2009

2009

மோதல் பகுதியிலிருந்து 3000 கர்ப்பிணித் தாய்மார் வெளியேற்றம் : ஐ.நா. சனத்தொகை நிதியம் தகவல்

_mullai_1.jpgவடக்கில் மோதல் நடைபெற்று வரும் பகுதிகளிலிருந்து சுமார் மூவாயிரம் கர்ப்பிணித் தாய்மார்கள் வெளியேறியுள்ளதாக ஐ.நாவின் சனத்தொகை நிதியம் தகவல் வெளியிட்டுள்ளது.

இவர்களில் சுமார் 350 பேர் அடுத்த மாதம் குழந்தைகளைப் பிரசவிக்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இடம் பெயர்ந்துள்ள மக்களின் வருகை அதிகரிப்பினால் சுகாதார சேவைகளில் எதிநோக்கும் சவால்களும் அதிகரித்துள்ளன. இந்நிலையில், பெண்கள் மற்றும் யுவதிகளின் சுகாதாரம், பாதுகாப்பு தொடர்பாக, குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் தொடர்பான உதவிகளை அதிகரிக்க உத்தேசித்துள்ளதாகவும் ஐ.நாவின் சனத்தொகை நிதியம் கூறுகின்றது.

குறிப்பாக குழந்தைகளைப் பிரசவிக்கும் பெண்களில் 15 சதவீதமானவர்கள் இரத்தம் வழங்குதல் அல்லது அவசர சத்திர சிகிச்சை பராமரிப்பு மற்றும் பிரசவம் தொடர்பான சிக்கல்கள், மரணம் போன்ற பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடலாம் என்றும் அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 

வவுனியா மீள்குடியேற்ற கிராமத்தில் குழாய் மூலம் நீர் விநியோகம்

20090424063601srilanka4.jpgவவுனியா, மதகு வைத்தகுளம் மீள்குடியேற்ற கிராமத்தில் குழாய் மூலம் நீர் விநியோகிக்கும் திட்டம் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

34 ஆயிரம் லீட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த் தாங்கி அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு 12 மில்லியன் ரூபாய் செலவாகியதென திட்டத்தை நடைமுறைப்படுத்திய தேசிய பால்நிலை சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் திட்டப்பணிப்பாளர் வி. சி. மகேந்திரன் தெரிவித்தார்.

ஒக்ஸ்பாம் அமைப்பு நிதி உதவியினை வழங்கியிருந்தது. 270 குடும்பங்கள் இந்த கிராமத்தில் வசிக்கின்றனர். 110 குடும்பங்கள் குழாய் மூலம் நீர் பெறுவதற்கான இணைப்புக்களைப் பெற்றிருந்தன. நேற்று முன்தினம் காலை 11 மணிளயவில் வைபவ தியாக குடிநீர் விநியோகத் திட்டத்தை வவுனியா பிரதேச செயலாளர் எஸ். சிவபாலசுந்தரன் ஆரம்பித்து வைத்தார். நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை பொறியியலாளர் ஒக்ஸ்பாம் நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளர் உட்பட அதிகாரிகளும் கிராம மக்களும் இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர். கடந்த காலத்தில் இந்த கிராமத்து மக்கள் நீரை பெறுவதற்கு நீண்ட தூரம் அலைய வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.

இந்திய நடமாடும் வைத்தியசாலை வவுனியாவுக்கு உடனடி மாற்றம்

pullmottaiindiadoctors1.jpgபுல்மோட்டையில் இந்திய அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள நடமாடும் வைத்தியசாலையை உடனடியாக வவுனியாவுக்கு இடமாற்றம் செய்து அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சின் செயலாளர் டாக்டர் அத்துல கஹந்த லியனகேயும், கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலய உயரதிகாரிகளும் வவுனியாவில் அமைக்கப்பட்டிருக்கும் நலன்புரி நிலையங்களை நேரில் சென்று பார்வையிட்டு திரும்பிய பின்னரே இம்முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நடமாடும் ஆஸ்பத்திரியை வவுனியா, செட்டிக்குளம் பிரதேசத்தில் உடனடியாக அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மருத்துவ அதிகாரிகளுக்கு சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சின் செயலாளர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

பாதுகாப்பு வலயத்திலிருந்து கடல் மார்க்கமாக அழைத்து வரப்படுகின்ற நோயாளர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் நோக்கிலேயே இந்தியாவின் உதவியோடு புல்மோட்டையில் இந்த நடமாடும் ஆஸ்பத்திரி அமைக்கப்பட்டது.

வவுனியாவில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கான ஆரோக்கிய சேவையை மேம்படுத்தும் நோக்கிலேயே இந்த ஆஸ்பத்திரி வவுனியாவில் அமைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம் பாதுகாப்பு வலயத்திலிருந்து கடல் மார்க்கமாக அழைத்து வரப்படும் நோயாளர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இவற்றையும் கருத்தில் கொண்டுதான் இந்த நடமாடும் ஆஸ்பத்திரியை வவுனியாவுக்கு இடமாற்றம் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டது.

இதேவேளை பிரான்ஸ் நாட்டினால் வழங்கப்பட்டுள்ள நூறு கட்டில்களைக் கொண்ட நடமாடும் ஆஸ்பத்திரியும் விரையில் வவுனியாவில் அமைக்கப்படவிருக்கின்றது.

அரச ஊழியர்களுக்கு ஹோமாகமையில் வீடமைப்புத் திட்டம்

ferail_asrof.jpgஅரச ஊழியர்களுக்கென ஹோமாகமை மவுன்ட் க்ளிபர்ட் மற்றும் ஜல்தர ஆகிய பகுதிகளில் மஹிந்த சிந்தனையின் ஜனசெவன திட்டத்தின் கீழ் 850 வீடுகள் அமைப்பதறகு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.

சீன அரசாங்கம் இத்திட்டத்திற்கு 160 மில்லின் யுவானை நிதியுதவியாக வழங்குவதுடன் இலங்கை அரசாங்கம் இத்திட்டத்திற்கு 600 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.  இத்திட்டத்தை எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பித்து 30 மாதங்களில் பூர்த்தி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மட்டு. மாவட்ட பாடசாலைகளில் பாதுகாப்பு குழுக்கள் அமைக்கும் பணி

sri-lankan-schools.jpgமட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வலயக் கல்வியலுவலகங்களும், பொலிஸாரும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நடவடிக்கையின் கீழ் பாடசாலை மாணவர் பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கல்குடா மட்டக்களப்பு, பட்டிருப்பு, மட்டக்களப்பு மத்தி ஆகிய நான்கு வலயக் கல்வியலுவலகங்களின் மேற்பார்வையுடன் வலயக் கல்விப் பணிப்பாளர்களின் ஆலோசனையுடன் இப்பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இப்பாதுகாப்புக் குழுக்களை அமைப்பது தொடர்பாக வலயத்திலுள்ள பாடசாலைகளின் அதிபர்களுடன் மற்றும் கோட்டக் கல்விப் பணிப்பாளர்களுடன் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டங்களையும் நடாத்திவருகின்றனர்.

பாடசாலை மாணவர் பாதுகாப்புக் குழுவில் பாடசாலை அதிபர், பெற்றோர், பொலிஸார் மற்றும் அப்பாடசாலையின் ஆசிரியர்களில் ஒரு சிலர் அங்கம் வகிக்கவுள்ளனர். இப்பாதுகாப்புக் குழுக்கள் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் செயற்படுவதுடன் பாடசாலை நேரங்களிலும் பாடசாலைக்கு செல்லும் போதும் பாடசாலையை விட்டு வீடு திரும்பும் போதும் கூடிய கவனம் செலுத்தவுள்ளனர்.

அக்கினி நட்சத்திரம் பூமி – சூரியன் நேர் கோட்டில்; 28 வரை உஷ்ணம் உச்சத்தில்

தற்போது நாட்டில் நிலவி வரும் உஷ்ணமான காலநிலை எதிர்வரும் 28ஆம் திகதி வரை சற்று அதிகரித்தே காணப்படும். மே மாதம் நேற்று எட்டாம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை இந்த அதிகரித்த உஷ்ணமான காலநிலை நிலவும். குறிப்பாக மே 8ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை சூரியனும் பூமியும் ஒரே நேர்கோட்டில் பயணிப்பதாலேயே இந்த உஷ்ண நிலை சற்று அதிகரிப்பதற்கு ஏதுவாகிறது.

சூரியனும் பூமியும் ஒரே நேர்கோட்டில் பயணிப்பதை சோதிட வல்லுநர்கள் அக்னி நட்சத்திர காலம் என கூறுவர்.

தற்போது இலங்கையில் 33, 34 செல்ஷியல் வெப்ப நிலை இருக்கின்ற போதும் குறிப்பிட்ட அக்னி நட்சத்திர காலப் பகுதிக்குள் சுமார் 36, 37 செல்ஷியஸ் வரை அதிகரிக்கலாம். இக்காலப் பகுதியில் இந்தியாவில் கூடுதலான வெப்ப தாக்க மரணங்களும் (Sun strok) ஏற்படலாம். இதுவரை அங்கு சுமார் 10 மரணங்கள் வரை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறான வெப்பதாக்க மரணங்கள் இலங்கையில் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறுகள் மிக குறைவாகவே உள்ளன. குறிப்பாக இலங்கையில் நாலாபுறமும் கடலால் சூழப்பட்டிருப்பதாலேயே இவ்வாறு நிகழ்வதில்லை. இருப்பினும், தற்போது காலநிலை மாற்றத்தால் கடலின் உஷ்ண நிலையும் சற்று அதிகரித்தே காணப்படுகிறது. இதனால் எந்நேரமும் அதிக வியர்வை, புழுக்கம் ஏற்படும். இந்த நிலை மாறவேண்டுமாயின் கடும் மழை பெய்வது மிக முக்கியமாக உள்ளது. கடலிலிருந்து உஷ்ணக் காற்று வீசுவதாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.கடலின் உஷ்ண நிலை சுமாராக 24 செல்ஷியஸ¤க்கு குறைவாகவே காணப்பட வேண்டும். எனினும் தற்போது கடலின் உஷ்ணநிலை 29 முதல் 31 வரையிலான ஷெல்சியஸில் இருப்பதும் ஒரு காரணமாகும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு அவுஸ்திரேலியா 10 மி.டொலர் உதவி

vavuniyatents.jpgவடக்கில் மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவும் வகையில் அவுஸ்திரேலியா 10 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.

அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் நேற்று வெள்ளிக்கிழமை இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “ஐ.நா. முகவர்கள் ஊடாக இந்த நிதி வழங்கப்படும்” என்று தெரிவித்தார். நீர் சுகாதார இருப்பிடம் உணவு மற்றும் ஆரோக்கிய செயற்பாடுகளுக்கு இந்நிதி பயன்படுத்தப் படும் என அவர் கூறினார். கடந்த டிசம்பர் தொடக்கம் அவுஸ்திரேலிய அரசு இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கென 23.5 மில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

பாதுகாப்பு வலயப் பகுதியில் மாற்றம்: இலங்கை இராணுவம் அறிவிப்பு

army-crest.jpgஇலங்கையின் வடக்கே பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டிருந்த பகுதியில் இலங்கை அரசாங்கம் தற்போது மாற்றத்தை அறிவித்துள்ளது.

இதற்கு முன்பு வரையறுக்கப்பட்டிருந்த பாதுகாப்பு பிரதேசமானது தற்போதைய நிலைமைகளை கருத்தில் கொண்டு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பொதுமக்கள் அடர்த்தியாக இருக்கும் பிரதேசங்களை கருத்தில் கொண்டும் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவம் கூறியுள்ளது.

தற்போதைய நிலையில் காரியமுல்லை வாய்க்கால் பகுதிக்கு தெற்கே இருக்கும் பிரதேசம், வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதி உள்ளிட்ட நிலப்பகுதி புதிய பாதுகாப்பு வலையப்பகுதியாக வரையறுக்கப்பட்டுள்ளது. இரண்டு கிலோமீட்டர் நீளமும் ஒன்றரை கிலோமீட்டர் அகலமும் கொண்ட இந்த பகுதியானது புதிய பாதுகாப்பு வலயப்பகுதியாக வரையறுக்கப்பட்டுள்ளது.

இதற்கு வெளியில் இருக்கும் பகுதிகளில் இராணுவம் தொடர்ந்தும் விடுதலைப்புலிகள் மீதான தங்களின் தாக்குதல்களை தொடரும் என்று இராணுவம் சார்பாகப் பேசவல்ல பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். ஆறு சதுர கிலோமீட்டர் பிரதேசம் பாதுகாப்பு வலயமாக விளங்கிவந்த நிலை மாறி, தற்போது இரண்டரை சதுர கிலோமீட்டர் பகுதியாக இது குறைக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இலங்கை இராணுவம் விடுதலை புலிகளுக்கு எதிராக மேற்கொண்டு வரும் பொய்ப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியே இந்த அறிவிப்பு என்று விடுதலைப் புலிகள் அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசன் கூறினார்.

இந்தியாவின் இரண்டாவது மருத்துவக் குழு இலங்கை வரும் : பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பு

indo-lanka.jpgஇலங்கையின் வடக்கே மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள தனது இரண்டாவது மருத்துவ குழுவினரை அடுத்த வாரமளவில் இந்தியா அனுப்பி வைக்கவுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன.

புல்மோட்டை முகாம்களில் ஏற்கனவே 60 நாட்கள் தங்கி சிகிச்சை அளித்து வந்த இந்திய வைத்திய குழுக்களுக்குப் பதிலாக இவர்கள் அப்பணியை தொடர இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பாலியல்துஷ்பிரயோகத்தின் பின் சிறுவன் கொலை – சந்தேக நபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலி

gun00.jpgமொனராகல, கஹம்பான பகுதியில் 8 வயது சிறுவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்ததாக கூறப்படும் சந்தேக நபரொருவர் வியாழக்கிழமை மாலை பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

மொனராகல பொலிஸாரும் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தினர். கஹம்பான காட்டுப் பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்பட்டது.

சிறுவனை கொலை செய்து புதைத்த இடத்தை காண்பிப்பதாக பொலிஸாரை அழைத்துச் சென்ற சந்தேக நபர் அங்கு மறைத்து வைத்திருந்த கைக் குண்டொன்றை எடுத்து பொலிஸார் மீது எறிய முற்பட்ட போதே அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதில் சந்தேகநபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

முன்னதாக இவர் சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்த சம்பவம் புதன்கிழமை இடம்பெற்றுள்ளதுடன், அன்றைய தினமே சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுமுள்ளார்.  அத்துடன் சந்தேகநபர் இராணுவத்தைச் சேர்ந்தவரென்றும் மொனராகல பொலிஸார் தெரிவித்தனர்.