வெளிநாட்டில் உள்ளவரின் தாயார் கரவெட்டியில் படுகொலை செய்யப்பட்டு பணம், நகைகள் கொள்ளை. வடமராட்சி கரவெட்டிப் பகுதியில் பெண்ணொருவர் கழுத்து நெரித்துப் கொலை செய்யப்பட்டு அவரது நகைகள் பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன. நேற்று (29.05.2010) முற்பகல் 11.15 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இச்சம்பவத்தில் கட்டைவேலி கரவெட்டியைச் சேர்ந்த ஜெயபாலன் விஜயலட்சுமி வயது 54 என்பவரே கொலை செய்யப்பட்டவராவார். இவரது கணவரும் ஒரேயொரு மகனும் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், தனது தாயாருடன் இப்பெண் அவரது விட்டில் வசித்து வந்துள்ளார். தனது மகனுக்குத் திருமண ஏற்பாட்டை மேற்கொண்டு வந்த நிலையிலேயே இவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 22 பவுண் நகையும் பல இலட்ச ரூபா பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பிட்ட பெண் வீட்டிலிருந்த வேளை மோட்டார் சைக்கிளில் வந்த நபரொருவர் இப்பெண்ணைக் கொலை செய்து விட்டு அவரது நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்குச் சென்ற பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதி திருமதி ஜோய் மகாதேவா விசாரணைகளை மேற்கொண்டார். நெல்லியடி பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். வடமராட்சியில் ஒரு மாத காலத்திற்குள் நடந்த மூன்றாவது கொலைச் சம்பவம் இதுவெனத் தெரிவிக்கப்படுகின்றது.
இது இவ்வாறிருக்க, கடந்த 28ஆம் திகதி புங்குடுதீவில் வைத்து ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். புங்குடுதீவை சொந்த ஊராகவும், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் சுப்பிரமணியம் என்பவரே கொல்லப்பட்டுள்ளார். புங்குடுதீவிலுள்ள உறவினரைச் சந்தித்து விட்டுத் திரும்பும் வழியில், புங்குடு தீவு அலடிச்சந்தியில் வைத்து அங்கு நின்ற சிலரிடம் சாராயம் எங்கு வாங்கலாம் என விசாரித்துள்ளார். அங்கிருந்த இருவர் சாராயம் வாங்கித்தருவதாக் கூறி அவரை அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அவரது சடலம் அடிகாயங்களுடன் தெங்கன் திடல் பிள்ளையார் கோவிலுக்குப் பின்புறமாக காணப்பட்டு மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபரிடம் 10 ஆயிரம் ருபா பணம் இருந்ததாகவும் கூறப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
யாழ்.குடாநாட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக நடைபெற்று வந்த குற்றச்செயல்கள் சற்று குறைந்திருந்த நிலையில், தற்போது இடம்பெற்றுள்ள இக்கொலைச் சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.