நீண்ட காலம் நிலவிய நெருக்கடிக்கான காரணத்தைக் கண்டறிவதற்காக இலங்கை அரசாங்கம் தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளமையை அமெரிக்கா வரவேற்றுள்ளது. இந்த ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு அமெரிக்கா ஆதரவளிக்குமென அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் திருமதி ஹிலாரி கிளின்ரன், இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸிடம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் திருமதி கிளின்ரனைச் சந்தித்து இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்து விளக்கினார்.
நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பாகவும் யுத்தத்திற்குப் பின்னரான அபிவிருத்திகள் குறித்தும் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. அரசாங்கம் நியமித்துள்ள ஆணைக்குழு, அமெரிக்காவின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுமெனவும், சுயாதீனமாகவும், பாரபட்சமின்றியும் செயற்படுவதற்கான அதிகாரம் இந்த ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார்.
திருமதி கிளின்ரனுடனான சந்திப்புக்குப் பின்னர் அவருடன் இணைந்து செய் தியாளர் மாநாட்டில் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் கலந்து கொண்டார். அரசாங்கம் உள்ளூர் மட்டத்தில் ஆரம்பித்துள்ள இந்த விசாரணையை முன்னெடுப்பதற்கு சர்வதேச சமூகம் ஒரு வாய்ப்பினை வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்ட பேராசிரியர் பீரிஸ், “ஆணைக்குழுவின் செயற்பாடுகளை ஒளிவுமறைவின்றி வெளிப்படைத் தன்மையாக மேற்கொள்வதற்கு இடமளிக்க வேண்டும்.
நிச்சயமாக இதனை முன்னெடுக்கின்ற வேளையில், ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவு தேவையென நாம் கருதினால், அந்தச் சந்தர்ப்பத்தில், ஐ.நா.வின் அனுபவங்களையும் ஆற்றல்களையும் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத் தயாராக உள்ளோம். ஆனால், ஆரம்பக் கட்டத்தில் ஆணைக்குழு அதன் பணிகளைச் செய் வதற்கு அனைத்துவிதத்திலும் அதற்கு ஊக்கமளிக்க வேண்டுமென நினைக்கின்றோம்” என்றார்.
யுத்த காலத்தில் அமுல்படுத்தப்பட்ட அவசரகால விதிகளுள் 70% பிரமாணங்கள் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பேராசிரியர் பீரிஸ், எஞ்சிய விதிகள் தேவைப்படும் காலத்திற்கு மேலதிகமாக ஒரு கணமும் நீடிக்கப்படாது எனச் சுட்டிக்காட்டினார்.
அதேநேரம், அமெரிக்கா இலங்கை தொடர்பில் அதன் பிரஜைகளுக்கு நீண்டகாலம் விதித்து வந்த பயண எச்சரிக்கையை விலக்கிக் கொண்டுள்ளமைக்கு அமைச்சர் பீரிஸ் நன்றி தெரிவித்தார். அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் திருமதி ஹிலாரி கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையின் நீண்டகால சிவில் யுத்தத்தின் நிறைவின் போது இடம்பெற்ற சம்பவங்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவின் அதிகாரங்களை இலங்கை அரசு உறுதிப்படுத்த வேண்டுமென வலியுறுத்தினார்.
“மூன்று தசாப்த பழைமையுடைய இந்த மோதலை ஆழமாக விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவின் ஆஜர்படுத்தப்படும் சாட்சிகளைத் தொடர்ச்சியாக விசாரணை செய்வதற்குரிய பரந்தளவிலானதும் போதுமானதுமான சட்ட விதிகளை இக்குழு கொண்டிருக்குமென நாம் எதிர்பார்க்கின்றோம்.
இந்த ஆணைக்குழுவின் அங்கத்தவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதுடன் அவர்கள் அரசுடன் இணைந்து செயற்பட வேண்டுமென அமெரிக்கா எதிர்பார்க்கின்றது. குழு உறுப்பினர்கள் சுயாதீனம் நடுநிலைமை மற்றும் அதிகாரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்” என்றும் தெரிவித்த கிளின்ரன் பாதிக்கப்பட்ட மக்களின் தேவையையும் விருப்பத்தையும் இந்த ஆணைக்குழு நிறைவேற்றுமென அமெரிக்கா நம்புவதாகவும் குறிப்பிட்டார்.