வன்னி யிலிருந்து இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ள மக்களின் பிள்ளைகளுக்கு இன்று இரு தற்காலிக பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக வவுனியா அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார். மனிக்பாம் முகாமில் தங்கியுள்ள சுமார் 700 மாணவர்கள் இங்கு மீண்டும் தமது கல்வியை தொடர உள்ளனர்.
மனிக்பாமில் இரு தற்காலிக பாடசாலைகள் அமைக்கப்பட்டுள்ளதோடு மாணவர்களுக்குத் தேவையான பாடநூல்கள், சீருடைத் துணிகள், பாடசாலை உபகரணங்கள் என்பன வழங்கப்பட்டுள்ளதோடு பாடசாலைகளுக்கு தேவையான தளபா டங்களும் வழங்கப்பட்டுள்ளதாக அரச அதிபர் மேலும் கூறினார்.
இரு பாடசாலைகளும் கல்வி கற்பிக்க ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளதோடு ஆசிரியர்களின் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் வன்னியில் இருந்து இடம் பெயர்ந்து வந்துள்ள ஆசிரியர்களை பயன்படுத்த வவுனியா கல்வி வலயம் திட்ட மிட்டுள்ளது.
இதே வேளை வன்னியில் இருந்து வரும் மாணவர்கள் கல்வி கற்பதற்கென புதிய பாடசாலைகள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக அரச அதிபர் கூறினார். எதிர்வரும் தினங்களில் வன்னியில் இருந்து வவுனியாவுக்கு வர உள்ள மாணவர்களுக்கும் மனிக்பாம் பகுதியில் கல்வி கற்க வசதிகள் செய்து கொடுக்கப்பட உள்ளன.
வன்னியில் இருந்து மேலும் 85 ஆயிரம் மாணவர்களும் 2500 ஆசிரியர்களும் வவுனியாவுக்கு வருவர் என எதிர்பார்க் கப்படுகிறது.