இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் பிரதிநிதிகள் செவ்வாய்க்கிழமை அலரி மாளிகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்துப் பேசியுள்ளார். ஜப்பான், அமெரிக்கா, நோர்வே மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை உள்ளடக்கிய இணைத்தலைமை நாடுகளின் இலங்கையிலுள்ள தூதுவர்களே நேற்று ஜனாதிபதி ராஜபக்ஷவை சந்தித்து வடக்கின் தற்போதைய நிலைவரம் குறித்து பேசியுள்ளனர்.
பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட பிரதேசங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வது தொடர்பாகவும் அப் பிரதேசங்களில் மக்களை மீள்குடியேற்றும் போது அவர்களுக்கு தேவையான ஏனைய வசதிகளை வழங்குவது குறித்தும் இந்தச் சந்திப்பில் பேசப்பட்டதாக ஜனாதிபதி செயலகத்தினால் விடுக்கப்பட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு 30 வருடங்களுக்கு மேலாக எந்த அபிவிருத்தியும் மேற்கொள்ளப்படாத பிரதேசம் என்ற வகையில், இந்த பிரதேசத்தை அபிவிருத்தி செய்து மக்களுக்கு தேவையான வசதிகளை வழங்கும் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கியிருப்பதாக ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
மீட்கப்பட்ட மக்களது நலன்புரி நடவடிக்கைகள் மற்றும் அரசாங்கத்தினால் வடக்கில் மேற்கொள்ளப்படும் நீண்டகால அபிவிருத்தித் திட்டங்கள் போன்றவற்றில் இணைத்தலைமை நாடுகளுடன் சுமுகமாக செயற்படுவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாகவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
இணைத்தலைமை நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி நோர்வே தூதுவர் றோர் ஹேற்றன், ஜப்பான் தூதுவர் கியூனியோ ஏக்காஹசி, ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் பெவ்னோல்ஸ் சவேஜ், அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தி ஜோன்ஸ் மோர் ஆகியோருடன், ஐரோப்பிய குழுமத்தின் ஜனாதிபதியின் விஷேட பிரதிநிதி ஹேர்க் மங்கேநஸ்ற், அமைச்சர்களான ரோஹித போகால்லாகம மகிந்த சமரசிங்க ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பி.ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் இச் சந்திப்பில் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.