கொழும்பில் நடைபெறும் இலங்கை – நியூஸீலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் 3ஆம் நாளான இன்று இலங்கை அணி தன் இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ஓட்டங்கள் எடுத்து ஒட்டு மொத்தமாக 339 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.
முன்னதாக நியூஸீலாந்து 234 ஓட்டங்களுக்கு வீழ்ந்தது. இலங்கை முதல் இன்னிங்ஸில் நியூஸீலாந்து ஓட்டஎண்ணிக்கையைக் காட்டிலும் 182 ஓட்டங்கள் கூடுதலாகப் பெற்றிருந்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் 42 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 33 ஓட்டங்கள் எடுத்த தில்ஷான், படேல் பந்தை மேலேறி வந்து தூக்கி அடிக்க முயல பந்து மட்டையின் விளிம்பில் பட்டு மேலே எழுந்தது. அதனை குப்டில் முன்னால் ஓடி வந்து கீழே விழுவதற்கு சற்று முன் பந்தை பிடி ஆக மாற்றினார்.
மற்றொரு துவக்க வீரர் பரனவிதனா 34 ஓட்டங்கள் எடுத்து மெக்கல்லமிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் இவர் அவுட் சந்தேகத்திற்கிடமாக அமைந்தது. தற்போது சங்கக்காரா 64 ஓட்டங்களுடனும், ஜெயவர்தனே 23 ஓட்டங்களுடனும் விளையாடி வருகின்றனர்.