக்கு திரும்ப முடியும் என்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் வஸீம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

லங்காபுத்ர அபி. வங்கியின் கிளை மட்டக்களப்பில் திறப்பு

லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியின் மட்டக்களப்புக் கிளை நேற்று மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ இவ்வங்கியினை திறந்து வைத்தார்.

இவ்வங்கியின் தலைவர் தலைமையில் நடைபெற்ற இவ்வங்கித் திறப்பு விழாவில் தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், அமைச்சர் எம். எஸ். எஸ். அமீர்அலி, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாண ஆளுநர் அட்மிரல் மொஹான் விஜயவிக்ரம, மட்டக்களப்பு மாநகர மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இவ்வங்கியின் கொடுக்கல், வாங்கல் நடவடிக்கை யினை பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ ஆரம்பித்து வைத்தார். ஜனாதிபதியின் மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் கீழ் கிழக்கு உதயத்தின் மூலம் மட்டக்களப்பு மாவ ட்டத்தில் திறக்கப்பட்ட முதலாவது லங்கா புத்ர அபிவிருத்தி வங்கியின் கிளை இதுவென்பது குறிப்பிட த்தக்கது

மைக்கல் ஜாக்சனின் மரணத்தில் புதிய தகவல் – அவரின் டாக்டர் மீதான சந்தேகம் அதிகரிப்பு

maical-jak.jpgமைக்கல் ஜாக்சனின் திடீர் மரணத்திற்கு அவரின் தனிப்பட்ட டாக்டர் கன்ராட் முரே கொடுத்த மயக்க மருந்தே காரணம் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. பாப் இசைப் பாடகர் மைக்கல் ஜாக்சன், லாஸ் ஏஞ்சல்சின் ஹோல்ம்பி ஹில்ஸ் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் தங்கியிருந்த போது, கடந்த மாதம் 25ம் தேதி திடீரென மரணம் அடைந்தார். அப்போது அவருடன் இருந்தவர் அவரின் தனிப்பட்ட டாக்டர் கன்ராட் முர் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த இதய சிகிச்சை நிபுணர்.

ஜாக்சன் மரணம் அடைவதற்கு 24 மணி நேரத்திற்கு முன், “புரபோபல்’ அல்லது “டிப்ரீவன்’ என அழைக்கப்படும் மயக்கம் தரும் மருந்தை அவருக்கு கொடுத்துள்ளார். அதுவே ஜாக்சனின் மரணத்திற்கு காரணமாகியுள்ளது என்றும் புலனாய்வுத் துறையினர் கூறியுள்ளனர். ஜாக்சனின் மரணம் தொடர்பாக பல வதந்திகள் கிளப்பி விடப்படுகின்றன. அவற்றுக்கு எல்லாம் பதிலளிக்க முடியாது.  ஜாக்சனின் உயிரை பறிக்கக் கூடிய மருந்துகள் எதையும் என் கட்சிக்காரர் பரிந்துரை செய்யவில்லை என இதற்கு பதிலளிக்கும் டாக்டர் முரேயின் வக்கீல் எட் செர்னோப் கூறியிருக்கின்றார்.

ஜாக்சன் மரணமடைந்த போது,  டாக்டர் முரேதான் அங்கு இருந்துள்ளார். அதனால், அவரின் மீது குற்றம் சாட்டப்படுகிறது. தனக்கு எதிராக பரப்பப்படும் செய்திகளால் டாக்டர் முரே வேதனை அடைந்துள்ளார். 24 மணி நேரமும் பாதுகாவலருடன் இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அவரால் தன் டாக்டர் பணியை தொடர முடியவில்லை. எங்கு சென்றாலும்,  அவருக்கு பல வகையிலும் தொந்தரவுகள் உருவாவதால்,  அவரால் நிம்மதியாக டாக்டர் பணியாற்ற முடியவில்லை என்று எட் செர்னோப் மேலும் கூறியுள்ளார்.

ஜாக்சனின் மரணம் தொடர்பாக டாக்டர் முரேயிடம்,  போலீசார் இதுவரை இரண்டு முறை விசாரணை நடத்தியுள்ளனர். மூன்றாவது விசாரணை கடந்த 24ம் தேதி நடப்பதாக இருந்தது. ஆனால்,  திடீரென ஒத்திவைக்கப்பட்டது. அதற்குப் பதிலாக ஹஸ்டனில் உள்ள அவரின் மருத்துவமனை அலுவலகம் மற்றும் மருந்துகளை தேக்கி வைக்கும் பிரிவை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.

காலி, வெலிவத்தயில் இளைஞன் சுட்டுக்கொலை

காலி, வெலிவத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளை ஞரொருவர் கொல்லப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். இந்த சம்பவம் நேற்று (29) அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றது.

வீட்டுக்குள் அதிகாலை புகுந்த ஆயுதக் குழுவொன்று குறித்த நபரை சுட்டும் கூரிய ஆயுதங்களினால் தாக்கியும் கொலை செய்துள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. இறந்தவரின் சடலம் காலி கராபிட்டிய ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்ட டுள்ளது.

கொலைக்கான காரணம் இதுவரை கண்டுபிடி க்கப்படவில்லை எனவும் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இறந்தவரின் பிரேத பரிசோதனை நேற்று பிற்பகல் நடைபெற ஏற்பாடாகியிருந்தது.

ஈழத் தமிழர்கள் தனியான தாயகத்தைப் பெற்றுக்கொள்ள இந்தியா உதவும் -செல்வராஜா பத்மநாதன்

selvarasa_pathmanathan.jpgஈழத் தமிழர்கள், அவர்களின் வேட்கையான தனியான தாயகத்தைப் பெற்றுக்கொள்வதற்கு இந்தியா உதவும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் இந்திய நாளேடு ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் நம்பிக்கை வெளியிட்டிருக்கின்றார்.

இந்தியாவில் இருந்து வெளிவரும் ‘டெக்கான் குரோனிக்கல்’ நாளேட்டுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில், “பிரபாகரன் மரணமடைந்துவிட்டார் என்ற உண்மையை ஏற்றுக்கொள்வதற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ, ஈழத் தமிழர் பாதுகாப்பு அமைப்பின் நிறுவனர் பழ.நெடுமாறன் ஆகியோர் தயாராகவில்லை” எனவும் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்தார்.

பிரபாகரன் தொடர்ந்தும் உயிருடன் இருப்பதாக வைகோ, பழ.நெடுமாறன் ஆகியோர் தொடர்ந்தும் தெரிவித்துவருவது தொடர்பாக அவரிடம் கேட்டபோது, “அவர்கள் உண்மையை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற இறுதிக்கட்டச் சமரின் போது எமது தலைவரும் மற்றும் போராளிகளும் வீரச்சாவு அடைந்தார்கள்” எனவும் செல்வராஜா பத்மநாதன் குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் உடலைப் பெற்றுக்கொள்வதற்குத் தான் முயற்சிகளை மேற்கொண்டதாகவும் தெரிவித்த செல்வராஜா பத்மநாதன், இருந்தபோதிலும் அவரின் உறவினர்கள் எவரும் அதனைப் பெற்றுக்கொள்வதற்கு முன்வரவில்லை எனவும் தெரிவித்தார்.

இந்தியா உட்பட உலகில் உள்ள பல நாடுகளும் ஈழத் தமிழர்களின் துன்பங்களையிட்டு தமது கரிசனையை வெளிப்படுத்திவருவதாகவும் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்தார். “தற்போது நாம் செயற்குழு ஒன்றை அமைத்துள்ளோம். அந்தக் குழு நாடு கடந்த தமிழீழ அரசு ஒன்றை அமைப்பது தொடர்பாக ஆராய்ந்து வருகின்றது. கடந்த அரை நூற்றாண்டு காலமாக எமது மக்களின் கனவாக இருந்துவரும் தமிழீழத்தை அடைவதற்கான செயற்திட்டம் ஒன்றை இந்தக் குழு தயாரித்து வருகின்றது” எனவும் அவர் தமது தற்போதைய செயற்பாடுகள் தொடர்பாக விபரிக்கையில் தெரிவித்தார்.

“ஒதுக்கப்பட்ட மக்கள் சார்பாக நின்று அவர்களுக்கு விடுதலையைப் பெற்றுக்கொடுப்பதில் இந்தியா கடந்த காலத்தில் முக்கிய பங்காற்றியிருக்கின்றது. உலகம் முழுவதில் உள்ள ஈழத் தமிழர்களும் தமது விடுதலையைப் பெற்றுக்கொடுப்பதற்கு இந்தியா உதவும் என நம்புகின்றார்கள்” எனத் தெரிவித்த செல்வராஜா பத்மநாதன், “இந்தியா எம்மைப் புரிந்துகொள்ள வேண்டும்” எனவும் கேட்டுக்கொண்டார்.

இலங்கை பஹ்ரைன் இருதரப்பு உடன்படிக்கைகள் கைச்சாத்து!

agreement.pngஇலங் கைக்கும் பஹ்ரைனுக்குமிடையே வெளியுறவுகள், பொருளாதாரம், வர்த்தகம், தொழிநுட்பக் கூட்டுறவு மற்றும் சுற்றுலாத்துறை உட்பட பல்வேறு இருதரப்பு உடன்படிக்கைகள் இன்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கைச்சாத்திடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்குமிடையே வெளியுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று இலங்கை மற்றும் பஹ்ரைன் வெளியுறவு அமைச்சுக்களுக்கிடையே கைச்சாத்திடப்பட்டது.

 இரு நாடுகளுக்கிடையேயும் பொருளாதாரம் வர்த்தகம் தொழிநுட்பக் கூட்டுறவு என்பவற்றை ஊக்குவிக்கும் வகையில் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவுக்கும் பஹ்ரைன் பிரதிப் பிரதமர் செய்க் முஹம்மத் பின் முபாரக் அல் கலீபா அவர்களுக்குமிடையே மற்றுமொரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது

இந்திய உதவியுடன் கிழக்கு மாகாணத்தில் முதலாவது ‘ரயில்பஸ்’ சேவை இன்று ஆரம்பம்.

rail_bus000.jpgஇந்திய உதவியுடன் கிழக்கு மாகாண சபைக்கு நேரடியாக கிடைத்த பஸ் வண்டிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட முதலாவது “ரயில்பஸ் “வண்டி இன்று மாலை உத்தியோக பூர்வமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் ரயில் போக்குவரத்து சேவையை விஸ்தரிக்கும் வகையில் இந்திய அரசினால் வழங்கப்பட்ட 10 பஸ் வண்டிகள் மூலம் 5 ரயில்பஸ் வண்டிகளை தயாரிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இரண்டு பஸ் வண்டிகளைப் பொருத்தி தயாரிக்கப்பட்ட முதலாவது ரயில்பஸ் இன்று மாலை சேவையில் ஈடுபடுத்தப்பட்டது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் ,இலங்கைக்கான இந்தியத் தூதுவர் ஆலோக் பிரசாத் ,மத்திய போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப் பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ ,தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் ,அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எம்.எஸ்.அமீர் அலி ,மாகாண சுகாதார அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் உட்பட பலர் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் நடைபெற்ற இவ் வைபவத்தில் கலந்துகொண்ட அரசாங்க அதிகாரிகள் ,ஊடகவியலாளர்கள் ,மத பிரமுகர்கள் உட்பட சகலரும் தீவிர சோதனையின் பின்னரே கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

இந்த ரயில்பஸ் வண்டி இன்று மாலை மட்டக்களப்பு புகையிரத நிலையத்திலிருந்து வாழைச்சேனை வரை வெள்ளோட்டம் விடப்பட்ட போது இன்றைய நிகழ்வில் கலந்து கொண்ட பிரமுகர்கள் அதில் பயணம் செய்தனர்.

நாளை முதல் பயணிகள் சேவையில் ஈடுபடவிருக்கும் இவ் ரயில்பஸ் வண்டி தற்போதைக்கு மட்டக்களப்பிற்கும் – வெலிக்கநதைக்குமிடையிலேயே தினமும் ஒரு சேவையில் ஈடுபடும் என நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது 

முகாம்களில் தங்கியுள்ளவர்கள் தமது தேவைகளைப் பூர்த்தி செய்ய தரகர்களை நாட வேண்டாம் : வவுனியா பிரதேச செயலாளர்

இடைத் தங்கல் முகாம்களில் தங்கியுள்ளவர்களை வெளியில் எடுப்பது, அவர்களுக்கான அடையாள அட்டைகளைப் பெறுவது, கிராம சேவகர்களிடம் அவர்களைப் பதிவு செய்வது, அவர்களுக்கான கடவுச் சீட்டைப் பெறுவது போன்ற செயற்பாடுகளில் இடம்பெயர்ந்தவர்களோ அல்லது அவர்களின் உறவினர்களோ தரகர்களின் உதவியை நாட வேண்டாம் என வவுனியா பிரசே செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். இந்தத் தேவைகளுக்காகப் பொதுமக்கள் தரகர்களின் உதவியை நாடியுள்ளமை தொடர்பாக பிரதேச செயலகத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்துள்ள மக்களின் தேவைகளுக்காகத் தரகர்கள் கிராம சேவை அதிகாரிகளின் இலச்சினை, கையெழுத்து என்பவற்றைப் போலியாகப் பயன்படுத்தியுள்ளதுடன், பிரதேச செயலாளரின் கையெழுத்து மற்றும் அவருடைய அலுவலக இலச்சினையையும் தரகர்கள் போலியாகப் பயன்படுத்தியுள்ளமை தொடர்பாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. இது சம்பந்தப்பட்ட கடிதங்களும் பிரதேச செயலகத்திற்குக் கிடைத்திருப்பதாக வவுனியா பிரதேச செலயாளர் தெரிவித்துள்ளார்.

சட்டத்திற்கு விரோதமான முறைகளில் தமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கு முயற்சிக்கின்ற பொதுமக்களே, அத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டும் என்பதைக் கவனத்திற் கொள்ள வேண்டும்.

எனவே தரகர்களின் செயற்பாடுகள் குறித்து விழிப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ள வவுனியா பிரதேச செயலாளர், பொதுமக்கள் தமது தேவைகளுக்காக தத்தமது பிரிவு கிராம சேவகர்களுடன் தொடர்பு கொள்வதுடன், அவசியமானால் கிழமை நாட்களில் கடமை நேரத்தில் பிரதேச செயலாளர் அல்லது உதவி பிரதேச செயலாளரை நாடி தமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவல்கள் அடங்கிய பொதுமக்களுக்கான அறிவித்தல் கிராம சேவகர் அலுவலகங்கள், பிரதேச செயலாளர் அலுவலகம் உட்பட பொதுமக்கள் தொடர்பு கொள்கின்ற அரச பொது அலுவலகங்களின் அறிவித்தல் பலகைகளில் ஒட்டப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.