ஏப்ரல் 8ல் தானே இலங்கையில் பொதுத் தேர்தல் நடந்து முடிந்தது, பிறகு என்ன “மே தேர்தல்” என குழம்ப வேண்டாம். இது நம் நாட்டு தேர்தல் அல்ல, ஐ.இ (UK)தில் மே 6ல் நடக்கும் பொதுத் தேர்தலும் அல்ல. இது ஒரு விசித்திரமான தேர்தல். உலகத்தின் முக்கிய நகரங்களில் நடக்கவுள்ள தேர்தல், அதுவும் புலம் பெயர் இலங்கை தமிழர்களால் நடத்தப்படும் தேர்தல்.
மே 2ம் திகதி முக்கிய மூன்று கண்டங்களில், ஐரோப்பா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா வின் முக்கிய நகரங்களில் ஒரே நாளில் “தமிழ் புலி” (Tamil tigers)களின் ஆதரவாளர்கள் இலங்கையின் இறையாண்மையில் (Sovereignty) இருந்து பிரிந்து சென்று தனியான ஒரு ஆட்சியை இலங்கையின் வடக்கு, கிழக்கு இணைந்த பிரதேசத்தில் நிறுவி “தமிழ் ஈழம்” (Tamil Ealam) என்ற தனி இறைமை கொண்ட நாடொன்றை (State) பிறசவிப்பதே இத் தேர்தலின் நோக்கு.
இத் தேர்தலுக்கு “நாடு கடந்த தமிழீழ அரசு(Transnational government of Tamil Ealam)” சுக்கான தேர்தல் என்ற பெயரும் சூடப்பட்டுள்ளது. இந்த நா.க.த.அ சின் இணைப்பாளரான அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை/அமெரிக்க சட்டத்தரணி திரு. வி. உருத்திரகுமரனின் கூற்றுப்படி தமிழர் செறிந்து வாழும் புலம்பெயர் நாடுகளில் தேர்தல் மூலம் இலங்கை தமிழர்களால் தெரிவு செய்யப்படும் நபர்கள் (புலி ஆதரவாளர்கள்) தனித்தனியான குழுவாக, அதாவது நா.க.த.அ சின் அங்கமாக அந்தந்த நாடுகளில் செயல்பட்டு இறுதி இலக்கை அடைய (படாத) பாடுபடுவர்.
சர்வதேச சட்டத்தில் (International Law) இந்த நாடுகடந்த அரசை தஞ்ச அரசு (Government in Exile) என்றும் அழைப்பர். இந்த தஞ்ச அரசிற்கான சர்வதேச சட்டத்தின் வரைவிலக்கணம் பின்வருமாறு அமைகின்றது:
“இறைமையுள்ள நாட்டின் (அரசொன்றின்) அரசாங்கம் அந்நிய நாடொன்றின் இரானுவத்தால் பலாத்காரமாக பறிக்கப்பட்டு, அப்பிரதேசம் அந்நிய நாட்டின் ஆதிக்கதில் இருக்கும் போது அதிகாரம் இழந்த அரசாங்கம் மூன்றாம் நாடொன்றில், அந் நாட்டின் அனுசரணையுடன் தற்காலிகமாக ஒரு அரசாங்கத்தை நிறுவுவது” என்பதாகும்.
இந்த வரைவிலக்கணத்தை இலங்கையுடன், குறிப்பாக இலங்கையின் தமிழ் பிரதேசத்துடன் (வடக்கு, கிழக்கு) பொருத்தி பார்க்கும் போது இது முற்றும் பொருந்துவதாகவில்லை. ஏனெனில் இலங்கையின் வடக்கு, கிழக்கு இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குற்பட்டது. வடக்கு, கிழக்கில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தனியான ஆட்சி ஒன்று நிலவவில்லை. இலங்கை ராணுவம் என்பது இலங்கையின் வடக்கையும், கிழக்கையும் உள்ளடக்கிய மொத்த ஆள்புல பிரதேசத்திற்கும் சொந்தமானது. இந்த ராணுவத்தை அந்நிய நாட்டு ராணுவமாக கருத முடியாது. இந்த மே 2 தேர்தலில் போட்டி இட்டு நா.க.த.அ சின் உறுப்பினராக வர இருப்போரும் பதவி இழக்கச் செய்யப்பட்ட அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் அல்லர். எனவே இந்த நா.க.த.அ என்பது ஒரு தஞ்ச அரசாங்கம் என்ற வரைவிலக்கணத்துக்குள் வரவில்லை. ஆகவே இந்த நா.க.த.அ என்பது சர்வதேச சட்டவரம்பில் ஒரு பரிசோதனை (Experiment) மட்டுமே. பரிசோதனை என்பதால் அது வெற்றி பெறுவதற்கான நிகழ்தகவு 2:1, இருப்பினும் இன்றைய சர்வதேச அரசியல் போக்கிலும், நாட்டின் சமகால அரசியல் நிலைமையிலும் இது என்றும் வெற்றி பெற முடியாத ஒரு விடயமே. சுருங்கக் கூறின் ஒரு கனவு, அதுவும் பகற்கனவு.
இந்த நா.க.த.அ தேர்தலுக்காக ஐ. இரா (UK) தில் வெளியிடப்பட்டுள்ள விஞ்ஞாபனத்தில் முக்கியமாக இரண்டு விடயங்கள் சொல்லப்பட்டுள்ளன. தமிழர்களுக்கான தனி நாடொன்றை மிக விரைவில் (மூன்று ஆண்டுக்குள்) அமைத்து தமிழரின் சுதந்திர வாழ்வை உறுதிபடுத்துதல், மற்றையது இனஅழிப்பு, போர்குற்றம் தொடர்பாக முக்கியமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அவர் சகோதரர், பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை சர்வதேச நீதிமன்றத்தின் முன் கொண்டு செல்லல் என்பவையாகும். இவை இரண்டும் நடந்தேறுவதற்கான அறிகுறி இப்போதைக்கு இல்லை என்பதை இந்த தேர்தல் வேட்பாளர்கள் வேண்டுமென்றே விளங்க மறுக்கின்றனர். இதை விடவும் ஐ.இரா வேட்பாளர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த வேட்பாளர் ஒருபடி மேலே சென்று இந்த நோக்கம் நிறைவேறாத பட்சத்தில் மீண்டும் ஆயுத வழிக்குச் செல்வதை விட வேறு வழியில்லை என்றும் கூறியுள்ளார். ஆக இவர்கள் புலிகள் முடித்த இடத்திலிருந்து தொடங்க எத்தனிக்கின்றனர் எனலாம்.
நிற்க, தமிழர்களுக்குகான தனி நாடென்பது “வட்டுக்கோட்டை தீர்மான (VaddukKodai Resolution)” த்தின் அடிப்படையை கொண்டது. இந்த வட்டுக்கோட்டை தீர்மானமானது இலங்கையின் பல்லினத்துவ (Multi Ethnic) தன்மையை குறுக்கி அதை இருவின நாடாக காண முற்படுவது. அதாவது இலங்கையில் சிங்களவர், தமிழர் என்ற இரண்டு இனங்களே உள்ளனர் என்றும், இந்த இனங்களுக்கே அரசியல் ரீதியாக பிரிந்து செல்லும் சுய நிர்ணய உரிமை (Right to self determination) உள்ளதாக சொல்லப்படுகின்றது. எனவே இலங்கையின் வடக்கும், கிழக்கும் சேர்ந்த தமிழரின் பூர்வீக நிலத்தில் தமக்கான தனி அரசை நிறுவ தமக்கு தார்மிக ரீதியிலான அரசியல் அதிகாரம் உள்ளதாகவும். அதை சிங்கள அரசு முற்றாக நிராகரிக்கிறது என்பதுமே இந்த வேற்பாளர்களின் ஒட்டுமொத்த அரசியல் ஞானமாகின்றது. இந்த அடிப்படையிலேயே தமது நா.க.த.அ சுக்கான கோரிக்கையை நியாயப்படுத்துகிறார்கள். இந்த நியாயப்படுத்தலை தான் சர்வதேசத்திடமும் கொண்டு செல்லவுமுள்ளார்கள்.
வட்டுக்கோட்டை தீர்மானம் 1977ம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழ் பேசும் இன்னொரு தேசிய இனத்தால், அதாவது இலங்கை சோனகர்களால் (Sri Lankan Moors) நிராகரிக்கப்பட்டது. தமிழர் சொல்லும் பூர்வீக நிலம் என்ற பிரதேசத்தில் சோழனின் இலங்கை மீதான ஆக்கிரமிப்புக்கு முன்பே சோனகர் வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. எனவே அப்பிரதேசம் தமிழரைவிட சோனகர்களுக்கே அதிகம் உரித்துடையது. இந்த வகையில் இலங்கையின் கிழக்கு தொடர்பாக பேசும் போது அல்லது அது தொடர்பாக தீர்மானங்கள் எடுக்கும் போது இலங்கை சோனகர் புறந்தள்ளபட முடியாதுள்ளனர். எனவே அவர்களின் விருப்பு இல்லாமல் அந்த பிரதேசத்துக்கு அரசியல் ரீதியாக பிரிந்து செல்லும் அதிகாரம் இல்லை. மேலும் இந்த இலங்கை சோனகர் தமிழர்களிடம் இருந்து பிரிந்து சென்று சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ எத்தனிக்கும் போது அத்தகைய சூழ்நிலையை எப்படி இந்த நா.க.த.அ எதிர்கொள்ளும் என்பது தொடர்பாக எந்த ஏற்பாடுகளும் இருப்பதாக தெரியவில்லை.
அத்துடன் புலி ஆதரவாளர்கள் இன்னும் 1970ம் ஆண்டின் சனத்தொகை கணிப்பின்படியே வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் தமிழர் பெரும்பான்மை என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். இது வரை 1.5 மில்லியன் தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறி விட்டனர் என்பதையோ, அவர்களில் சுமார் 20% மேலானோர் இலங்கை பிரஜா உரிமையை இழந்து விட்டனர் என்பதையோ, மீதமானோர் வெளிநாட்டு பிரஜா உரிமையை எதிர்பார்துள்ளனர் என்பதையோ இவர்கள் கணக்கில் எடுக்கத் தவறுகின்றனர். இதைவிடவும் 2010 ஆண்டின் சனத்தொகை கணக்கெடுப்பு தரவுகள் எவ்வாறு அமையும் என்பதையும் எதிர்வு கூறமுடியாதுள்ளனர். ஆகவே வடக்கிலும், கிழக்கிலும் ஒரு சர்வஜன வாக்கெடுப்பு (Referendum) நடைபெறும்போது இந்த தனி நாட்டுக்கான கோரிக்கை கிழக்கு தமிழராலும், கிழக்கு சோனகராலும் தோற்கடிக்கப்படும் என்பதை இப்போதே அழுத்தம் திருத்தமாக சொல்லிவிடலாம். ஆக இந்த நா.க.த.அ யாருக்கு என்ற கேள்விற்கு முகங்கொடுக்க வேண்டியவர் இந்த வேற்பாளர்களே. இதை விடவும் இலங்கையின் கடந்த பொதுத் தேர்தலில் புலிகளுடன் ஒட்டி நின்று பிரிவினையை ஆதரித்த முக்கிய போட்டியாளர்கள் தோற்கடிக்கப் பட்டுள்ளதையும், இந்த நா.க.த.அ ஏற்பாட்டாளர்களுடன் அரசியல் ரீதியாக ஒத்து போகாத ஒருவகை மிதவாத தமிழர்களே மீண்டும் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளதையும் நாம் மறந்துவிட முடியாது.
இருந்த போதிலும் புலம் பெயர் நாடுகளில் வாழும் (புலி) தமிழர்கள் ஆகக் குறைந்தது இலங்கையில் வாழும் தமிழ் இனத்தின் விருப்பு வெறுப்புகளையோ, இந்த நா.க.த.அ தொடர்பான அவர்களின்அபிப்பிராயத்தையோ கருத்தில் எடுக்காமல் ஒருதலை பட்சமாக இந்த முடிவுக்கு சென்றுள்ளதென்பது நா.க.த.அ சுக்கான ஏற்பாட்டாளர்களின் அரசியல் மதியீனத்தையும், தமிழர்களின் இயல்பு வாழ்க்கையில் அக்கறை இல்லா தன்மையும், சர்வதேச அரசியல் நகர்வுகளை மதிப்பிட திராணியில்லா நிலையையும் தெளிவாக காட்டி நிற்கின்றது.
இந்த உத்தேச நா.க.த.அ க்கு மொத்தமாக 135 பிரதிநிதிகள் உலகளாவிய ரீதியில், இலங்கை நீங்கலாக, தெரிந்தெடுக்கப்படப் போகிறார்கள். இதில் 115 பேர் தேர்தல் மூலமும், 20 பேர் நியமன பிரதிநிதிகளாகவும் உள்வாங்கப்படுவர். ஐ.இ (UK) தில் போட்டியிடும் 38 பேரில் 25 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர். நடைமுறையில் இந்த 135 பேரும் தமிழ் புலிகளின் மே18க்கு பின்னான முகவர்களே. புலிகள் காலால் இட்ட கட்டளையை தலையால் செய்து முடித்த அன்றைய த.தே.கூ (TNA) அங்கத்தவலும் பார்க்க இவர்கள் அரசியல் அதிகாரம் எதுவுமே இல்லாதவர்கள். இவர்களுக்கு இருக்கும் அதி கூடிய தகைமை, ஐ.இ (UK) நா.க.த.அரசுக்கான தேர்தல் வேற்பாளர்களின் ஒப்புதல்படி, 2009ம் ஆண்டு தை முதல் வைகாசி மாதம் வரை ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற அரச எதிர்ப்பு/புலி ஆதரவு ஊர்வலங்களில் கலந்து கொண்டமை. அதே நேரத்தில் இவர்களின் கல்வி தகைமையை பார்க்கும் போது ஆச்சரியப்படத்தக்க வகையில் அனேகமாக எல்லோரும் படித்தவர்கள். ஆனாலும் கனடாவில் போட்டியிடுவோரில் அனேகர் பண விவகாரங்களில் கறுப்பு புள்ளி பெற்றவர்களாம். இந்நிலையில் இவர்களின் தகைமை, தகுதி என்பவற்றில் கவனம் செலுத்துவதற்கு முன்பாக இந்த நா.க.த.அ சை நிறுவுவதற்கான சாத்தியபாட்டையும் அது சுதந்திரமாக வளர்ந்து செல்லும் சாத்தியத்தையும் (Viability) பார்த்தால் அது ஆரம்பிக்கும் வேகத்திலேயே அதன் முடிவையும் சந்திக்கும் என்பதை எதிர்வு கூர்வதில் சிரமம் ஏதும் இருப்பதாக தெரியவில்லை.
ஆக, இந்த நா.க.த.அ என்பது ஒரு பொழுது போக்குக்கான விடயம், புலம்பெயர் அப்பாவி தமிழர் இந்த கனவரசின் நடைமுறை செலவினத்தை பொறுப்பேற்க நிர்ப்பந்திக்கப்படுவர். புலம்பெயர் நாட்டின் தேசிய அரசியலில் இருந்து தமிழர்கள் அப்புறப்படுத்தப்படுவர். சர்வதேச ரீதியில் தமிழர் பிரச்சினைக்குரியவர் என்ற நிரந்தர பட்டத்தையும் பெறுவர். எஜமானார்களோ இலங்கையின் முன்னைய புலித் தலைவர்கள் போல் தம் சொந்த வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாக இருப்பர். ஆகவே இந்த அரசியல் நகர்வு என்பது தமிழ் அரசியலில் அத்தியாயம் 2. புத்தியுள்ள தமிழர் இதை எதிர்க்க வேண்டும். முடியாத பட்சத்தில் அமைதியாக இதை நிராகரித்து மீதமுள்ள தமிழரை காத்தல் வேண்டும். இது தமிழர்களின் தார்மீக அரசியல் பணி.
நன்றி, Mohamed SR. Nisthar.(from London)