16

16

வன்னியில் மீள்குடியேறிய மக்கள் தங்கள் வீடுகளை அமைத்துக் கொள்வதில் தாமதங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

வன்னியில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் தங்களின் அழிவடைந்த வீடுகளை அமைத்துக் கொள்வதிலும், சேதமுற்ற விடுகளை திருத்திக்கொள்வதிலும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு; வருகின்றனர்.

வீடுகள் முற்றாக அழிவுற்ற மக்களுக்கு  வீடுகளை அமைத்துக் கொள்வதற்கான உதவிகளை சில நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. இதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியமர்ந்த மக்கள் வீடுகளை அமைத்துக் கொள்வதற்கான உதவிகள் சில பகுதிகளில் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. மூன்றரை இலட்ச ரூபா செலவில் சிறிய வீடுகளை அமைத்துக் கொள்வதற்கான பணம் கட்டம் கட்டமாக வழஙகப்படுகின்றன. வீட்டு அத்திவாரம் இடுவதற்காக முதற்கட்டமாக ஐம்பதினாயிரம் ரூபா வழங்கப்பட்டு அதற்கான வேலைகள் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த கட்ட கொடுப்பனவிற்காக சம்பந்தப்பட்ட மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மூன்று மாதங்களில் வீடமைப்புப் பணிகள் முற்றாக நிறைவடைய வேண்டுமென குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால், அதன்படி தாங்கள் வீட்டு அத்திவார வேலைகள் முடித்து ஒரு மாதமாகியும் அடுத்த கட்ட வேலைக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என மக்கள் எம்மிடம் தெரிவித்துள்ளனர்.

இதே வேளை, வீட்டின் சுவர்கள் எஞ்சியுள்ள நிலையில், கூரைகள் கதவு, யன்னல்களற்ற விடுகளுக்கு திருத்த வேலைகளுக்காக ஒன்றரை இலட்ச ரூபா வழங்குவதாக இன்னொரு நிறுவனம் பதிவுகளை மேற்கொண்டுள்ள நிலையிலும் அதற்கான வேலைத்திட்டங்கள் மிகவும் தாமதமாகி வருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். அடுத்து வரும் மாதங்களில் பருவமழை பெய்ய விருப்பதால் தங்களின் சிறுபிள்ளைகள் அடங்கிய குடும்பத்தினரோடு எவ்வாறு தங்கள் காணிகளில் தங்கியிருப்பது என்கிற கவலைகள் அம்மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடபகுதி பஸ்களில் பயணிக்கும் பெண்கள் படையினரால் தொல்லைகளுக்கு உள்ளாகின்றனர்

வடபகுதிகளில் பஸ்களில் பயணம் செய்யும் பெண்கள் படையினரால் பெரும் சிரமத்திற்கும் அச்சத்திற்கும் உள்ளாகி வருகின்றனர். இளம்பெண்களுக்கு அருகில் அமர்ந்து பயணம் செய்யும் படையினர் சிலர் அப்பெண்களுடன் அங்க சேட்டைகளில் ஈடுபடுகின்றனர். சீருடையில் பயணம் செய்கின்ற படையினர் பெரும்பாலும் மக்களுடன் இருக்கையில் அமர்ந்து பிரயாணம் செய்வதில்லை. ஆனால், சிவில் உடைகளில் பயணம் செய்யும் படையினர் மக்களோடு மக்களாக அவர்களின் அருகில் இருக்கைகளில் அமர்ந்து பிரயாணம் செய்கின்றனர். இவ்வாறான வேளைகளில் அருகில் இளம் பெண்கள் அமர்ந்திருந்தால் அவர்கள் மீது அங்க சேட்டைகளில் ஈடுபடுகின்றனர்.

இதற்கெதிராக பாதிக்கப்படும் பெண்ணோ அல்லது. அதனைக் கவனிக்கின்ற ஏனையொரோ எதுவும் செய்ய முடியாத நிலையிலுள்ளனர். படையினர் என்பதால் அவர்கள் கண்டும் காணாதவர்கள் போல் இருக்கும் கொள்ளும் நிலை ஏற்படுகின்றது. குறிப்பாக யாழப்பாணத்திலிருந்து கிளிநொச்சி. வவுனியா செல்லும் பஸ்களில் இவ்வாறான சம்பவங்கள் அதிகம் இடம்பெறுகின்றன.

‘உலக நாடுகளின் குப்பைகளை கொட்டும் இடமாக எமது நாட்டை வைத்திருக்க முடியாது’ – ஜனாதிபதி

h-tota03.jpgமேட் இன் ஸ்ரீலங்கா எனும் மகுடத்தின் கீழ் உலகம் வியக்கும் உற்பத்தி கேந்திர மையமாக இலங்கை கட்டியெழுப்பப்படுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

சர்வதேச நாடுகளின் கழிவுகளை குவிக்கும் நாடகவன்றி இனி இலங்கையை உலக முன்னிலையில் மாபெரும் உற்பத்தி நாடாகத் திகழ வைப்பதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். உலகிலேயே கடலல்லாத பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படும் முதல் துறைமுகமென வர்ணிக்கப்படும் அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்திற்கு கடல் நீர் நிரப்பும் நிகழ்வை உத்தியோகபூர்வமாக நேற்று ஆரம்பித்து வைத்து உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் மேலும் உரை நிகழ்த்திய ஜனாதிபதி :

இற்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன்னர் எம்மைவிட மிக மிக பின்னடைவாகவிருந்த நாடுகள் இன்று பெரும் முன்னேற்றமடைந்துள்ளன. அதனைப் பார்த்து ஆதங்கப்படுவதற்கான நேரம் இதுவல்ல. தாய்நாட்டை பொருளாதாரத்திலும் அபிவிருத்தியிலும் கட்டியெழுப்பி உற்பத்தியின் கேந்திர நிலையமாக மாற்றும் எமது இலக் கினை வெற்றி கொள்ள சகலரும் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டியது அவசியம்.

பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் இத்தகைய அபிவிருத்தித் திட்டங்கள் நாட்டில் நடைபெறுகின்றன. அம்பாந் தோட்டைத் துறைமுகத்தைப் பொறுத்தவரை பல தடைகள் சவால்கள் விமர்சனங்களுக்குப் பின்னர் வெற்றிகரமாக தற்போது நடைமுறைப் படுத்தப்படுகிது. எமது நாட்டின் வரலாற்றில் பல துறைமுகங்கள் இருந்துள்ளன. எனினும் இந்த துறைமுகமானது உலக வரைபடத்தில் இலங்கையைக் குறித்துக் காட்டும் ஒன்றாகத் திகழ்கிறது. சர்வதேசத்துக்கும் இலங்கைக்குமான தொடர்பை மேலும் வலுப்படுத்துவதாகவும் இது அமைகிறது.

நாட்டுக்கான சுதந்திரத்தினைப் பெற்றுக் கொடுத்துள்ள எமக்கு அபிவிருத்தி மற்றும் பொருளாதார ரீதியில் நாட்டைக் கட்டியெழுப்பும் பாரிய பொறுப்பும் உள்ளது. கடந்த வருடம் மே மாதம் நம் நாட்டை சுதந்திரமாக்கினோம். நாம் இன்று அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிரப்பும் கடல் நீர் சகல பலவீன சிந்தனைகளையும் கழுவிவிடும் என்பது உறுதி.

தொடர்ந்தும் சர்வதேசத்தின் வர்த்தக கேந்திர நிலையமாகவே இலங்கை இருந்து வந்துள்ளது. எனினும் இந்த துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டதனால் எமது தாய்நாடு உலகளாவிய ரீதியில் பிரசித்தமடைகிறது. எமது நாட்டில் சுதந்திர பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற நோக்கிலேயே மஹிந்த சிந்தனை திட்டத்தின் கீழ் பஞ்சமகா திட்டங்களை வகுத்துச் செயற்படுத்தி வருகிறோம். இதன் மூலம் ஐந்து முக்கிய துறைமுகங்களையும் நிர்மாணித்து வருகிறோம்.

உலக நாடுகளின் குப்பைகளைக் கொட்டுகின்ற இடமாக எமது நாட்டை வைத்திருக்க முடியாது. ‘மேட் இன் ஸ்ரீலங்கா’ என்ற பெயருடன் சர்வதேசமெங்கும் புகழ்பெறும் உற்பத்திப் பொருட்களைத் தயாரிக்கின்ற பொருளாதார மையமாக இந்நாடு இனி திகழ வேண்டும். வரட்சியான மாவட்டமாக வர்ணிக்கப்பட்ட அம்பாந்தோட்டையில் தற்போது சர்வதேச துறைமுகம், விமான நிலையம், சர்வதேச விளையாட்டரங்கு, அதிவேக பாதைகள் புதிய ரயில் பாதைகள் என பாரிய அபிவிருத்திகள் இடம்பெறுகின்றன. இந்த துறைமுகம் மூலம் முழு நாட்டினதும் பொருளாதார மையமாக இது திகழும்.

எமது கண்ணுக்குப் புலப்படும் வகையில் நாளாந்தம் நூற்றுக்கணக்கான கப்பல்கள் எமது பிரதேசத்தை ஊடறுத்துச் செல்கின்றன. மத்திய கிழக்கு ஆபிரிக்க வலயங்களைப் போன்று ஆசிய நாடுகளைச் சேர்ந்த கப்பல்களும் இதிலடங்குகின்றன. இவற்றுக்கான எரிபொருள் சேவைகளை வழங்குவதுடன் பெரும் தொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் மையமாகவும் இத்துறைமுகம் விளங்குகிறது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

லக்ஷபானா கெனியன் நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு

லக்ஷபான மற்றும் கெனியன் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வதைத் தவிர்ப்பதற்காக அவற்றின் வான்கதவுகள் நேற்று திறந்துவிடப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி தெரிவித்தார்.

லக்ஷபான நீர்த்தேக்கத்தின் மூன்றுவான் கதவுகள் ஒரு அடி வீதமும், கெனியன் நீருத்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் ஆறு அங்குலப்படியும் திறக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். லக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் நேற்று காலை 10.00 மணியளவிலும் கெனியன் நீர்த்தேக்க வான் கதவுகள் முற்பகல் 10.50 மணியளவிலும் திறக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2 கோடி டொலருக்கு மேல் கொடுத்து ஸன் ஸீ அகதிகள் கனடா வந்துள்ளனர்’

son-k.jpgஸன் ஸீ கப்பலில் கனடாவை சென்றடைந்துள்ள இலங்கைத் தமிழர்கள் சுமார் இரண்டு கோடிக்கு மேற்பட்ட அமெரிக்க டொலர்களை கடத்தல்காரர்களுக்கு கொடுத்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தலா 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் அமெரிக்க டொலர்களை இவர்கள் செலுத்தியதன் பின்னரே தமது 3மாத கடற்பிரயாணத்தை தாய்லாந்திலிருந்து தொடங்கியிருக்கலாம் என கனேடிய பொது பாதுகாப்பு அமைச்சர் விக் டோஸ் கூறியுள்ளார். இந்தக் கப்பலில் பயணித்த பெண்கள் மற்றும் சிறார்களுக்கு கட்டண சலுகை ஏதாவது கடத்தல்காரர்களால் வழங்கப்பட்டதா என்பது குறித்து தமக்கு தெரியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இப்படியான ஆட்கடத்தல்கள் மூலம் கடத்தல்காரர்கள் பெருந்தொகையான பணத்தை இலகுவாகப் பெறுவதற்கு ஸன் ஸீ கப்பல் ஒரு நல்ல உதாரணம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் கடந்த 3 மாதங்கள் கடினமான கடற்பயணத்தை மேற்கொண்ட பிரிட்டிஷ் கொலம்பியா கடற்பிராந்தியத்திற்கு சென்ற இந்தக் கப்பலை கனேடிய அதிகாரிகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். ஆரம்ப விசாரணைகளை மேற்கொண்ட குடிவரவு அதிகாரிகள் தற்போது 490 அகதிகளில் பலரை தடுப்பு முகாம்களுக்கு அனுப்பியுள்ளதாக ஊடகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை கப்பலில் பயணித்த இலங்கையர்களின் பெயர் விபரங்கள் எதுவும் கனேடிய அரசாங்கத்தினால் வெளியிடப்படவில்லை. பிலிப்பைன்ஸ¤க்கும் ஜப்பானுக்கும் இடையிலான தாய்லாந்து வளைகுடாவில் இருந்து இந்தக் கப்பல் பயணத்தை ஆரம்பித்துள்ளது. 10 மாதங்களுக்கு முன்னர் கனடாவை வந்தடைந்த ஓசியன் லேடி கப்பல் பயணித்த வழியாக ஆனால் சிறிது மாறுபட்ட பாதையில் ஸன் ஸீ கப்பல் பயணித்துள்ளதாக கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட கப்பல் தாய்லாந்தில் இருந்தே பயணத்தை ஆரம்பித்தது என்ற விடயம் கப்பல் பயணிகளின் அகதி அந்தஸ்து பரிசீலனையின் போது கவனத்திற் கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் மேலும் கூறினர்.

இரத்தினபுரி மின்சாரம் தாக்கிய சம்பவம்; மூன்றாவது யுவதியும் உயிரிழப்பு

இரத்தினபுரி, பத்துல்ஹத்தவில் மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளான மூன்றாவது யுவதியும் உயிரிழந்துள்ளார். சந்தமாலி ஆட்டிக்கல எனும் 15வயது யுவதி மின்சாரத் தாக்குதலுக்குள்ளாகி இரத்தினபுரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டிருந்தார்.

அவரது சகோதரன் மதுக சாரங்க ஆட்டிகலயும் ஒன்று விட்ட சகோதரியான சந்துனி உபேக்க ஆட்டிகலயும் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தனர். இவர்கள் இருவரும் பத்து வயதுடையவர்களாவர்.

இரத்தினபுரி பத்துல்ஹத்தயில் உள்ள அவர்களது வீட்டுக்கு அருகே இருந்த ரம்புட்டான் மரத்தில் ரம்புட்டான் பழங்களை பறிக்க கம்பியொன்றை பயன்படுத்திய சமயம் அந்தக் கம்பி ரம்புட்டான் மரத்துடன் சென்று கொண்டிருந்த அதிக மின்சார ஓட்டத்துடன் கூடிய மின்சாரக் கம்பியில் பட்டதால் அவர்கள் மூவரும் மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகினர். சந்தமாலியின் மற்றொரு சகோதரர் டியூசன் வகுப்புக்கு சென்றிருந்ததால் சம்பவம் இடம்பெற்ற சமயம் வீட்டில் இருக்கவில்லை.

ஒருநாள் கிரிக்கெட்டிலும் இன்னிங்ஸ்முறை: அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை முடிவு

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் இன்னிங்ஸ் நடைமுறையை கொண்டு வர அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை முடி வெடுத்துள்ளது.

இதற்கு அவுஸ்திரேலிய வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். எனினும் இந்த முறையை சச்சின் டெண்டுல்கர் வரவேற்றுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் இனிமேல் நடை பெறும் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கள் 2 இன்னிங்ஸ் முறையில் நடைபெறும் என அந்த நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்து உள்ளது.

தன்படி ஒரு நாள் ஆட்டத்தில் இரு அணிகளும் 45 ஓவர்கள் விளையாட வேண்டும். முதல் இன்னிங்ஸ் 20 ஓவர் களைக் கொண்டதாக இருக்கும். இரண் டாவது இன்னிங்ஸ் 25 ஓவர்களைக் கொண்டதாக இருக்கும். அவுஸ்திரேலி யாவில் நடைபெற உள்ள மாகாணங்களுக்கு இடையேயான தேசிய கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் மொத்தமுள்ள 31 ஆட்டங்களும் இந்த முறையிலேயே நடைபெறும் என அந்தநாட்டு கிரிக்கெட் சபை கூறியுள்ளது.

இந்த முறைக்கு ரிக்கி பொண்டிங், மைக் ஹசி உள்ளிட்ட அவுஸ்திரேலிய வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இந்த முறையால் அவுஸ்திரேலியாவின் கிரிக்கெட் எதிர்காலத்தில் பெரிய ஆபத்து ஏற்படும் என்றும் 20 ஓவர் போட்டிக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி முறையை ஒழிக்கவே இந்தமுறை கொண்டுவரப்படுவதாகவும் அவர்கள் கூறி உள்ளனர்.

எனினும் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இந்த முறையை வரவேற்றுள்ளார்.

இது குறித்து மும்பையில் வெள்ளிக் கிழமை அவர் கூறியது: அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் முயற்சி வரவேற்கத் தக்கது.

ஒரு நாள் போட்டிகளில் 2 இன்னிங்ஸ் முறையை அமுல்படுத்தும் யோசனை எனக்கு 2002ம் ஆண்டிலேயே தோன்றியது. அதை 2009ம் ஆண்டு வெளிப்படுத்தினேன்.

ஒரு நாள் போட்டிகளின் போது ஆட் டத்தின் பிற்பகுதியில் மழை குறுக்கிட்டால் 2வதாக துடுப்பெடுத்தாட்டம் செய்யும் அணி அதிகம் பாதிக்கப்படுகிறது. அதே போல பகல் இரவு ஆட்டமாக நடைபெறும் போட்டிகளில் முதலில் துடுப்பெடுத்தாட்டம் செய்யும் அணி பகலில் துடுப்பெடுத்தாடு வதை முடித்து விடுகிறது. மற்றொரு அணி இரவில் விளக்கு வெளிச்சத்தில் விளையாட வேண்டி உள்ளது. இன்னிங்ஸ் முறை கொண்டுவரப்பட்டால் இரு அணிகளுமே பகலிலும், விளக்கு வெளிச்சத்திலும் விளையாட வேண்டிய சூழ்நிலை ஏற்ப டும் இது வரவேற்கத்தக்கதே. சர்வதேச போட்டிகளிலும் இந்த முறை கொண்டு வரப்பட வேண்டும் என்றார் டெண்டுல்கர்.

பிரபாகரனையும் குடும்பத்தினரையும் வெளியேற்ற ஹெலி வாங்க முயன்றேன்: குமரன் பத்மநாதன்

Kumaran_Pathmanathan_New_Photoதமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரும் பிரபாகரனுக்குப் பின் அவ்வமைப்பின் தலைவராக அறிவிக்கப்பட்டவருமான குமரன் பத்மநாதனை (கே.பி.) சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் ‘டெய்லிமிரர்’ ஆங்கில பத்திரிகைக்காக கண்ட விசேட நேர்காணலின் இரண்டாவது பாகம் ஓகஸ்ட் 14 ஆம் திகதி அப்பத்திரிகையில் வெளியாகியது. அப்பாகத்தின் தமிழாக்கம் இது.

(யூன் 14 2009ல் குமரன் பத்மநாதன் வே பிரபாகரனின் மரணம் தொடர்பாக தேசம்நெற் க்கு தெரிவித்த கருத்துக்கள். இப்போது வெளியிட்டு வரும் கருத்துக்களை பெரும்பாலும் 2009 யூனிலும் குமரன் பத்மநாதன் கொண்டிருந்தார். இவை தேசம்நெற் இல் வெளியாகி இருந்தது. தவிபு தலைவர் பிரபாகரன் உண்மையிலேயே வீர மரணம் எய்தி விட்டார். : விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை , VVT E ஆக மாறும் LTTE : த ஜெயபாலன் )

”நட்பில் பிரிவு எதுவும் இருக்கவில்லை. பிரிந்திருக்கவும் என்னால் முடியாது. அவர் எனது தலைவர், நண்பர். ஓர் மூத்த சகோதரன்.” : குமரன் பத்மநாதன்

(சென்ற வாரத் தொடர்ச்சி)

கேள்வி:- எப்படி நீங்கள் மீண்டும் திரும்பி வந்தீர்கள்? நீங்கள் இயக்கத்தில் எப்படி, ஏன் மீண்டும் இணைந்தீர்கள்? யுத்தத்தின் இறுதி நாட்களில் உங்கள் பாத்திரம் எவ்வாறு காணப்பட்டது?
பதில்:- நான் இயக்கத்திலிருந்து விலகி தாய்லாந்தில் எனது குடும்பத்துடன் ஒரு அமைதியான வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தேன். எனக்கு மீண்டும் இயக்கத்தில் இணையும் எண்ணம் இருக்கவில்லை. இருப்பினும் தலைவர் பிரபாகரன் கேட்டுக்கொண்டால் நான் மீண்டும் இயக்கத்தில் சேருவேன் என எனது மனைவி எண்ணினார்.

எல்.ரி.ரி.ஈ இலிருந்து விலக்கப்பட்ட ஒருவர் மீண்டும் சேர்க்கப்படுவது என்பது அரிதான நிகழ்வு என்றபடியால் நான் மீண்டும் இயக்கத்தில் இணைவேன் என நான் நினைவிக்கவில்லை. அத்துடன் சில சிரேஷ்ட எல்.ரி.ரி.ஈ தலைவர்கள் எனக்கு எதிராக எந்தளவு வேலை செய்தார்கள் என்பதையும் எனக்கு எதிராக பிரபாகரனின் மனதில் எந்தளவு நச்சுக் கருத்துக்களை ஊன்றியிருந்தனர் என்பதையும் நான் அறிவேன்.

நான் எல்.ரி.ரி.ஈ இல் இல்லாத போதும் என்ன நடக்கின்றது என்பதை  செய்திகள் ஊடாக அறிந்து வந்தேன். நான் எல்.ரி.ரி.ஈ இல் இல்லாத போதும் எல்.ரி.ரி.ஈ சிறப்பாக செயற்படவில்லை என்பதை செய்திகளினூடாக அறிந்துக்கொண்டதால் தொடர்ந்து வந்த நிகழ்வுகளால் கவலை கொண்டு இருந்தேன்.

புலிகளின் கப்பல்கள் இலங்கை கடற்படையால் அழித்தொழிக்கப்பட்டு வந்தன. எல்.ரி.ரி.ஈ யின் ஆயுதங்களை விநியோகித்தவன் என்ற வகையில் கடலால் தொடர்ச்சியாக ஆயுத விநியோகம் நடப்பது எல்.ரி.ரி.ஈ ஐ பொறுத்தவரையில் எவ்வளவு முக்கியமானது என்பதை நான் அறிந்திருந்தேன். எனவே ஆயுதக்கப்பல்கள் அழிக்கப்படுவது மிக பாதகமான விடயம் என்பதை நான் உணர்ந்தேன். 

கேள்வி:- இது எவ்வாறு நடந்தது? இவ்வளவு அதிகமான புலிகளின் கப்பல்களை எதிர் கொண்டு அழிக்கும் அளவுக்கு இலங்கை கடற்படை வினைத்திறன் மிக்கதாக வந்தது எவ்வாறு?
பதில்:- பதவிக்கு வந்த பல்வேறு இலங்கை அரசாங்கங்களும் கடற்படையை கட்டியெழுப்புவதிலும் நவீன மயப்படுத்துவதிலும் ஈடுபட்டு வந்தன. பல்வேறு நாடுகளும் மேலதிக புலனாய்வுத் தகவல்களை இலங்கைக்கு வழங்கி வந்தன. எனவே போர்நிறுத்த காலத்தில் இலங்கை கடற்படை வினைத்திறனில் உயர் நிலையை அடைந்து கொண்டது. போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கடல்வழி போக்குவரத்துப்பற்றி தெளிவான நிபந்தனைகள் அல்லது விதிகள் காணப்படவில்லை. எனவே கடற்படையால் எல்.ரி.ரி.ஈ கப்பல்களின் நடமாட்டத்தை சுதந்திரமாக அவதானிக்க முடிந்தது. 

கேள்வி:- எல்.ரி.ரி.ஈ இதை எதிர்பார்க்கவில்லையா?
பதில்:- பிரபாகரன் இதை எதிர்பார்த்தார். அவர் போரின் வெற்றித் தோல்வி கடலிலேயே இனிவரும் காலங்களில் தீர்மானிக்கப்படும் என 2000 ஆம் ஆண்டில் கூறியிருந்தார். அவர் கடற்புலிகளை உச்ச அளவுக்கு வளர்த்து சவாலுக்கு முகம் கொடுக்க விரும்பினார். ஏன் என என்னால் கூறமுடியாது. ஆனால் அவர் பின்னால் இந்த திட்டத்தை மாற்றியிருந்தார் போலத் தெரிகின்றது. எல்.ரி.ரி.ஈ தரைப்படைப் போராளிகளை வளர்ப்பதிலும் வான்படையை விருத்தி செய்வதிலும் ஈடுபட்டது. பிரபாகரன் முதலில் விரும்பியது போல எல்.ரி.ரி.ஈ யின் கடல் வலுவை விருத்தியாக்கவில்லை. 

மறுபக்கத்தில் இலங்கை கடற்படை பலமானதாகவும் உற்சாகம் மிக்கதாகவும் இருந்தது. இலங்கையின் கடற்பரப்பை சுற்றி அது பாதுகாப்பு அரணை அமைத்ததிலிருந்து கடற்படை தூர இடங்களுக்கும் சென்று எல்.ரி.ரி.ஈ கப்பல்களை கடலில் அழித்தொழித்தது. 

எல்.ரி.ரி.ஈ  கப்பல்களின் நடமாட்டம் பற்றிய புலனாய்வுத் தகவலகள் கடற்படையின் அதிகரித்த வினைத்திறன் என்பவற்றின் காரணமாக புலிகளின் கடல்வழிப் போக்குவரத்து கடுமையாகவே கட்டுப்படுத்தப்பட்டது. 2007 ஆம் ஆண்டிலிருந்து புலிகளின் ஒரு கப்பலால் கூட கிழக்குக் கரைக்கு எதையும் கொண்டுவர முடியவில்லை என எனக்கு கூறப்பட்டது. ஒரு ஒரு பனடோல் கூட வரவில்லை என சூசை என்னிடம் கூறினார். 

கேள்வி:- நீங்கள் மீண்டும் இயக்கத்தில் சேர்ந்த பின் இந்த நிலைமை மாறியதல்லவா? 2009 இன் முன்பகுதியிலும் 2008 இன் இறுதி பகுதியிலும் எல்.ரி.ரி.ஈ இரண்டு கப்பல்களை கொண்டு வர முடிந்தது என ஊடகங்களில் செய்திகள் வந்தன. இதற்கு நீங்களே காரணமென நம்பப்பட்டதே?
பதில்:- இல்லை. இதில் உண்மையில்லை. நான் எந்தக் கப்பலையும் அனுப்பவில்லை. உண்மையை சொன்னால் நான் அதற்கு முயற்சிக்கக்கூட இல்லை. 

கேள்வி:- நீங்கள் கடல் விநியோகங்களை செய்வதற்காக இயக்கத்தில் மீண்டும் இணைந்ததாகவும் நீங்கள்தான் இரண்டு கப்பல்களை அனுப்பினீர்கள் எனவும் நான் எண்ணியிருந்தேன்?
பதில்:- நான் கடல்வழி விநியோகங்களை செய்வதற்காக மீண்டும் இணைய வேண்டும் என ஆரம்பத்தில் எல்.ரி.ரி.ஈ விரும்பியதென்பது சரி. ஆனால் இது குறுகிய காலத்தில் சாத்தியமானதல்ல என விளக்கம் கூறினேன். நான் சண்டையை நிறுத்தவும் யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்பாடு செய்யவும் எல்.ரி.ரி.ஈ க்கு உதவுமுகமாகவே மீண்டும் இயக்கத்தில் இணைந்தேன். கடல்வழி விநியோகத்தை மீண்டும் தொடங்கவென மீண்டும் இயக்கத்தில் இணையவில்லை. 

கேள்வி:- இதைப்பற்றி நாம் பேசும்முன் நான் உங்களிடம் பச்சையாகவே கேட்க விரும்புகின்றேன். உங்களை இழிவுப்படுத்த விரும்புபவர்களில் சிலர், கடற்படையினால் எல்.ரி.ரி.ஈ கப்பல்கள் அழிக்கப்பட்டதற்கு நீங்களே காரணம் என கூறுகின்றனர். ஆயுதத்தை வாங்குவதற்கு வழங்கப்பட்ட பணத்தை நீங்கள் கையாடிக் கொண்டு வெற்றுக் கப்பல்களை அனுப்பிவிட்டு இலங்கை அரசாங்கத்துக்கும் கடற்படைக்கும் தகவல் வழங்கி கப்பல்களை அழிக்கச் செய்தீர்கள் என தமிழ் ஊடகங்களில் உங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் வந்ததை பார்த்திருக்கின்றேன்.
பதில்:- நீங்கள் கூறிய எனக்கு எதிரான பிரச்சாரங்களை நான் பார்த்திருக்கிறேன். இந்த சதித்தனமான கருத்துக்கள் எங்கள் ஆட்களின் கற்பனைத் திறனை காட்டுகின்றன. 

நான் ஒன்றை தெளிவாக கூறுகின்றேன். நான் 2002 டிசெம்பரிலிருந்து எல்.ரி.ரி.ஈ க்கு வெளியே இருந்தேன் என்பது தெளிவானது. ஆனால் அதற்கு முன்னரே 2002 இல் பெப்ரவரியில் யுத்த நிறுத்தம் வந்தவுடனேயே எல்.ரி.ரி.ஈ யின் கப்பல் தொகுதியை கையாளும் பணி என்னிடம் இருந்து எடுக்கப்பட்டிருந்தது. இந்தப்பொறுப்பு சூசையினால் தலைமை தாங்கப்பட்ட கடற்புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. 

அன்றிலிருந்து கப்பல் விடயங்கள் எதிலும் நான் இருக்கவில்லை. பின்னர் 2002 டிசெம்பரில் வெளிநாட்டில் கொள்வனை செய்யும்பணி (ஆயுதக் கொள்வனவு என்பதன் இடக்கரடக்கல்) என்னிடம் இருந்து எடுக்கப்பட்டது. கே.பி.திணைக்களம் என அழைக்கப்பட்ட திணைக்களம் கலைக்கப்பட்டது. 

இராணுவ தளபாட கொள்வனவும் கொண்டு செல்லலும் ஐயா என்பவராலும் இளங்குட்டுவன் என்பவராலும் கையாளப்பட்டன. எனக்கு எதுவுமே தெரியாது. கொள்வனவு எனது பொறுப்பில் இருக்கவில்லை. உண்மை நிலை இப்படி இருக்கும்போது அரசாங்கத்துக்கு வழங்குவதற்கான தகவல்கள் எனக்கு எங்கிருந்து வரும்? 

கேள்வி:- கப்பல்களின் நகர்வுப் பற்றிய தகவல்களை தொடர்புடைய வேறு எல்.ரி.ரி.ஈ உறுப்பினர்களிடமிருந்து பெற்று அரசாங்கத்துக்கு தகவல் வழங்கியிருக்கலாம் தானே? கே.பி. திணைக்களத்தில் உங்களுக்கு செல்வாக்குள்ள யாரிடமிருந்தாவது தகவல் பெற்றிருக்கலாம் அல்லவா?
பதில்:- அறிவதற்கான தவிர்க்க முடியாத தேவை என்ற அடிப்படையிலேயே எல்.ரி.ரி.ஈ வேலை செய்கின்றது. ஒரு பிரிவு என்ன செய்கின்றது என இன்னொரு பிரிவுக்கு தெரியாது. எனவே ஒருவர் தொடர்புடைய சகல பிரிவுகளுடனும் தொடர்பு கொண்டாலன்றி பூரணமான தகவலை பெற முடியாது. கேபி திணைக்களத்தை பொறுத்தவரையில் சகலரும் அகற்றப்பட்டனர். அவர்கள் ஒன்றில் வேறு கடமைக்கு மாற்றப்பட்டனர். அல்லது வேலை நீக்கம் செய்யப்பட்டனர். 

இந்த விடயத்துடன் தொடர்புடைய எவரோடும் கதைப்பதை நான் நிறுத்தியிருந்தேன். அரிதாக பழைய நண்பர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டாலும் இந்த விடயங்கள் பற்றி நான் பேசுவதில்லை. 

எனக்கு எல்.ரி.ரி.ஈ யின் மனப்பாங்கு நன்கு தெரியும். இந்த விடயங்களை நான் பேசப்போய் பின்னர்  ஏதாவது விரும்பத்தகாதது நடந்துவிட்டால் அவர்கள் என்னை சந்தேகத்துடன் பார்க்கத் தொடங்குவர். எனவே எவரிடமிருந்தம் நான் இது தொடர்பான தகவல் பெற முயலவில்லை. எல்.ரி.ரி.ஈ  எவ்வாறு வேலை செய்தது என்பது தெரியாதவர்களால் தான் இப்படியான குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகின்றன. எல்.ரி.ரி.ஈ தலைவர் இருந்தப்போது இப்படியாக குற்றங்கள் கூறப்படவில்லை. என்மீது சந்தேகம் இருந்திருந்தால் எல்.ரி.ரி.ஈ என்னை மீண்டும் அணுகியிருக்காது அல்லது இணைந்தப்பின் வேறு பொறுப்பு வழங்கியிருக்காது. 

கேள்வி:-ஆமாம் நாம் பேசிக்கொண்டிருந்த விடயத்தை விட்டு கொஞ்சம் விலகிவிட்டோம். தயவுசெய்து நீங்கள் எல்.ரி.ரி.ஈ யுடன் மீண்டும் இணைந்தது பற்றிக் கூறுவீர்களா?
பதில்:- நான் முன்பு கூறியது போல கடல்வழி விநியோகங்கள் போய்ச் சேர முடியாது போனதால் எல்.ரி.ரி.ஈ. சிரமங்களை எதிர்நோக்கியது என்பதை நான் அறிந்தேன். நான் வெளியில் இருந்தால் எதுவும் செய்யமுடியவில்லை. பின்னர் 2008 இல் பின்பகுதியில் கடற்புலி தளபதி சூசையும் இராணுவத் தளபதி சொர்ணமும் என்னுடன் தொடர்பு கொண்டனர். 

அவர்கள் நிலைமை மோசமாக உள்ளதெனவும் கடல் வழி விநியோகம் மீண்டும் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் விளக்கினர். அவர்கள் என்னால் மாத்திரமே கடல்வழி விநியோகத்தை  உறுதி செய்ய முடியும் எனக் கூறி, இயக்கத்தில் மீண்டும் சேர்ந்து ஆயுதக் கொள்வனவுப் பொறுப்பு ஏற்கும்படி அழைத்தனர். 

நான் குழம்பிப்போனேன். எனக்கு கவலையாக இருந்தாலும் மீண்டும் போய்ச்சேர தயங்கினேன். நான் பல வருடங்கள் அமைதியான வாழ்வில் குடும்ப வாழ்வில் திளைத்திருந்தேன். அத்துடன் சர்வதேச நிலைமையையும் நான் அறிந்திருந்தேன். முன்னர் எல்.ரி.ரி.ஈ உலகளாவிய பயங்கரவாதிகளுக்கான கண்காணிப்பில் இருக்கவில்லை. அப்போது எம்மால் சந்தையில் விரும்பியதை கொள்வனவு செய்து இலங்கைக்கு கப்பலில் அனுப்ப முடிந்தது. 

ஆனால் இப்போது செப்ரெம்பர் 11.2001 இல் பின் நிலைமை அவ்வளவு இலகுவாக காணப்படவில்லை. அவர்கள் எதிர்ப்பார்ப்பதை என்னால் செய்ய முடியுமா என்பதில் எனக்கும் சந்தேகமாக இருந்தது. அத்துடன் ஐந்து வருடங்களுக்கு மேலாக நான் தொடர்புகள் இழந்த நிலையில் காணப்பட்டேன். மீண்டும் தொடர்வதற்கு எனக்கு கால அவகாசம் தேவைப்பட்டது. எனவே நான் அவர்களுக்கு எந்த வாக்குறுதியும் வழங்கவில்லை. ஆனால் 2008 டிசெம்பர் 31 இல் எல்லாமே மாறிப்போனது. 

கேள்வி:- அன்று என்ன நடந்தது?
பதில்:- பிரபாகரன் என்னை அழைத்து நீண்ட நேரம் பேசினார். அவர் இராணுவ நிலைமை பற்றி வெளிப்படையாக பேசினார். அவர் என்னை அழைத்தப் போது கிளிநொச்சி அரசாங்கப்படை வசமாகவில்லை. ஆனால் அவர் விரைவில் விரைவில் கிளிநொச்சி அரசபடைகள் வசமாகும் என தெரிவித்தார் அவர். அதன் பின்னர் சண்டை ஏ – 9 வீதியின் கிழக்குக்கு நகரும் என்றார். 

எனினும் பிரபாகரன் எல்.ரி.ரி.ஈ கடற்கரையுடன் கூடிய ஒரு நிலப்பரப்பை நீண்டகாலம் தக்க வைத்துக்கொள்ளும் என்பதில் பிரபாகரன் நம்பிக்கை கொண்டிருந்தார். ஆனால் எவ்வளவு காலம் போனாலும்  அப்படி ஒரு பிரதேசத்தை தக்க வைத்துக்கொள்வது  முடியாது என்பதை அவர் அறிவித்திருந்தார். அவர் நான் மீண்டும் இயக்கத்தில் சேர்ந்து மீண்டும் ஆயுதங்களை வாங்கி அனுப்ப வேண்டுமென விரும்பினார். பிரபாகரன் என்னிடம் நேரடியாக கேட்டபோது என்னால் மறுக்க முடியவில்லை. நான் எல்.ரீ.ரீ.ஈ யில் சேர சம்மதித்தேன். ஆனால் எனது உடனடி நோக்கம் ஒரு யுத்த நிறுத்தத்தை கொண்டு வருவதுதான் என்றும் ஆயுத விநியோகத்தை மீண்டும் தொடங்குவதல்ல என்றும் கூறினேன். 

கேள்வி:- ஏன் இதை கூறீனீர்கள்? அவர் என்ன பதிலளித்தார்?
பதில்:- நான் சர்வதேச நிலைவரம் பாரிய மாற்றங்களை கண்டுள்ளது என விளக்கினேன். மேற்கு நாடுகள் பலவற்றுடன் குறிப்பாக ஐக்கிய அமெரிக்காவின் உளவு நிறுவனங்கள் இராணுவ தளபாட விற்பனை நடைபெறக்கூடிய சகல இடங்களிலும் மொய்த்துப்போய் இருந்தன. கப்பல்களின் நகர்வுகள் மிகக் கடுமையாக கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. முன்னர் போலன்றி கடல் வழி விநியோகத்தை தொடங்க அதிக முயற்சியும் தயாரிப்பும் அவசியமாகவிருந்தன. எனது கே.பி. வலையமைப்பு கலைக்கப்பட்டுவிட்டது என அவருக்கு கூறினேன். நானும் மிகவும் கூர்மையாக அவதானிக்கப்பட்டுக்கொண்டு இருந்தேன். எனவே நான் ஆயுதக் கொள்வனவை மீண்டும் செய்வதாயின் எனக்கு ஒளிந்து மறைந்து வேலை செய்ய வலையமைப்பை மீண்டும் அமைத்துக் கொள்ள கால அவகாசம் தேவைப்பட்டது. 

எனக்கு ஆகக் குறைந்த ஒரு வருடமாவது தேவைப்படும் என பிரபாகரனிடம் கூறினேன். அவர் மிகவும் தாமதமாகிப்போன விடயமாக இருக்கும் என கூறினார். 

அப்படியாயின் எல்.ரி.ரி.ஈ யுத்த நிறுத்தமொன்றுக்கு செல்ல வேண்டுமென நான் ஆலோசனை கூறினேன். முன்னர் 1989 இல் இந்திய இராணுவம் எல்.ரி.ரி.ஈ மீதான பிடியை இறுக்கியபோது பாலா அண்ணை மிகமுக்கிய பாத்திரம் வகித்து பிரேமதாச அரசாங்கத்துடன் ஒரு இணக்கப்பாட்டை கொண்டு வந்தார். இதற்கு நான் எனது ஆதரவை வழங்கினேன். இப்போது பாலா அண்ணை இல்லை. நான் யுத்த நிறுத்தமொன்றை ஏற்பாடு செய்து எல்.ரி.ரி.ஈ.க்கு ஒரு ஓய்வை வழங்கும் முயற்சியை முன்னெடுக்க வேண்டும் என பிரபாகரன் கூறினார். தேவையானவர்களுடன் பேச்சுக்களை ஆரம்பித்து யுத்த நிறுத்தமொன்றை நான் ஏற்பாடு செய்ய வேண்டுமென அவர் விரும்பினார். 

அப்படியாயின் எனக்கு பொருத்தமான பதவி தரப்பட வேண்டும் என கூறினேன். அப்படியானால் தான் என்னால் எல்.ரி.ரி.ஈயை உத்தியோக பூர்வமாக என்னால் பிரதிநிதித்துவப் படுத்த முடியும் என்றும் எல்.ரி.ரி.ஈயின் வெளிநாட்டுக் கிளைகளிடமிருந்து எனக்கு பூரண ஒத்துழைப்பு கிடைக்க வேண்டும் என்றும் கூறினேன். பிரபாகரன் ஒப்புக்கொண்டார். 2009 ஆம் ஆண்டு பிறந்தபோது நான் மீண்டும் எல்.ரி.ரி.ஈயில் இணைந்திருந்தேன். 

கேள்வி:-ஆனால் நீங்கள் யுத்த நிறுத்தமொன்றை முன்னெடுக்கவும் இணைப்பு செய்யவுமா எல்.ரி.ரி.ஈயில் மீண்டும் இணைந்தீர்கள்? எப்படி வேலையை மீண்டும் ஆரம்பித்தீர்கள்? வெளிநாட்டில் புலிகள் அமைப்பின் ஆதரவு உங்களுக்கு கிடைத்ததா?
பதில்:- எல்.ரி.ரி.ஈயின் சர்வதேச உறவுகள் பிரிவின் தலைவராக நான் நியமிக்கப்பட்டேன். சர்வதேச முக்கியஸ்தர்களுடன் உறவாடி பேச்சு நடத்தி எப்படியாவது ஒரு யுத்த நிறுத்தத்தை கொண்டு வருவது எனது பொறுப்பாக்கப்பட்டது. எனது முயற்சிக்கு வெளிநாட்டு கிளைகள் பூரணமாக ஆதரவளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. 

காஸ்ரோவும் நானும் நல்லுறவில் இல்லாதபடியால் அரசியல் பொறுப்பாளர் நடேசன் இந்த விடயங்களில் எனக்கும் தலைவருக்கும் இடையில் இணைப்பாளராக இருந்தார். நடேசன் என்னுடன் தொடர்பான விடயங்களில் காஸ்ரோவுடன் இணைப்பாளராகச் செயற்பட்டார். ஆனால் விடயங்கள் இலகுவானதாக நடக்கவில்லை. நான் 2009 ஜனவரி முதல் வாரமே வேலை தொடங்கியபோதும் எனது நியமனம் பற்றிய அறிவிப்பு தாமதமாகியது.

காஸ்ரோ வெளிநாடு நிலைகளுக்கு அறிவிக்க நீண்டகாலம் எடுத்தார். தமிழ்நெற்றும் இந்த அறிவிப்புக்களை செய்வதில் தாமதம் காட்டியது. நெடியவன் கட்டுப்பாட்டில் இருந்த வெளிநாட்டு ஊடகங்கள் என்னை இருட்டடிப்பு செய்தன. அரசியல் பிரிவு ஊடாகவும் நடேசன் ஊடாகவும் பொதுமக்களின் துன்பத்தை அழுத்திக்காட்டி யுத்த நிறுத்தமொன்றை கோரும் ஊர்வலங்களை ஒழுங்கு செய்ய வெளிநாட்டுக் கிளைகளை ஊக்குவித்தேன். நான் எல்.ரீ.ரீ.ஈ யின் அடையாளங்கள் எதுவுமின்றி ஊர்வலங்களை  கட்சி சார்பில்லாத மனிதாபிமான செயற்பாடாக காட்டும்படி கூறியிருந்தேன். 

இவ்வாறு பல ஊர்வலங்கள் நடந்தன. இதனால் சாதகமான விளைவுகளும் எமக்கு கிடைத்தன. ஆனால் சில வாரங்களின் பின் ஊர்வலங்களில் புலிக் கொடிகளும் பிரபாகரனின் படங்களும் கொண்டு செல்லப்பட வேண்டுமென நெடியவன் ஊடாக காஸ்ரோ அறிவுறுத்தல்களை வழங்கினார். எல்.ரி.ரி.ஈ மீதான தடையை நீக்க வேண்டும் எல்.ரி.ரி.ஈ என அங்கீகரிக்க வேண்டும் என்று கோரும் வாசகங்கள் கொண்ட பதாதைகளும் ஊர்வலத்தில் எடுத்துச்செல்லப்பட்டன. 

இதை நான் தடுக்க முற்பட்டப்போது நான் பிரபாகரனுக்கு எதிரானவனாக சித்தரிக்கப்பட்டேன். இந்த அரசியல் மடத்தனத்தின் விளைவாக மிகப்பெரிய ஊர்வலங்கள் இடம்பெற்றபோதும் பலனற்றுப் போயின. ஏனெனில் இவை எல்.ரி.ரி.ஈ சார்பானதாகவும் மக்கள் சார்பற்றதாகவும் நோக்கப்பட்டது. 

கேள்வி:-காஸ்ரோவின் ஆட்கள் உங்களுக்கு தடையாக இருந்த நிலைமையில் எல்.ரி.ரி.ஈ யின் சர்வதேச தொடர்புகள் அமைப்பின் தலைவர் என்ற வகையில் உங்கள் கடமைகளை எவ்வாறு முன்னெடுத்தீர்கள்?
பதில்:-வெளிநாட்டு கிளைகள் எனது வேலையை கெடுக்கும் வேலைகளை தொடங்கிய முறை மிக மோசமானது. அவர்கள் ஒத்துழைக்கவில்லை. எனக்கு போதிய நிதி தரப்படவில்லை. கிளைகளிலிருந்து நிதிபெற முயன்றபோது அதுவும் மறுக்கப்பட்டது. எனவே நான் எனது சொந்தப்பணத்திலும் ஆதரவாளர்கள் எல்.ரி.ரி.ஈ உறவுகள் ஆகியோரிடமிருந்து தனிப்பட்ட வகையில் பெற்ற பணத்திலும் தங்கியிருக்க வேண்டியிருந்ததது. இளைப்பாறிவிட்ட பழைய விசுவாசிகளின் ஆதரவுடன்தான் நான் ஊழியர்களையும் வலையமைப்பையும் ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது. இந்த வகையானோர் எனக்கு மிகச் சிறந்த ஆதரவை நல்கி என்னோடு திரண்டனர்.
 
கேள்வி:- அப்படியாயின் நீங்கள் ஏன் பிரபாகரனிடம் முறையிட்டு நிலைமையை சரிப்படுத்தவில்லை. 
பதில்:-நான் அவருக்கு செய்திகளை அனுப்பினேன். ஆனால் 2009 இல் நிலைமை மாறிப்போய்விட்டிருந்தது. இராணுவம் விரைந்து முன்னேறி வந்தது. பிரபாகரனின் தனிப்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்தது. எனவே அவர் வெளியில் தென்பட முடியாது போயிற்று பிரபாகரனுடானான எனது முன்னைய தொடர்பு – இணைப்பான வேலு இல்லாது போனதால் தலைவருடன் தொடர்பு எடுத்தல் கஷ்டமாகப் போயிற்று. புதியவர்கள் இந்த விடயங்களில் வினைத்திறன் மிக்கவர்களாகவோ அல்லது உதவிபுரியக் கூடியவர்களாகவோ இருக்கவில்லை. காஸ்ரோ பற்றி முறையிட நடேசன் தயங்கினார். இருவரும் நல்ல நண்பர்கள். 

அத்துடன் சண்டை தீவிரமடைந்து வந்ததால் நான் இவ்விடயங்கள் தொடர்பில் பிரபாகரனை நெருக்கத் தயங்கினேன். பிரபாகரனால் கூட இந்த நிலைமையை மாற்றமுடியுமா என்பதில் எனக்கு சந்தேகமிருந்தது. வெளிநாடுகளில் காஸ்ரோ குழுவினர் பலமாக இருந்தனர். அவரது துனையாளரான நெடியவன் காரியங்களைக் கொண்டு செல்பவராக காணப்பட்டார்.  அவர்கள் காரியங்களை தடுக்க, கெடுக்க நன்கு அறிந்திருந்தனர். 

கேள்வி:- நான் ஒரு விடயத்தை தெளிவுப்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் நேரடியான பதில் தருவீர்கள் என நான் எதிர்பார்க்கிறேன். இந்த யுத்த நிறுத்தத்தை கொண்டு வருவதற்கான சமாதான முயற்சி கால அவகாசம் பெறும் முயற்சியா? நீங்கள் ஒரு பக்கத்தில் யுத்த நிறுத்தத்துக்காக முயன்றுக்கொண்டு அதே சமயம் ஆயுதங்களை வாங்கி அனுப்ப முயன்றீர்களா?
பதில்:-எனது பதில் இல்லை என்பதே. எல்.ரி.ரி.ஈ தலைமையில் உள்ள மற்றவர்களை பற்றி எனக்கு தெரியாது. சிலர் இதை தந்திரமாக பயன்படுத்த யோசித்திருக்கலாம். ஆனால் நான் யுத்த நிறுத்தம் பற்றி நேர்மையாகவும் உண்மையாகவும் இருந்தேன். நான் உண்மையிலேயே யுத்த நிறுத்தம் ஒன்றைக் கொண்டுவர முயன்றேன். ஏனெனில் சண்டை தொடர்ந்தால் எல்.ரி.ரி.ஈயின் அழிவாகவே அது இருக்கும் என நான் நம்பினேன் அது மட்டுமன்றி நான் மக்கள் பிரபாகரன் எனது ஏனைய தோழர்கள், இளம் போராளிகளின் உயிர்களை காப்பாற்ற விரும்பினேன்.

நான் சமாதானம் பேச முயன்று கொண்டு அதே சமயம் ஆயுதம் சேர்க்கும் சுத்துமாத்து விளையாட்டின் ஈடுபடவில்லை. நான் எனது பொறுப்பை, அது எதுவாயினும் அதை நேர்மையோடும் ஏமாற்று எதுவும் இன்றியும் செய்ய வேண்டுமென நம்புகின்றவன். நான் வெளியில் சமாதானத்துக்கு முயன்று கொண்டு அதே சமயம் இரகசியமாக ஆயுதம் அனுப்ப முயன்றால் அது நேர்மையீனம் ஆகும். 100 சத வீதம் சமாதானப் பணிக்கு அர்ப்பணிக்க வேண்டும், வேறு எதற்கும் அல்ல. 

இதை நீங்கள் இப்படியும் பார்க்கலாம். எனக்கு சமாதான முயற்சியில் உதவுகின்ற சர்வதேச முக்கியஸ்தர்களை நான் ஆயுதங்களை கப்பலில் அனுப்புகின்றேன் என அறிந்து கொண்டால் அல்லது எனது ஏமாற்று வேலை பிடிப்பட்டால் எனது நம்பகத்தன்மை இழக்கப்படிருக்கும். என் மீதான நம்பிக்கையும் எல்.ரி.ரி.ஈ யின் நோக்கமும் அழிக்கப்பட்டிருக்கும். நான் சுத்துமாத்து விளையாட்டில் ஈடுப்பட்டுள்ளேன் என கண்டுபிடிக்கப்பட்டால் இலங்கை அரசின் நிலைப்பாட்டை எண்ணிப்பாருங்கள். யுத்த நிறுத்துக்கான சந்தர்ப்பங்கள் அறவே அற்றுப்போயிருக்கும். 

கேள்வி:- நீங்கள் யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு முயன்றுக்கொண்டு இருக்கும்போது எல்.ரீ.ரீ.ஈ ஆயுதங்களை கடத்த முயன்று கொண்டிருக்கவில்லை என்று நீங்கள் சொல்ல விரும்புகிறீர்களா?
பதில்:- என்னால் கூற முடிவது என்னவென்றால் இப்படியான வேலையை நான் செய்யவுமில்லை. செய்ய முயற்சிக்கவும் இல்லை என்பதைத்தான் ஆயுதங்களை கொள்வனவு செய்வதும் கொண்டு வருவதும் கஷ்டமானபோது பிரபாகரன் இந்த கடமைகளை வேறு பிரிவுகளுக்கும் பகிர்ந்தளித்திருந்தார். ஆயுத கொள்வனவுக்கு  ஐயா பொறுப்பாக இருந்தபோது பொட்டு அம்மான் கீழ் இருந்த புலனாய்வு பிரிவு காஸ்ரோவின் கீழ் இருந்த சர்வதேச விவகாரப்பிரிவு சூசையின் கீழ் இருந்த கடற்புலிகள் என்பவற்றிடமும் ஆயுத கொள்வனவு விவகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டது. செய்வதறியாத நிலையில் பிரபாகரன் இந்த முக்கியஸ்தர்கள் எல்லோரையும் ஒரு மேடையில் விட்டிருந்தார். ஆயினும் முன்னேற்றம் எதுவும் காணப்படவில்லை. 

கேள்வி:-பல சமையல்காரர்கள் சேர்ந்து சூப்பை கெடுத்த கதையாக இது உள்ளது. நீங்களே தொடர்ந்து பொறுப்பில் இருந்திருந்தால் இப்படி ஒரு நிலை வந்திருக்காது என நீங்கள் நினைக்கின்றீர்களா?
பதில்:- ஆயுதம் வாங்குவது கடையில் சாமான் வாங்குவது போன்று அவ்வளவு இலகுவான விடயமல்ல. இந்த வேலையை உஷார்மிக்க ஆட்களிடம் கொடுத்ததனாலேயே ஐக்கிய அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் சிலர் கைது செய்யப்பட்டனர். 

சூசை, சொர்ணம், பின்னர் பிரபாகரன் ஆகியோர் என்னிடம் பேசியபோது அவர்கள் கொள்வனவிலிருந்து என்னை அகற்றியது பிழை எனவும் நான் இருந்திருந்தால் இந்த பிரச்சினைகள் வந்திருக்காது என்றும் கூறினர். 

இதை கேட்க சந்தோஷமாக இருப்பினும் நிலைமை மாறிவிட்ட நிலையில் என்னால்  வெற்றிபெற முடிந்திருக்குமா என்பதில் எனக்கு சந்தேகமே.  சக்திமிக்க நாடுகள் பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய யுத்தத்தில் எமது நடவடிக்கைகளை அவதானிக்கின்ற நிலையில் இலங்கை கடற்படை செயற்றிரனில் அதிக முன்னேற்றம் கண்ட நிலையில் எனக்கும் தேவையான ஆயுதங்களை வழங்குவதும் கடத்துவதும் கஷ்டமாகவே இருந்திருக்கும். 

கேள்வி:- மீண்டும் உங்களைக் கேட்கிறேன். எல்.ரி.ரி.ஈ யை காப்பாற்ற மட்டுமா நீங்கள் யுத்த நிறுத்தத்திற்காக முயற்சித்ததீர்களா? அல்லது சமாதானத்துக்கான உங்கள் ஈடுபாடு ஆழமானதாக உண்மையில் நேர்மையாதாக இருந்ததா?
பதில்:-நீங்கள் இதை கேட்டதையிட்டு மகிழ்ச்சி அடைகிறேன். ஏனெனில் இதனால் எனது இதயத்தில் ஏற்பட்ட மாற்றத்தைப் பற்றி என்னால் மனந்திறந்து பேச முடிகின்றது. இது மெதுவான ஒரு தொடர்செயலாக இருந்தது. நான் எல்.ரி.ரி.ஈ யிலிருந்து வெளியேறி இருந்தபோது  அடையாக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருந்தேன். இதனால் பழைய விடயங்களை மீட்டுப் பார்க்கவும் அழமாக சிந்திக்கவும் வாய்ப்புக் கிடைத்தது அத்துடன் செப்டெம்பர் 2001 இல் பின் உலகம் மாறி வருவதை நான் அவதானித்தேன். முன்னர் ஒருவருக்கு பயங்கரவாதியாக இருப்பவர். இன்னொருவருக்கு சுதந்திர போராட்ட வீரானாக இருப்பான் என கூறப்பட்டது. இப்போது நல்ல பயங்கரவாதி கூடாத பயங்கரவாதி என இல்லையென்றம் கூறுகின்றனர். பயங்கரவாதி பயங்கரவாதிதான். 

மாறிவரும் சூழலில் எல்.ரி.ரி.ஈ போன்ற இயக்கத்தால் தொடர்ந்து போராடவோ அல்லது நிலைத்திருக்கவோ முடியாது என்பன நான் உணர்ந்துக்கொண்டேன்.  முழு உலகுமே எமக்கு எதிராக அணிதிரளும். அத்துடன் பல தசாப்தகால மோதலினால் மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு சமாதானம் தேவைப்பட்டது. எனவே நான் உண்மையில் பேச்சுவார்த்தை மூலம் ஒரு அரசியல் தீர்வை அடைய வேண்டும் என எண்ணினேன். நான் பிரபாகரனையும் இதை நம்ப வைக்க முயற்சித்தேன். அதற்கு அவர் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முதலில் யுத்த நிறுத்தம் தேவை என்றார். எனவே பேச்சுவார்த்தை மூலம் எய்தப்படும் சமாதானத்துக்கான முதற் படியாக, ஒரு யுத்த நிறுத்தம் ஒன்றுக்காக மனதார வேலை செய்யத் தொடங்கினேன்.

கேள்வி:ஆனால் நீங்கள் உண்மையில் யுத்த நிறுத்தம் பற்றி நம்பிக்கையோடு இருந்தீர்களா? நீங்கள் எப்படியோ ஒரு தோற்கப்போகும் யுத்தத்தைத்தானே நடத்திக்கொண்டிருந்தீர்கள். காலங் கடந்த ஞானம் என்று பார்க்கையில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: அப்போது நான் உண்மையில் யுத்த நிறுத்தம் பற்றி நம்பிக்கையோடு இருந்தேன். எல்.ரி.ரி.ஈ. தலைவர்கள், போராளிகள், சண்டையில் சிக்கிக்கொண்ட அப்பாவி பொதுமக்கள் ஆகியோரை காப்பாற்ற எப்படியாவது ஒரு யுத்த நிறுத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என நான் அறிந்துகொண்டேன்.

கேள்வி: மக்களை எல்.ரி.ரி.ஈ. விடுவிக்கச்செய்து அதன் மூலம் சாதாரண மக்களை காப்பாற்ற நீங்கள் முயற்சிக்கவில்லையா?
பதில்: தொடக்கத்தில் நான் அதற்கு முயற்சித்தேன். அமெரிக்கர்கள் மக்களை கப்பல் மூலம் திருகோணமலைக்கு கொண்டு செல்ல முன்வந்தனர். ஆனால் எல்.ரி.ரி.ஈ.யின் அதிகாரமிக்கோர் இதற்கு இதற்கு சம்மதிக்கவில்லை. இந்த மனப்பாங்கு மிகவும் துரதிஷ்டவசமானது. மனிதப் பண்பற்றதாகவும்கூட தோன்றலாம். இதை நான் நியாயப்படுத்த முயலவில்லை. ஆனால் கடந்த காலத்தை மீட்டுப் பார்க்கும்போது எல்.ரி.ரி.ஈ. தலைமைக்கு வேறு தெரிவு இருக்கவில்லை. அவர்கள் மக்களை விடுவித்திருந்தால் புலிகள் மட்டுமே அங்கு எஞ்சியிருப்பர். அதன்பின் எல்லோரும் பூரணமாக அழிக்கப்பட்டிருப்பர்.

கேள்வி:மாவோ சேதுங்கின் கருத்துப்படி ஒரு கெரில்லாப் போராளி என்பவன் மக்கள் என்னும் சமுத்திரத்தில் நீந்தும் மீன் ஆவான். கடல் நீர் வடிக்கப்பட்டால் மீன் தத்தளித்துப்போகும். எனவே மீன் தண்ணீரை வைத்திருக்க விரும்பியது. அப்படித்தானே?
பதில்: உண்மைதான். இதனால்தான் ஒவ்வொருவரும் மக்கள், போராளிகள் ஆகிய யாவரும் காப்பாற்றப்படும் வகையில் ஒரு யுத்த நிறுத்தத்தை கொண்டு வர முயன்றேன். இப்போது யோசிக்கும்போது யுத்த நிறுத்தத்திற்கு முயற்சிப்பபதில் எல்.ரி.ரி.ஈ. தலைமை பிந்திப் போய்விட்டது என நான் நினைக்கின்றேன். 2008 இன் நடுப்பகுதியில் அதாவது சண்டை ஏ-9 வீதியின் மேற்குப் பகுதியில் நடந்தபோது முயற்சித்திருந்தால் ஒரு இணக்கப்பாட்டுக்கு வரும் சாத்தியம் மிக அதிகமாக காணப்பட்டது. ஆனால் பூநகரி, பரந்தன், கிளிநொச்சி, ஆனையிறவு என்பன வீழ்ச்சியடைந்தபோது அரசாங்கத்தின் வெற்றிக்கான வாய்ப்பு நிச்சயமாக இருந்தது. எல்லாமே மிக விரைவாக நடந்தன. அரசாங்கத்தின் பார்வையில் வெற்றி நிச்சயம் என்ற நிலையில் யுத்த நிறுத்தத்துக்கு வருவது முட்டாள்தனமாக இருந்திருக்கும்.

கேள்வி:இந்த நிலையில் நீங்கள் என்ன செய்தீர்கள்? உங்களால் சாதிக்க முடிந்தது என்ன?
பதில்: நான் அடிப்படையில் ஒரு வேலைக்காரன். பொறுப்பு ஒன்று தரப்பட்டால் ஏன் அதை செய்யாதிருப்பதற்குக் காரணம் தேடுவதைவிட வேலை தொடங்குவதையே விரும்புவேன். அது மட்டுமன்றி இது வாழ்வா சாவா என்ற பிரச்சினை. எனவே நான் எப்படியும் ஒரு யுத்த நிறுத்தத்தை ஏற்பாடு செய்து மக்களையும் இயக்கத்தையும் தலைமைத்துவத்தையும் காப்பாற்ற வேண்டியிருந்தது. எனவே என்னிடமிருந்த அற்பசொற்ப நிதியுடன் என்னைப் போன்றோரின் ஆதரவுடன் நான் வேலை செய்யத் தொடங்கினேன். சர்வதேச அரசியல் தலைவர்கள், உயர் அதிகாரிகள், இராஜதந்திரிகள், வெவ்வேறு நாடுகளின் அபிப்பிராயம் உருவாக்குவோர், உயர் ஐ.நா. உத்தியோகத்தர்கள் ஆகியோருடன் தொடர்பு ஏற்படுத்தினேன். இவர்களில் சிலருடன் நேரடியாக நான் பேசினேன். செல்வாக்கு மிக்கவர்கள் எனது சார்பில் வேறு சிலருடன் பேசினேன். மார்ச் 2009 இல் ஒரு வழி கண்டுவிட்டேன் என்றே எண்ணினேன். ஆனால் பிரபாகரன் இந்த ஏற்பாட்டை புறந்தள்ளிவிட்டார். 

கேள்வி: பிரபாகரன் மூன்று சொல்லில் நிராகரித்த Lock-off திட்டம் இதுதானே? தயவு செய்து விளக்கமாகக் கூறுங்கள்?
பதில்: ஆம் அதுவே தான். என்னிடம் சர்வதேச அங்கீகாரத்துடன் கூடிய ஒரு முயற்சி இருந்தது. குறித்த இடங்களில் பாதுகாப்பதாக வைப்பதன் மூலம் எல்.ரி.ரி.ஈ. ஆயுதங்களை களைய வேண்டும். இதற்கு பயன்படுத்திய சொல்தான் Lock-off. அதாவது, ஆயுதங்கள் குறிப்பாக கனரக ஆயுதங்கள் குறிப்பிட்ட இடங்களில் வைக்கப்பட வேண்டும்.

இவை ஐ.நா. பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட வேண்டும். இதன்பின் மோதல் தவிர்ப்பு ஏற்படுத்தப்பட்டு மக்கள் குறிப்பிட்ட சுடுகலன் பயன்படுத்தாத வலயங்களில் விடப்படுவர். நோர்வே அனுசரணையுடன் அசாங்கமும் எல்.ரி.ரி.ஈயும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். 25 தொடக்கம் 50 வரையான உயர் தலைவர்கள் அவசியமாயின் குடும்பத்துடன் வெளிநாடொன்றுக்கு அனுப்பப்படுவர். நடுத்தர தலைவர்கள், போராளிகள் தடுத்துவைக்கப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர். இவர்களுக்கு ஒப்பீட்டளவில் சிறிய தண்டனை வழங்கப்படும். கீழ்மட்ட போராளிகள் பொதுமன்னிப்பு வழங்கப்படுவர்.

இந்தத் திட்டம் நோர்வே, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா உட்பட்ட மேற்குநாடுகளால் அங்கீகரிக்கப்பட்டது. தேவை எனில் அமெரிக்கா தனது கடற்படைக் கப்பல்களை அனுப்பத் தயாராக இருந்தது.

கேள்வி: இலங்கை அரசாங்கம் இதற்கு ஒத்து வருவதாக இருந்ததா இருந்ததா?
பதில்: இது உத்தியோகபூர்வமாக அரசாங்கத்துக்கு தெரிவிக்கப்பட்டது. என நான் நினைக்கவில்லை. அதேசமயம் இது உத்தியோகபூர்வமாகவன்றி வேறு வழியில் தெரியப்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் இது நடைமுறைக்கு வரவில்லை. ஏனெனில் முக்கியமான நபர் – பிரபாகரன் இதை நிராகரித்துவிட்டார். நான் இந்தத் திட்டத்தின் சுருக்கத்தை எழுதி பிரபாகரனின் அங்கீகாரத்திற்கு அனுப்பினேன். அவர் தொடருங்கள் எனக் கூறியிருந்தால் அதை  பூரணமாக நடைமுறைப்படுத்தும் வேலையை தொடங்கியிருப்பேன். ஆனால் விபரங்களை 16 பக்க ஆவணமாக தொலைநகலில் அனுப்பியபோது, அவர் 16 பக்க விடயத்தை மூன்றே மூன்று சொற்களால் மறுத்தார். ‘இதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்பதுதான் அந்த மூன்று சொற்களும். எனவே நான் அதை கைவிட்டேன்.

கேள்வி: பிரபாகரன் ஒப்பபுக்கொண்டாலும் எல்.ரி.ரி.ஈ.யையும் அழித்தொழிக்கும் நிலையில் படைகள் காணப்பட்ட நிலையில் அரசாங்கம் இதற்கு ஒப்புக்கொண்டிருக்கும் என நீங்கள் நினைத்தீர்களா?
பதில்:எனக்குத் தெரியவில்லை. அநேகமாக அரசாங்கம் இதை ஏற்றிருக்காது. ஏனெனில் அது வெற்றியின் விளிம்பில் நின்று அதை இழக்க அரசாங்கம் விரும்பியிருக்காது. ஆனாலும் அந்தத் திட்டம் இறுதியாக்கப்பட்டு அரசாங்கத்திடம் கொடுக்கப்படவில்லை. எல்.ரி.ரி.ஈ. இருந்த நிலைமையில் பிரபாகரன் அதை ஏற்றிருக்க வேண்டும்.

கேள்வி: ஏன் பிரபாகரன் அதை ஏற்க மறுத்தார்?
பதில்: எனக்குத் தெரியாது. என்னால் ஊகிக்க மட்டுமே முடியும். இதை நினைக்கும் போது மனம் வேதனைப்படும். ஏனெனில் இன்று அவர் இல்லை. இந்த வாய்ப்பை ஏன் அவர் ஏற்கவில்லை என நான் எப்போதும் யோசிக்கத்தான் போகிறேன்.

கேள்வி: பிரபாகரனை காப்பாற்றும் உங்கள் முயற்சி அத்தோடு நிற்கவில்லை. அப்படித்தானே? ஹெலிகொப்டர் மூலம் மீட்கும் முயற்சி பற்றி கதை அடிபட்டதே?
பதில்:ஆம். அது வேறு ஒரு திட்டம். ஆனால் நெடியவன், அவரின் வெளிநாட்டு சகாக்கள் ஒத்துழைக்க மறுத்ததால் அது நிதர்சனமாகவில்லை. பிரபாகரன் குடும்பத்தவருக்கு நேர்ந்த கதியை நினைக்கும் போதெல்லாம் நான் கவலைப்படுவேன். அதன்பின் நெடியவனையும் அவரின் ஆட்களையும் மனதில் திட்டுவேன்.

கேள்வி: இது உங்களுக்கு மிகுந்த மன வேதனை தாரது எனில் பதில் சொல்லுங்கள். அப்போது என்ன நடந்தது என சொல்வது அவசியம் எனக் கருதுகிறீர்களா?
பதில்: அது வேதனையானது. ஆனால் அவ்விடயம் குறித்து எமது மக்கள் உண்மையை அறிந்துகொள்ள வேண்டும் என நான் எண்ணுகிறேன். அதைப்பற்றி பேசுவது எனக்கு மன நிம்மதியளிக்கக் கூடும்.
2009 மே மாத முற்பகுதியில் என்ன நடந்ததென்றால், பிரபாகரனின் மூத்த மகன் சார்ள்ஸ் அன்ரனி அடிக்கடி என்னுடன் தொடர்புகொண்டார். அவர் என்னை கே.பி. மாமா என்றுதான் அழைப்பார். நிலைமை மிக மோசமாக மாறிவருவதாகவும் தனது தந்தை, தாய், சகோதரி மற்றும் இளைய சகோதரரை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு நான் எதையாவது செய்ய வேண்டும் எனவும் சார்ள்ஸ் கூறினார்.

கேள்வி: சார்ள்ஸின் நிலை என்ன?
பதில்: இல்லை. அவர், தான் தப்பிச்செல்ல எண்ணவில்லை. தான் இறுதிவரை சண்டையிட்டு தேவையானால் உயிரிழக்கவும் தயார் எனவும் சார்ள்ஸ் கூறினார். தனது குடும்பத்தைப் பற்றிதான் அவர் கவலையடைந்தார்.

சார்ள்ஸுடன் பேசியபின் நான் மிகவும் கவலையடைந்தேன். ஒரு திட்டம் குறித்து சிந்தித்தேன். கப்பல் ஒன்றைப் பெற்று அதை இலங்கைக் கடற்படைக்கு எட்டாத விதத்தில் சர்வதேச கடற்பரப்பில் தயாராக வைத்திருக்க விரும்பினேன். ஹெலிகொப்டர் ஒன்றை வாங்க விரும்பினேன். எல்.ரி.ரி.ஈ.யின் வான் படைப் பிரிவிலுள்ள பயற்சிபெற்ற விமானிகள் அதை வன்னிக்குக் கொண்டு சென்று அக்குடும்பத்தை கப்பலுக்கு கொண்டுவரவேண்டுமென விரும்பினேன். அதன்பின் மூன்று நாடுகளில் ஒன்றில் அவர்களைப் பாதுகாப்காப்பாக வைத்திருக்கும் திட்டம் என்னிடமிருந்தது.

கேள்வி:ஆனால் பிரபாகரன் அதை ஏற்றுக் கொண்டிருந்திருப்பாரா?
பதில்:அது எனக்கு உறுதியாகத் தெரியாது. ஆனால் திட்டத்தை வகுத்தபின் சார்ள்ஸுடன் தொடர்புகொண்டு அதைத் தெரிவித்தேன். அவரின் தந்தை அதை ஏற்றுக்கொள்வாரா என்று கேட்டேன். தான் பிரபாகரனை சம்மதிக்கச் செய்வதற்கு முயற்சிப்பதாகக் கூறினார். ஆனால் பிரபாகரன் அதற்கு சம்மதிக்காவிட்டால் நான் அவரின் தாயையும் தனது தம்பி தங்கையையும் காப்பாற்ற வேண்டும் என அவர் கூறினார்.

பிரபாகரனை அறிந்திருந்ததால் அவர் ஒருபோதும் மற்றவர்களை விட்டுவிட்டு தான் குடும்பத்துடன் தப்பிச் செல்ல முயற்சிக்க  மாட்டார் என நான் உணர்ந்தேன். ஆனால், இந்த ஹெலிகொப்டர் மூலம் அவரையும் வேறு சிலரையும் காடொன்றின்  பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல முடியும் எனவும் பின்னர் மதிவதனி, துவாரகா, பாலச்சந்திரன் ஆகியோரை வெளியேற்ற முடியும் எனவும் நான் எண்ணினேனன்.

கேள்வி: இறுதியில் என்ன நடந்தது? ஏன் இந்தத் திட்டம் மேற்கொண்டு செல்லப்படவில்லை.
பதில்: அது மிக துக்ககரமான கதை……..

(இந்த நேர்காணலின் மூன்றாவதும் இறுதியுமான பகுதி அடுத்த வாரம் முடிவடையும்.)

(தமிழில்: ந.கிருஷ்ணராசா)

மேலதிக வாசிப்பிற்கு:

புலி ஆதரவுக்குழுவின் இலங்கை விஜயம் – ‘லண்டன் வந்த அருட்குமார் கருத்தை மாற்றிக் கொண்டார்’ – சார்ள்ஸ் தேசம்நெற்க்கு வழங்கிய பேட்டி : த ஜெயபாலன்

புலி ஆதரவுக்குழுவின் இலங்கை விஜயத்தை அடுத்து கே பி எதிர் அன்ரி கே பி பனிப்போர். : த ஜெயபாலன்

வெளிச்சத்திற்கு வரும் கே பி மர்மமும் – கே பி உடன் புலம்பெயர் புலிஆதரவுக் குழுவின் சந்திப்பும் : த ஜெயபாலன்

கே பி யின் சிபார்சில் சு.ப. தமிழ்ச் செல்வனின் சகோதரர் உட்பட முன்னாள் போராளிகள் 26 பேர் விடுதலை!

‘போர்குற்ற விசாரணைகளில் அரசாங்கத்தின் சாட்சியாக கே.பி!’ கெஹலிய ரம்புக்வெல

வடமாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக கே.பி?

 புலம்பெயர்ந்த புலித் தலைவர்கள் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு – கே.பி. உட்பட 9 பேர் கொழும்பில் பேச்சுவார்த்தை

கே.பி.க்கு மன்னிப்பு வழங்குவதென அரசு தீர்மானித்தால் ஆச்சரியப்படமாட்டேன் அமைச்சர் கெஹலிய