2009

2009

அங்குலான பிரதேசத்திலிருந்து இரு கிளேமோர்கள் நேற்று பிற்பகல் மீட்பு

clay_new.jpgமொரட்டுவ அங்குலான பிரதேசத்தில் நேற்று பிற்பகல் இரண்டு கிளேமோர் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டதாக் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

சந்தேகத்தின் பேரில் கைதாகி விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள புலி உறுப்பினர் ஒருவர் தெரிவித்த தகவலையடுத்தே இந்தக் கிளேமோர்கள் மீட்கப்பட்டதாகவும் அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

அமெரிக்காவில் 18 ஆண்டுகளுக்கு முன்னர் கடத்தப்பட்ட பெண் தற்போது குழந்தைகளுடன் மீட்பு

அமெரிக்காவில் பெண்ணொருவர் சிறுமியாக இருந்தபோது கடத்தப்பட்டு பதினெட்டு ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டிருந்த இடம் எனத் தெரியும் வீடொன்றை பொலிசார் சோதனையிட்டு வருகின்றனர்.

11 வயதிருந்தபோது இந்தப் பெண் காணாமல் போயிருந்தார். ஜெய்சி டூகர்ட் என்ற இந்தப் பெண்ணும் அவரது பிள்ளைகள் இருவரும் இவ்வளவு காலமும் கட்டடங்கள் மற்றும் கூடாரங்களில் அடைத்துவைக்கப்பட்டிருந்தனர். இந்தப் பிள்ளைகள், ஜெய்சியைக் கடத்தி அடைத்துவைத்திருந்தவருக்கு பிறந்த குழந்தைகள் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

ஜெய்சியின் குழந்தைகளுக்கு தந்தையென குற்றஞ்சாட்டப்படுபவர்
இந்தப் பிள்ளைகள் ஒருபோதும் பள்ளிக்கூடமோ மருத்துவமனையோ சென்றதில்லை என பொலிசார் கூறுகின்றனர். 1991ஆம் ஆண்டு பள்ளியிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தபோது ஜெய்சீ காரில் கடத்திச் செல்லப்பட்டிருந்தார்.

ஜெய்சி,கடத்தியதாகக் குற்றம்சாட்டப்படுபவருடன் பிள்ளைகளோடு அவர்கள் தங்கியிருந்த சான்ஃபிரான்ஸிஸ்கோ பொலிஸ் நிலையம் வரும் வரை அவர் பற்றி எந்தத் தகவலும் இல்லாதிருந்தது.

ஆசியாவின் நோபல் பரிசு

asian_nobal.pngஆசியாவின் நோபல் பரிசு என கருதப்படுகின்ற பிலிப்பைன்சில் வழங்கப்படும் ராமன் மகசேசே விருதுக்கு இவ்வருடம் ஆசிய நாடுகளைச் சோந்த ஆறு பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
2009-ம் ஆண்டுக்கான ராமன் மகசேசே விருதுக்கு யூ ஷியோகாங் (சீனா)  தீப் ஜோஷி (இந்தியா)  கிரிசனா கிரைசிந்து (தாய்லாந்து),  மா ஜுன் (சீனா),  அன்டானியோ அபோஸா ஜூனியர் (பிலிப்பின்ஸ்),  கா ஹிஸா வா (மியான்மர்). ஆகியோர் தெரிவாகயுள்ளனர்.

பிலிப்பின்ஸ் முன்னாள் அதிபர் மறைந்த ராமன் மகசேசேவை கௌரவித்து இந்த விருது அரசுப்பணி,  சமூக சேவை உள்ளிட்ட 6 துறைகளில் சிறப்பாக பணியாற்றும் ஆசிய நாட்டவர்களை பெருமைப்படுத்தும் வகையில் வழங்கப்படுகிறது.

பதக்கம் மற்றும் 50 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசு அடங்கியது இந்த விருது. ஆசியாவின் நோபல் பரிசு என்றே இது கருதப்படுகிறது. இந்தியாவைச் சேர்ந்த தீப் ஜோஷி சிறந்த சமூக சேவகராக விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விருது வரும் 31-ம் தேதி முறைப்படி வழங்கப்படுகிறது.

மேல் நீதிமன்ற கட்டடத்தின் பகுதி நேற்று இடிந்து விழுந்துள்ளது.

cort0000000.jpgகொழும்பு, புதுக்கடையில் அமைந்துள்ள மேல் நீதிமன்ற கட்டடத்தின் ஒரு பகுதி நேற்று முன்தினம் இரவு இடிந்து விழுந்துள்ளது. சம்பவத்தின்போது உச்ச நீதிமன்றம் மூடப்பட்டிருந்தமையினால் யாரும் காயங்களுக்கு உள்ளாகவில்லையென பொலிஸார் தெரிவித்தனர். கட்டடத்தின் நான்கு தூண்கள் முறிந்து வீழ்ந்தமையினாலேயே கூரையின் ஒரு பகுதி உடைந்து கீழே விழுந்திருப்பதாகவும் பொலிஸார் கூறினர்.

‘மரணத்தின் வாசனை’, ‘பலி ஆடு’ புத்தக வெளியீடுகள்

ஈழத்தின் அறியப்பட்ட கவிஞரும் விமர்சகருமான கருணாகரனின் கவிதைகள் மற்றும் த.அகிலனின் மரணத்தின் வாசனை ஆகிய நூல்களின் வெளியீடு வெள்ளிக்கிழமை கனடா – ஸ்காபரோ சிவிக் சென்ரரில் மாலை 6 இலிருந்து 9 மணி வரை இடம்பெற இருக்கிறது. கருணாகரனின் தொகுதி போர் தொடங்க முன் வன்னியுள்ளிருந்து நண்பர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவையாகும்.Book_Launch_28Aug09

இலங்கை 339 ஓட்டங்கள் முன்னிலை

2nd-test.jpgகொழும்பில் நடைபெறும் இலங்கை – நியூஸீலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் 3ஆம் நாளான இன்று இலங்கை அணி தன் இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ஓட்டங்கள் எடுத்து ஒட்டு மொத்தமாக 339 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.

முன்னதாக நியூஸீலாந்து 234 ஓட்டங்களுக்கு வீழ்ந்தது. இலங்கை முதல் இன்னிங்ஸில் நியூஸீலாந்து  ஓட்டஎண்ணிக்கையைக் காட்டிலும் 182 ஓட்டங்கள் கூடுதலாகப் பெற்றிருந்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் 42 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 33 ஓட்டங்கள்  எடுத்த தில்ஷான், படேல் பந்தை மேலேறி வந்து தூக்கி அடிக்க முயல பந்து மட்டையின் விளிம்பில் பட்டு மேலே எழுந்தது. அதனை குப்டில் முன்னால் ஓடி வந்து கீழே விழுவதற்கு சற்று முன் பந்தை பிடி ஆக மாற்றினார்.

மற்றொரு துவக்க வீரர் பரனவிதனா 34 ஓட்டங்கள்  எடுத்து மெக்கல்லமிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் இவர் அவுட் சந்தேகத்திற்கிடமாக அமைந்தது. தற்போது சங்கக்காரா 64 ஓட்டங்களுடனும், ஜெயவர்தனே 23 ஓட்டங்களுடனும் விளையாடி வருகின்றனர்.

வானம் அழுது……….. : நோர்வே நக்கீரா

idp tamils

வானம் அழுது……..

அழுது கொண்டிருக்கிறது வானம்
நிந்திக்கப்பட்ட நிலத்தையும்
வஞ்சிக்கப்பட்ட வன்னிமக்களையும் எண்ணி.

அநியாயங்கள் கண்டும் அழாதுபோன
அகிலத்தின் கண்களில்
கண்ணீர் வற்றியதால்
வேலிக்கம்பியில் கன்னம் உரஞ்சி
கண்ணீர் எடுக்கிறார்கள் எம்குழந்தைகள்.
வெளியிலுள்ள புல்லை மேய
கம்பிவேலிக்குள்ளால் தலை நீட்டும்
ஆடு மாடுகள்போல்
தமிழ் மனித மந்தைகள்.

அழுது கொண்டே இருக்கிறது வானம்.
பெற்றோரைத் தொலைத்த பிள்ளைபோல்
வையத்தில் மனிதத்தைத் தொலைத்த வானம்.

வெள்ளத்தில் குமிழிகள்
அம்மையாக
எம்மக்கள் முகத்தில்.

கந்தகக்காற்றை சுவாசித்தே
வைரம்பாய்ந்து கறுத்துப் போன
கருங்காலிக்கட்டைத் தேகங்களில்
பற்றீரியாக்கள், வைரசுகள்
தம்கொடுக்குகளைச் சாணை பிடிக்கின்றன.

இராணுவத்தின் குண்டுக் கொட்டலுக்கும்
புலிகளின் பச்சைமட்டையடிக்கும்
பழுத்தும் பலியாகாச் சிரஞ்சீவிகளை
புத்தனின் பொக்கைவாய் பதம்பார்க்கிறது.
புத்தம் புத்தெடுத்திருக்கிறது பொய்களாக.
புத்தம் இனி பத்தும் செய்யும்.

பட்டி கட்டி வாழ்ந்த இனமொன்று
மேய்ச்சல் மறுக்கப்பட்டு
சேறு சகதிகளுக்குள்
பட்டிகட்டி விடப்பட்டிருக்கிறது
நோய்கள் நொடிகள்
குட்டிபோட்டு நடமாட.

வானம் பிசிறி அடிப்பதை
பார்த்துப் பார்த்தே
குழந்தைகளில் இருந்து
கிழடுகள் வரை
வயிற்றிலடிபட்டு
வயிற்றாலடிக்கிறார்கள்.
கொலரா என்பார்கள் வைத்தியர்கள்
கொல்லாது என்கிறதே பொல்லாத அரசு.

எலும்புக் கூடுகளிலேயே
காமம் கொள்ளும்
காக்கிச்சட்டைக்காரர்கள்
கம்பிவேலிகளுக்குக் காவல்.
பிணங்கள் மேலேயே
புணரத்துடிக்கிறதா புத்தம்.

சரியான மேய்ப்பனின்றி
மேயப்பட்ட இனம்
கம்பிவேலிகளின் பின்னால்
புதிய மேய்ப்பனைத் தேடுகிறது.

ஆண்டாண்டு காலமாக மனதில்
அடிமைவிலங்கோடு மேய்க்கப்பட்ட இனம்தானே.
மேலைநாட்டவனை அண்ணாந்து பார்த்தாலும்
அவன் மேய்ப்பனாகவும் இல்லை
காப்பனாகவும் இல்லை.

புலிக்குட்டிகள் சிங்கப்பால் குடித்து
அகதிகள் முகாமுக்குள்ளேயே
புலி வேட்டையாடுகிறார்கள்.
கிலிசகெட்ட இனம் என்று
மண்ணில்லாக் காரணத்தால்
சேறுவாரி எறிகிறாள் ஒரு கிழவி.

வானம் மட்டும் வஞ்சகமில்லாது
அழுதுகொண்டிருக்கிறது
தன் ஆசைதீர எம்மக்கள் மனம்போல்.
இனி வஞ்சகங்களுக்கு வரட்சி இல்லை.

புலிகளின் வெளிநாட்டு சொத்துக்களை பெற முயற்சி – வெளிவிவகார அமைச்சர் தகவல்

rohitha-bogollagama_s.jpgபுலிகளின் வெளிநாட்டுச் சொத்துக்களை முடக்கி அவற்றை இலங்கை அரசாங்கத்துக்கு பெற்றுக்கொள்வது குறித்து சர்வதேச மட்டத்தில் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார்.

இது தொடர்பாக உலக நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களிடம் பிரத்தியேகமாக எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்; சர்வதேச மட்டத்தில் வியாபித்திருக்கும் புலிகளின் வலைப்பின்னல்களை தடைசெய்வது குறித்து வெளிநாடுகளின் தூதுவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இதேவேளை வெளிநாடுகளிலிருக்கும் புலிகளின் சொத்துக்களை இனங்கண்டு அவற்றின் உரிமைகளை இலங்கை அரசாங்கத்திற்குப் பெற்றுக்கொள்ள உதவ முன்வர வேண்டுமென சம்பந்தப்பட்ட நாடுகளிடம் கோரக்கை விடப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். புலிகளின் சர்வதேச வலையமைப்பு இன்னமும் செயற்பட்டு வருகின்றது. அதனை தடை செய்து வெளிநாடுகளில் உள்ள புலிகளின் சொத்துக்களை முடக்குவது குறித்து தொடர்ந்தும் சர்வதேச மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதுடன் அதற்கு உலக நாடுகளும் பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகின்றன.

அதனை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உதவிகளினூடாக காணக்கூடியதாக இருக்கின்றதெனவும் அமைச்சர் போகொல்லாகம மேலும் தெரிவித்தார்.

பாக். தற்கொலை தாக்குதல்-50 பேர் பலி

பாகிஸ்தானில் நேற்று நடந்த தற்கொலை தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் 50 பேர் பலியானார்கள். ஆப்கானிஸ்தானின் எல்லைப்புறத்தில் இருக்கும் பாகிஸ்தானின் கைபர் பகுதியில் நேற்று சோதனை சாவடி ஒன்றில் தீவிரவாதிகள் தற்கொலை  படைதாக்குதல்  நடத்தினர்.

அந்த தீவிரவாதி, ஆப்கானிஸ்தான் போலீசார் நேற்று ரமலான் நோன்பை முடித்துவிட்டு உணவு அருந்தும் நேரத்தில் வெடிகுண்டுகளை வெடிக்க செய்தான். இதில் அந்த தீவிரவாதி உட்பட 22 பேர் பலியானார்கள். இதில் பெரும்பான்மையோனோர் போலீசார் தான். மேலும், 27 பேர் படுகாயம் அடைந்தார்கள்.

இந்த சம்பவத்துக்கு தாலிபான்களுடன் தொடர்புடைய அப்துல்லா அசம் சாகீத் படை என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்நிலையில் தெற்கு வசிரிஸ்தான் பகுதியில் அமெரிக்க விமானங்கள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் சுமார் 8 தீவிரவாதிகள் பலியாகியுள்ளனர். தாலிபான் அமைப்பின் பாகிஸ்தான் பிரிவு தலைவராக புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஹகிமுல்லா மசூத்தை கொல்ல அமெரிக்கா  இந்த தாக்குதலை மேற்கொண்டதாக தெரிகிறது. இதை தொடர்ந்து அப்பகுதியில் பாகிஸ்தான்  போலீசாருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையில் நடந்த மோதலில் 9 தீவிரவாதிகள்  கொல்லப்பட்டனர். 35 தீவிரவாதிகள் பிடிபட்டனர்.அதேபோல் மாலகன்ட் பகுதியில் 4 தீவிரவாதிகளும், பனர் மாவட்டத்தில் 7 தீவிரவாதிகளையும் போலீசார் சுட்டு கொன்றனர்.

இலங்கை தேசிய கொடி எரிப்பு

ExtraJudicialKillingsதமிழர் களை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்து கொலை செயத்தாகக் கூறப்படும்  செயலைக் கண்டித்து கரூர் நீதி மன்றம் முன்பு வழக்கறிஞர்கள் இலங்கை தேசிய கொடியை செருப்பால் அடித்து, தீ வைத்து எரித்தனர்.

இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் போர் முடிந்த நிலையில் அப்பாவி தமிழர்களை பாதுகாப்பு வளைத்திற்குள் வைத்து இலங்கை ராணுவம் நிர்வாணப்படுத்தி கொடுமை செய்து படுகொலை செய்து வருவதாக தமிழ் ஈழ ஆதரவாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் இலங்கை ராணுவத்திற்கு தங்களது கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் கரூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இலங்கை வழக்கறிஞர் சங்க துணைத் தலைவர் ரமேஷ் தலைமையில், வழக்கறிஞர்கள் செயலாளர் நடேசன், இராஜேந்திரன், நன்மாறன் முன்னிலையில் இலங்கை தேசிய கொடியை செருப்பால் அடித்து தீ வைத்து கொழுத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதில் 100 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.