ஏப்ரல் 29, 1986 என்றும் போல அன்றும் தமிழர் தாயகத்தின் தலைநகரான யாழ்ப்பாணத்தில் அந்த காலைப் பொழுது மலர்ந்தது. காலைச் செவ்வானம் தமிழீழம் கேட்டு போராடச் சென்ற இளைஞர்களின் குருதியில் தோய்வதற்காய் உதித்தாக எண்ணி இருக்கவில்லை. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான அடித்தளத்தையிட்ட அதே மண்ணில் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றின் மிக மோசமான பக்கங்கள் எழுதப்படப் போகின்றது என்பதை அறியாமலேயே தமிழ் மக்கள் விழித்தெழுந்து தத்தமது கடமைகளுக்குத் தயாராகினர்.
ஆம். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பத்துடனேயே சகோதரப் படுகொலைகளும் ஆரம்பித்து விட்டது. ஆனால் 1986 ஏப்ரல் 29ல் இடம்பெற்றதே மிக மோசமான ஸ்தாபன மயப்படுத்தப்பட்ட திட்டமிடப்பட்ட கூட்டுப் படுகொலை. தமிழீழ விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,000க்கும் அதிகம் என மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் அமைப்பு தெரிவிக்கின்றது. இவற்றைவிட ஏனைய விடுதலை அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் குறிப்பாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமும் உட்படுகொலைகளிலும் சகோதரப் படுகொலைகளிலும் ஈடுபட்டிருந்தனர். ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது எதிரி எமது இனத்தின் மீது மேற்கொண்ட இனச் சுத்திகரிப்பிற்கு எவ்விதத்திலும் குறையாமல் நாம் வளர்த்துவிட்ட விடுதலை அமைப்புகளும் எம்மை அழித்துள்ளன. தமிழீழ விடுதலை நியாயமானதா? சாத்தியமா? என்பதற்கு அப்பால் 1986 ஏப்ரல் 29லேயே எமது தமிழீழ விடுதலைக் கனவு கலைக்கப்பட்டுவிட்டது என்பதே உண்மை.
”உங்கள் கைவசம் உள்ள ஆயுதங்களை எம்மிடம் ஒப்படைத்து சரணடையாவிட்டால் உங்கள் வீடு புகுந்து உங்களையும் உங்கள் குடும்பங்களையும் சுட்டுத்தள்ளுவோம்.”
என 24 ஆண்டுகளுக்கு முன் தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழர் தாயகம் எங்கும் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கைகளை வழங்கினர். ரெலோவின் முகாம்கள் மோட்டார் செல் தாக்குதல்களுக்கு இலக்கானது. ஆயுதங்கள் வைத்திருந்தவர்கள், ஆயுதம் தாங்காதவர்கள், நித்திரையில் இருந்தவர்கள், நோய்வாய்ப்பட்டு இருந்தவர்கள், சரணடைந்தவர்கள் என்று எவ்வித பேதமுமற்று அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இன்னும் சிலர் சித்திரவதைக்கு உள்ளாகி மக்கள் முன்னிலையில் உயிருடன் எரிக்கப்பட்டனர். தங்களை எதிர்ப்பவர்களுக்கு என்ன நடக்கும் என்ற பாடத்தை புகட்டுவதற்காக இவை திட்டமிட்ட முறையில் நடாத்தப்பட்டது. தமிழ் மக்கள் பயப்பீதிக்குள் தள்ளப்பட்டு வாய்மூடி மௌனிக்க வைக்கப்பட்டனர். அன்று ஒடுக்கப்பட்ட அவர்களது குரல்கள் இன்றும் ஒடுங்கியே உள்ளது. ஒடுக்குபவர்கள் மட்டுமே மாறியுள்ளனர்.
வரலாற்றுத் தவறுகளைக் கற்றுக் கொள்ள மறுப்பவர்களை வரலாறு மன்னிப்பதில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் தாம் இழைத்த வரலாற்றுத் தவறை கற்றுக்கொள்ளவில்லை. தொடர்ந்தும் எதேச்சாதிகாரத்துடன் தங்கள் அதிகார வெறிக்கான யுத்தத்தைத் தொடர்ந்தனர்.
”தமிழீழ விடுதலை இயக்கம் அழிக்கப்பட்டு 23 ஆண்டுகள் கடந்த 2009 ஏப்ரல் இறுதிப் பகுதியில் ”புலிகளின் தலைவர் பிரபாகரன் எஞ்சியுள்ள தனது போராளிகளுடன் சரணடையாவிட்டால் அவர் தனது தலைவிதியை சந்திக்க நேரிடும்.”
என்ற எச்சரிக்கையை அப்போதைய இலங்கையின் இராணுவத் தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா பனை மரங்களில் ஒலிபெருக்கியைக் கட்டி அறிவித்தார். அவருடைய எச்சரிக்கை வெளியாகி சில வாரங்களுக்கு உள்ளாகவே மக்களுக்குள் ஒழிந்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் மீது இலங்கை இராணுவம் கண்மூடித்தனமான தாக்குதலை நடாத்தியது ஆயிரக்கணக்கான பொது மக்கள் போராளிகள் கொல்லப்பட்டனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் உட்பட சரணடைந்த விடுதலைப் புலிகளின் தலைமை படுகொலை செய்யப்பட்டது. ஏனையவர்கள் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர்.
தமிழீழ விடுதலை இயக்கமோ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமோ அல்லது ஆயுதம் ஏந்திய தமிழீழ விடுதலை இயக்கங்களோ அடிப்படையில் ஒரே விதமானவர்கள். இவர்கள் மக்கள் விடுதலை என்பதிலும் பார்க்க தங்கள் அதிகாரத்தை தமிழ் மக்கள் மீது நிறுவுவதற்குப் போராடியவர்கள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த அமைப்புகளின் அரசியல் மற்றும் இராணுவத் தவறுகளினால் தமிழ் மக்களே மிகப் பாரதூரமான பின்னடைவுகளைச் சந்தித்து உள்ளனர். அதனால் தமிழீழ விடுதலை இயக்கத்தை அழித்தொழித்த தமிழீழ விடுதலைப் புலிகள் அழித்தொழிக்கப்பட்டதை வரவேற்கவோ அல்லது ஒரு தவறை மற்றுமொரு தவறு மூலம் சரிசெய்துவிட்டதாகவோ கொள்ள முடியாது.
இந்த வரலாற்று நிகழ்வுகளில் இருந்து நாம் விட்ட வரலாற்றுத் தவறுகளில் இருந்து நாம் எதனைக் கற்றுக்கொண்டோம் என்பதே மிக முக்கியமானது. இவ்வளவு அனுபவங்களுக்குப் பிற்பாடும் தமிழ் சமூகத்தின் அரசியல் தலைமைகள் என்பது இன்னமும் தங்களின் அரசியல் தளத்தில் ஊன்றி நின்று தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கவில்லை. ஒருசாரார் இலங்கை அரசுடன் இணக்கப்பாட்டு அரசியலை மேற்கொள்ள மறுசாரார் இலங்கை அரசின் ஒடுக்குமுறையை வைத்து அரசியல் செய்பவர்களாகவே உள்ளனர்.
இலங்கை சுதந்திரமடைந்தது முதல் இன்று வரையுள்ள காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டம் தமிழ் மக்களுக்கு வென்றெடுத்த உரிமைகளிலும் பார்க்க அழிவுகளே அதிகம் மிஞ்சியுள்ளது. அந்த வகையில் அதற்கான காரணங்களை தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்குவதாகக் கூறிக்கொள்பவர்கள் மீளாய்வு செய்வது தவிர்க்க முடியாதது. ஆனால் அதற்கான முனைப்புகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. எதேட்சையான உணர்ச்சிகரமான கோசங்களுக்குப் பின்னால் தமிழ் மக்களை அணிதிரட்டுவது அந்த அழிவு வரலாற்றை மீள நிகழ்த்தவே உதவும்.
வே பிரபாகரனும் சிறிசபாரட்னமும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். இவர்களுடைய முடிவுகள் மட்டுமல்ல உமாமகேஸ்வரனது முடிவும் இவ்வாறு அமைந்ததில் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால் இந்த அழிவு வரலாற்றில் இருந்து இதுவரை நாம் எதனையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதும் கற்றுக்கொள்ள மறுக்கின்றோம் என்பதும் ஆபத்தான உண்மைகள்.
ஓவ்வொரு மனிதனும் தான் விட்ட தவறுகளை ஏற்றுக்கொள்ளாதவரை அவன் அத்தவறைத் திருத்திக் கொள்ளப் போவதில்லை. இது ஒரு தனிமனிதனுக்கானது மட்டுமல்ல அமைப்புகளுக்கும் பொருந்தும். ஏந்தவொரு அமைப்பும் தங்கள் அமைப்பு விட்ட தவறுகளை ஏற்றுக்கொள்ளாதவரை அத்தவறுகளைத் திருத்திக்கொள்வதில்லை. இதுவே தமிழீழ விடுதலைக்குப் போராடிய அமைப்புகளிலும் நடந்தது. ஓவ்வொரு தடவையும் இவ்வமைப்புகள் தவறுகளைவிட்ட போது அவற்றை நியாயப்படுத்தி வந்தன. நியாயப்படுத்துவதற்கான காரணங்களைக் கண்டுபிடித்தன. துரோகிகளைச் சுட்டுக்கொல்வது என்று ஆரம்பித்து தாங்கள் காப்பாற்ற வேண்டிய மக்களையே சுட்டுக் கொல்வதில் வந்து நின்றது தமிழீழ விடுதலைப் போராட்டம். மனித அவலமும் அழிவும் எல்லையைத் தாண்டும் போது தான் சர்வதேசம் தலையிட்டு நிரந்தரமான தீர்வு கிட்டும் என்று அதற்கும் அவர்கள் ஒரு நியாயம் வைத்திருந்தனர்.
இவ்வளவு அழிவுகளின் பின்னும் மதிப்பீடுகள் எதுவும் இன்றி வரலாற்றை ஆராயாமல் மீண்டும் விட்ட இடத்தில் இருந்து ஆரம்பிக்கிறார்கள். இப்போது அவர்கள் நாட்டில் இல்லாததால் கடல் கடந்து நாடுகள் கடந்து சென்று தமிழீழம் கேட்கின்றனர். நாடுகடந்த தமிழீழம்.
மே 6ல் சரணடைந்த நிலையில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறிசபாரட்ணம் கிட்டு என்றழைக்கப்பட்ட அன்றைய யாழ் மாவட்ட விடுதலைப் புலிகளின் தளபதி சதாசிவம் கிருஸ்ணகுமாரினால் சுட்டுக்கொல்லப்பட்டார். மே 18ல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் சரணடைந்த நிலையில் இலங்கை இராணுவத் தளபதியினால் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளார். படுகொலைக்குப் பிற்பாடு இருவரது உடல்களுக்கும் என்ன நடந்தது என்று தெரியாது. இரு சம்பவத்திலும் கொலையாளிகள் கொலை செய்யப்பட்டவரின் வரலாற்றை அவர்களுடன் சேர்த்து எரிக்கவோ புதைக்கவோ செய்தனர். அதனால் அவர்கள் எரிக்கப்பட்ட அல்லது புதைக்கப்பட்ட இடங்களும் மர்மமாகவே வைக்கப்பட்டது.
சிறிசபாரட்ணம் படுகொலை செய்யப்பட்டு கால் நூற்றாண்டுகள் ஆகின்ற போதும் அவருக்கான அஞ்சலி நிகழ்வுகள் ஆங்காங்கே நடைபெறுகின்றது. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருக்கு இதுவரை எவ்வித அஞ்சலிகளும் நிகழ்த்தப்படவில்லை. அவர் இறந்துவிட்டதனை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பதிலேயே அவ்வமைப்புக்குள் பிளவு ஏற்பட்டு விட்டது. ஒரு தலைவனது மரணத்தையோ வாழ்வையோ உறுதிப்படுத்தத் திரணியற்ற அமைப்பு தற்போது நாடுகடந்த தமிழீழம் பெற்றுத் தீருவோம் என்று அறைகூவல் விடுகின்றது.
உண்மைகளை ஏற்றுக் கொள்ள மறுத்த வரலாற்றைக் கற்றுக்கொள்ள மறுத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனும் தற்போது வரலாறாகிவிட்டார். 24 ஆண்டுகளுக்கு முன் வே பிரபாகரனது தலைமை மேற்கொண்ட கோரத்தனமான அழித்தொழிப்பு மீளவும் தமிழர் தாயகத்தில் நிறைவேறியது. அன்று கோரத்தனத்தை மேற்கொண்டவர்கள் இன்று அதற்குப் பலியாகி உள்ளனர். வரலாறு ஈவிரக்கம் பார்ப்பதில்லை என்பதை மீண்டும் ஒருமுறை தமிழர்களுக்கு உணர்த்தி உள்ளது.
தமிழ் மக்கள் மீதானது மட்டுமல்ல அனைத்து மக்களினதும் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால் அவை உணச்சி வேகத்தில் பழிவாங்கும் நோக்கில் அல்ல. கடந்த கால வரலாற்றைக் கற்றுக்கொண்டு வரலாற்றுத் தவறுகளைக் திருத்திக் கொண்டு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.