நாடெங்கும் பரவலாக தற்போது குறுங்செய்திகள் மூலமான உயிர் அச்சுறுத்தல்கள் கையடக்கத் தொலைபேசியூடாக அனுப்பப்படுவது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று முதல் கையடக்கத் தொலைபேசிகளுக்கு 7888308001, 9316048121, 9876266211, 9888854137, 9876715587 எனும் இலக்கங்களில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்க வேண்டாம். இந்த இலக்கங்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த அழைப்புக்களை ஏற்கும்போது அவற்றில் இருந்து வரும் உயர் ஒலி அதிர்வு (High frequency) காரணமாக மூளை வெடித்து பாதிப்புக்குள்ளாகினர் என்றும், உலகளாவிய ரீதியில் மேற்படி இலக்கங்களுக்குப் பதில் வழங்கிய நபர்கள் இது வரையில் 27 பேர் இறந்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. தவிர, மூளைக்கு வழங்கப்படும் உயர் அழுத்தம் காரணமாகவே மேற்படி இறப்புக்கள் இடம்பெற்றதாகவும் செய்திகள் வெளிவந்தன. என்று கையடக்கத் தொலைபேசிகளுக்கு குறுந் தகவல் (SMS) அனுப்பப்பட்டது.
அக்குறுந்தகவலில் இதனை டயலொக் நியூஸ் சேவை (DD News) உறுதி செய்வதாகவும், இதனை நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் உடனடியாக அறிவியுங்கள் எனவும் மேலும் கூறப்பட்டிருந்தது. இத்தகவல்களால் பீதியடைந்த மக்கள் பலரும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பலரிடமும் விசாரித்ததுடன் தமது தொலை பேசிகளையும் நிறுத்தி வைத்தனர்.
இலங்கையில் தொலைத் தொடர்புச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், இவ்வாறு பரவலாகப் பேசப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனத் தெரிவித்துள்ளன. இது மக்களை ஏமாற்றுவதற்காக பரப்பப்படும் வதந்திகள் என வெளிநாட்டுச் செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன.
‘மரண அழைப்பு’ என அழைக்கப்படும் இந்த குறுஞ்செய்திகள், கடந்த 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ஆம் திகதி பாகிஸ்தானில் அனுப்பப்பட்டுள்ளன. அவ்வேளை, ஆண்களுக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் அந்தக் குறுஞ்செய்திகள் மூலம் பாதிப்பு ஏற்படுவதாக அச்சுறுத்தப்பட்டிருந்தது. அதன்பின்னர் மின்னஞ்சலிலும் அவ்வாறான அச்சுறுத்தல் செய்திகள் வெளியாகியுள்ளன. அவை இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள், ஆபிரிக்கா ஆகிய பகுதிகளில் வாழும் மக்களுக்கும் பரவத் தொடங்கியதாக அச்செய்திகளில் தெரிவிக்கப்படுகிறது.
மக்கள் பீதியடையத் தொடங்கியதால் இது தொடர்பான ஆய்வுகளில் தொலைத்தொடர்புத் துறையினர் ஈடுபட்டபோதுதான் அது பொய்யான செய்தி எனத் தெரியவந்துள்ளது.