விசுவமடு கரும்புலிகளின் பாரிய இரு முகாம்கள், புலிகளின் 12 சடலங்கள் மற்றும் பெருந்தொகையான ஆயுதங்களை இராணுவத்தினர் நேற்று முன்தினம் மீட்டிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். மோதல்களைத் தொடர்ந்து படையினர் மேற்கொண்டு வரும் தேடுதல்களில் இதுவரை காலமும் இவ்வளவு பெருந்தொகை ஆயுதங்கள் மீட்கப்படவில்லையெனவும், இதுவே முதல் தடவையென்றும் பிரிகேடியர் சுட்டிக்காட்டினார்.
விசுவமடு பிரதேசத்தில் நேற்று முன்தினம் மாலை படையினருக்கும் புலிகளுக்குமிடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. மோதல்களைத் தொடர்ந்து படையினர் அப்பகுதியில் மேற்கொண்ட தேடுதல்களின் போது புலிகளின் 12 சடலங்களையும் பெருந்தொகை ஆயுதங்களுடன் கரும்புலிகளது இரண்டு பாரிய முகாம்களையும் கைப்பற்றியுள்ளனர். கரும்புலிகளது முகாம்களுள் ஒன்று நிலத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்ததாகவும், அது இரண்டு மாடிகளைக் கொண்டதுடன், முற்றிலும் குளிரூட்டப்பட்ட நிலையில் மாளிகை போன்று அமைக்கப் பட்டிருந்ததாகவும் மத்திய நிலையம் குறிப்பிட்டது.
நிலத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த இந்த முகாமில் கணனிகள் உட்பட பல நவீன தொழில்நுட்ப உபகரணங்களும் நவீன முறையில் அமைக்கப்பட்ட குளியலறை, சமையலறை என்பனவும் இருந்துள்ளன. அத்துடன் உடற்பயிற்சி செய்யும் உபகரணங்களுடன் உடற்பயிற்சி நிலையமும் இருந்துள்ளது. சத்தம் வெளியில் கேட்காதவாறான ஜெனரேட்டர் ஒன்றிலிருந்தே இந்த முகாமுக்கு மின்சாரம் பெறப்பட்டுள்ளது. இவற்றை வைத்து பார்க்கும் போது புலிகளின் முக்கியஸ்தர் ஒருவர் இங்கு தங்கியிருந்திருப்பாரென சந்தேகிக்கத் தோன்றுவதாகவும் ஊடக நிலையத்தின் அதிகாரியொருவர் கூறினார்.
இவையனைத்தையும் இராணுவத்தின் 58வது படையணியினரே கைப்பற்றியுள்ளனர். இதேவேளை கரும்புலிகளின் மற்றைய பாரிய முகாமிலிருந்து பெருமளவிலான வெடிபொருட்களும் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
121 மில்லிமீற்றர் கொண்ட மூன்று நவீன எறிகணைகள், 18 ரி – 56 ரக துப்பாக்கிகள், 05 எம். பி. எம். ஜி, ஒரு ஸ்நிப்பர், 08 செயலிழக்கக்கூடிய ஆர். பி. ஜி.கள், 02 டேர்மோ பெரிக் ஆயுதங்கள், 20 பிஸ்டல் துப்பாக்கிகள், மூன்று ஆர். பி. ஜி. ஆயுதங்கள், 59 கிரனேற் கைக்குண்டுகள், 07 கிளேமோர்கள், ஒரு நவீன மாற்றங் களுடனான கிளேமோர், ஒரு ட்ரைபொட், புலிகளினால் உபயோகிக்கப்படும் ‘அருள்’ எனப்படும் 35 குண்டுகள், 100 டெட்ட னேட்டர்கள், ஒரு ரேடியோ செட், 8.9 வகையான மூவாயிரம் ரவைகள், 35 கேஸ் குண்டுகள், 08 ஹெல்மட், 02 80 மில்லி மீற்றர் மோட்டார் குண்டுகள், 02 81 மில்லி மீற்றர் மோட்டார் குண்டுகள், 02, 82 மில்லிமீற்றர் மோட்டார் குண்டுகள் 35 இடைப்பையுடன் கூடிய பட்டிகள், பெருந்தொகையான கரும்புலிகளின் ஆடைகள் என்பனவற்றையும் பொலிஸார் மீட்டிருப்பதாகவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.