“13 ஆவது அரசியல் திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி மேலதிக அதிகாரங்களை வழங்குமாறு நாம் கேட்டுள்ளோம். அதனை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசு ஏற்றுக்கொண்டு சர்வதேச சமூகத்திற்கும் எமது மக்களுக்கும் இதனை அறிவித்துள்ளார். அதனை விரைவில் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எங்களுடைய அரசியல் அதிகாரங்களைப் பலப்படுத்துவதன் ஊடாக இந்த நகரசபைத் தேர்தலில் எமது கட்சியின் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வதன் மூலம் நாம் அரசுடன் பேரம் பேசக்கூடிய அளவிற்கு சக்தி கொண்டவர்களாக வரமுடியும்’ என்று சமூகசேவைகள் சமூக நலத்துறை அமைச்சரும் ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை வைரவபுளியங்குளம் சிறுவர் பூங்கா மைதானத்தில் நடைபெற்ற வவுனியா நகரசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிடும் ஈ.பி.டி.பி.யின் ஆறு வேட்பாளர்களையும் ஆதரித்து நடைபெற்ற பிரசாரக் கூட்டத்திற்கு செல்வராசா சந்திரகுமார் தலைமை தாங்கினார்.
அமைச்சர் தொடர்ந்தும் இங்கு பேசுகையில் குறிப்பிட்டதாவது; “ஜனாதிபதித் தேர்தல் விரைவில் வரவுள்ளது. தற்போதைய ஜனாதிபதி இந்தத் தேர்தலில் போட்டியிடப் போகின்றார். தமிழ் மக்களாகிய நாங்கள் பெருமளவு வாக்குகளை அவருக்கு வழங்குவதன் மூலம் அந்த உறுதி வெளிப்படுத்துவதன் ஊடாக எமது எதிர்கால அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வாய்ப்புகள் உள்ளது.
ஆயுதப் போராட்டத்திற்குரிய தேவை ஒரு கால கட்டத்தில் இருந்தது. அந்தப் போராட்டத்தின் ஊடாக இலங்கை இந்திய ஒப்பந்தம் என்றதொன்றை பெற்றிருந்தோம். அதனை நாம் சரிவரப்பயன்படுத்தவில்லை. அது ஒரு பொன்னான வாய்ப்பு. அதற்குப் பிறகும் பல வாய்ப்புகள் எமக்குக் கிடைத்திருந்தது. அதனையும் தமிழ்ச் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தியவர்களும் ஜனநாயக வழியூடாக வந்த தலைவர்களும் சரி அல்லது ஆயுதப் போராட்டத்தின் ஊடாக வந்த தலைவர்களும் சரி அதனை சரிவரப் பயன்படுத்தவில்லை. மீண்டும் ஒரு சந்தர்ப்பம் எமக்குக் கிடைத்துள்ளது. அதனை சரிவரப் பயன்படுத்த வேண்டும். எமது மக்கள் நாளாந்தம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பல உள்ளது. வீதிகள், குடிநீர்ப் பிரச்சினை, மின்சாரம், தடைகளற்ற போக்குவரத்து அவ்வாறு பல பிரச்சினைகள் உள்ளது. இதனை தீர்ப்பதற்காக திட்டங்களும் அதற்கான வலுவும் எங்களிடம் உள்ளது.
எங்களுக்கு தேவை மக்களுடைய ஆதரவு, பக்கபலம். இவை எங்களிடம் இருக்குமாக இருந்தால் நாங்கள் கடந்த 20 வருட தேவையற்ற யுத்தத்தில் அழிந்துபோன பிரதேசங்களை வரும் இரண்டு ஆண்டுகளில் கட்டியெழுப்பி அபிவிருத்தி செய்ய முடியும். எங்களோடு அணிதிரண்டு வந்தால் ஒரு விரைவான ஒளிமயமான எதிர்காலத்தை நாம் காண முடியும்’ என்றார்.