இரு வாரத்தினுள் கட்டிமுடிக்க ஜனாதிபதி பணிப்பு; தற்காலிகமாக ரூ. 2 ஆயிரம் வழங்கவும் நடவடிக்கை
கொழும்பு நகரின் நடைபாதை வியாபாரிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் போதிராஜ மாவத்தையில் புதிய வர்த்தக தொகுதியொன்றை நிர்மாணிக்குமாறும், அதனை 2 வார காலத்தில் கட்டி முடிக்குமாறும், அதுவரை அவர்களுக்கு 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் (4) பிற்பகல் புறக்கோட்டை சுயவேலையாளர் சங்க பிரதிநிதிகளை அலரிமாளிகையில் சந்தித்து பேசினார். புறக்கோட்டையில் நடைபாதை வியாபாரிகளின் கடைகள் அகற்றப்பட்டதைய டுத்து ஏற்பட்ட நிலை தொடர்பாக பேசுவதற்காக இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நடைபாதையில் செல்வோருக்கு அசெளகரியம் ஏற்படாத வகையிலும், நகரத்தின் அழகுக்கு பங்கம் ஏற்படாத வகையிலும் சிறிய வர்த்தகர்கள் தமது வர்த்தக நடவடிக்கைகளை நடத்திச் செல்வதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலும் முறையான திட்டமொன்றை துரித கதியில் செயற்படுத்துமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.