காலி மாவட்டத்தில் குறுகிய மூன்று மணித்தியாலயங்களில் 181.6 மில்லி மீட்டர் அதிகூடிய மழை வீழ்ச்சி நேற்று பதிவாகி இருப்பதாக வானிலை அவதான நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் எஸ். ஏ. ஆர். ஜயசேகர தெரிவித்தார்.
அண்மைக்காலத்தில் குறுகிய நேரகாலத்தில் காலி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் பெற்றுக்கொண்ட அதிகூடிய மழை வீழ்ச்சி எனவும் அவர் கூறினார். நேற்று காலை 8.30 மணி முதல் முற்பகல் 11.30 மணி வரையான காலப்பகுதிலேயே இம்மழை வீழ்ச்சி கிடைக்கப்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார். காலி மாவட்டத்தின் பல பிரதேசங்களில் நேற்று அதிக மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டிருப்பதுடன் பல வீதிகளும் வெள்ளத்தால் மூழ்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் காலி மாவட்ட இணைப்பாளர் லெப்டீனண்ட் கேர்ணல் அசித ரணசிங்க தெரிவித்தார். வக்வெல்ல வீதியிலுள்ள சங்கமித்த, கொக்கலகட சந்தி, பத்தேகம வீதியிலுள்ள தங்கெதா சந்தி, கஹத்துவவத்தை சந்தி, பலப்பிட்டி மடபாத்த கிராமம், கராப்பிட்டிய வீதியிலுள்ள பேகல சந்தி உட்பட பல பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
இதன் காரணத்தினால் பல பிரதேசங்களுக்கான சீரான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளன. கராப்பிட்டிய பொதுவைத்தியசாலையின் 16 வது வார்ட், நீதிவான் நீதிமன்ற கட்டடம் உட்பட பல இடங்களும் நீரில் மூழ்கி இருந்ததாகவும் அவர் கூறினார்.
வானிலை அவதான நிலையம் 24 மணி நேரப்படியே மழை வீழ்ச்சியைப் பதிவு செய்கிறது. அந்தவகையில் 1992 ஆம் ஆண்டில் கொழும்பு மாவட்டத்தில் 492 மில்லி மீட்டர் அதிகூடிய மழை வீழ்ச்சியும் கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி அங்கொடையில் 207 மில்லி மீட்டர் அதிகூடிய மழை வீழ்ச்சியும் பதிவானதாகவும் வானிலை அவதான நிலைய அதிகாரி கூறினார்.