26

26

18 வயதுக்குட்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் அனைவரும் பெற்றோரிடம் ஒப்படைப்பு

ltte_child_soldiers.jpgபுனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களான 18 வயதுக்குட்பட்ட 198 பேர் நேற்று வவுனியாவில் அவர்களது பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டனர்.

இரத்மலானை இந்துக் கல்லூரியில் கல்வி கற்று வந்தவர்களே இவ்வாறு பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார். 18 வயதுக்குட்பட்ட 294 பேர் இரத்மலானை இந்துக் கல்லூரியில் கல்வி கற்றனர். இவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டும் வந்தது. இவர்களில் பலர் அவ்வப்போது பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டதாக தெரிவித்த அவர், நேற்றுடன் 294 பேரும் பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டு விட்டதாக அவர் குறிப்பிட்டார்.

தங்களது சொந்த பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் இவர்களுக்கு கல்வி கற்பிக்க பெற்றோர் விரும்பியதால் அவர்களிடம் இச்சிறுவர்களை கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவர்கள் கல்வியை தொடர்வதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசாங்கம் தொடர்ந்தும் செய்து கொடுக்கும் என்றும் ஆணையாளர் குறிப்பிட்டார்.

பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு அரசாங்கம் வழங்கும் வசதிகள் இவர்களுக்கும் பெற்றுக் கொடு க்கப்படும். இவர்கள் இரத்மலானையில் தங்கியிருந்த காலகட்டத்தில் இவர்களுக்குத் தேவையான விடுதி, உணவு உட்பட சகல அடிப்படை வசதிகளையும் அரசாங்கம் செய்து கொடுத்திருந்தது. இதேவேளை நேற்று பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்ட 198 பேருக்கான பிரியாவிடை வைபவம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்றதாகவும் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க மேலும் தெரிவித்தார்.

அரசின் வேண்டுகோளுக்கிணங்க புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்கும் விடயத்திலும், கல்வி கற்பித்தல் நடவடிக்கைக்கும் அகில இலங்கை இந்து மாமன்றமும் பூரண ஒத்துழைப்புக்களை வழங்கியது. நேற்று முன்தினம் நடைபெற்ற பிரியாவிடை நிகழ்வில் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் பொதுச் செயலாளர் கந்தையா நீலகண்டன் உட்பட முக்கியஸ் தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

வடக்கில் சேதமுற்ற வீடுகளை மட்டுமன்றி மக்களின் உடைந்த உள்ளங்களையும் மீள கட்டியெழுப்புவோம் -அமைச்சர் விமல்

vimal1.jpgவடக்கில் சேதமடைந்த வீடுகள், கட்டடங்கள் மட்டுமன்றி அந்தப் பிரதேச மக்களின் உடைந்த உள்ளங்களையும் மீண்டும் கட்டியெழுப்புவதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குறிக்கோளாகும் என்று வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் பொறியியல் துறை அமைச்சர் விமல் வீரவங்ச கிளிநொச்சியில் தெரிவித்தார். ஜனாதிபதியின் இக் குறிக்கோளை நிறைவேற்றுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்பட புதிய மக்கள் பிரதிநிதிகள் முன்வந்தமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் கிளிநொச்சியில் நடைபெற்றது. வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி வை. கேதீஸ்வரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அமைச்சர் இங்கு மேலும் உரையாற்றுகையில் :- இன்று நாம் இப்பிரதேசத்தின் கல்வி, வீடமைப்பு, சுகாதார, பெருந்தெருக்கள், இளைஞர் நடவடிக்கைகள் மற்றும் பொது வசதிகள் போன்ற துறைகள் தொடர்பாக மீளாய்வு செய்தோம். இங்கு மேலும் துரிதமாக மேற்கொள்ள வேண்டிய பல விடயங்கள் இருப்பது பற்றி சுட்டிக்காட்டப்பட்டது. எமது புதிய பாராளுமன்ற அங்கத்தவர்கள் ஒவ்வொரு துறைகளை பொறுப்பெடுத்து அந்தந்த துறை தொடர்பில் அவதானம் செலுத்தி செயற்பட தயாராக இருக்கின்றனர். இதற்காக பல அமைச்சுக்களின் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வீடமைப்பது பற்றி கருத்து தெரிவித்த அமைச்சர், இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தும் போது அவர்களுக்கான வீடுகளை அமைப்பதில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை துரிதமாக தீர்த்து வைப்பதற்கான வேலைத் திட்டம் ஒன்றை வடிவமைப்பதாகவும் அரச ஊழியர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய கிளிநொச்சி பிரதேசத்தில் சேவையாற்றும் அரச ஊழியர்களுக்கு வீடமைப்பு செயற்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படும் என்றும் கூறினார்.

வடக்கு, கிழக்கு பிரதேசங்களிலுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு உதவிகளையும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புக்களையும் அரசாங்கமே பெற்றுக்கொடுக்கின்றது என்று தெரிவித்த அமைச்சர் சில உதவிகள் நிவாரணமாக நன்கொடைகளாகவும் சில உதவிகள் அரசாங்கத்திடமிருந்தும் பெற்றுக் கொள்ளப்படுகின்றது என்றும் சுட்டிக்காட்டினார். கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான இந்த மீளாய்வு கூட்டத்தின்போது பின்வரும் விடயங்கள் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

கல்வி – உதித லொக்குபண்டார (எம்.பி),
சுகாதாரம் – டாக்டர் ரோஹன புஷ்பகுமார (எம்.பி), டாக்டர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே (எம்.பி)
வீடமைப்பு – அமைச்சர் விமல் வீரவங்ச, தேனுக விதானகம (எம்.பி.),
மீன்பிடி – அருந்திக பெர்னாண்டோ (எம்.பி),ஷெஹான் சேனசிங்க (எம்.பி),
பெருந்தெருக்கள் – பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகர, லொஹான் ரத்வத்தை (எம்.பி),
போக்குவரத்து – திலும் அமுனுகம (எம்.பி),
அத்தியாவசிய பொருட்கள் – ரொஷான் ரணசிங்க (எம்.பி),
பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் – கனக ஹேரத் (எம்.பி),
இளைஞர் விவகாரம், தொழிற் பயிற்சி – ஷாந்த பண்டார (எம்.பி)

டெங்கு ஒழிப்பில் அனைவரும் அர்ப்பணிப்புடனும் பொறுப்புடனும் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி

mahinda-raja_1.jpgடெங்கு ஒழிப்பு விடயத்தில் ஜனாதிபதி முதல் சாதாரண குடிமகன் வரை அர்ப்பணிப்புடனும், உறுதிப்பாட்டுடனும் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார். டெங்கு ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியை நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்து உரையாற்றிய ஜனாதிபதி நாடு பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுத்த வேளையில் வழங்கிய ஒத்துழைப்பினைப் போன்று, டெங்கு ஒழிப்பிலும் சகலரதும் அர்ப்பணிப்பையும் ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலணியின் கீழ் சகல அமைச்சுக்கள், உள்ளூராட்சி நிறுவனங்களுடன் இணைந்து கட்சி, இன, மத, பிரதேச பேதமின்றி சகலரும் செயற்பட்டால் டெங்கு ஒழிப்பை வெற்றிகொள்வது நிச்சயமெனவும் அவர் தெரிவித்தார். டெங்கு ஒழிப்பு சம்பந்தமான ஜனாதிபதி செயலணியை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் நிகழ்வு நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது,

நாடு என்ற வகையில் பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளுக்கு காலத்துக்குக் காலம் முகங்கொடுத்து அதில் வெற்றிகாணவும் எம்மால் முடிந்துள்ளது. டெங்கு நோயை இல்லாதொழிக்கும் பலம் எம் அனைவருக்கும் உள்ளது. அர்ப்பணிப்புடனும் உறுதிப்பாட்டுடனும் செயற்பாட்டால் இதில் வெற்றிகாண்பது உறுதி.

சுகாதாரத்துறைக்கு நிதி வழங்குவதில் அரசாங்கம் ஒருபோதும் பின்னிற்கவில்லை. யுத்தத்தைப் போன்றே சுகாதாரத் தேவைகள் அத்தனைக்கும் போதியளவு நிதியை சகல சந்தர்ப்பங்களிலும் நாம் ஒதுக்கியுள்ளோம்.

எவ்வாறெனினும் டெங்கு விரைவாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். ஜனாதிபதி செயலணியுடன் இணைந்து சகல அமைச்சுக்களும் இத்தேசிய செயற்றிட்டத்தில் பொறுப்புடன் செயலாற்ற வேண்டும். டெங்கு ஒழிப்பில் தமது கடமைகளுக்கு மேலதிகமான அக்கறையை சகலரும் வழங்குவது அவசியம். ஆரோக்கியமான எதிர்கால சந்ததியை உருவாக்குவதில் சகலரினதும் பங்களிப்பு அவசியமாகும்.

டெங்கு பாரதூரம் சம்பந்தமாக சகலருக்கும் விழிப்புணர்வூட்டுவதில் ஜனாதிபதி செயலணி முன்னிற்பதுடன், பாடசாலை மாணவர்கள் பெற்றோர்களுக்கும் இதனைத் தெளிவுபடுத்த வேண்டும். படித்தோர், படிக்காதோர் மேல் நிலையிலுள்ளோர், வறுமை நிலையிலுள்ளோர் என நுளம்பு பார்ப்பதில்லை. டாக்டர்கள், கல்விமான்கள், சாதாரண மக்கள் என கடந்த ஒருவருட காலத்தில் 340 பேர் டெங்கு நோயினால் மரணமடைந்துள்ளனர். மேற்படி செயலணியின் நடவடிக்கைகள் விரைவாக ஆரம்பிக்கப்பட்டு விரைவாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த செயலணியில் சுகாதார அமைச்சு கல்வி, இடர் முகாமைத்துவம், மாகாண சபைகள் உள்ளூராட்சி, தகவல் ஊடகத்துறை, பொது நிர்வாக உள்நாட்டலுவ ல்கள், சுற்றாடல் ஆகிய அமைச்சுக்களுடன் உள்ளூராட்சி மன்றங்கள், பிரதேச செயல கங்கள், நகர சபைகள், கிராமசேவகர் பிரிவுகள் ஆகியன இடம்பெறுகின்றன. இவற்றுடன் இணைந்த செயற்றிட்டங்கள் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

ஞாயிறு, போயா தினங்களில் தனியார் வகுப்புக்கு தடை

ஞாயிறு தினங்களிலும் போயா விடுமுறை தினங்களிலும் தனியார் வகுப்புகள் நடத்துவதற்கு தடைவிதிக்க ஊவா மாகாண சபை தீர்மானித்துள்ளது. இதன்படி இந்த தடை அடுத்த மாதம் முதல் அமுலுக்கு வருவதாக ஊவா மாகாண ஆளுநர் நந்தா மெத்யூ தெரிவித்தார்.

ஞாயிறு தினங்களிலும் போயா தினங்களிலும் தனியார் வகுப்புகள் நடத்துவதால் அறநெறிப் பாடசாலைகளுக்கு மாணவர் செல்வது பாதிக்கப்படுவதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் அறநெறிப் பாடசாலைகளுக்கு செல்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்த தடை அமுல்படுத்தப் படுவதாகவும் அவர் கூறினார். இது தொடர்பாக ஊவா முதலமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ பல மாதங்களாக சம்பந்தப்பட்ட தரப்புடன் ஆராய்ந்தார். இதன்படி நேற்று முன்தினம் மாகாண மாதாந்தக் கூட்டத்தில் யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் 26 புதிய தபாலகங்கள்

post-boxes.jpgவடக்கு கிழக்கில் புதிதாக 26 தபால் நிலையங்கள் நிர்மாணிக்கப்படுவதாக தபால் மா அதிபர் எம். கே. பி. திசாநாயக்க நேற்று கூறினார். இவை நவீன வசதிகளுடன் கூடியதாக அமைக்கப்படுவதாகவும் இவற்றுக்கு தொலைபேசி, கம்பியூட்டர் வசதிகள் என்பனவும் வழங்கப்படவுள்ளன.

யுத்த சூழ்நிலை காரணமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள தபால் நிலையங்கள் சேதமடைந்தன. யுத்தம் முடிவடைந்த பின்னர் தற்காலிக இடங்களில் தபால் நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இந்த நிலையி வடக்கு வசந்தம் திட்டத்தின் கீழ் 26 தபால் நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக தபால் மா அதிபர் குறிப்பிட்டார்.

ஜூன் முதலாம் திகதி முதல் படகுச் சேவை ஆரம்பம்

சங்குப்பிட்டிக்கும், யாழ். குருநகருக்கும் இடையிலான படகுச் சேவை எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

வட பகுதிக்கு அண்மையில் விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பூநகரி – சங்குப்பிட்டி பிரதேசத்திற்கு சென்று பார்வையிட்ட பின்னர் இந்தப் படகுச் சேவையை வெகு விரைவில் ஆரம்பிப்பதற்கான பொறுப்பை எடுத்துக்கொண்டதாக தெரிவித்த ஆளுநர் இதற்காக பாதுகாப்பு அமைச்சின் அனுமதியையும் பெற்றுத் தந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். முதற்கட்டமாக இரண்டு படகுகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

சுமார் ஆறு கிலோ மீற்றர் தூரத்திற்கு இந்த படகுச் சேவை நடத்தப்படவுள்ளது. இதன் மூலம் 2 1/2 மணி நேரப் பயணத்தை சுமார் 45 நிமிடங்களுக்குள் மேற்கொள்ள முடியும். கட்டணமாக பயணமொன்றுக்கு 40 ரூபா அறவிடப்படவுள்ளது என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.