வானம் அழுது……..
அழுது கொண்டிருக்கிறது வானம்
நிந்திக்கப்பட்ட நிலத்தையும்
வஞ்சிக்கப்பட்ட வன்னிமக்களையும் எண்ணி.
அநியாயங்கள் கண்டும் அழாதுபோன
அகிலத்தின் கண்களில்
கண்ணீர் வற்றியதால்
வேலிக்கம்பியில் கன்னம் உரஞ்சி
கண்ணீர் எடுக்கிறார்கள் எம்குழந்தைகள்.
வெளியிலுள்ள புல்லை மேய
கம்பிவேலிக்குள்ளால் தலை நீட்டும்
ஆடு மாடுகள்போல்
தமிழ் மனித மந்தைகள்.
அழுது கொண்டே இருக்கிறது வானம்.
பெற்றோரைத் தொலைத்த பிள்ளைபோல்
வையத்தில் மனிதத்தைத் தொலைத்த வானம்.
வெள்ளத்தில் குமிழிகள்
அம்மையாக
எம்மக்கள் முகத்தில்.
கந்தகக்காற்றை சுவாசித்தே
வைரம்பாய்ந்து கறுத்துப் போன
கருங்காலிக்கட்டைத் தேகங்களில்
பற்றீரியாக்கள், வைரசுகள்
தம்கொடுக்குகளைச் சாணை பிடிக்கின்றன.
இராணுவத்தின் குண்டுக் கொட்டலுக்கும்
புலிகளின் பச்சைமட்டையடிக்கும்
பழுத்தும் பலியாகாச் சிரஞ்சீவிகளை
புத்தனின் பொக்கைவாய் பதம்பார்க்கிறது.
புத்தம் புத்தெடுத்திருக்கிறது பொய்களாக.
புத்தம் இனி பத்தும் செய்யும்.
பட்டி கட்டி வாழ்ந்த இனமொன்று
மேய்ச்சல் மறுக்கப்பட்டு
சேறு சகதிகளுக்குள்
பட்டிகட்டி விடப்பட்டிருக்கிறது
நோய்கள் நொடிகள்
குட்டிபோட்டு நடமாட.
வானம் பிசிறி அடிப்பதை
பார்த்துப் பார்த்தே
குழந்தைகளில் இருந்து
கிழடுகள் வரை
வயிற்றிலடிபட்டு
வயிற்றாலடிக்கிறார்கள்.
கொலரா என்பார்கள் வைத்தியர்கள்
கொல்லாது என்கிறதே பொல்லாத அரசு.
எலும்புக் கூடுகளிலேயே
காமம் கொள்ளும்
காக்கிச்சட்டைக்காரர்கள்
கம்பிவேலிகளுக்குக் காவல்.
பிணங்கள் மேலேயே
புணரத்துடிக்கிறதா புத்தம்.
சரியான மேய்ப்பனின்றி
மேயப்பட்ட இனம்
கம்பிவேலிகளின் பின்னால்
புதிய மேய்ப்பனைத் தேடுகிறது.
ஆண்டாண்டு காலமாக மனதில்
அடிமைவிலங்கோடு மேய்க்கப்பட்ட இனம்தானே.
மேலைநாட்டவனை அண்ணாந்து பார்த்தாலும்
அவன் மேய்ப்பனாகவும் இல்லை
காப்பனாகவும் இல்லை.
புலிக்குட்டிகள் சிங்கப்பால் குடித்து
அகதிகள் முகாமுக்குள்ளேயே
புலி வேட்டையாடுகிறார்கள்.
கிலிசகெட்ட இனம் என்று
மண்ணில்லாக் காரணத்தால்
சேறுவாரி எறிகிறாள் ஒரு கிழவி.
வானம் மட்டும் வஞ்சகமில்லாது
அழுதுகொண்டிருக்கிறது
தன் ஆசைதீர எம்மக்கள் மனம்போல்.
இனி வஞ்சகங்களுக்கு வரட்சி இல்லை.
john
உள்ள நிலைப்பாடு உண்மை நிலைப்பாடு கவிதையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
உழுது பண்படுத்தப்படாத நிலத்தில் இட்ட வேளாண்மை போல் தமிழர் போராட்டம் பயன் தராமல் போய்விட்டது. தற்போது அகதி முகாமில் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் உள்ளவர்கள் மட்டும்தான் போராட்டத்தின் எச்ச சொச்சங்களாக அல்லது தமிழர்களின் தலைவிதியை தீர்மானிக்க உள்ளவர்களாக விரும்பிய அரசியல் பக்கங்களுக்கு இழுக்கப்படுகிறார்கள்.
இவர்களுக்கு உதவி செய்ய விரும்பாதவர்களும் இவர்களை வைத்துதான் அரசியல் பிழைப்பு நடாத்துகிறார்கள்
Kusumbo
இவர்களுக்குத்தான் மருந்து அனுப்பு; உணவனுப்பு என புலம்பெயர் புண்ணாக்குகள் கத்தினர். பிரபாகரன் போனதும் ஒரு கதையையும் காணோம். அன்று அவர்கள் கத்தியது இந்தமக்களுக்கா? அடிப்படை நேர்மையற்ற இந்த இனம்……. லாயக்கு. மக்கள் மக்கள் என்று மக்களையே எல்லோரும் கொல்கிறார்களே.