February

February

எஞ்சியிருக்கும் புலிகளும் சரணடைய வேண்டும் தவறினால் படையினர் பணிய வைப்பர் – ஜனாதிபதி

Mahinda Rajapaksaஆயுதங் களைக் கைவிட்டு எஞ்சியுள்ள புலிகள் இயக்க உறுப்பினர்களும் பாதுகாப்பு படையினரிடம் சரணடைய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன். தவறும் பட்சத்தில் இராணுவத்தினரால் பணிய வைக்கப்படுவதை எவராலும் தடுக்க முடியாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று ஹங்குரன்கெத்தவில் தெரிவித்தார். பாதுகாப்பு படையினரிடம் சரணடையும் புலிகள் இயக்க உறுப்பினர்களைக் கிழக்கு மாகாணத்தில் சரணடைந்தவர்களைப் போன்று சகல வசதிகளும் வழங்கிக் கவனிக்கவும் தயாராகவுள்ளோம். என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஹங்குரன்கெத்த ரிக்கில்லகஸ்கட பொரமடுல்ல மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்றது. இவ்வைபவத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இக்கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், வட பகுதியில் நடைபெறுவது தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தமல்ல, மாறாக பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து தமிழ் மக்களை விடுவிப்பதற்கான மனிதாபிமான நடவடிக்கை.

வெண்ணிறச் சீருடை அணிந்து பாடசாலை செல்ல வேண்டிய அப்பாவி குழந்தைகள் ரி – 56 ரக துப்பாக்கிகளை ஏந்தியபடி, சயனைட் குப்பிகளை கழுத்தில் அணிந்துகொண்டு குற்றச்செயலில் ஈடுபட வேண்டிய கட்டாய நிலைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்தக் குற்றச் செயல்களிலிருந்து இக்குழந்தைகளைப் பாதுகாப்பது மூன்று குழந்தைகளின் தந்தையான எனது பொறுப்பாகும். பயங்கரவாதம் இந்த நாட்டிலிருந்து முழுமையாக ஒழித்துக் கட்டப்படும். புலிகள் இயக்கத்தினரின் பிடியில் சிக்கியுள்ள அப்பாவி மக்களை விடுவிக்கவே 48 மணித்தியால கால அவகாசம் வழங்கினோம்.

எமது பாதுகாப்பு படையினர் கிளிநொச்சியை விடுவித்த சமயம் ஆயுதங்களைக் கைவிட்டு பாதுகாப்பு படையினரிடம் சரணடையுமாறு புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு ஏற்கனவே அழைப்பு விடுத்தோம். அந்த அழைப்பை ஏற்று புலிகள் இயக்கத்தினரின் பல உறுப்பினர்கள் சரணடைந்தார்கள். அவர்களை எமது பாதுகாப்பு படையினர் தெம்பிலி இளநீர் வழங்கி மனமார வரவேற்றனர். இவர்கள் வெள்ளைக் கொடிகளை ஏந்தியவர்களாக புலிகள் இயக்கத்தினரின் உடையுடன் வந்துதான் சரணடைந்தனர். அதனால்தான் புலிகள் இயக்கத்தில் எஞ்சியுள்ள உறுப்பினர்களையும் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு பாதுகாப்பு படையினரிடம் சரணடையுமாறு மீண்டும் வலியுறுத்துகின்றேன். எமது வேண்டுகோள்படி சரணடைபவர்களை, கிழக்கு மாகாணத்தில் சரணடைந்தவர்களைப் போன்று கவனிக்கவும் தயாராகவுள்ளோம். இவ்வாறு சரணடையத் தவறும் பட்சத்தில் புலிகளை எமது பாதுகாப்பு படையினர் பணியவைப்பார்கள். இதனை எவராலும் தவிர்க்க முடியாது என்றார்.

புதுக்குடியிருப்பில் நேற்று மோதல் – பலத்த இழப்புகளென இருதரப்பும் தெரிவிப்பு

truck.jpgமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் தொடர்ந்தும் கடும் சமர் நடைபெற்று வருவதாக பாதுகாப்புத்தரப்பு தெரிவித்துள்ளது.  புதுக்குடியிருப்புக்குத் தென்புறப்பகுதியில் படைநடவடிக்கையில் ஈடுபடும் 59 ஆவது படையணியினர் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை விடுதலைப் புலிகளின் வலுநிலைகளைத் தகர்த்தழித்தவாறு முன்னேறியுள்ளதாக படைத்தரப்பு தெரிவிக்கின்றது. இதேநேரம், புதுக்குடியிருப்புப் பகுதியில் பாரிய படைநடவடிக்கைக்குத் தயாரான படையினர் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பாரிய ஊடறுப்புத் தாக்குதலை நடத்தி படையினருக்குப் பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவில் நந்திக்கடல் வாவிக்கு மேற்கே படைநடவடிக்கையில் ஈடுபடும் 59 ஆவது படையணியே சனிக்கிழமை புதுக்குடியிருப்புக்கு தெற்கே புலிகளின் வலுநிலைகளை உடைத்து முன்னேறியதாக படைத்தரப்பு தெரிவித்தது. அன்று காலை 6 மணி முதல் முழு நாளும் நடைபெற்ற உக்கிர சமரில் 9 ஆவது சிங்கப்படையணி, 4 ஆவது விஜயபா படையணி மற்றும் 7 ஆவது கெமுனு படையணிகள் தங்கள் முன்னரங்க பாதுகாப்பு நிலைகளை 1.5 கிலோமீற்றர் தூரத்திற்கு முன்நகர்த்தியுள்ளன. இந்த மோதல்களில் விடுதலைப்புலிகளுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை புதுக்குடியிருப்பு மீது தாக்குதல் நடத்தத் தயாராயிருந்த படையினர் மீது நேற்று அதிகாலை தாங்கள் நடத்திய முன்கூட்டிய பாரிய ஊடறுப்புத் தாக்குதலில் படையினருக்குப் பாரிய அழிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் 3 யுத்த டாக்கிகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாகவும் விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளதாக “தமிழ்நெற்’, “புதினம்’ இணையத்தளங்கள் தெரிவித்துள்ளன.

கரும்புலிகளின் இருமுகாம், பெருந்தொகை ஆயுதங்கள் – விசுவமடுவில் மீட்பு

_army.jpgவிசுவமடு கரும்புலிகளின் பாரிய இரு முகாம்கள், புலிகளின் 12 சடலங்கள் மற்றும் பெருந்தொகையான ஆயுதங்களை இராணுவத்தினர் நேற்று முன்தினம் மீட்டிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். மோதல்களைத் தொடர்ந்து படையினர் மேற்கொண்டு வரும் தேடுதல்களில் இதுவரை காலமும் இவ்வளவு பெருந்தொகை ஆயுதங்கள் மீட்கப்படவில்லையெனவும், இதுவே முதல் தடவையென்றும் பிரிகேடியர் சுட்டிக்காட்டினார்.

விசுவமடு பிரதேசத்தில் நேற்று முன்தினம் மாலை படையினருக்கும் புலிகளுக்குமிடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. மோதல்களைத் தொடர்ந்து படையினர் அப்பகுதியில் மேற்கொண்ட தேடுதல்களின் போது புலிகளின் 12 சடலங்களையும் பெருந்தொகை ஆயுதங்களுடன் கரும்புலிகளது இரண்டு பாரிய முகாம்களையும் கைப்பற்றியுள்ளனர். கரும்புலிகளது முகாம்களுள் ஒன்று நிலத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்ததாகவும், அது இரண்டு மாடிகளைக் கொண்டதுடன், முற்றிலும் குளிரூட்டப்பட்ட நிலையில் மாளிகை போன்று அமைக்கப் பட்டிருந்ததாகவும் மத்திய நிலையம் குறிப்பிட்டது.

நிலத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த இந்த முகாமில் கணனிகள் உட்பட பல நவீன தொழில்நுட்ப உபகரணங்களும் நவீன முறையில் அமைக்கப்பட்ட குளியலறை, சமையலறை என்பனவும் இருந்துள்ளன. அத்துடன் உடற்பயிற்சி செய்யும் உபகரணங்களுடன் உடற்பயிற்சி நிலையமும் இருந்துள்ளது. சத்தம் வெளியில் கேட்காதவாறான ஜெனரேட்டர் ஒன்றிலிருந்தே இந்த முகாமுக்கு மின்சாரம் பெறப்பட்டுள்ளது. இவற்றை வைத்து பார்க்கும் போது புலிகளின் முக்கியஸ்தர் ஒருவர் இங்கு தங்கியிருந்திருப்பாரென சந்தேகிக்கத் தோன்றுவதாகவும் ஊடக நிலையத்தின் அதிகாரியொருவர் கூறினார்.

இவையனைத்தையும் இராணுவத்தின் 58வது படையணியினரே கைப்பற்றியுள்ளனர். இதேவேளை கரும்புலிகளின் மற்றைய பாரிய முகாமிலிருந்து பெருமளவிலான வெடிபொருட்களும் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

121 மில்லிமீற்றர் கொண்ட மூன்று நவீன எறிகணைகள், 18 ரி – 56 ரக துப்பாக்கிகள், 05 எம். பி. எம். ஜி, ஒரு ஸ்நிப்பர், 08 செயலிழக்கக்கூடிய ஆர். பி. ஜி.கள், 02 டேர்மோ பெரிக் ஆயுதங்கள், 20 பிஸ்டல் துப்பாக்கிகள், மூன்று ஆர். பி. ஜி. ஆயுதங்கள், 59 கிரனேற் கைக்குண்டுகள், 07 கிளேமோர்கள், ஒரு நவீன மாற்றங் களுடனான கிளேமோர், ஒரு ட்ரைபொட், புலிகளினால் உபயோகிக்கப்படும் ‘அருள்’ எனப்படும் 35 குண்டுகள், 100 டெட்ட னேட்டர்கள், ஒரு ரேடியோ செட், 8.9 வகையான மூவாயிரம் ரவைகள், 35 கேஸ் குண்டுகள், 08 ஹெல்மட், 02 80 மில்லி மீற்றர் மோட்டார் குண்டுகள், 02 81 மில்லி மீற்றர் மோட்டார் குண்டுகள், 02, 82 மில்லிமீற்றர் மோட்டார் குண்டுகள் 35 இடைப்பையுடன் கூடிய பட்டிகள், பெருந்தொகையான கரும்புலிகளின் ஆடைகள் என்பனவற்றையும் பொலிஸார் மீட்டிருப்பதாகவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

பி.எம்.ஐ.சி.எச் பிரதேசம் நள்ளிரவு முதல் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனம

ranjith-gunasekara.jpgஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் நாட்டில் மூன்றாவது தடவையாக நடத்தப்படும் தேசத்திற்கு மகுடம் அபிவிருத்திக் கண்காட்சியை முன்னிட்டு கொழும்பிலும் அதன் சுற்றுப்புறத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் சுதந்திர தினத்துடன் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பிக்கவுள்ள ஐந்து நாள் அபிவிருத்திக் கண்காட்சிக்காக மண்டபம் உள்ளிட்ட அப்பகுதி முழுவதும் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் அதிஉயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனம் செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் கிரேஷ்ட பொலிஸ் அத்திய ட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டலின் கீழ் பொலிஸ் திணைக்களமும் முப்படையினரும் இணைந்து அதிதீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். கொழும்பில் சேவையாற்றி வரும் பொலிஸாருக்கும் மேலதிகமாக வெளியிடங்களிலிருக்கும் 1500 பொலிஸார் கண்காட்சி முடிவடையும் வரையான காலப்பகுதியில் கொழும்பில் சேவைக்கு அமர்த்தப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார். தேசத்திற்கு மகுடம் கண்காட்சியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பார்வையாளர்களை கருத்திற் கொண்டு பொலிஸாரும் முப்படையினரும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே நான்கு கட்டங்களாக பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக கண்காட்சிக்குப் பொறுப்பான பிரதிபொலிஸ் மா அதிபர் இளங்ககோன் தெரிவித்தார். அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் வாகனப் போக்குவரத்துகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கென விநியோகிக்கப்பட்ட விசேட அனுமதி அட்டைகளை கொண்டவர்கள் மட்டுமே இப்பகுதியினூடாக பிரவேசிக்க முடியும்.

அரச திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களில் பணி புரிவோருக்கு பொலிஸ் போக்குவரத்து பிரிவினூடாகவும் ஏனையோருக்கு கறுவாத் தோட்டப் பொலிஸாரினாலும் இவ்விசேட அனுமதி அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன. பாதுகாப்பை கருத்திற்கொண்டு, கனத்தை சந்தியிலிருந்து புள்ளர்ஸ் வீதி, க்ரேகரி வீதியிலிருந்து க்ரேகரி எவன்யூ, க்ரேகரி வீதியிலிருந்து விஜேராம மாவத்தை, மவுட்லண்ட் வீதியிலிருந்து வித்யாமாவத்தை, பொது நிர்வாக அமைச்சு சந்தியிலிருந்து புள்ளர்ஸ் வீதி, புள்ளர்ஸ் லேனில் இருந்து புள்ளர்ஸ் வீதி, மலலசேக்கர மாவத்தையிலிருந்து சரண வீதி சந்தி, ஜாவத்தை வீதியிலிருந்து புள்ளர்ஸ் வீதி வரையான பகுதிகள் எதிர்வரும் 04ம் திகதி முதல் 08ம் திகதி வரையான காலப் பகுதிக்குள் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என்பதால் பொதுமக்கள் மாற்று வழிகளை உபயோகிக்குமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.

பிரவேசத்துக்கான விசேட அனுமதி அட்டைகள் வழங்கப்பட்ட வாகனங்கள் சி. ஆர். மற்றும் எப்.சி. இலங்கை மன்றக் கல்லூரி வளாகம், மெயிட்லண்ட் பிளேஸ் ஆகிய இடங்களில் தமது வாகனங்களைத் தரித்து வைக்க முடியும். வெளியிடங்களிலிருந்து பஸ் மூலம் கண்காட்சியை பார்வையிட வருபவர்கள் தமது பஸ்களை விகாரமாதேவி பூங்காவுக்கு வெளியில் தரித்து வைக்க முடியும். எனையோர் ரஷ்ஷியன் பார்க், சரண மாவத்தை ஆகிய இடங்களில் வாகனங்களை தரிப்பிட முடியுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு இனம் இன்னொரு இனத்தை அடிமைப்படுத்த இடமளியேன் – ஜனாதிபதி

mahi-raja.jpg“ஒரு இனம் இன்னொரு இனத்தை அடிமைப்படுத்துவதற்கு ஒரு போதும் இடமளிக்கமாட்டேன். இப்படியான செயலுக்கு இற்றைவரை காரணமாக இருந்தவர்கள் விரைவில் கடலுக்குள் தூக்கிவிடுவோம்” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

அதேநேரம்! “ஒரு இனம் இன்னொரு இனத்தை பணயக் கைதிகளாக வைத்திருக்கவும் நான் ஒரு போதும் இடமளிக்கமாட்டேன்’ என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கண்டி ஜனாதிபதி மாளிகையில் நேற்று முன் தினம் முஸ்லிம்கள் திரண்டிருந்த மாபெரும் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு ஜனாதிபதி தொடர்ந்தும் பேசுகையில் குறிப்பிட்டதாவது:-

தேர்தல்வரும் காலங்களில் எல்லாம் ஐ. தே. க. வினர் முஸ்லிம் மக்கள் தமது சமய கோட்பாடுகளை முன்னெடுக்கும் பொழுது வேறொரு அரசாங்கம் பதவிக்கு வந்தால் அவர்கள் அனுபவித்து வந்த உரிமைகள் அனைத்தையும் பிரித்து விடுவார்கள் என்ற கோசம் ரணில் விக்கிரமசிங்கவினால் எழுப்பப்பட்டதை நான் உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். முஸ்லிம்களுக்கும் எனக்குமுள்ள தொடர்பு இன்று நேற்று ஏற்பட்டதொன்றல்ல. அவர்களது சமய, கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நான் நன்கு அறிந்து மதிப்பவன் என்ற வகையில் இவ்வாறு தெரிவிக்கின்றேன்.

பலஸ்தீன மக்களின் விடுதலைக்காகவும் அவர்களின் உரிமைகளுக்காகவும், நீதிக்காகவும் உருவாக்கப்பட்ட இலங்கை பலஸ்தீன நட்புறவுச் சங்கத்தின் தலைவராக இருந்து வந்த அனுபவம் எனக்குண்டு. அவர்கள் படும்துயரத்தையும் அண்மையில் நான் கண்டு அதற்கான எனது அனுதாபத்தையும் தெரிவித்திருந்தேன். பலஸ்தீனத்தைப் போன்றே காத்தான்குடி பள்ளிவாசலில் இடம்பெற்ற சம்பவத்தை எமக்கு இலகுவில் மறக்க முடியாது. பல்லாண்டுகளாக யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் ஒரு சொப்பிங்பேக்குடன் ஒரே நாளில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இவ்வாறு வாழ்ந்தவர்கள் இன்னும் அகதிகளாக முகாம்களில் இருந்து வருகின்றனர். இவர்களை நாம் மீண்டும் அவர்கள் வாழ்ந்த சொந்த மண்ணுக்கு திருப்பி அனுப்பவேண்டிய பொறுப்பும் கடமையும் அரசாங்கத்திற்குரியதாகும். கிழக்கை நாங்கள் மீட்ட போது பல்லாண்டுகளாக அனைத்தின மக்களும் வாழ்ந்து வந்த அந்த வாழ்க்கையை மீண்டும் ஏற்படுத்திக்காட்டினோம். இதனால் அங்கு இருக்கும் அனைத்து மக்களும் தற்போது சுதந்திரமாக தமது மத வழிபாடுகளுக்குச் சென்று வர வழி செய்யப்பட்டுள்ளார்கள். ஐ. தே. க. தலைவர் இவற்றையெல்லாம் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.

நாற்பதாயிரம் முஸ்லிம்கள் புளிகளினால் மூதூரில் விரட்டியடிக்கப்பட்ட பொழுது நாம் அவர்களை நாற்பது நாட்களுக்குள் மீண்டும் அவர்களை சொந்த மண்ணில் வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தினோம். இதன் பொருட்டு எம்மோடு உழைத்த அப்பிரதேசத்து அனைத்து முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல பிரமுகர்கள் சேர்ந்து இந்த பணிகளை முன்னெடுத்தோம்.

புலிகளின் கெடுபிடிகளுக்கு மத்தியில் அவர்கள் வெட்டப்பட்டும் கொத்தப்பட்டும் சுடப்பட்டும் உயிருக்காக இரத்தத்தைச் சிந்திக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் அப்பாவி மக்களின் பிள்ளைகள் எவ்வாறுதான் கல்வியைத் தொடர முடியும். மாற்றமாக இப்பிரதேசத்தில் நல்லதொரு சூழ்நிலையை உருவாக்கியதன் பொருட்டு இன்று சர்வதேச மட்டத்தில் பாராட்டக் கூடிய வகையில் கல்வியில் கிண்ணியா மாணவி ஒருவர் கலைப்பிரிவு பொதுப் பரீட்சையில் முதல் இடத்தைப் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

எமது அரசாங்கம் அரபு நாடுகளுடன் மிக நெருங்கிய தொடர்புகளையும் வைத்துள்ளது. இதன் ஒரு கட்டமாக ஈரான் தேசத்தின் ஜனாதிபதி அஹமதி நிஜாத்துடன் நான் உரையாடிய வேளையில் எமக்கு நாட்டுக்குத் தேவையான பெற்றோலியத்தை வட்டியில்லாமல் 7 மாதங்களுக்கு அதனைப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்திருந்தார். அன்று அத்தகையதோர் உதவி எமக்குக் கிடைக்காது போயிருந்தால் நாம் மிகுந்த சிரமங்களுக்குள்ளாக்கப்பட்டிருப்போம். இதே போன்று உமா ஓயாவிற்கு மேலாக பாலமொன்றை நிர்மாணிக்க அந்தநாடு எமக்கு உதவி செய்ததையும், மேலும் கண்டி மாவட்டத்தின் அபிவிருத்திக்காக நாம் 60,000 மில்லியன் ரூபாவை நாங்கள் ஒதுக்கி இப்பொழுது அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஸ்ரீல. சு. கட்சியின் ஸ்தாபகர்களுள் ஒருவரான கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத்தை அக்கட்சி கல்வி அமைச்சராக்கியது. இதன் ஊடாக முஸ்லிம் மாணவர்களின் கல்வியில் பாரிய மறுமலர்ச்சியொன்று ஏற்பட்டமையை நாம் அனைவரும் அறிவோம். இத்தகைய ஒரு பதவி வெற்றிடத்தை பெறுவதற்கு இப்பிரதேச மக்கள் தயாராக வேண்டும். கண்டி நகரில் முஸ்லிம் ஆண்களுக்கென சகல வளமும் கொண்ட ஆண்கள் பாடசாலையொன்றின் தேவையை நான் உணர்கின்றேன். இச்சந்தர்ப்பத்தில் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தவும் இருக்கின்றார். இதற்கான அனைத்து பிரயத்தனங்களையும் அரசு மேற்கொள்ளும்.

இப்பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்கள் பாடசாலைக்குச் செல்லும் அதே வேளையில் வடக்கில் உள்ள மாணவர்கள் புத்தகப் பையில் துப்பாக்கிகளையும் கழுத்தில் சயனைட்டையும் மாட்டிக் கொண்டு புலிகளின் முகாம்களுக்குச் செல்கின்றனர். இன்னும் சில நாட்களில் நாங்கள் முல்லைத்தீவை மீட்டதும் அப்பிரதேச பாடசாலை மாணவர்கள் எதிர்நோக்கும் அவலங்களை விரைவில் மாற்றிவிடுவோம்.

புலிகளின் பிடியில் சிக்கியுள்ள மக்களை விடுவிக்கக் கோரி யாழில் ஆர்ப்பாட்டம்

people-jaffna.jpgவன்னியில் புலிகளின் பிடியில் சிக்கியிருக்கும் சிவிலியன்களை உடனடியாக விடுவிக்கக் கோரி யாழ். குடாநாட்டு மக்கள் நேற்று மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியொன்றை நடத்தினர். யாழ். குடாநாட்டின் 05 கல்வி வலயங்களைச் சேர்ந்த பெருந்திரளான மக்கள் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டனர்.

யாழ். கச்சேரிக்கருகில் நேற்றுக் காலை 11 மணிக்கு ஆரம்பமான இந்த பேரணியில் அரசாங்க மற்றும் தனியார் ஊழியர்கள், வர்த்தகர், மதகுருமார், பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களென அனைத்து இன மக்களும் கலந்துகொண்டனர். இதன் காரணமாக யாழ்ப்பாணத்தின் இயல்பு வாழ்க்கை நேற்று பாதிப்படையவில்லை. வழமைபோல் கடைகள் யாவும் திறக்கப்பட்டிருந்தன.

ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்ட மக்கள் மூன்று மகஜர்களை கையளித்தனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்குமாறு கோரி முதலாவது மகஜர் யாழ். அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஊர்வலமாக சென்று மக்கள் ஐ. நா. செயலாளரிடம் கையளிக்குமாறு கோரி சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதியிடம் இரண்டாவது மகஜரை கையளித்தனர். இறுதியாக இந்தியப் பிரதமரிடம் வழங்கப்பட வேண்டுமெனக் கோரி யு. என். டி. எச். ஆர். பிரதிநிதியிடம் மூன்றாவது மகஜர் கையளிக்கப்பட்டது.

பேரணியில் கலந்துகொண்டோர், ‘அப்பாவி சிவிலியன்கள் விடுவிக்கப்பட வேண்டும்’, ‘சிவிலியன்களை விடுவிக்க சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும்’ என பல்வேறு கோஷங்களை எழுப்பியமை குறிப்பிடத்தக்கது.

4ம் தேதி தமிழகம் முழுவதும் கடையடைப்பு – தமிழக அரசு இதை சட்டவிரோதம் என அறிவித்துள்ளது

assembly-tamil-nadu.jpgஇலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் 4ம் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் வேலை நிறுத்தம் சட்டத்துக்கு புறம்பானது. சட்ட ஒழுங்கை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இலங்கையில் விரைவில் போர் நிறுத்தம் கொண்டு வர, இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் 4ம் தேதி தமிழகம் முழுவதும் கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்தம் செய்யப் போவதாக இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழக அரசு இதை சட்டவிரோதம் என அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசிசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இது சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு எதிரானது. வேலை நிறுத்தத்தின் போது சட்ட ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசு தேவையான நடவடிக்கை எடுக்கும். பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மனிக்பாம்’ பாடசாலை இன்று ஆரம்பம்

school2701.jpgவன்னி யிலிருந்து இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ள மக்களின் பிள்ளைகளுக்கு இன்று இரு தற்காலிக பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக வவுனியா அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார். மனிக்பாம் முகாமில் தங்கியுள்ள சுமார் 700 மாணவர்கள் இங்கு மீண்டும் தமது கல்வியை தொடர உள்ளனர்.

மனிக்பாமில் இரு தற்காலிக பாடசாலைகள் அமைக்கப்பட்டுள்ளதோடு மாணவர்களுக்குத் தேவையான பாடநூல்கள், சீருடைத் துணிகள், பாடசாலை உபகரணங்கள் என்பன வழங்கப்பட்டுள்ளதோடு பாடசாலைகளுக்கு தேவையான தளபா டங்களும் வழங்கப்பட்டுள்ளதாக அரச அதிபர் மேலும் கூறினார்.

இரு பாடசாலைகளும் கல்வி கற்பிக்க ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளதோடு ஆசிரியர்களின் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் வன்னியில் இருந்து இடம் பெயர்ந்து வந்துள்ள ஆசிரியர்களை பயன்படுத்த வவுனியா கல்வி வலயம் திட்ட மிட்டுள்ளது.

இதே வேளை வன்னியில் இருந்து வரும் மாணவர்கள் கல்வி கற்பதற்கென புதிய பாடசாலைகள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக அரச அதிபர் கூறினார். எதிர்வரும் தினங்களில் வன்னியில் இருந்து வவுனியாவுக்கு வர உள்ள மாணவர்களுக்கும் மனிக்பாம் பகுதியில் கல்வி கற்க வசதிகள் செய்து கொடுக்கப்பட உள்ளன.

வன்னியில் இருந்து மேலும் 85 ஆயிரம் மாணவர்களும் 2500 ஆசிரியர்களும் வவுனியாவுக்கு வருவர் என எதிர்பார்க் கப்படுகிறது.

சுதந்திர தின பிரதான விழா காலி முகத்திடலில் 4 ஆம் திகதி

flag_logo_sl.jpg61வது சுதந்திர தின விழா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் 4ஆம் திகதி காலை காலி முகத்திடலில் மிகவும் விமர்சையாக நடைபெறவுள்ளது.  ‘சமாதானத்தினூடாக சுபீட்சம்’ என்ற தொனிப்பொருளில் இம்முறை சுதந்திர தின விழா கொண்டாடப்படவுள்ளதாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்தது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலை 8.30 மணிக்கு காலி முகத்திடலுக்கு வருகை தரவுள்ளதோடு பிரதமர், அமைச்சர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள் உட்பட பெருந்திரளானோர் விழாவில் பங்கேற்க உள்ளனர். ஜனாதிபதியினால் தேசிய கொடி ஏற்றப்படுவதோடு விழா ஆரம்பமாகும். முப்படையினரால் மரியாதை வேட்டுக்களும் தீர்க்கப்படவுள்ளன.

சுதந்திர தின விழாவில் முப்படையினர் மற்றும் பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதை ‘பேண்ட்’ வாத்தியங்கள் என்பனவும் இடம்பெற உள்ளதோடு விமானப் படை மற்றும் கடற்படையினரின் கண்காட்சிகளும் இடம்பெறவுள்ளன. 3 ஆயிரத்துக்கும் அதிகமான பொலிஸாரும் முப்படையினரும் இதில் கலந்து கொள்ள உள்ளனர். சுதந்திர தின விழாவை முன்னிட்டு கொழும்பு நகரில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதோடு காலி முகத்திடலுக்கு செல்லும் வீதிகள் 30 ஆம் திகதி முதல் 4 ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளன.

சுதந்திர தின விழா மற்றும் ‘தேசத்தின் மகுடம்’ கண்காட்சி என்பனவற்றை முன்னிட்டு கொழும்பிலுள்ள 20 பாடசாலைகள் 28 ஆம் திகதி முதல் மூடப்பட்டுள்ளன. இதேவேளை ‘தேசத்தின் மகுடம்’ கண்காட்சி 4 ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு ஆரம்பமாகி 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. தினமும் காலை 9.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை கண்காட்சி நடைபெறவுள்ளது. கண்காட்சியின் முதல் நாள் பாதுகாப்பு தினமாகவும் இரண்டாவது நாள் கலாசார தினமாகவும் மூன்றாவது நாள் நலன்புரி தினமாகவும் நான்காவது நாள் அபிவிருத்தி தினமாகவும் இறுதிநாள் ஊடகவியலாளர் தினமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை இன்று நள்ளிரவு முதல் பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபபகுதி அதி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்படவுள்ளது.

கிரிக்கெட்டை மையமாக கொண்ட திரைப்படத்தின் உலகளாவிய வெளியீடு கொழும்பில்

_hindi_victory.jpgகிரிக்கெட் வீரர் ஒருவரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட ‘விக்டரி’ என்னும் இந்தி திரைப்படத்தின் உலகளாவிய வெளியீடு வெள்ளிகிழமையன்று கொழும்பில் நடைபெற்றது.

ஆஸ்திரேலியா, இந்தியா இலங்கை உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த சுமார் 60 சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் இந்த திரைப்படத்தில் தோன்றியுள்ளனர். இந்த திரைப்பட வெளியீட்டு நிகழ்ச்சியில் திரைப்படத்தின் கலைஞர்கள் மற்றும் படத்தில் தோன்றிய கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றனர்.