யாழ்ப்பாணக் குடாநாட்டில் தற்போது நிலவும் அமைதிச்சூழலைப் பயன்படுத்தி வெளியிடங்களைச் சேர்ந்த சிலர் பல்வேறு தந்திரோபாயங்கள் மூலம் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்து வருவதுடன், அவர்களில் சிலர் கொள்ளைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன்னர் மன்னாரிலிருந்து பஸ்ஸில் யாழ்ப்பாணம் வந்த யாழ்ப்பாண வாசி ஒருவருடன் கூடப்பயணம் செய்த மன்னாரைச் சேர்ந்த ஒருவர் நட்பாக பழகியுள்ளதுடன் தனக்கு யாழ்ப்பாணத்தைச் சுற்றிப்பார்க்க உதவுமாறும் கேட்டுள்ளார்.
அந்த மன்னார் வாசி நட்பு முறையில் பழகியதால் அதனை நம்பிய யாழ்.வாசி அவரை யாழ்ப்பாணத்தில் 2 ஆம் குறுக்குத் தெருவிலுள்ள தனது வீட்டில் தங்க வைத்துள்ளார். அவரும் வீட்டில் உள்ளவர்களுடன் அன்பாகப் பழகி அவர்களையும் நம்பவைத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தைச் சுற்றிப்பார்க்க வந்தவர் வியாழக்கிழமை இரவு தானே இரவு சாப்பாடு வாங்கித் தருவதாகக்கூறி வாங்கி வந்துள்ளார். இரவு சாப்பாட்டில் அவர் மயக்க மருந்தை கலந்திருப்பதை அறியாத யாழ்ப்பாண வாசியின் குடும்பத்தினர் அதனை உண்ட பின்னர் மயங்கிவிட்டனர். இதையடுத்து, மன்னாரிலிருந்து வந்தவர் அந்த வீட்டிலிருந்த பணம் , நகை மற்றும் பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களையும் சுருட்டிக்கொண்டு தலைமறைவாகிவிட்டார்.
மறுநாள் இவர்கள் எழுந்துபார்த்த போது தாம் ஏமாற்றப்பட்டதை அறிந்தனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர் யாழ்.பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதேபோல, சிலர் நிவாரணம் தருவதாக போலி விண்ணப்பப்படிவங்களை ஒன்று 100 ரூபா வீதம் வழங்கி பலரிடம் பணமோசடி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வேறு சிலர் கைத்தொலைபேசி போன்ற பொருட்களை மலிவு விலைக்குத் தருவதாகவும் தாம் ஒரு நிறுவனத்தின பிரதிநிதிகள் என்றும் கூறி முற்பணம் பெற்றுவிட்டு தலைமறைவாகியுள்ளனர். எனவே, இவ்வாறானவர்கள் குறித்து குடாநாட்டு மக்கள் மிகுந்த அவதானமாக இருக்க வேண்டுமென அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.