கரைய முள்ளிவாய்க்கால் பகுதியில் இராணுவப் பாதுகாப்பு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த முள்வேலிகளை உடைத்துக்கொண்டு நுழைய முனைந்த விடுதலைப் புலிகள் மீது இராணுவத்தினர் 04, 19ஆவது படையணிகள் தாக்குதல்களை நடத்தி வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதலில் 50க்கும் அதிகமான புலிகளின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் இன்று அதிகாலை 1.00மணியிலிருந்து சுமார் 6.00மணி வரை பலத்த தாக்குதல்கள் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
2009
2009
கடந்த 30 வருடங்களாக இலங்கையில் நிலவிவந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்திருப்பது இலங்கை மக்களின் வெற்றியாகும் என ஜே.வி.பி. பிரசார செயலாளரும், பாராளுமன்ற அங்கத்தவருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த வெற்றி சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பேக்கர், மலே ஆகிய அனைத்து இனத்தினதும் வெற்றியாகும். இன, மத, கட்சி பேதமின்றி அனைவரும் இந்த வெற்றியைக் கொண்டாட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
விடுதலைப் புலிகள் தோல்வி காண்பதற்கு சீனாவினால் வழங்கப்பட்ட கனரக ஆயுதங்களே மூல காரணம் என புலிகளுக்கு ஆதரவான ஐரோப்பா இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அச்செய்தியில் புலிகளின் வேண்டுகோளுக்கிணங்க ஐக்கிய அமெரிக்கா இலங்கைக்கு ஆயுதங்களை விநியோகிப்பதை நிறுத்திக் கொண்டாலும்கூட, சீனா இரகசியமாக இலங்கைக்கு கனரக ஆயுதங்களை வழங்கியுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
அந்த இணையத்தளம் முல்லைத் தீவு தாக்குதல் நடவடிக்கைகளுக்கு மேற்குலக நாடுகள் ஆயுதங்களை வழங்கவில்லை என்றும் கூறியுள்ளது. இத்தகவலை திவைன பத்திரிகை இன்று வெளியிட்டுள்ளது.
இலங்கையை இதுகாலவரை அச்சுறுத்திவந்த பயங்கரவாதம் எனும் சாபம் முடிந்துவிட்டது. இது அனைவரும் மகிழ்ச்சியடையக் கூடிய விடயமாகும். இருப்பினும் பயங்கர யுத்தத்தின் காயங்களை குணப்படுத்த பல மாதங்கள் அல்லது வருடங்கள் செல்லும் என தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் ஆனந்தசங்கரி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட விடுதலைப் புலிகளின் பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார சற்று முன்பதாக அறிவித்திருந்தார்.
அதேவேளை கரையமுள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினர் சடலம் ஒன்றை மீட்டுள்ளனர். இது விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவரான வே.பிரபாகரனின் மகனான சாள்ஸ் அன்ரனியினது என சந்தேகிப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சரும், சிரேஸ்ட அரசியல்வாதியுமான மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எலிக் அலுவிகார நேற்று (17) கொழும்பு தனியார் வைத்தியசாலையில் காலமானார்.
82வயது நிரம்பிய இவர் நான்கு மகன், ஒரு மகளின் தந்தையாவார். இவரின் மகன்மார்களுள் ரன்ஜித் அலுவிகார தற்போதைய மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகவும், வசந்த அலுவிகார மாகாணசபை உறுப்பினராகவும், சல்ஜித் அலுவிகார மாத்தளை மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவராகவும், சகத் அலுவிகார தோட்ட அதிகாரியாகவும் கடமையாற்றி வருகின்றனர்.
நேற்று (17) இரவுடன் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது. புதிய பாராளுமன்ற கூட்டத்தொடர் இம்மாதம் 19ஆம் திகதி ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பிக்கப்படும்.
இவ்வறிவித்தலை உள்ளடக்கிய வர்த்தமானி நேற்று நல்லிரவு அச்சாகுவதற்கு இருந்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாளை (19) பாராளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்தவுள்ளார். ஜனாதிபதியின் உரையுடன் பாராளுமன்றத்தில் புதிய கூட்டத்தொடர் ஆரம்பமாகும்.
அரசியல் ரீதியான தீர்வுத் திட்டத்தின் மூலம் தமிழர் களுக்குச் சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்படாத வரையில் போர் முடிவடைந்து விட்டதாகக் கருதமுடியாது. ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகார உதவிச் செயலாளர் நாயகம் ஜோன்ஹோம்ஸ் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து மேலும் தெரிவித்ததவை வருமாறு: இராணுவ ரீதியாக விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர் என அரசுஅறிவித்துள்ள போதிலும் அவர்களின் கெரில்லா தாக்குதல் தொடரக் கூடும். சமாதான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படாவிட்டால் எதிர் காலத்தில் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.அரசியல் ரீதியான தீர்வுத் திட்டத்தின் மூலம் தமிழர்களுக்கு சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்படாத வரையில் யுத்தம் முடிவடைந்ததாகக் கருத முடியாது. அரசுயுத்தத்தில் வெற்றி பெற்ற போதிலும், சமாதானத்தை நிலைநாட்டுவதில் தோல்வியடைந்து விடக் கூடாது என்பதே ஐக்கிய நாடுகளின் முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது என்றார்.
காங்கேசன் துறைக்கும் திருகோண மலைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இன்று திங்கட்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்டச் செயலகத்தில் மேமாத 4 ஆவது கப்பலிற்கான அனுமதிச் சீட்டினைப் பெற்றுக்கொண்டவர்களையும் அவசர தேவையின் நிமித்தம் செல்வதற்கு செயலகத்தில் பதிவினை மேற்கொண்டவர்களையும் இன்று திங்கட்கிழமை காலை ஏழு மணிக்கு யாழ். ரயில் நிலையத்திற்கு சமுகமளிக்குமாறு அரச அதிபர் அறிவித்துள்ளார்.
தீவிர வாதத்தின் பிடியிலிருந்து முழு நாடும் விடுவிக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்ததையடுத்து நாடு பூராவும் மக்கள் இனிப்பு வழங்கி, பட்டாசு கொளுத்தி, தேசியக் கொடிகளை ஏந்தி அசைத்த வண்ணம் தங்கள் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தினர்.
சுமார் மூன்று தசாப்த காலம் இந்நாடும், இந்நாட்டு மக்களும் தீவிரவாதத்தின் பிடியில் சிக்குண்டு அனுபவித்த துன்பங்களும், துயரங்களும் சொல்லும் தரமற்றவை. அழிவுகளும், இழப்புக்களும், சேதங்களும் கொஞ்சநஞ்சமல்ல.
இவ்வாறான கோர பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து நாடும், நாட்டு மக்களும் விடுவிக்கப்பட்டு அவை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டிருப்பதையொட்டியே மக்கள் பேதங்களுக்கு அப்பால் ஒன்றுபட்டு மகிழ்ச்சி ஆரவாரங்களைத் தெரிவித்தனர். நாட்டின் பல பாகங்களிலும் பிரபாகரனின் கொடும்பாவிகளும் எரிக்கப்பட்டன.
தீவிரவாதத்தின் பிடியில் சிக்குண்டு துண்டாடப்பட்டிருந்த நாட்டையும் நாட்டு மக்களையும் விடுவித்து, நாட்டை ஐக்கியப்படுத்தியுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், பாதுகாப்பு செயலாளருக்கும், முப்படையினருக்கும், பொலிஸாருக்கும் மக்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும், ஆசிகளையும் தெரிவித்தனர். ஜனாதிபதியின் அறிவிப்பைத் தொடர்ந்து அரச மற்றும் தனியார் கட்டடங்களிலும், வர்த்தக நிலையங்களிலும், வீடுகளிலும், வாகனங்களிலும் மக்கள் தேசியக் கொடிகளைப் பறக்கவிட்டனர். வீதிகளில் இறங்கி ஆடி, பாடி மகிழ்ந்தனர். நகரங்களில் மகிழ்ச்சி ஊர்வலங்களில் ஈடுபட்டனர்.
இதேவேளை நாட்டின் பல பிரதேசங்களில் ‘ரபான்’ அடித்தும் மக்கள் தங்கள் மகிழ்ச்சி ஆரவாரங்களை வெளிப்படுத்தினர். பாற்சோறும் வழங்கப்பட்டது.