14

14

வன்னி யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூரும் வகையில் மே 18 அன்று வவுனியாவில் ஆர்ப்பாட்டம் – எம் கெ சிவாஜிலிங்கம்

Sivajilingam_M_Kதமிழ்த் தேசிய விடுதலை முன்னணியும், புதிய இடதுசாரி முன்னணியும் இணைந்து எதிர்வரும் 18ம் திகதி வவுனியா நகரில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் மே மாதம் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, முள்ளியவாய்க்கால் பகுதியில் கொல்லப்பட்ட மக்களை நினைவு கூரும் முகமாகவும், சிறைகளிலுள்ள 12 ஆயிரம் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும், யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குமாறு வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெறவுள்ளதாகவும் திரு. சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, இடம்பெற்ற படுகொலைகளை விசாரணை செய்ய ஆணைக்குழு ஒன்றை அமைக்கக் கோரியும், காணாமல் போனவர்கள் அரசின் பாதுகாப்பில் இருந்தால் அவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும், அகதிகளாக்கப்பட்டுள்ள மக்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தக் கோரியும் இவ்வார்ப்பாட்டப் பேரணி நடைபெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

”ஜக்கிய தேசியக் கட்சியும் இனப்பிரச்சினை தொடர்பாக பல தவறுகளை விட்டுள்ளது!!!” ஏ.ஜே.எம் முசாமில் (ஜக்கிய தேசிய கட்சி) : வி ராம்ராஜ் (ரிபிசி பணிப்பாளர்)

Musamil_A_J_M_UNP_Cllrதமிழ் மக்களின் பிரச்சனைக்கு அரசியல் தீர்வுகாணவிட்டால் மீண்டும் தமிழ் மக்களின் பிரச்சனை பழைய நிலமைக்கே வந்துவிடும் என ஜக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மகாண சபையின் உறுப்பினரும் ஜக்கிய தேசிய கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவருமான ஏ.ஜே.எம் முசாமில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவினால் கொண்டுவரபட்ட அமரர் நீலன் திருச்செல்வத்தின் அரசியல் தீர்வுதிட்டத்தை ரணில் தலைமையிலான ஜக்கிய தேசிய கட்சி ஆதரித்து இருந்தால் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒரு சுமூகமான தீர்வைக் கண்டிருப்பதுடன்  ஜக்கிய தேசியக் கட்சியும் ஒரு அரசியல் ரீதியிலான வெற்றியைச் சந்தித்திருக்கும். அன்று ஜக்கிய தேசியக் கட்சி விட்ட தவறே இன்று ஜக்கிய தேசியக் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவாகும். தற்போதைய அரசாங்கம் ஒரு இனவாதத்தை முன்னிலைப்படுத்தி  தன் ஆட்சியை கொண்டு செல்வதுடன்  அதிலிருக்கின்ற அமைச்சர்களைக் கூட திருப்திப் படுத்திக் கொள்ள முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இது ஒரு ஆரோக்கியமான அரசியலுக்கு வழிசமைக்காது எனவும் தெரிவித்தார்.

உயர்நீதிமன்றத்தில் வழங்கிய தீர்ப்பு ஒன்றினை வைத்துகொண்டு இந்த அரசு சர்வதிகாரத்தனமாக செயற்படுகிறது எனவும் குறிப்பிட்ட அவர் ஜக்கிய தேசியக் கட்சியும் இனப்பிரச்சினை தொடர்பாக பல தவறுகளை விட்டுள்ளதை  நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அதே வேளை 13 ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை முழுமையாக அமுல் படுத்தினால் தமிழ் பேசும்மக்களின் பிரச்சினைக்கு ஆரம்ப நகர்வாக முன்னெடுத்து செல்லமுடியும் அதே வேளை 13 ஆவது அரசியல் சீர்திருத்தச் சட்டம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு முழுமையான தீர்வாகாகது. கிழக்கு மாகாணத்தில்  ஒரு மாகாண சபையை உருவாக்கி அதற்கு  ஒரு தமிழ் முதலமைச்சரையும் தெரிவு செய்து அதனுடைய அனைத்து அதிகாரங்களையும் சிங்கள ஆளுனரிடம் ஒப்படைத்ததன் மூலம் இந்த அரசின் கபடத்தனத்தை புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.

எனவே இந்த அரசாங்கம் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கான ஒரு அரசியல் தீர்வுத் திட்டத்தை முன்வைக்குமானால் ஜக்கிய தேசியக் கட்சி அதனை முழுமையாக ஆதரிக்கும் என்று வியாழக்கிழமை (13 May 2010) ரீபிசியில் நடைபெற்ற அரசியல் கலந்துரையாடலின் போது ஜக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாகாண சபையின் உறுப்பினரும் ஜக்கிய தேசிய கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவருமான ஏ.ஜே.எம் முசாமில் தெரிவித்தார்.

அமைச்சரவை பேச்சாளராக அமைச்சர் கெஹலிய

kahiliya.jpgஅரசாங் கத்தின் புதிய அமைச்சரவைப் பேச்சாளராக தகவல், ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நியமிக்கப்பட்டுள்ளார். இதனை தகவல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகம் ஆரியரட்ன எதுகல நேற்று (13) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் ஆரம்பத்தில் அறிவித்தார்.

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் முதலாவது செய்தியாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (13) நடைபெற்றது. இதில் அமைச்சர் ரம்புக்வெல்ல முதன் முதலாகக் கலந்துகொண்டு அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 5000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

house.jpgகிளிநொச்சி மாவட்டத்தில் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளவர்களில் 5,000 குடும்பங்களுக்கு இவ்வருட இறுதிக்குள் நிரந்தர வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் உலக வங்கி, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகராலயம், செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றின் நிதியுதவியுடன் இவ்வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. உலக வங்கியின் நிதியுதவியுடன் 3640 வீடுகளும் செஞ்சிலுவைச் சங்கத்தினால் 100 வீடுகளும் புதிதாக நிர்மாணிக் கப்படுவதுடன் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகராலயத்தினால் 1600 வீடுகள் புனரமைக்கப்படவுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். மேற்படி வீடுகளை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இவ்வருட இறுதிக்குள் நிர்மாணப்பணிகள் நிறைவுபெறுமெனவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை; யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு நிவாரணக் கிராமங்களில் தங்கியிருப்போரில் 1200 பேரை இவ்வாரத்தில் மீள் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் 540 பேர் மீள்குடியேற்றப்பட்டுள்ளதுடன் இவ்வாரத் தில் கிளிநொச்சி மாவட்டத்தின் கண் டாவளை மற்றும் கரச்சி உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் மேற்படி குடும்பங்கள் மீள் குடியமர்த்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து மீள்குடியேற்றப்படும் குடும்பங்களுக்குத் தற்காலிக வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட்டு வருவ தாகத் தெரிவித்த அவர்,

படிப்படியாக அனைவருக்கும் நிரந்தர வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார். அத்துடன் மீள் குடியேற்றப்பட்ட மக்களுக்கான உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

மக்களின் சிறப்புரிமைகளை பெற்றுக்கொடுக்க அமைச்சர்களின் அர்ப்பணிப்பு அவசியம்

president.jpgஅமைச்சர்கள் தமது சிறப்புரிமைகளைப் பெற்றுக் கொள்வதிலேயே குறிக்கோளாக இருக்காமல் மக்களின் சிறப்புரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதில் அர்ப்பணிப்புடனும் பொறுப்புணர்வுடனும் செயற்படுவது அவசியமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இதேபோன்று அரசாங்கத்தின் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக தம்மிடம் வரும் பொதுமக்களின் கண்ணீரைத் துடைப்பதில் அரச அதிகாரிகள் அர்ப்பணிப்புடனும் பொறுப்புணர்வுடனும் செயற்படுவது அவசியமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். காலி மலிகஸ்பே சுபத்ராராம விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இரண்டு மாடி தர்மசாலைக் கட்டிடத்தை உத்தியோகபூர்மாக அங்குரார்ப்பணம் செய்துவைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் பொலிஸ் சேவைக்கு 500 பேர் சேர்ப்பு; 367 பேருக்கு களுத்துறையில் பயிற்சி

யாழ். மாவட்டத்தில் பொலிஸ் சேவைக்கு சேர்த்துக்கொள்ளப்பட்ட 500 பேரில் 367 பேர் களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கிறது.

சுமார் மூன்று தசாப்தங்களின் பின்னர் முதல் முறையாக யாழ். நகரிலிருந்து பொலிஸ் சேவைக்கு ஆட்கள் சேர்த்துக்கொள்ளப் பட்டுள்ளனர்.  யாழ். மாவட்டத்திலிருந்து தகுதிவாய்ந்த இளைஞர்களை பொலிஸ் சேவைக்கு சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கடந்தாண்டு கோரப்பட்டிருந்தன.

இதன்படி சுமார் 6000 விண்ணப்பங்கள் பொலிஸ் திணைக்களத்திற்கு கிடைத்திருந்தன. குறிப்பிடப்பட்ட வயதெல்லையையும் விஞ்சிய வயதையுடையவர்களும், விவாகமானவர்களும் விண்ணப்பித்திருந்தனர். 6000 விண்ணப்பங்களுள் தகுதிவாய்ந்தவர்கள் எனக் கருதப்பட்ட 1500 பேர் மட்டுமே நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டி ருந்தனர்.

2009ஆம் ஆண்டு 6ஆம் மாதம் 26ஆம் திகதி நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சையின் பயனாக 500 பேர் மட்டுமே பொலிஸ் சேவைக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டு ள்ளனரென பொலிஸ் தலைமையக ஆட்சேர்ப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஐ. எம். கருணாரட்ன தெரிவித்தார்.

சேர்த்துக்கொள்ளப்பட்ட 500 பேருள் 367 பேர் களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் எஞ்சியவர்கள் 133 பேர் இரண்டாவது கட்டமாக களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரிக்கு அனுப்பப்படவுள்ளனர். பயிற்சி கள் முடிவடையும் பட்சத்தில் இவர்கள் யாழ். மாவட்டத்தில் குறிப்பாக வடமாகாண பொலிஸ் நிலையங்களில் வேலைக்கு அமர்த்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கிறது.