31

31

பெளத்தத்தை பாதுகாக்கவும் மதமாற்றத்தை தடுக்கவும் சட்டம்

dm.jpgஎதிர்கால சந்ததியினருக்காக பெளத்த மதத்தையும் மகா சங்கத்தையும் பாதுகாப்பதற்காக ஐந்து சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதென பிரதமர் டி. எம். ஜயரத்ன தெரிவித்தார். அமைச்சரவையின் கடந்த முறை கூட்டத்தில் இது பற்றி பிரஸ்தாபிக்கப் பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பெளத்தம் தொடர்பான விடயங்களில் அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்க முன்னணி பெளத்த பிக்குகள் அடங்கிய சங்க சபையொன்றை அமைப்பது தொடர்பாகவும் பிரேரணையில் முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், பலவந்த மத மாற்றத்தை தடுத்தல் மற்றும் பெளத்தம் தொடர்பான புதிய நடைமுறைகள் பற்றி மத வட்டாரங்களிடையிலான கலந்துரையாடல் நடத்துவது பற்றியும் பிரேரணைகள் முன்வைக்கப்படவுள்ளன.

மேற்படி சட்டப் பிரேரணைகளுடன் கிராமப்புற விகாரைகளின் உட்கட்டமைப்பு மற்றும் தேவைகளுக்கு நிதி வழங்குதல், விகாரைகளுக்கு சொந்தமான காணிகளை அரசாங்கத்துக்கு குத்தகைக்கு வழங்குதல் ஆகியவையும் இடம்பெறுவதாக பிரதமர் டி. எம். ஜயரத்ன தெரிவித்தார்.

மருந்து தட்டுப்பாடு ஐந்து நாட்களில் முழுமையாக நீங்கும் – கப்பல்கள், விமானம் மூலம் மருந்துகள் வருகை

drage.jpgஅரசாங்க ஆஸ்பத்திரிகளில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு நிலவும் தட்டுப்பாடு அடுத்துவரும் ஐந்து நாட்களில் முழுமையாக நீங்கும் என்று சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நேற்றுத் தெரிவித்தார்.

அதேநேரம், அரசாங்க ஆஸ்பத்திரிகளில் இனிமேலும் மருந்துப் பொருள் தட்டுப்பாடு ஏற்படாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்காக வாராவாரம் கூடி ஆராய்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அமைச்சர், மருந்துப் பொருள் தட்டுப்பாட்டுக்கான காரணத்தைக் கண்டறிய நியமித்த குழுவுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார். அரசாங்க ஆஸ்பத்திரிகளுக்கு மருந்துப் பொருட்கள் கிடைக்க வழி செய்யும் நிறுவனங்களுக்கிடையில் ஒழுங்கு முறையான தொடர்பாடலும், இணைப்பும் இல்லாததே மருந்துப் பொருள் தட்டுப்பாட்டுக்கு முக்கியமாகப் பங்களித்ததாக மருந்து பொருள் தட்டுப்பாட்டுக்கான காரணத்தைக் கண்டறிய நியமிக்கப்பட்ட குழு சுட்டிக்காட்டி இருந்தது.

இதனடிப்படையில், அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனமும், அரச மருந்துப் பொருள் உற்பத்திக் கூட்டுத்தாபனமும், ஒரே தலைமையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையை அமைச்சர் மேற்கொண்டிருந்தார். இதேவேளை, அரசாங்க ஆஸ்பத்திரிகளில் நிலவும் 95 வகையான அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டை துரிதமாக நீக்குவதற்கும் ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்தடிப்படையில் அமைச்சரின் ஆலோசனைக்கு அமைய மருந்துப் பொருள் விநியோகப்பிரிவு பணிப்பாளர் அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபன பிரதி முகாமையாளர் தேசிய மருந்துப் பொருள் அதிகார சபையின் மருந்தாளர், சுகாதார அமைச்சின் பிரதம மருந்தாளர், திறைசேரியின் பிரதிநிதி ஆகியோர் அடங்கிய விசேட குழுவொன்று இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு 95 வகையான அத்தியாவசிய மருந்துப் பொருட்களைத் துரிதமாகக் கொள்வனவு செய்து இலங்கைக்குக் கொண்டு வரவும் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது இந்த 95 வகையான அத்தியாவசிய மருந்துப் பொருட்களும் கட்டம், கட்டமாக கடல் மார்க்கமாகவும், ஆகாய மார்க்கமாகவும் இந்திய விநியோகஸ்தர்களால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும், அவை உடனுக்குடன் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

அரசாங்க ஆஸ்பத்திரிகளில் மருந்துப் பொருட்களுக்கு இனிமேல் தட்டுப்பாடு ஏற்படாதிருப்பதற்கு தேவையான சகல ஒழுங்குகளும் செய்யப்பட்டு வருகின்றன. அதேநேரம் தற்போதைய மருந்துப் பொருள் தட்டுப்பாட்டைத் துரிதமாக நிவர்த்திக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மீள்குடியேற்றம் முழுமை பெற்றதும் திருமுறிகண்டி ஆலயம் மக்கள் பிரதிநிதிகளிடம் – இந்து கலாசார திணைக்கள பணிப்பாளர் விளக்கம்

முல்லைத்தீவு திருமுறிகண்டி பகுதியில் மக்களின் குடியேற்றம் முழுமை பெற்றதும் திருமுறிகண்டி ஆலய நிர்வாகம் மக்கள் பிரதிநிதிகளிடமே ஒப்படைக்கப்படும். அதுவரை ஜனாதிபதி செயலகத்தின் பணிப்பிற்கமைய தற்காலிக ஏற்பாடாக இந்து கலாசார நிதியம், முல்லைத்தீவு அரச அதிபர், பிரதேச செயலாளர் அடங்கிய பரிபாலன சபையே ஆலயத்தை நிர்வகித்து வருமென இந்துசமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் தெரிவித்துள்ளார்.

இவ்வாலயத்தை அரசு பொறுப்பேற்றுள்ளது என்பதும் ஆலய நிதியை அரசு கையாள்கிறது என்பதும் தவறான கருத்தாகுமென இந்து சமய இந்து கலாசார திணைக்களம் அறிவித்துள்ளது.

கொழும்பு – யாழ். ஏ-9 பாதையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் திருமுறிகண்டியில் கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் விநாயகப் பெருமானின் ஆலய நிர்வாகம் தொடர்பாக தவறான கருத்துக்கள் நிலவி வந்துள்ளன. உண்மை நிலையை விளக்கும் பொருட்டு இந்து சமய இந்து கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் சாந்தி நாவுக்கரசன் மேற்படி அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது கடந்த வருடம் யுத்தம் முடிவுற்ற பின்னர் ஏ-9 பாதை திறக்கப்பட்டு பொதுமக்களுக்கான வாகனப் போக்குவரத்து ஆரம்பமானவுடன் திருமுறிகண்டி ஆலயத்தை பொதுமக்கள் தரிசித்துச் செல்லவேண்டும் என்ற தொடர்ச்சியான கோரிக்கைகள் திணைக்களத்துக்கு விடுக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து இவ்வாலயத்துக்கென குருக்கள் ஒருவரை நியமித்து முறையான பூஜைகளை நடத்தும் ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி செயலகத்திலிருந்து இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்துக்குப் பணிப்புரை வழங்கப்பட்டது.

அதற்கமைவாகவே குருக்கள் ஒருவர் நியமிக்கப்பட்டு வழமையான பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக ஆலயத்தின் சூழலை முகாமை செய்து கொள்வதற்காக திணைக்களத்தின் மூலம் முகாமையாளர் ஒருவரும் நியமிக்கப்பட்டார்.

குவைத்திலிருந்து 36 பணிப்பெண்கள் நேற்றும் நாடு திரும்பினர்

house-maid-1.jpgவிசா காலாவதி காரணமாக குவைத்திலுள்ள இலங்கை தூதரகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளோரில் 36 பணிப் பெண்கள் நேற்றும் நாடு திரும்பியுள்ளனரென வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்தது.

நேற்று காலை இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததுடன், மேலும் சிலர் எதிர்வரும் வாரங்களில் நாட்டுக்குத் திரும்பவுள்ளதாக பணியகத்தின் உயரதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.

இலங்கையிலிருந்து குவைத் நாட்டுக்குப் பணிப்பெண்களாகச் சென்ற இவர்கள் பல்வேறு காரணங்களினால் மீண்டும் நாட்டுக்குத் திரும்புவதற்குத் தீர்மானித்துள்ள துடன் குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தில் தங்கியுள்ளனர். இந் நிலையில் இவர்களின் விசா காலாவதியாகியுள்ள தெனவும் அவ்வதிகாரி தெரிவித்தார். வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மேற்கொண்ட நடவடிக்கையினால் இவர்கள் கட்டம் கட்டமாக இலங்கைக்கு அழைத்து வரப்படுகின்றனரெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

புனர்வாழ்வு பெற்ற 150 பேருக்கு இன்று நிரந்தர தொழில் நியமனம் – ‘தனியார் ஆடைத் தொழிற்சாலையில் மேலும் 1500 பேருக்கு தொழில் வாய்ப்பு

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் 1500 பேருக்கு விரைவில் நிரந்தர தொழில் வாய்ப்பு வழங்கும் பொருட்டு அரசாங்கத்துடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளதாக ட்ரைஸ்டார் ஆடைத் தொழிற்சாலையின் தலைவர் தேசமான்ய கலாநிதி குமார் தேவபுர தெரிவித்தார். இதன் முதற்கட்டமாக 150 பேருக்கு இன்று திங்கட்கிழமை நியமனம் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று திங்கட்கிழமை கொழும்பு இரத்மலானையிலுள்ள தங்களது ட்றை ஸ்டார் ஆடைத் தொழிற்சாலையில் நிரந்தர நியமனம் வழங்கப்படுமென நேற்று முன்தினம் கொழும்பு நிப்போன் ஹோட்டலில் இது சம்பந்தமாக விளக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் தெரிவித்தார். இந்த நியமனம் வழங்கும் நிகழ்வில் புனர்வாழ்வு அமைச்சர் டி.யூ. குணசேகர, மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், தொழில் அமைச்சர் காமினி லொக்குகே உட்பட தொழில்வாய்ப்பு பெறும் யுவதிகளின் பெற்றோர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இவ்வாறு நியமனம் பெறும் யுவதிகளுக்கு தங்குமிட வசதி, உணவு உட்பட பல வசதிகள் இலவசமாக வழங்கப்படும் எனவும் ஒவ்வொரு யுவதிகளுக்கும் ஆகக் குறைந்தது இரண்டாயிரத்து ஐநூறு ரூபா சம்பளமாக வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். ட்றை ஸ்டார் ஆடைத்தொழில் நிறுவனம் நாடளாவிய ரீதியில் 16 ஆடைத் தொழிற்சாலைகளை கொண்டிருப்பதுடன் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை வேலையில் அமர்த்தி அவர்களுக்கு கவர்ச்சிகரமான சம்பளத்தை வழங்கி வருகின்றது.

IIFA திட்டமிட்டபடி கொழும்பில் இடம்பெறும் ஏற்பாட்டாளர் அறிவிப்பு

iifa-awards-logo.jpgசர்வதேச இந்திய திரைப்பட அகடமி விருது வைபவத்திற்கான இடம்மாற்றப்படமாட்டாது என்று விழாவின் ஏற்பாட்டாளர்கள் சனிக்கிழமை தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் எதிர்வரும் ஜூன் 3-5 இல் திரைப்பட விருதுவிழா இடம்பெறவுள்ளது. இலங்கையின் தலைநகரில் விழா நடத்தப்படவுள்ள நிலையில் இடத்தை மாற்றுமாறு தமிழ் திரைப்படத்துறையினர் அதிகளவு அழுத்தம் கொடுத்து வருவதாக செய்திகள் வெளியாகிவரும் நிலையிலேயே இடம்மாற்றப்படாது என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்ததாக ஐ.ஏ.என்.எஸ்.செய்திச்சேவை குறிப்பிட்டது.

எமக்கு எந்தவொரு அழுத்தமும் இல்லை. இடம்மாற்றப்படமாட்டாது.திட்டமிட்டபடி நடவடிக்கையை முன்னெடுப்போம் என்று இந்த விழாவினை ஏற்பாட்டு செய்துள்ள விஷ்சிரா விட்டின் பணிப்பாளர்களில் ஒருவரான சபாஷ் ஜோசப் ஐ.ஏ.என்.எஸ். செய்திச்சேவைக்கு தெரிவித்தார்.

இலங்கையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சென்று விளையாட முடியுமென்றால் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவுக்கு வந்து ரி20 போட்டிகளில் விளையாடமுடியுமென்றால் நாங்கள் ஏன் அங்கு போகமுடியாது. இது பிணைப்பை ஏற்படுத்துவதற்கான மற்றொரு வழிமுறையாகும் என்றும் ஜோசப் கூறியுள்ளார்.

திரைப்பட இயக்குனர் சந்திரன் ரட்ணம் கைது – 31 ஆம் திகதி வரை விளக்கமறியல்

திரைப்படத் தயாரிப்பாளரும், இயக்குனருமான சந்திரன் ரட்ணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.

மிரிஹான பொலிஸார் கங்கொடவில மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இவரை ஆஜர் செய்ததாகவும் இவரை 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முதலாவது ஒழுங்கை, வாகொடை வீதி, நுகேகொடையிலுள்ள சந்திரன் ரட்ணத்தின் வீட்டிலிருந்து கடந்த 26 ஆம் திகதி வெடிபொருட்கள் மீட்டெடுக்கப்பட்டமை தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் பொருட்டு சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சந்திரன் ரட்ணம் ‘ஆணையிறவுக்கான பாதை’ என்ற சிங்களத் திரைப்படத்தை தயாரித்தவர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிரிஹான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

1948 தொலைபேசி ஊடாக இலவச சுகாதார ஆலோசனை

images.jpgபுகையிலைப் பாவனை மற்றும் புகைப்பிடித்தல் பழக்கவழக்கங்களிலிருந்து தவிர்ந்து கொள்வதற்காக தொலைபேசி ஊடாக இலவச ஆலோசனை வழங்கும் சேவையொன்று இன்று 31ம் திகதி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவிருக்கி ன்றது.

உலக புகையிலை பாவனை எதிர்ப்பு தினத்தின் நிமித்தம் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய அங்குரார்ப்பணம் செய்யப்படுகின்ற இச்சேவைக்கு நாடு சுதந்திரமடைந்த வருடமான 1948ம் ஆண்டே இலக்கமாக வழங்கப்பட்டிருப் பதாக அமைச்சின் அதிகாரியொருவர் நேற்று தெரிவித்தார்.

1948 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்வதன் மூலம் புகையிலை பாவனை, புகைப் பிடித்தல் பழக்கவழக்கம் என்பவற்றைத் தவிர்ந்து கொள்வதற்கான ஆலோசனைகள் வழங்கப்படும்.

இப்பழக்கவழக்கங்களால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்தும் தெளிவு படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த ஆலோசனைச் சேவையில் உளவள மருத்துவ நிபுணர்களும், பொதுமருத்துவ நிபுணர்களும் ஆலோசனை வழங்குவர் என்றும் அவர் கூறினார்.

வடமேல் மாகாண சபையில் இன்று சத்தியப்பிரமாணம்

வடமேல் மாகாண அமைச்சர்களான நெரஞ்சன் விக்ரமசிங்க, சாந்த பண்டார, அருந்திக பெர்னாண்டோ ஆகியோர் கடந்த பொதுத் தேர்தலின் போது பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டதையடுத்து மூன்று மாகாண அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டு ள்ளனர்.

விவசாய கமத்தொழில் கால் நடை அபிவிருத்தி அமைச்சராக டி.பீ. ஹேரத், பாதைகள், மின்சாரம், வீடமைப்பு, மீன்பிடித்துறை அபிவிருத்தி அமைச்சராக சனத் நிஷாந்த பெரேரா, சமூக நல அபிவிருத்தி சிறுவர் பராமரிப்பு, மகளிர் விவகார அமைச்சராக குணதாச தெஹிகம ஆகியோர் இன்று (31) வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ ஆர் பளல்ல முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்வர்.

மலசல குழியில் மனித சடலங்கள்

body.jpgஇலங் கையின் வடக்கே கிளிநொச்சி நகரை அண்டிய கிராமம் ஒன்றில் மலசல குழியொன்றிற்குள் இருந்து மனித சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  கணேசபுரம் என்ற பகுதியில் மீள்குடியேற்றத்திற்காகச் சென்ற காணி உரிமையாளர் ஒருவர் தமது வீட்டு மலசலகூடக் குழியைத் துப்பரவு செய்தபோதே இந்த சடலங்கள் குழிக்குள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளதாக அரச அதிகாரிகளும். த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினரும் தெரிவித்துள்ளனர்.

கறுத்த பொலித்தீன் பைகளில் கட்டப்பட்ட நிலையில் ஐந்து, ஆறு சடலங்கள் அந்தக் குழிக்குள் இருந்ததைக் கண்டதாக சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமையைப் பார்வையிட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகிய சிவஞானம் சிறிதரன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

சடலங்கள் ஆணா பெண்ணா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும், இவ்வாறாக சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அந்தப் பகுதியில் மக்கள் பீதிக்கு உள்ளாகியிருப்பதாகவும் சிறிதரன் தெரிவித்திருக்கின்றார்.

இந்தச் சம்பவம் குறித்து அறிந்த கிளிநொச்சி மாவட்ட நீதவான் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன், சட்ட வைத்திய அதிகாரியின் முன்னிலையில் இந்தக் குழியைத் தோண்டி சடலங்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவுக்கமைய சடலங்கள் இருக்கும் காணிப் பகுதி பலத்த பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 நன்றி BBC