28

28

ஐந்து இளைஞர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை!!!

Lancelot_Roadலண்டன் ஹரோ குழுவிற்கும் லண்டன் ஈலிங் றோட் டிஎம்எக்ஸ் குழுவிற்கும் இடையே 2009 ஓகஸ்ட் 7ல் வெம்பிளியில் இடம்பெற்ற மோதலில் சம்பந்தப்பட்ட ஐவருக்கு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையை வழங்கி உள்ளது.

இம்மோதலில் ஹரோ குழுவைச் சேர்ந்த அருள்முருகன் செபமாலை, டிஎம்எக்ஸ் குழுவைச் சேர்ந்த வாகீசன் பரமலிங்கத்தை கிரிக்கட் பற்றினால் அவரது முகத்திலும் தலையிலும் பலமுறை தாக்கி உள்ளார். அதனால் வாகீசனின் முகத்திலும் தலையிலும் பலத்த காயங்களும் முகத்தில் எலும்பு முறிவுகளும் ஏற்பட்டது. அவரது தாடையையும் அருள்முருகன் செபமாலை உடைத்திருந்தார். அதற்கு முன்னர் வாகீசன் பரமலிங்கம், அருள்முருகன் செபமாலையை கொலை செய்யப் போவதாகக் கூறி அவரது முகத்தை பிக்காஸினால் தாக்கி இருந்தார்.

தண்டனை விபரம்:
அருள்முருகன் செபமாலை (22) (டிஎம்எக்ஸ் குழு) – கென்ரன் : 7 ஆண்டுகள்.
வாகீசன் பரமலிங்கம் (27) (ஹரோ குழு) – சறே : நான்கு ஆண்டுகள்.
ஐங்கரன் தர்மலிங்கம் (24) டிஎம்எக்ஸ் குழு) – கிறீன்போர்ட் :  மூன்று ஆண்டுகள்.
மதுசூதன் சச்சிதானந்தன் (28) (ஹரோ குழு) – ரெய்னர்ஸ் லேன் : இரண்டரை ஆண்டுகள்.
பார்த்திபன் பரமலிங்கம் (30) (ஹரோ குழு) – என்பீல்ட் :  குற்றவாளியாகக் காணப்பட்டார். சுகவீனம் காரணமாக இவரது தண்டனை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இவர்கள் மார்ச் 1இல் ஓல்ட்பெயிலியில் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டனர். இவர்களுக்கான தண்டனை மே முற்பகுதியில் வழங்கப்பட இருக்கின்றது.

2009 ஓகஸ்ட் 7ல் வெம்பிளியில் இடம்பெற்ற இளைஞர் குழுக்களிடையேயான மோதல் தொடர்பாகவே இவர்கள் குற்றவாளிகளாகக் காணப்பட்டனர். இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது, ஹரோ குழுவினர் சவுத் ஹரோ பார்க்கில் ஜக் டானியல் அருந்திக் கொண்டு இருந்துவிட்டு ஈலிங் றோட்டில் உள்ள பாம் பீச் ரெஸ்ரோரன்ருக்கு சென்றுள்ளனர்.

வழியில் லான்ஸ்லொட் வீதியில் இரு குழுக்களும் ஒருவரை ஒருவர் சந்திக்க முறுகல் உருவானது. ஹரோ குழுவினர் ஈலிங் றோட் டிஎம்எக்ஸ் குழுவினரை கொல்லப் போவதாகப் பயமுறுத்தினர். அருகில் இருந்த கார் தரிப்பு நிலையத்திலிருந்து டிஎம்எக்ஸ் குழுவினரது எண்ணிக்கை பெருத்தது. இது அருகில் உள்ள சிசிரிவியில் பதிவாகி உள்ளது. இது நீதிமன்றில் யூரிகளுக்கும் காண்பிக்கப்பட்டது.

இம்மோதலில் வாகீசன் பரமலிங்கத்தின் தாடை உடைக்கப்பட்டதுடன் முகத்திலும் காயங்கள் ஏற்படுத்தப்பட்டது. ஹரோ குழுவைச் சேர்ந்த அருள்முருகன் செபமாலை, வாகீசன் பரமலிங்கத்தை கிரிக்கட் பற்றினால் அவரது முகத்திலும் தலையிலும் பலமுறை தாக்கி உள்ளார். அதனால் வாகீசனின் முகத்திலும் தலையிலும் பலத்த காயங்களும் முகத்தில் எலும்பு முறிவுகளும் ஏற்பட்டது. அவரது தாடையையும் அருள்முருகன் செபமாலை உடைத்திருந்தார். 

அதற்கு முன்னர் வாகீசன் பரமலிங்கம், அருள்முருகன் செபமாலையை கொலை செய்யப் போவதாகக் கூறி அவரது முகத்தை பிக்காஸினால் தாக்கி இருந்தார்.

குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்களும் அவர்களது தண்டனை விபரமும்:
Sepamallai_Arulmuruganஅருள்முருகன் செபமாலை (22) (டிஎம்எக்ஸ் குழு) – கென்ரன் : அருள்முருகன் செபமாலை ஆயுதம் (கிரிக்கட்பற்) வைத்திருந்ததற்காகவும் வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டதற்காகவும் திட்டமிட்ட நோக்குடன் உடற்காயத்தை ஏற்படுத்தியதற்காகவும் குற்றவாவாளியாகக் காணப்பட்டார். இவர் மீது சுமத்தப்பட்ட கொலை முயற்சிக் குற்றச்சாட்டில் இருந்து அருள்முருகன் தவிர்க்கப்பட்டார். இவருக்கு 7 ஆண்டுகள். சுpறைத் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.

Paramalingam_Vakeesanவாகீசன் பரமலிங்கம் (27) (ஹரோ குழு) – சறே : வாகீசன் ஆயுதம் (பிக்காஸ்) வைத்திருந்ததற்காகவும் வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டதற்காகவும் குற்றவாளியாகக் காணப்பட்டார். இவருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.

Tharmalingan_Iynkaranஐங்கரன் தர்மலிங்கம் (24) டிஎம்எக்ஸ் குழு) – கிறீன்போர்ட் : ஐங்கரன் ஆயுதம் (இரும்புக் குற்றி) வைத்திருந்ததற்காகவும் வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டதற்காகவும் குற்றவாளியாகக் காணப்பட்டார். இவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

Satchithananthan_Mathusoothanமதுசூதன் சச்சிதானந்தன் (28) (ஹரோ குழு) – ரெய்னர்ஸ் லேன் : ஆயுதம் (கூரிய ஆயுதம் கத்தி) வைத்திருந்ததற்காக குற்றவாளியாகக் காணப்பட்டார். மதுசூதன் வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டு தள்ளுபடி செய்யப்பட்டது. இவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

பார்த்தீபன் பரமலிங்கம் (30) (ஹரோ குழு) – என்பீல்ட் : பார்தீபன் ஆயுதம் வைத்திருந்ததற்காகவும் (போத்தல்) வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டதற்காகவும் குற்றவாளியாகக் காணப்பட்டார். சுகவினம் காரணமாக இவரது தண்டனை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இவர்களுடன் கென்ரனைச் சேர்ந்த அஜித்குமார் தர்மராஜா (26) இவரின் தந்தை கந்தையா தர்மராஜா (48) இருவர் மீதும் வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. அஜித்குமார் ஆயுதத்தை வைத்திருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டு இருந்தார். சம்பவத்தின் போது அவ்விடத்தில் நின்ற அஜித்குமாரும் தந்தையும் அங்கு உருவான பதட்டத்தை தணிக்க முயன்றமை நீதிமன்றில் நிரூபிக்கப்பட்டு அவர்களுடைய குற்றச்சாட்டுகள் தள்ளுபடி செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

ஜீ. எல். பீரிஸ் – ஹிலாரி இன்று சந்திப்பு

hilary-gl.jpgஅமெரிக் காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் இன்று வெள்ளிக்கிழமை அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டனைச் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். இச்சந்திப்பானது திட்டமிட்டபடி வொஷிங்டனிலுள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலகத்தில் (இலங்கை நேரப்படி) இன்று மாலை நடைபெறவிருப்பதாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்ரனின் விசேட அழைப்பினையேற்றே வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கடந்த 23ம் திகதி அமெரிக்காவுக்குப் பயணமானார்.  அமைச்சரின் அமெரிக்காவுக்கான விஜயத்தையடுத்து, அந்நாட்டு மக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான பயண எச்சரிக்கை அமெரிக்க அரசாங்கத்தினால் திரும்பப் பெறப்பட்டுள்ளமையானது பாரிய திருப்பு முனையாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தை கடந்த 25ம் திகதி செவ்வாய்க்கிழமை சென்றடைந்த அமைச்சர் பீரிஸ் ஐக்கிய நாடுகள் சபையின் செயலகத்துக்கு விஜயம் செய்ததுடன் அங்கு ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகளையும் சந்தித்து பேச்சு நடத்தினார்.

ஐ. நா. செயலாளர் நாயகத்தின் பிரதான ஆலோசகர் விஜே நம்பியார், பிரதி செயலாளர் நாயகம் ஷின் பாஸ்கோ உள்ளிட்ட ஐ. நாவின் பல சிரேஷ்ட அதிகாரிகளையும் அமைச்சர் சந்தித்து நாட்டின் சமாதானம், அபிவிருத்தி, புனர்நிர்மாணம், மீள்குடியேற்றம் ஆகியவை குறித்து கலந்துரையாடினார். இச்சந்திப்புக்களில் அமைச்சருடன் ஜ. நா.வின் இலங்கைக்கான தூதுவர் கலாநிதி பாலித கொஹன, பிரதி நிரந்தர பிரதிநிதி பந்துல ஜயசேகர மற்றும் கவுன்சிலர் மக்ஸ்வெல் கீகல் ஆகியோரும் பங்குபற்றினர்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் பீரிஸ் நியூயோர்க்கில் உள்ள சர்வதேச தந்திரோபாய கற்கைகளுக்கான கேந்திரத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டார். இதில் அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்; இலங்கை மக்கள் கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் காணமுடியாத சந்தோஷத்தை தற்போது அனுபவித்து வருவதாக கூறினார்.

சமாதான முன்னெடுப்பு, நிறைவடையும் கட்டத்தில் உள்ள மீள்குடியேற்றம், குறிப்பாக வடக்கில் அமுல்படுத்தப்பட்டு வரும் புனர்நிர்மாணம், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு இதனால் முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சாதகமான சூழ்நிலை, இலங்கை யாப்பில் புதிய திருத்தங்களை மேற்கொள்ளக்கூடிய சாத்தியக்குகூறுகள் உள்ளிட்ட பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது அமெரிக்காவின் தலைநகரான வொஷிங்டன் டி.சியை வந்தடைந்திருக்கும் அமைச்சர் பீரிஸ், வெளியுறவு அலுவல்களுக்கான அமெரிக்க காங்கிரஸின் பிரதிநிதி ஹோவோர்ட் பேர்மன், இராஜாங்க உப குழுவின் தலைவர் நீட்டா லோகேய், அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் செனற்சபை உறுப்பினர்களையும் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். வொஷிங்டனுக்கான இலங்கைத் தூதுவர் ஜஸிய விக்கிரமசூரியவும் இதில் கலந்துகொண்டார்.
 

இலங்கையில் அமெரிக்க பிரஜைகளுக்கான பயண எச்சரிக்கை ரத்து

usa.jpgஇலங்கை யில் பாதுகாப்பு நிலைமை முன்னேற்ற மடைந்துள்ளதையடுத்து அமெரிக்கா விடுத்திருந்த பயண எச்சரிக்கையை அமெரிக்க ராஜாங்க திணைக்களம் ரத்துச் செய்துள்ளது. அமெரிக்க ராஜாங்க திணைக்களம் இது தொடர்பான அறிவிப்பை கடந்த புதன்கிழமை விடுத்துள்ளது.

‘2009 நவம்பர் 19 ஆம் திகதி இலங்கைக்காக விடுக்கப்பட்ட பயண எச்சரிக்கையை 2010 மே 26 ஆம் திகதி அமுலாகும் வகையில் ரத்துச் செய்யப்பட்டுள்ளது’ என்று ராஜாங்க திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2009 மே 18 ஆம் திகதி இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றியை பிரகடனம் செய்தது. யுத்தம் முடிவுற்றதாக பிரகடனப் படுத்தப்பட்டதையடுத்து புலிகள் இயக்கம் கொழும்பிலோ அல்லது இலங்கையின் வேறு எந்த இடத்திலோ எந்தவொரு தாக்குதலையும் நடத்தவில்லை என்று ராஜாங்க திணைக்களத்தின் அறிக்கைகளில் மேலும் கூறப்பட்டுள்ளது.

மோதல் முடிவுற்ற சில தினங்களில் இலங்கையில் சுற்றுலாப் பயணத்துறை முன்னேற்றம் காணத் தொடங்கியது. அது முதல் சுற்றுலாத்துறை தொடர்ந்து அபிவிருத்தியடைந்து வரும் நிலையில் கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது நடந்து முடிந்த சில மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐ.நா.வின் நிபுணர் குழுவுக்கு பிரிட்டிஷ் அரசு ஆதரவு

 uk-1.jpgஇலங் கையின் பதிலளிக்கும் கடப்பாடு தொடர்பாகத் தனக்கு ஆலோசனை வழங்க ஐ.நா. செயலாளர் நாயகம் நிபுணர் குழுவை அமைப்பதற்கு பிரிட்டன் ஆதரவளித்துள்ளது.

இந்தவார முற்பகுதியில் ஐ.நா.வுக்கான பிரிட்டிஷ் தூதுவர் லியோல் கிரான்ட் ஐ.நா. செயலாளர் நாயகத்தைச் சந்தித்திருந்தார். இச்சந்திப்பின்போது செயலாளர் நாயகத்திடம் இலங்கை விவகாரம் குறித்துப் பேசியிருந்ததாக தூதுவர் ஐ.நா.வைத் தளமாகக் கொண்ட இன்னர்சிற்றி பிரஸுக்குக் கூறியுள்ளார்.

சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தெடார்பான குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்கான பதிலளிக்கும் கடப்பாட்டு நடவடிக்கைகளுக்காக பான் கீ மூன் தெரிவித்திருக்கும் யோசனைகளை பிரிட்டிஷ் அரசாங்கம் முழுமையாக ஆதரித்திருப்பதாக தூதுவர் லியோல் கிரான்ட் கூறியுள்ளார். இதில் நிபுணர் குழு யோசனையும் உள்ளடங்கியிருக்கிறதென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் கோர்டன் பிறவுண் மற்றும் அவரின் வெளிவிவகார அமைச்சராகவிருந்த டேவிட் மில்லிபான்ட் ஆகியோரிடமிருந்த அதிகாரம் இப்போது கமரோன், கிளெக், ஹேக்கிடம் கைமாறியுள்ளது. மில்லிபான்ட் இப்போது தொழில் கட்சித் தலைமைக்கு போட்டியிடுகிறார்.

அரசியலமைப்பு மாற்றத்திற்கு சுதந்திரக் கட்சியின் மத்திய குழு அங்கீகாரம் – அலரி மாளிகையில் ஜூன் 7இல் வருடாந்த மாநாடு

alavi.jpgஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஜூன் மாதம் 7 ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நேற்று முன்தினம் கூடிய போது இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அக்கட்சியின் சிரேஷ்ட உபதலைவர்களில் ஒருவரும், மேல் மாகாண ஆளுநருமான அலவி மெளலானா நேற்றுத் தெரிவித்தார்.

இம்முறை நடைபெறவுள்ள வருடாந்த பொதுக் கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரல் தயாரிப்பது தொடர்பாக ஆராய்வதற்கென கூட்டப்பட்ட இந்த மத்திய குழுக் கூட்டத்தின் போது பல்வேறு அரசியல், முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் அரசாங்கம் அடுத்தடுத்து அமோக வெற்றியீட்டியதையடுத்து அலரிமாளிகையில் முதற்தடவையாக இந்த மாநாடு பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ளதால் இம்முறை பாரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுள்ள அரசாங்கம் நாட்டினதும், மக்களினதும் நலனை கருத்திற்கொண்டு அரசியலமைப்பு உட்பட பல்வேறு மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளவுள்ளது.

அரசியலமைப்பு மாற்றங்கள், ஆணைக்குழுக்களின் நியமனங்கள், பாராளுமன்றத்தில் அரசாங்கம் முன்வைக்கவுள்ள பல்வேறு விடயங்கள் தொடர்பாக நேற்று முன்தினம் நடைபெற்ற மத்திய குழுக் கூட்டத்தின் போது விரிவாக ஆராயப்பட்டதுடன் அதற்கான அங்கீகாரத்தையும் மத்திய குழு வழங்கியதாக ஆளுநர் அலவி மெளலானா குறிப்பிட்டார்.

அரசியலமைப்பு மாற்றங்கள், மறு சீரமைப்புக்கள், ஆணைக்குழுக்களின் நியமனங்கள் போன்ற விடயங்கள் தொடர்பாக 7 ஆம் திகதி நடைபெறவுள்ள வருடாந்த மாநாட்டில் முன்வைக்கப்பட்டு பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பாகப் பேசப்பட்டதாக தெரிவித்த அவர் இது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு அடுத்து முன் வைக்கப்படவுள்ள வரவு – செலவு திட்டத்தில் சேர்த்துக் கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

மலையக எல்லை மீள் நிர்ணயம்: யோசனைகளை 31ம் திகதிக்குள் சமர்ப்பிக்க இ. தொ. கா. முடிவு

up-country.jpgமலை யகத்தில் உள்ள பொதுநிர்வாக உள்ளூராட்சி மன்றங்களின் எல்லைகளை மீள் நிர்ணயம் செய்வது தொடர்பான ஆலோசனைகளை அரசாங்கத்திற்குச் சமர்ப்பிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமையிலான மலையக அமைப்புகள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

இதற்கமைய, நுவரெலியா மாவட்டத்தின் நிர்வாகக் கட்டமைப்புகளின் எல்லை மீள் நிர்ணயம் தொடர்பான ஆலோசனைகளை எதிர்வரும் 31ஆம் திகதி எல்லை மீள்நிர்ணய ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்போவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் – பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

இரத்தினபுரி, கண்டி, பதுளை, மாத்தளை ஆகிய மாவட்டங்கள் தொடர்பான ஆலோசனைகளைச் சமர்ப்பிப்பதற்கு ஒரு மாத காலம் அவகாசம் கோரவுள்ளதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார். மலையகத்தில் தமிழ் மக்கள் மிகச் செறிவாக வாழும் நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபை, மாகாண சபை, பாராளுமன்றம் ஆகியவற்றுக்குக் கணிசமான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. அதேபோன்று தான் இங்கு குறிப்பிட்ட ஏனைய மாவட்டங்களிலும்,

எவ்வாறாயினும், நுவரெலியா மாவட்டத்தில் தற்போது ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளே உள்ளன. இதனைப் பன்னிரண்டாக அதிகரிக்க வேண்டுமென இ. தொ. கா. தலைமையில் கூடி தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மலையக மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வாய்ப்புகளைத் தோற்றுவிக்க முடியும் என பிரதியமைச்சர் சிவலிங்கம் கூறினார். கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும், ஏனைய மாவட்டங்கள் தொடர்பில் ஒரு மாத காலத்தில் யோசனை வரைவு தயாரிக்கப்படுமென்றும் அவர் குறிப்பிட்டார். தேர்தல் தொகுதி, உள்ளூராட்சி மன்ற எல்லை ஆகியவற்றின் திருத்தங்களுடன் கூடிய அரசியலமைப்பு மாற்றத்தை எதிர்வரும் ஜுலை மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளமை தெரிந்ததே.

பொன்சேகாவுக்கு எதிராக விரைவில் மூன்றாவது இராணுவ நீதிமன்ற விசாரணை?

sarath_.jpgஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக மூன்றாவது இராணுவ நீதிமன்ற விசாரணையை நடத்துவதற்கான கோரிக்கையை விடுப்பது தொடர்பான அறிக்கையொன்று விரைவில் இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் ஜகத் ஜயசூரியவிடம் சமர்பிக்கப்படவுள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இராணுவத் தளபதியாக இருந்த காலகட்டத்தில் சட்டவிரோதமான முறையில் கேள்வி மனுக்கோரல்களை முன்னெடுத்த குற்றச்சாட்டின் பேரிலேயே மூன்றாவது இராணுவ நீதிமன்ற விசாரணையை நடத்துவதற்குக் கோரும் அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்படவிருப்பதாக இராணுவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி “டெய்லி மிரர்’ இணையத்தளம் நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பான கோப்புகள் ஏற்கனவே ஆராயப்பட்டுள்ளன. அறிக்கையானது தற்போதைய இராணுவத் தளபதிக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது. மூன்று மாதங்களுக்கிடையில் மூன்றாவது இராணுவ நீதிமன்றத்தை அமைக்கும் சாத்தியம் காணப்படுவதாக இராணுவ வட்டாரங்கள் கூறியுள்ளன.

சீருடையில் இருந்தவேளை அரசியலில் ஈடுபட்டமை மற்றும் ராஜபக்ஷவுக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் எதிராக சதி செய்த குற்றச்சாட்டுத் தொடர்பாக பொன்சேகாவுக்கு எதிராக முதலாவது இராணுவ நீதிமன்ற விசரணை இடம்பெறுகிறது.

இராணுவத் தளபாடக் கொள்வனவு விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டுத் தொடர்பாக இராண்டாவது இராணுவ நீதிமன்றம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

இன்று யாழ். பெரிய பள்ளியில் தொழுகை

jaffnamosque.jpgயாழ்ப் பாணம் பெரிய பள்ளிவாசல் 20 வருடங்களுக்குப் பின்னர் இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் உத்தியோக பூர்கமாகத் திறந்து வைக்கப்படவுள் ளதுடன் முதலாவது ஜும்ஆப் பிரசங்கமும் இடம்பெறவுள்ளது.

ஒற்றுமையையும், சமாதானத்தையும் வலியுறுத்தி முதலாவது ஜும்ஆப் பிரசங்கத்தை கொழும்பு பெரிய மர்க்கஸ், ரஷாதிய்யா அரபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளரும், இப்னு உமர் ஹதீஸ் கற்கை நிலையத்தின் பணிப்பாளருமான மெளலவி எம். ஜே. அப்துல் காலிக் தேவ்பந்தி நிகழ்த்தவுள்ளார்.

காட்டுப்பள்ளி என அழைக்கப்படும் இந்தப் பள்ளிவாசல் 1713ல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பல்லவர் கால சிற்பத்தை ஒத்ததாக அமைக்கப்பட்டுள்ள இந்தப் பள்ளி 297 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததும் மிகப்பெரியதுமாகும்.

இந்தப் பள்ளிவாசல் தற்பொழுது முழுமையாக புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளதுடன் சுமார் மூவாயிரத்திற்கும் அதிகமானவர்கள் தொழக்கூடிய வசதியைக் கொண்டுள்ளது.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்பொழுது நாட்டின் பல பாகங்களிலும் இஸ்லாமியப் பணியில் ஈடுபட்டுள்ள 46 உலமாக்களும் இன்றைய நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இன்று பெண்களு க்கான விசேட பயான் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அஸர் தொழுகையைத் தொடர்ந்து உலமாக்களுடனான ஆலோசனைக் கூட்டமும் மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து இஸ்மாயில் மெளலவியால் விஷேட பிரார்த்தனையும் நடை பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்களில் ஒருவரான மெளலவி அப்துல்லாஹ் பாயிஸ் தெரிவித்தார்.

முஸ்லிம் கல்லூரி வீதியில் அமைய ப்பட்டு ள்ள இந்தப் பள்ளிவாச லுக்குட்பட்ட பகுதியில் முஸ்லிம்கள் மீண்டும் மீளக்குடியமர்ந்ததைய டுத்தே பள்ளிவாசல் புனரமைக்கப்பட்டு அழகிய தோற்றத்து டன் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார். ஒல்லாந்தர் காலத்தில் பெரியளவில் இந்தப் பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளது. அப்போது அந்தப் பிரதேசத்தில் செல்வந்தராக இருந்த முகம்மது தம்பி மரைக்காயரும், வண்ணார் பண்ணை வைத்தியலிங்க செட்டியார் என்பவரும் இணைந்தே இப்பள்ளியைக் கட்டியதாக வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன.