2009

2009

தேசிய படை வீரர்கள் மாதம் இன்று முதல் அனுஷ்டிப்பு

ranawiru-month.jpg
பயங்கரவாதப் பிடியிலிருந்து தாய்நாட்டைப் பாதுகாப்பதற்காகப் போராடி உயிர்நீத்த மற்றும் காயமடைந்த படைவீரர்களைக் கௌரவிக்கும் வகையில் இன்று முதல் அடுத்த மாதம் 7ஆம் திகதி வரையான ஒரு மாத காலத்தைத் தேசிய படை வீரர்கள் மாதமாக அனுஷ்டிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தேசிய படை வீரர்கள் மாதத்தை முன்னிட்டு அரசாங்கம்,  பாதுகாப்பு அமைச்சு, ரணவிரு அதிகார சபை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள வேலைத் திட்டங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹலுகல்லே இதனைக் குறிப்பிட்டார். இதுபற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில், தேசிய படை வீரர்கள் மாதத்துக்கான பிரகடனத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளைக்(இன்று)  காலை 10.30 மணிக்கு உத்தியோகபூர்வமாக வெளியிடவுள்ளார். படை வீரர்கள் ஞாபகர்த்தக் கொடியும் நமக்காக நாம்| என மும்மொழிகளிலும் பொறிக்கப்பட்ட மஞ்சல் நிறக் கைப்பட்டியொன்றும் நாளை (இன்று)  ஜனாதிபதிக்கு அணிவிக்கப்படும்.

படை வீரர்களுக்காக 100 மில்லியன் ரூபாவை சேகரிக்கும் நோக்கில் நமக்காக நாம் கைப்பட்டிகளை நாடு முழுவதும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிதி படை வீரர்களின் நலன்புரி மற்றும் உதவித் திட்டங்களுக்காக வழங்கப்படும். தேசிய படை வீரர்கள் தினம் அடுத்த மாதம் 17ஆம் திகதியாகும். இதனை முன்னிட்டு பாராளுமன்றத்துக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீஜயவர்தனபுர கோட்டே படை வீரர் நினைவுத் தூபி முன்றலில் அன்றைய தினம் ஜனாதிபதி தலைமையில் பிரதான வைபவம் நடைபெறவுள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

மட்டு. மாவட்டத்தில் பாடசாலைகள் நேற்றும் பாதிப்பு; பாதுகாப்பை உறுதிப்படுத்த கல்வி செயலர் பணிப்பு

sri-lankan-schools.jpg மட்டக்களப்பு கோட்டைமுறை கனிஷ்ட வித்தியாலய மாணவி கடத்தப்பட்டு கொலை செய்தமையைக் கண்டித்து மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் நடைபெற்றுவந்த ஹர்த்தால் செவ்வாய்க்கிழமை முடிவுற்று வழமை நிலை ஏற்பட்டுள்ள போதிலும் பாடசாலைகளில் இயல்பு நிலை திரும்பவில்லை.

நேற்று புதன்கிழமை கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயத்துக்கு 3 மாணவர்கள் மட்டுமே பெற்றோருடன் சமுகமளித்திருந்தனர். பல பாடசாலைகள் நேற்று 3வது நாளாகவும் இயங்கவில்லை. அநேகமான பாடசாலைகளில் மிக சிறுதொகை மாணவர்களே சமுகமளித்திருந்தனர். இதேவேளை, கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயத்தில் மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ. எம். ஈ. போல் தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விசேட ஆரம்பக் கூட்டம் நேற்று பட்டிருப்பு தேசிய பாடசாலையில் இடம்பெற்றது. நேற்றுக் காலை ஆரம்பமாகி பிற்பகல் வரை இடம்பெற்ற கூட்டம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (சமந்த த சில்வா) தலைமையில் இடம்பெற்றது. பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனையின் பிரதிக் கல்விப் பணிப்பாளர், நகுலேஸ்வரி புள்ளநாயகமின் வேண்டுகோளின்படி வலயத்தின் சகல அதிபர்களும் கலந்துகொண்டதுடன், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த வீரசுரியாவும் கலந்துகொண்ட இவ்விசேட கூட்டத்தில் பாடசாலை மட்டத்தில் பாதுகாப்புக் குழுக்கள் அமைப்பதெனவும், மாணவர்கள் பாதுகாப்பு தொடர்பான விசேட அறிவுரைகள் குழுக்களுக்கு வழங்குவதெனவும் முடிவு செய்யப்பட்டது.

கடந்த வியாழக்கிழமை அனைத்து பாடசாலை மாணவர்களும் பாடசாலைகளுக்கு முற்றாக சமுகமளிக்காமையைத் தொடர்ந்து பாடசாலைகள் தொடர்ச்சியாக இயங்கவில்லை.மட்டக்களப்பு நகரையும், அதனைச் சூழவுள்ள பிரதேசங்களிலும் சுமார் 25 பாடசாலைகள் செயலிழந்துள்ளன. மேற்படி சிறுமியின் கொலையுடன் சம்பந்தப்பட்ட இருவரை இன்னும் கைதுசெய்ய வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் செவ்வாய் அதிகாலை பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டமை தெரிந்ததே.மேற்படி சந்தேக நபர்கள் கைதாகும் வரை தொடர்ச்சியாகப் பாடசாலைகளைப் பகிஷ்கரிக்குமாறு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால், நேற்றுக் காலை பாடசாலைகளுக்கு வருகைதந்த பெரும்பாலான மாணவர்கள் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றதை அவதானிக்க முடிந்தது.

இதேவேளை கிழக்கு மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளின் அதிபர்கள் தமது பாடசாலை மாணவ மாணவியரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உச்சக் கட்ட நடவடிக்கையினை எடுக்குமாறு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச். கே. யூ. கே. வீரவர்த்தன சகல வலயங்களுக்கும் அவசர அறிவித்தலை விடுத்துள்ளார்.

அவரது அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :- பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவ மாணவியருக்கு பாதுகாப்பை வழங்குவது அதிபரின் கடமையாகும். தாய், தந்தை, பாதுகாவலரைத் தவிர்ந்த எந்தவொரு நபரோடும் பாடசாலை நேரத்தில் பிள்ளைகளை அனுப்ப வேண்டாம்.  தாய், தந்தை சட்ட ரீதியான எழுத்துமூல ஆலோசனைக்கு அதிபர் தனிப்பட்ட ரீதியில் திருப்தி அடைந்தால் மட்டும் அனுப்ப முடியும். எனினும் தரம் 1 – 5 வரையுள்ள பிள்ளைகளை பாடசாலைகளிலிருந்து தாய், தந்தை, சட்ட ரீதியான பாதுகாவலரைத் தவிர வேறொருவருடனும் அனுப்பவே கூடாது. சந்தேகமெனின் பாதுகாப்பு அதிகாரிகளது உதவியை நாடவும்.

புதிய நடைமுறை

இதற்கிடையில் மட்டு. கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயத்தில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி புதிய நடைமுறைகள் பின்பற்றப்படவுள்ளன. இதற்கான தீர்மானம் பாடசாலை அபிவிருத்திச் சங்கக் கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளதாக மேற்படி வித்தியாலய அதிபர் சி. வி. விஸ்வலிங்கம் தெரிவித்தார். இத்தீர்மானங்களின்படி தினமும் காலையில் மாணவர்கள் பெற்றார் அல்லது அறிமுகமான உறவினர் அல்லது அறிமுகமான ஆட்டோ சாரதியினால் அழைத்துவரப்பட்டு வகுப்பாசிரியரிடம் ஒப்படைத்தல் வேண்டும். வகுப்பாசிரியர் இல்லாதவிடத்து அடுத்த வகுப்பாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.

இதேபோன்று பாடசாலை முடிந்த பின்னரும் வகுப்பாசிரியரிடமிருந்து பிள்ளைகளை பொறுப்பேற்று செல்ல வேண்டும். எந்த சந்தர்ப்பத்திலும் மாணவர்கள் பாடசாலை நேரத்தில் வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள். இந்த நடைமுறை கண்டிப்பாக பின்பற்றப்படவுள்ளதாக அதிபர் மேலும் தெரிவித்தார்.

போர்ப் பகுதியில் பயங்கரமான நிலையில் மக்கள்:பிரிட்டனின் நாடாளுமன்ற குழு

icrc.jpgஇலங்கைக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு, வடபகுதியில் மோதல் நடக்கும் பகுதியில் சிக்கியுள்ள மக்களின் நிலை மிகவும் பயங்கரமாக உள்ளதாக கூறியுள்ளது.

பொதுமக்களை விடுவிக்க வேண்டும் என விடுக்கப்படும் கோரிக்கைகளை விடுதலைப் புலிகள் தொடர்ந்து நிராகரித்து வருவதாகவும் டேஸ் பிரவுண் தலைமையிலான அந்தக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அவர்களின் இலங்கைக்கான விஜயம் குறித்து பிரிட்டனின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன. மோதல்கள் நடக்கும் பகுதிகளில், இலங்கை அரசு கனரக ஆயுதங்களை பயன்படுத்துவதில்லை என்று கூறியுள்ளதை உறுதியாக கடைபிடிக்க வேண்டும் எனவும், அதிகபட்ச கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் எனவும் அந்த குழுவினர் கோரியுள்ளனர்.

வவுனியாப் பகுதிக்கு சென்ற அந்தக் குழுவினர் அங்கு இடைத் தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களுடன் கலந்துரையாடியதாகவும் அப்போது அவர்கள் தாங்கள் விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து வெளியேறி தற்போது பாதுகாப்பாக தங்கியுள்ளதாக தம்மிடம் தெரித்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் எனவும் பிரிட்டனின் நாடாளுமன்ற குழுவினரின் அறிக்கை கோருகிறது.

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் கைது

parliament-of-sri-lanka.jpgஇலங்கை நாடாளுமன்றத்தின் இரண்டு உறுப்பினர்கள் இருவேறு கிரிமினல் குற்றச் சாட்டுக்களின் பேரில் இருவேறு நீதிமன்றங்களினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரனா குணவர்தன, சிறார் கடத்தல் சம்பவமொன்றுடன் தொடர்புபட்டார் என்ற குற்றச்சாட்டின்பேரில் இன்று நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

அதேவேளை, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தேசிய விடுதலை முன்னணியின் களுத்துறை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் பியசிறி விஜேநாயக்க நேற்றைய தினம் கம்பஹா அத்தனகல்ல நீதிமன்றில் சரணடைந்திருக்கிறார்.

அண்மையில் ஜே.வி.பியின் உறுப்பினர் ஒருவரின் கொலை தொடர்பில் சந்தேகத்தின்பேரில் இவரும் ஏனைய ஐந்து நபர்களும் தேடப்பட்டுவந்தனர்.

ஐக்கிய தேசியக்கட்சியும் தமிழர்களுக்கு எதிரான கட்சியே: மனோ கணேசன்

mano.jpgதமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்க, பாதுகாப்பு வலயத்தின் மீது தாக்குதல் நடத்தப்படவேண்டும் என புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்த கருத்தை மேல்மாகாண மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கண்டித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமையன்று ரங்கே பண்டார, தெரிவித்த இந்த கருத்து இனவாதத்தை தூண்டும் செயல் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் ஐக்கிய தேசியக்கட்சியும் தமிழர்களுக்கு எதிரான கட்சியே என மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

பூகம்பத்தை உணரும் மேலும் இரு முன்னெச்சரிக்கை மையங்கள்

இலங்கைக்குள்ளும், இலங்கையைச் சூழவுள்ள பிரதே சங்களிலும் ஏற்படுகின்ற நில அதிர்வுகளைப் பதிவு செய்யவும், அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை மேற்கொள்ளுவதற்குமென ஜேர்மன் நாட்டின் உத வியுடன் இரண்டு நில அதிர்வு பதிவு, மத்திய நிலையங்கள் அமைக்கப்படவிருக்கின்றது.

இந்த நிலையங்கள் அனுராதபுரம், கனதராவ விகாரை வளாகத்திலும், ஹக்மன விகாரை வளாகத்திலும் அமைக்கப்படவிருப்பதாக புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியக பூகற்பவியல் நிபுணர் நில்மினி தல்வெல நேற்றுத் தெரிவித்தார். இந்த இரண்டு நிலையங்களும் இவ்வருட இறுதிக்குள் நிர்மாணிக்கப்படுவதுடன் அவை செயற்படவும் தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இலங்கைக்குள்ளும், இலங்கைக்கு அண்மித்த பிரதேசங்களிலும் அண்மைக் காலமாக அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்படுகின்றன. இதனைக் கருத்திற் கொண்டு தான் ஜேர்மன் நாட்டின் ஜி. எப். இஸட் நிறுவனத்தின் உதவியோடு நில அதிர்வு பதிவு மையங்கள் இரண்டை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.

இந்த இரண்டு மையங்களுக்கும் அவசியமான உபகரணங்களை வழங்குவதற்கு ஜேர்மன் நிறுவனம் இணக்கம் தெரிவித்திருக்கிறது. இந்த நிலையங்களை அமைப்பதற்கென நாம் இரண்டு மில்லியன் ரூபாவை செலவிடவிருக்கின்றோம்.

தற்போது இந் நாட்டில் நில அதிர்வுகளை பதிவு செய்யவென ஒரே ஒரு நிலையம் தான் கண்டி, பள்ளேகலையில் இயங்குகின்றது. இதற்கு மேலதிகமாக இந்த இரு நிலையங்களும் செயற்படத் தொடங்கும் போது 4 ரிச்டர் அளவுக்கு குறைவான நில அதிர்வுகளையும் துள்ளியமாகப் பதிவு செய்யக் கூடியதாக இருக்கும்.

இவற்றை அடிப்படையாக வைத்து நில அதிர்வு ஏற்பட்ட இடம். ஆழம், நேரம் என்பவற்றை மிகவும் இலகுவாக கணிப்பிட்டு விட முடியும் என்றும் அவர் கூறினார்

இலங்கைக்கான உதவித் தொகையை அதிகரித்தது கனடா

canada_min.jpg இலங்கையில் மோதல்கள் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவித் தொகையை கனடா 7.5 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்த்தியுள்ளது. கனடாவின் சர்வதேசக் கூட்டுறவு அமைச்சர் பெவர்லி ஜே.ஒடாவின் இலங்கை விஜயத்தைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்த மக்களின் மனிதநேய உதவிகள் குறித்து கனேடிய அமைச்சர்,  இலங்கை அரசாங்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

இடம்பெயர்ந்திருக்கும் மக்களின் நிலைமையக் கருத்தில்கொண்டு அவர்களுக்கான உணவு,  நீர்,  தற்காலிக கூடாரங்கள் மற்றும் மருத்துவ உதவிப் பொருள்களுக்கான மேலதிக நிதியுதவி வழங்கப்படும் என அவர் கூறினார். மோதல்கள் நிறுத்தப்படவேண்டுமென நாங்கள் அனைத்துத் தரப்பிடமும் கோரிக்கை விடுக்கிறோம். அத்துடன்,  உடனடி உதவிகள் தேவைப்படும் பகுதிகளுக்கு மனிதநேயப் பணியாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். 

இரத்தினபுரி மாவட்டத்தில் 16,283 குடும்பங்களுக்கு மின்சார வசதி

இரத்தினபுரி மாவட்டத்தில் சகலருக்கும் மின்சாரம் வழங்கும் திட்டத்தின் மூலம் ஒரு வருட காலப் பகுதியில் 297 மில்லியன் ரூபா நிதி பயன்படுத்தப்பட்டு 16,283 குடும்பங்களுக்கு மின்சார வசதி பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் கீழ் மின் சக்தி அமைச்சர் ஜோன் செனவிரத்னவினால் சகலருக்கும் மின்சாரம் வழங்கும் திட்டம் இரத்தினபுரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள எட்டு தொகுதிகளிலுமுள்ள 2 இலட்சத்து 57 ஆயிரத்து 709 வீடுகளுக்கும் மின்சாரம் பெற்றுக் கொடுப்பதற்காக 5100 மில்லியன் ரூபா நிதி தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது

உதவி வழங்கும் நாடுகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதி மகிந்தவுடன் முக்கிய சந்திப்பு

20090424063601srilanka4.jpgஇலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் பிரதிநிதிகள் செவ்வாய்க்கிழமை அலரி மாளிகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்துப் பேசியுள்ளார்.   ஜப்பான், அமெரிக்கா, நோர்வே மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை உள்ளடக்கிய இணைத்தலைமை நாடுகளின் இலங்கையிலுள்ள தூதுவர்களே நேற்று ஜனாதிபதி ராஜபக்ஷவை சந்தித்து வடக்கின் தற்போதைய நிலைவரம் குறித்து பேசியுள்ளனர்.

பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட பிரதேசங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வது தொடர்பாகவும் அப் பிரதேசங்களில் மக்களை மீள்குடியேற்றும் போது அவர்களுக்கு தேவையான ஏனைய வசதிகளை வழங்குவது குறித்தும் இந்தச் சந்திப்பில் பேசப்பட்டதாக ஜனாதிபதி செயலகத்தினால் விடுக்கப்பட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வடக்கு 30 வருடங்களுக்கு மேலாக எந்த அபிவிருத்தியும் மேற்கொள்ளப்படாத பிரதேசம் என்ற வகையில், இந்த பிரதேசத்தை அபிவிருத்தி செய்து மக்களுக்கு தேவையான வசதிகளை வழங்கும் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கியிருப்பதாக ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மீட்கப்பட்ட மக்களது நலன்புரி நடவடிக்கைகள் மற்றும் அரசாங்கத்தினால் வடக்கில் மேற்கொள்ளப்படும் நீண்டகால அபிவிருத்தித் திட்டங்கள் போன்றவற்றில் இணைத்தலைமை நாடுகளுடன் சுமுகமாக செயற்படுவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாகவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

இணைத்தலைமை நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி நோர்வே தூதுவர் றோர் ஹேற்றன், ஜப்பான் தூதுவர் கியூனியோ ஏக்காஹசி, ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் பெவ்னோல்ஸ் சவேஜ், அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தி ஜோன்ஸ் மோர் ஆகியோருடன், ஐரோப்பிய குழுமத்தின் ஜனாதிபதியின் விஷேட பிரதிநிதி ஹேர்க் மங்கேநஸ்ற், அமைச்சர்களான ரோஹித போகால்லாகம மகிந்த சமரசிங்க ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பி.ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் இச் சந்திப்பில் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலமைப்பரிசில் மாணவரை ஊக்குவிக்க விசேட திட்டம்

sri-lankan-schools.jpgஏறாவூர் பிரதேச பாடசாலைகளில் இருந்து இம்முறை தரம் 05 புலமைப்பரிசில் பரீட்¨ச்ககுத் தோற்றவுள்ள மாணவர்களை ஊக்குவிப்பதற்கான விசேட வேலைத்திட்மொன்றினை ஏறாவூர் கோட்டக் கல்வி அலுவலகம் மேற்கொண்டுள்ளது.

இதன் பிரகாரம் கோட்ட கல்வி அலுவலகத்தினால் நடத்தப்பட்ட முன்னோடி புலமைப்பரிசில் பரீட்சையில் 100 இற்கும் அதிகமான புள்ளிகளைப் பெற்ற 144 மாணவர்கள் பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்களை ஊக்குவிப்பதன் மூலமாக கற்றல் நடவடிக்கைகளில் மேலும் ஆர்வத்தை ஏற்படுத்தி சித்தியடையும் வீதத்தை அதிகரிக்கச் செய்யும் நோக்கத்துடன் இந்த பரிசளிப்பு வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டதாக கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஐ. எல். இஸட். ஆப்தீன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் வி. அமீர்தீன் தனது கல்வி அபிவிருத்தி நிதியத்தின் மூலமாக மாணவர்களுக்கான பரிசுப் பொருட்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.