வவனியா ‘மெனிக் பாம்’ முகாமிலிருக்கும் மக்களை பார்வையிட தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். நேற்றுக் காலை (22-05-2010) கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் அதன் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் செட்டிக்குளம் ‘மெனிக் பாம்’ முகாமிற்குச் சென்ற போது அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை எனவும், சுமார் ஒரு மணி நேரம் முகாம் நுழைவாயிலில் காத்திருந்து விட்டு திரும்பிச்செல்ல நேரிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்னியில் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட பகதிகளுக்குச் சென்று அம்மக்களுடன் நேரடியாக உரையாடி பிரச்சினைகளை அவதானித்தும் வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நேற்று வவுனியாவில் இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் முகாம்களிலுள்ள மக்களைப் பார்வையிட அங்கு சென்றனர். ஆனால், முகாமின் உள்ளே செல்ல பாதுகாப்புத்தரப்பினரால் அனுமதி மறுக்கப்பட்டது.
தாங்கள் கொழும்பிலிருந்த புறப்படுவதற்கு முன்பாகவே வவுனியா முகாம்களைப் பார்வையிடுவது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியதுடன், ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்கவிடம் தொலைபேசியில் உரையாடியதாகவும் குறிப்பிட்ட சம்பந்தன் தாங்கள் அங்கு செல்வதில் எவ்வித பிரச்சினையும் இருக்காது என லலித் வீரதுங்க தங்களிடம் வாய்மொழியாக உறுதியளித்ததாகவும் தெரிவித்தார். வவுனியா முகாமிலுள்ள அதிகாரிகள் உள்ளே செல்ல அனுமதி மறுத்தயடுத்து சம்பந்தர் உடனே ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டபொது, அரை மணிநேரத்தில் தாம் பதிலளிப்பதாகக் கூறினார். அரை மணி நேரத்திற்குப் பின்னர் அவருடன் தொடர்பு கொண்ட போது, தொலை பேசி அழைப்புகளுக்கு பதிலளிப்பதை லலித் வீரதுங்க தவிர்த்ததாகவும் கூட்டமைப்பினர் தெரித்துள்ளனர்.
இதே வேளை, இது குறித்து ஊடகத்துறை அமைச்சர் கருத்தத் தெரிவிக்கையில் இடம்பெயர்ந்த மக்களின் நலன்புரி முகாம்களுக்குச் செல்லும் போது முன்னனுமதி பெற வேண்டும் எனவும், ஆனால், கூட்டமைப்பினர் அவ்வாறு எதனையும் பெறவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். முகாமிற்குள் செல்வது குறித்து ஏற்கனவே ஒரு நடைமுறை உள்ளது. பாதுகாப்பு அமைச்சருக்கு அறிவித்து அது தொடர்பான அனுமதியைப் பெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.