கல்வித்துறையை மறுசீரமைக்க பாராளுமன்றத் தெரிவுக்குழு – மூன்று மாதத்தினுள் புதிய சட்டம் – கல்வி அமைச்சர் பந்துல

bandula.jpgகல்வித் துறையை முழுமையாக மறுசீரமைக்கும் வகையில் புதிய கல்விச் சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கெனப் பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை அமைப்பதற்காக கொள்கைத் திட்டங்கள் பாராளுமன்றச் செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். தேசிய கல்விக் கொள்கை ஒன்றை மூன்று மாத காலத்திற்குள் தயாரித்து சட்டமாக்குவதற்கான நடவடிக்கைகளை இந்தப் பாராளுமன்ற தெரிவுக்குழு மேற்கொள்ளுமென அமைச்சர் கூறினார்.

புதிய கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றதன் பின்னர் நேற்று அமைச்சில் முதலாவது செய்தியாளர் மாநாட்டை அமைச்சர் நடத்தினார். இந்தச் செய்தியாளர் மாநாட்டில் பிரதி கல்வி அமைச்சர் ரி. பி. ஏக்கநாயக்க புதிய கல்விச் செயலாளர் சுனில் எஸ். சிறிசேன மற்றும் மேலதிகச் செயலாளர்கள், அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கல்வித் துறை தொடர்பான உத்தேச பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் சகல அரசியல் கட்சிகளையும் சார்ந்த பிரதிநிதிகளும் உள்வாங்கப்படுவார்கள். இந்தத் தெரிவுக் குழுவின் முன் சகல தரப்பினரும் தமது சாட்சியங்களை வழங்கி மறுசீரமைப்புக்கான யோசனைகளை முன்வைக்க முடியும் என்று தெரிவித்த அமைச்சர் குணவர்தன, சகல மட்டத்திலும் ஆலோசனைகள் பெறப்பட்டு மூன்று மாத காலத்தில் சட்ட மூலம் நிறைவேற்றப்படும் எனக் குறிப்பிட்டார். புதிய சட்ட மூலத்தின் ஊடாக கல்வித் துறையில் நிலவும் சகலவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படுமென்று கூறிய அமைச்சர் 2011 ஆண்டு முழுமையாக மறுசீரமைக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

சம்பள உயர்வு, சம்பள முரண்பாடு, இடமாற்றம், பதவி உயர்வு, பெற்றார் மாணவர், ஆசிரியர்களுக்கிடையிலான சிக்கல்கள், பாடசாலைகளைத் தரப்படுத்தல், புலமைப் பரிசில் பரீட்சை, முதலாம் ஆண்டுக்கு மாணவர்களைச் சேர்த்தல், தனியார் சர்வசேத மற்றும் அறநெறிப் பாடசாலை பிரச்சினைகள் எனப் பல்வேறு விதமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் அதேநேரம், அரசாங்கமும், அமைச்சரும் மாறும்போது கல்விக் கொள்கையை மாற்றாதிருக்கும் வகையில் தேசிய கொள்கை வகுக்கப்படுவதாகக் கூறினார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வாழிகாட்டலின்படி நாட்டின் மனித வளத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் கல்வி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *