13

13

வெளிநாட்டு மாணவர்களுக்கு இலங்கையில் பட்டப்படிப்பு – 200 புலமைப்பரிசில்கள் வழங்க நடவடிக்கை

sb.jpgவெளி நாட்டு மாணவர்கள் உள்ளூரில் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் வகையில் உயர்கல்வி அமைச்சு அடுத்த வருடம் 200 புலமைப்பரிசில்களை வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நடவடிக்கையின் முதலாவது தொகுதியாக சீனா, மத்தியகிழக்கு மற்றும் ஆபிரிக்க நாடுகளில் உள்ள மாணவர்கள் பயனடைவர்.இலங்கை பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அடுத்த ஐந்து வருடங்களில் உயர் கல்வி அமைச்சு அபிவிருத்தி செய்யவுள்ளது. 10 ஆயிரம் வெளிநாட்டு மாணவர் களை கவரும் நோக்கிலேயே இந்த அபிவிருத்தி செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

“வெளிநாட்டு வருமானத்தை ஈட்டுவதற்கு இது நல்ல வழியாகும். 5 ஆயிரம் அமெரிக்க டொலர்களுக்கு பட்டமொன்றை வழங்க நாம் எதிர்பார்க்கிறோம்” என்று உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க கூறுகிறார். 13 மில்லியன் ரூபா பெறுமதியான கணனிகள், பிரின்டர்கள் மற்றும் போட்டோ பிரதி இயந்திரங்களை தென்கிழக்கு மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களுக்கு பகிர்ந்தளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ் வாறு கூறினார்.

அத்துடன் பல்கலைக்கழக மாணவர்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படு த்துவதற்காக இந்திய உயர் ஸ்தானிகர் 50 பஸ்களையும் 50 ஜீப் வண்டிகளையும் வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ள தாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இந்திய உயர் கல்வி அமைச்சரை அடுத்த மாதம் தான் சந்திக்க திட்டமிட்டுள் ளதாகவும் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

நியூஸிலாந்து, இலங்கை இன்று மோதல்

sri-lankan-cricketers.jpgஇலங் கையில் நடைபெறும் முத்தரப்பு ஒரு நாள் போட்டித் தொடரில் இன்று 2வது ஆட்டத்தில் இலங்கை அணி, நியூஸிலாந்தை எதிர்கொள்ள உள்ளது. முதல் போட்டியில் இந்தியாவை 200 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது நியூஸிலாந்து அணி. அதே உற்சாகத்துடன் இலங்கை அணியை அந்த அணி சந்திக்க உள்ளது.

மாணவி கட்டப்பட்ட விவகாரம்: பரீட்சை முடிவடைந்த பின்னரே முழுமையான விசாரணை

உயர்தர பரீட்சை எழுதச் சென்ற மாணவி கை, கால் கட்டப்பட்டு வாயில் துணி அடைக்கப்பட்டிருந்த சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணைகளை பரீட்சைகள் யாவும் முடிவடைந்த பின்னரே நடத்துவது என பொலிஸார் முடிவு செய்துள்ளனர்.

எனினும் குறித்த மாணவி பாலியல் மற்றும் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கவில்லை என்பதும் வைத்திய பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உயர்தர பரீட்சைகள் தொடர்ந்தும் நடை பெற்று வருவதால் குறித்த மாணவியை பொலிஸ் விசாரணைக்குட்படுத்தும் போது மன அழுத்தங்களுக்கு உள்ளாகலாம் என்ற நோக்கம் காரணமாகவே விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்த மாணவியின் கைக்கட்டினை அகற்றிய பாடசாலை மின்சார பிரிவு சிற்றூழியர் இக்கட்டு மாணவி தன்னைத்தானே கட்டியதாக தெரியவில்லை என கூறியுள்ளதால் விசாரணைகள் பல திசைகளிலும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மாணவி பரீட்சை முடியும் வரை தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்படமாட்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.

மேர்வின் சில்வாவின் பாதுகாப்பு குறைப்பு

mervyn.jpgமுன்னாள் பிரதியமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு வழங்கப்பட்ட அரசாங்கத்தின் பாதுகாப்பும் வாகனங்களும் குறைக்கப்படுமென தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் குலுகல்ல கூறியுள்ளார்.

சாதாரணமான எம்.பி. ஒருவருக்குரிய பாதுகாப்பே அவருக்கு வழங்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, அவரின் உத்தியோகபூர்வ வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்படுமென பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் உறுதிப்படுத்தியதாக டெய்லி மிரர் இணையத்தளம் தெரிவித்தது.

இதேவேளை, களனியில் தனது ஆதரவாளர் மத்தியில் உரையாற்றிய மேர்வின் சில்வா தனது பாதுகாப்பை வாபஸ் பெறுவதற்கு சிலர் முயற்சிப்பதாகவும் அத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் தனிப்பட்ட பாதுகாப்பை தான் உபயோகிப்பார் எனக் கூறியுள்ளார்.

இதேவேளை, களனித் தேர்தல் தொகுதியின் சு.க. பிரதம அமைப்பாளர் பதவியிலிருந்தும் மேர்வின் சில்வா அகற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் பிரதியமைச்சரான மேர்வின் சில்வா பயன்படுத்திய அலுவலகமும் பூட்டப்பட்டுள்ளது. பொலிஸார் அதனைச் சுற்றி காவல் இருந்து வருகின்றனர். அக்கட்டிடப் பகுதிக்குள் எவரும் செல்வதற்கு இடமளிக்கப்பட வேண்டாமென பொலிஸாருக்குக் கூறப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க முன்னாள் நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சரான மேர்வின் சில்வாவுக்கு எதிராகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து 3 உறுப்பினர்களைக் கொண்ட ஒழுக்காற்றுக் குழு விசாரணையை மேற்கொள்ளும் என அரசாங்கம் கூறியுள்ளது.

யாழ்தேவி, உதயதேவி புறப்படும் நேரங்கள் மாற்றம் – 15 ஆம் திகதி முதல் அமுல்

கொழும்பு கோட்டையிலிருந்து தினமும் புறப்படும் தாண்டிக்குளம் யாழ்தேவி கடுகதி ரயில், மட்டக்களப்பு உதயதேவி கடுகதி ரயில் ஆகியவை புறப்படும் நேரங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் இந்த நேர மாற்றம் அமுலுக்கு வரும் எனவும் ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி கொழும்பு கோட்டையிலிருந்து தாண்டிக்குளம் நோக்கி புறப்படும் ரயில் காலை 5.45 க்கு புறப்படும். தாண்டிக்குளத்திலிருந்து 11.30 க்கு கொழும்பு நோக்கி புறப்படும்.

மட்டக்களப்பு நோக்கி புறப்படும் உதயதேவி புகையிரம் கொழும்பு கோட்டையிலிருந்து காலை 6.10 க்கு புறப்படும். இதேபோன்று கொழும்பு – அநுராதபுரம், கல்ஓயா – மட்டக்களப்பு, கல்ஓயா – திருமலை, திருமலை – மஹவ, பொலன்னறுவை – மட்டக்களப்பு வரையிலான ரயில் பஸ் சேவை, கல்ஓயா – மட்டு ரயில் பஸ் சேவை, குருணாகல் – மஹவ பேபி ரயில், மஹவ – பொல்கஹவல பேபி ரயில் நேரங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.