2025

2025

ஐந்து வருடங்களில் புலமைப்பரிசில் பரீட்சை முற்றாக ஒழிக்கப்படும் !

ஐந்து வருடங்களில் புலமைப்பரிசில் பரீட்சை முற்றாக ஒழிக்கப்படும் !

இன்னும் ஐந்து வருடங்களில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முற்றாக ஒழிக்கப்படும் என அரச தரப்பினர் தெரிவித்துள்ளனர். உலகத்தில் உள்ள மிக மோசமான பரீட்சை ஐந்தாம் தரப் புலமை பரிசில் பரீட்சை என்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷாந்த பத்ம குமார தெரிவித்த்துள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், புலமைப்பரிசில் பரீட்சையை தடை செய்யாததால் வசதி வாய்ப்புகள் உள்ள பாடசாலைகளுக்கு பின் தங்கிய பாடசாலை மாணவர்கள் செல்வதற்கான வாய்ப்பு இல்லாமல் போகிறது.

எதிர்காலத்தில் பின் தங்கிய பாடசாலைகளை இல்லாமல் செய்யப்பட்டு அனைத்து பாடசாலைகளுக்கும் வசதிகள் செய்து கொடுக்கப்படும். எதிர்வரும் ஐந்து வருடங்களில் ஐந்தாம் தரப் புலமை பரிசில் பரீட்சை முற்றாக இல்லாதொழிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஷாந்த பத்ம குமார தெரிவித்துள்ளார்.

 

இணையவழி குற்ற விசாரணைப் பிரிவு யாழில் திறப்பு !

இணையவழி குற்ற விசாரணைப் பிரிவு யாழில் திறப்பு !

வட மாகாணத்தில் இணையவழி குற்றங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்ற காரணத்தினால்,
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் இணையக் குற்ற விசாரணைப் பிரிவு பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதனால், இணையக் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளை முன்வைப்பதற்காகக் கொழும்புக்குச் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது. எனவே, இந்த விடயம் தொடர்பில் பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே, யாழ்ப்பாணத்தில் இணையக் குற்ற விசாரணைப் பிரிவு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

 

உள்ளூராட்சி தேர்தல் – வாக்காளர் அட்டைகள் நாளை மறுதினம் வரை வழங்கப்படும்!

உள்ளூராட்சி தேர்தல் – வாக்காளர் அட்டைகள் நாளை மறுதினம் வரை வழங்கப்படும்!

மே 6 ஆம் திகதி இடம்பெறவுள்ள தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு விநியோகிக்கும் பணி நாளை மறுதினம் வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த திகதிக்குப் பின்னர் வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாத வாக்காளர்கள் தங்களுக்குரிய அஞ்சல் அலுவலகங்களுக்குச் சென்று தமது அடையாளத்தைச் சரி செய்து, பின்னர் வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

வாக்காளர்கள் தங்களுக்குரிய வாக்காளர் அட்டைகளைத் தவிர, வேறு வாக்காளர் அட்டைகளை தம்வசம் வைத்திருப்பது குற்றம் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த 24 ஆம் மற்றும் 25 ஆம் திகதிகளில் அஞ்சல் மூல வாக்கைப் பதிவு செய்யத் தவறியவர்கள் நாளை மற்றும் நாளை மறுதினங்களில் தங்களது வாக்குகளைப் பதிவு செய்வதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்தமுறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அஞ்சல் மூல வாக்களிப்பிற்காக 6,63,499 பேர் விண்ணப்பித்த நிலையில், அவர்களில் 6,48,490 பேர் தகுதி பெற்றனர். இதற்கிடையில், உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்கப்படும் ஒதுக்கீடுகள் தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில் ஜனாதிபதிக்குக் கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

 கனடா வான்கூவரில் தெருவிழாவில் காரால் மோதித் தள்ளி 11 பேர் பலி !

 கனடா வான்கூவரில் தெருவிழாவில் காரால் மோதித் தள்ளி 11 பேர் பலி !

வன்கூவரில் நடந்த பிலிப்பைன்ஸ் கலாச்சாரத்தை கொண்டாடும் “லாபு லாபு“ என்றழைக்கப்படும் தெரு விழா கூட்டத்திற்குள் கார் ஒன்றை செலுத்தி வந்த நபர், பாதசாரிகள் மீது மோதியதில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டதாக வன்கூவர் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இத்தாக்குதல் சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி சுமார் 20:14 மணிக்கு நடந்ததுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக கனேடிய பிரதமர் மார்க் கானி தெரிவித்துள்ளார். மேலும் இத்தாக்குதல் குறித்து கூறும் போது அவர் கனடாவின் இதயம் நொருங்கியுள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

வாகனத்தைச் செலுத்தி வந்த 30 வயதுடைய ஒரு ஆண் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் வன்கூவர் காவல்துறை இந்த சம்பவம் பயங்கரவாத செயல் அல்ல என்று உறுதியாக நம்புவதாக தெரிவித்துள்ளது. சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

கனேடிய உள்ளூர் நேரப்படி நேற்று ஞாயிற்றுக்கிழமை 27 ஆம் திகதி இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இன்று டைபெற்றுக்கொண்டிருக்கும் பொதுத்தேர்தலில் இச்சம்பவம் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கருதப்படுகிறது.

இதேமாதிரியே ஜேர்மனியில் பொதுத்தேர்தல் சமயத்தில் அடுத்தடுத்து காரால் பொதுமக்கள் மீது மோதி தாக்குதல்கள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஜேர்மனியின் தீவிர வலதுசாரிக் கட்சியான ஏஎப்ஃடி ( AFD) இப்படியான தாக்குதலை தனது தேர்தல் பரப்புரையில் பயன்படுத்தி வாக்கு வேட்டையில் ஈடுபட்டது. தேர்தல் பெறுபேறுகளில் கணிசமானளவு வெற்றியையும் பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது. கனடாவின் வலதுசாரிக்கட்சியான பழமைவாத கட்சி – கென்சர்வேடிவ் கட்சிக்கு இச்சம்பவம் மேலதிக வாக்குகளைப் பெற்றுக் கொடுக்க வாய்ப்புள்ளது.

நாட்டில் 120 வகையான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு !

நாட்டில் 120 வகையான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு !

நாட்டில் இதுவரை 120 வகையான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருந்தாளர்கள் சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவ தெரிவித்துள்ளார். மருந்து உற்பத்தி தொடர்பான நிபுணத்துவம் கொண்ட தரப்பினரின் பற்றாக்குறையின் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த விடயம் தொடர்பில் பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும், அவை தொடர்பில் கலந்துரையாடுவதற்கேனும் தற்போதைய சுகாதார அமைச்சர் தயாராக இல்லை என துஷார ரணதேவ தெரிவித்துள்ளார்.

என்பிபி மீது பழிபோட ஓடித்திரியும் போலித் தமிழ் தேசியம் – பேனைப் பெருச்சாளியாக்கும் முயற்சிகள் !

என்பிபி மீது பழிபோட ஓடித்திரியும் போலித் தமிழ் தேசியம் – பேனைப் பெருச்சாளியாக்கும் முயற்சிகள் !

கிரிபத்கொட பிரதேசத்தில் தனிநபர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் காணொளியொன்று சமூக ஊடகங்களில் கடந்த சில நாட்களாக பரப்பப்பட்டு வருகின்றன. அக்காணொளியில் ஆண் ஒருவர் பிரதான சாலையொன்றில் தூரத்திச் சென்று தாக்கப்படுகிறார். இந்தக் காணொளியை பகிரும் சில தமிழ் சமூகவலைத்தள பயனாளிகள் என்பிபியினரே வீதியில் வைத்து காட்டுமிராண்டித்தனமாக பொதுமகனை தாக்குவதாக குற்றம் சாட்டினர்.

உண்மையில் நடந்தது என்னவென்றால் கிரிபத்கொட பகுதியில் நடந்த பெண்ணொருவருடனான காதல் விவகாரத்தாலேயே இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறாக தேர்தல் காலத்தில் பல போலியான காணொளிகள் பரப்பட்டு வருவது தொடர்பில் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு பல பொய்ச் செய்திகளும் அரைகுறைத் தகவல்களும் எதிர்க் கட்சிகளால் பரப்பப்பட்டு வருகின்றது. தமிழ் கட்சிகள் உட்பட்ட எதிர்கட்சிகள் மக்கள் ஏன் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்ற நியாயத்தை வைக்கவில்லை. உள்ளுராட்சி சபையை வென்றால் தாங்கள் என்ன செய்வோம் என்றும் அவர்கள் எதையும் முன் வைக்கவில்லை. உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிந்ததுமே கட்சிக் கொள்கைகள் இவ்வாமலேயே போட்டியிட்ட இவர்கள் மத்தியில் பதவிக்கான போட்டிகள் வலுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவை பற்றி நல்லூர் பிரதேச சபை பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய மாநகரசபை வேட்பாளர் எஸ் கபிலன் “நாங்கள் பேசுவதை அப்படியே போடுங்கள் வெட்டிக் கொத்தி திரித்து போடுகின்றீர்கள். எல்லாத் தொழிலுக்கும் ஒரு தொழில் தர்மம் இருக்கின்றது. அப்படிச் செய்யாதவர்களை என்னவென்று அழைப்பது” என்றும் கேள்வி எழுப்பினார். “தேசிய மக்களுடைய ஆட்சியில் எங்களை விமர்சிப்பதற்கும், தூற்றுவதற்குமான சுதந்திரத்தை நாங்கள் தந்திருக்கின்றோம்” என்பதையும் அவர் கோடிட்டுக் காட்டினார் மாநகரசபை வேட்பாளர் எஸ் கபிலன். ‘இந்த உரை ஸ்ரிட்ஸ் ஒப் ஈழம்’ என்ற காணொலிக் குழுமத்திலிருந்து பெறப்பட்டது. ஊடகங்களில் குறிப்பாக சமூக ஊடகங்களில் சேறுபூசல்களைப் பார்க்கின்ற போது மனவருத்தமாக இருப்பதாக தனது ஆதங்கத்தை தேசம்நெற் நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

 

இராணுவ வசமுள்ள கிளிநொச்சி காணிகளும் விடுவிக்கப்படும் ஜனாதிபதி வாக்குறுதி !

இராணுவ வசமுள்ள கிளிநொச்சி காணிகளும் விடுவிக்கப்படும் ஜனாதிபதி வாக்குறுதி !

சனிக்கிழமையான ஏப்பிரல் 26 இல் கிளிநொச்சியில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற ஜனாதிபதி மக்களுக்கு பல வாக்குறுதிகளை அளித்துள்ளார். கிளிநொச்சியில் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களுக்கு சொந்தமான காணிகள் விரைவில் விடுவிக்கப்படும். இது தொடர்பாக இராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தால் மூடப்பட்ட வீதிகள் திறந்து விடப்பட்டது போன்று கிளிநொச்சியிலும் பொதுமக்கள் பாவணைக்கு தடை விதிக்கப்பட்ட வீதிகள் திறக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார். அதேபோன்று போரில் வீடுகளை இழந்த மக்கள் மீண்டும் தமது வீடுகளை கட்ட முடியாதுள்ளனர். அம்மக்களுக்கு வீடுகளை கட்டிக்க ஆவன செய்யவதாகவும் ஜனாதிபதி வாக்குறுதியளித்தார்.

பாரம்பரியமாக பயிரிட்டு வந்த மக்களின் நிலங்கள் கூகுள் வரைபடத் துணையுடன் வனப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் கையகப்படுத்துட்டுள்ள விவசாய நிலங்களும் விடுவிக்கப்படும் என ஜனாதிபதி கிளிநொச்சி மக்களுக்கு வாக்குறுதிகளை அள்ளி வீசி உள்ளூராட்ச்சித் தேர்தலில் வாக்குச் சேகரித்தார்.

கிளிநொச்சிக் கூட்டத்தை முடித்துக் கொண்டு புதுக்குடியிருப்பில் தேர்தல்ப் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஜனாதிபதி தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தி மீது வைத்த நம்பிக்கைக்கு கடுகளவு சீர்குலைக்க மாட்டோம் என்றும் உணர்ச்சிவசப்பட்டார்.

புதுக்குடியிருப்பில் உரையாற்றிய ஜனாதிபதி இனவாத அரசியல் இனியும் வேண்டாம். எங்களுடைய முதலாவது ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் விரைவில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை மைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

புதுக்குடியிருப்பில் மீண்டுமொரு தடவை நாட்டை கட்டியெழுப்பும் திட்டத்தில் பங்குபெறுமாறு புலம்பெயர் தமிழர்களிற்கும் அழைப்பு விடுத்தார்.

 

 

இன்னுமொரு பிடோபைல்கள்: வட்டுக்கோட்டையில் 15 வயது மாணவியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய மூவர் கைது !

இன்னுமொரு பிடோபைல்கள்: வட்டுக்கோட்டையில் 15 வயது மாணவியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய மூவர் கைது !

வட்டுக்கோட்டை தொல்புரம் பகுதியில் வீடொன்றில் வைத்து 15 வயதான சிறுமி கடந்த மூன்று ஆண்டுகளாக பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார். தாயின் பராமரிப்பில் வாழும் அச்சிறுமிக்கு இக்கொடுமை 13 வயதிலிருந்து ஆரம்பித்துள்ளது.

இனிப்பு பண்டங்களை கொடுத்து அச்சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஒரு கூட்டம், தங்களிடம் சிறுமியின் அந்தரங்க காணொளி இருப்பதாக பயமுறுத்தி தொடர்ந்து பாலியல் சுரண்டல் மற்றும் பாலியல் வன்கொடுமை செய்து வந்திருப்பதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இந்த மோசமான செயலில் இரு பெண்கள் பிரதான குற்றவாளிகள் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். அதிலொரு பெண் ரிக்ரொக்கில் பிரபலமானவர் எனவும் கூறப்படுகிறது. குறித்த பெண்ணின் வீட்டிலேயே சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். பாடசாலை மாணவியான இச்சிறுமியை தாயாருக்கு தெரியாமலேயே பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்கள். சம்பந்தப்பட்ட பெண்கள் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பணம் பெற்று வந்துள்ளனர்.

யாழ் மனித உரிமைகள் ஆணையத்தில் மாணவி கொடுத்த வாக்கு மூலத்தின்படி மூன்றுபேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கைதானவர்களில் இரு பெண்களும் ஒரு ஆணும் அடங்குவதாக கூறப்படுகிறது. கைதான 45 வயதான ஆண், சிறுமியை தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்து வருவதாக தெரியவந்துள்ளது.

கடந்த வருட இறுதியில் கிளிநொச்சியிலும் யாழ்ப்பாணத்திலும் கூட பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட சிறுமிகள் கைது செய்யப்பட்டமை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பெற்றோருக்கும் பாதுகாவலர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சரி மாணவர்களுக்கும் பாலியல் கல்வியின் அவசியத்தை இவ்வாறான துயர அனுபவங்கள் உணர்த்துகின்றன. பிள்ளைகள் ஒரு நாளின் பெரும்பாலான நேரத்தை பாடசாலையிலேயே செலவிடுகின்றனர். மேற்கு நாடுகளில் ஆசிரியர்கள் வகுப்பறையில் அட்டவணைப் பாடங்களை மட்டுமே கற்பிப்பதில்லை. வகுப்பாசிரியரின் கடமை மாணவர்களின் உள, உடல் ஆரோக்கியத்திலும் பாதுகாப்பிலும் கவனம் செலுத்துதல் வேண்டும்.

இலங்கையில் இன்னமுமே பாலியல் கல்வி மற்றும் பாலியல் சுகாதாரம் தொடர்பில் போதிய விழிப்புணர்வும் அறிவும் பற்றாக்குறையாகவுள்ளது. கிளிநொச்சியில் கனிஸ்ட மகா வித்தியாலயத்தில் 16 ஆண் சிறுவர்கள் அப்பாடசாலை கிரிக்கெட் பயிற்றிவிப்பாளர் அலனால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான போது கூட பாடசாலை நிர்வாகம் கண்ணை மூடிக் கொண்டு இருந்தது.

இந்த விடயம் ஒரு கட்டத்தில் பூதாகரமாக வெடித்த போது எம்பி சிவஞானம் சிறிதரனின் அரசியல் செல்வாக்கால் மூடி மறைக்க பகீரத பிரயத்தனம் மேற்கொள்ளப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோரின் முயற்சியால் அலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுவர் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் பிடோபைஃல் (PEDOPHILE) தொடர்பில் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். வட்டுக்கோட்டையில் கைதான 45 வயது ஆண் கூட பிடோபைஃல் ஆக இருக்க சந்தர்ப்பம் உண்டு. எனவே வட்டுக்கோட்டை பகுதியில் வேறு சிறுவர்களும் பாதிக்கப்பட்டு உள்ளார்களாக என பூரண விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும். வட்டுக்கோட்டைச் சம்பவத்தில் கைதான பெண்கள் வேறு சிறுமிகளையும் இவ்வாறு பாலியல் துஸ்பிரயோகத்திற்கு விற்றுள்ளார்களாக என போலீசார் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

சிறுவர் நன்னடத்தை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சிறுமியை தமது பராமரிப்பில் எடுத்து பாதுகாப்பு வழங்க வேண்டும். சிறுமியின் எதிர்காலக் கல்வி மற்றும் சிகிச்சை தொடர்பில் வேண்டிய உதவிகள் மற்றும் ஆலோசனைகளை வழங்க வேண்டும். இப்படியான சம்பவங்கள் நடக்கும் போது சமூகம் புரிந்துணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.

இணைய வலையில் மெய்நிகர் உலகத்தில் ( virtual world ) ஈழத்தமிழ்ப் பெண்கள் மீதான ஒடுக்குமுறை எகிறுகிறது !

இணைய வலையில் மெய்நிகர் உலகத்தில் ( virtual world ) ஈழத்தமிழ்ப் பெண்கள் மீதான ஒடுக்குமுறை எகிறுகிறது !

பா உ அர்சுனாவின் வழிகாட்டலில், தனியார் கல்வி நிறுவனத்தின் கலைவிழாவில் நடனமாடிய மாணவியை பாலியல் தொழிலாளியாக சித்தரிக்கும் ஊழல் ஒழிப்பு அணி வன்னியின் அட்டூழியம். நிஜ உலகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்கொடுமைகள், ஒடுக்குமுறைகள், வீட்டு வன்முறைகள் மற்றும் அடக்குமுறைகளுக்கு மேலாக இணையத்தில் மோசமான கருத்தியல் ரீதியான வன்முறைகள் நாள்தோறும் நடக்கின்றன.

எம்பி அர்ச்சுனா இராமநாதனின் பினாமிகளால் நடத்தப்படும் ஊழல் ஒழிப்பு வன்னி அணி என்னும் போலி முகநூலின் பின்னால் மறைந்து கொண்டுள்ள ஒரு பாலியல் வக்கிரம் கொண்ட ஆண்மையவாத கூட்டம் சமூகவலைத்தளங்களில் தமிழ்ப் பெண்கள் மீதான மோசமான தாக்குதலை மேற்கொள்கின்றது.

யுத்தத்தின் பின்னரான வடக்கு கிழக்கில் வாழும் இளம் தலைமுறைப் பெண்களை இலக்கு வைத்து இந்த இணைய மொப்பிங் ( Mobbing ) வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. ஊடகப்பரப்பில் செயற்பட்டு வருகிற பெண்களை இலக்கு வைத்த இக் காட்டுமிராண்டி குழு. இப்போது பொது நிகழ்சிகளில் அல்லது கல்வி நிறுவன நிகழ்வுகளில் பங்கு பற்றி தமது திறமைகளை வெளிப்படுத்தும் பெண்களையும் தங்களது நாசகார வலைக்குள் கொண்டு வந்துள்ளது.

கடந்த நாலைந்து தினங்களாக யாழில் தனியார் கல்வி நிறுவன நிகழ்ச்சியில் சிறந்த முறையில் நடனமாடி பாராட்டுப் பெற்ற இளம்பெண்ணை ஊழல் ஒழிப்பு அணி வன்னி பாலியல் தொழிலாளி என கேவலப்படுத்தி வருகிறது. சம்பந்தப்பட்ட பெண்ணின் படங்களை வெளியிட்டு அவதூறு பரப்புகிறது. துணைக்கு தலைவர் இருந்திருந்தால் அந்த இளம்பெண்ணை மண்டையில் போட்டிருப்பார் என விடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் இழுத்து அந்த அமைப்பையும் கேவலப்படுத்துகிறது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் காதலன் தம்மிடம் தனது காதலியைப் பற்றி எழுத வேண்டாம் என கெஞ்சுவதாகவும் கூறி மார் தட்டுகிறது. நடனமாடிய யுவதியின் படத்தைப் போட்டு ஒரு இரவிற்கு 20,000 ரூபாய் எனவும் பதிவிட்டுள்ளது.

வாய்கிழிய தமிழ்த் தேசியம், தமிழர் அடையாளம், பண்பாடு, மரபு வழித் தாயகம் , தமிழ் மண் என்று கூவிக் கூவிக் அரசியல் செய்யும் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு தமிழ்ப் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி பற்றி எந்த அக்கறையும் இல்லை. பெரும்பாலான தமிழ்த் தேசியக் கட்சிகளால் மட்டுமே தலைமை தாங்கி நடத்தப்படுகின்றன. அக் கட்சிகளில் ஓரிரு பெண்களும் ஆண்மையவாத கருத்தியலுக்குள் அடங்கிக்கிடக்கிடக்கின்றனர். இறுதி யுத்தத்தின் பின்னர் ஈழத்தமிழ்ப் பெண்கள் அடுப்படிக்குள் முடக்கப்பட்டுள்ளனர். ஒரு பெண் பிரதமராக இருக்கின்ற நாட்டில் சமூக வலைத்தளங்களூடாக மேற்கொள்ளப்படும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு ஆளும் என்பிபி அரசாங்கம் இன்னும் கூட காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இரு தினங்களுக்கு முன்னர் தான் யாழில் இணையக் குற்ற விசாரணைப் பிரிவு திறப்பு திறந்து வைக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தில் இணையக் குற்றங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. இதனால் இணையக் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளை முன்வைப்பதற்காகக் கொழும்புக்குச் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது. வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை ஊழல் ஒழிப்பு அணி வன்னி, வடக்கு புலனாய்வு போன்ற போலி முகநூல் கணக்களால் தாக்குதலுக்குள்ளான பெண்கள் யாழ்ப்பாண இணையக் குற்ற அலுவலகத்தை நாடி உடனடியாக தமது முறைப்பாடுகளை பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறான போலி முகநூல்களை முடக்க வேண்டும். அவ்வாறான முகநூல்களில் வரும் அவதூறான பதிவுகளுக்கு பின்னூட்டல் இடும் நபர்களின் பதிவுகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும். அப்படியானவர்களின் முகநூல் கணக்குகள் முடக்கப்பட வேண்டும். போலி சமூக வலைத்தள கணக்குகள் ஊடாக குற்றங்கள் புரிபவர்களை அவர்களது ஆள் அடையாளத்துடன் அம்பலப்படுத்தி சட்ட நடவடிக்கை எடுப்பதன் மூலம் இவ்வாறான துணிகரமான கருத்தியல் வன்முறையில் ஈடுபடுபவர்களை தடுக்கலாம். ஆளும் என்பிபி அரசாங்கம் இணையக்குற்றங்கள் தொடர்பில் இலங்கையில் கடந்த வருடம் கொண்டுவரப்பட்ட சட்டம் வினைத்திறனாக அமுல்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும்.

இணையத்தில் வன்முறையை எதிர்கொள்ளும் பெண்களுக்கு தகுந்த சட்ட மற்றும் உளவியல் ஆலோசனை வழங்கும் திட்டமொன்றை மகளீர் விவகார அமைச்சு உடனடியாக செயல்படுத்த வேண்டும். இவ்வாறான பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்கொள்ள வேண்டுமெனில் பெண்கள் அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும். பெண்கள் தமது விகிதாசாரத்திற்கு ஏற்ப அரசியலில் ஈடுபட வேண்டும். பெண்களை அரசியலில் இறங்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

கட்டுநாயக்காவில் துப்பாக்கி சூடு !

கட்டுநாயக்காவில் துப்பாக்கி சூடு !

கட்டுநாயக்க ஹீனடியன பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் இந்த துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. காயமடைந்த நபர் முதலில் மினுவாங்கொடை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கம்பஹா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்