25

25

இறுதிப் போரில் தவறவிடப்பட்ட சிறுவர்களை அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை!

வன்னியில் இறுதிக்கட்டப் போரின் போது மக்கள் இடம்பெயர்கையில் தவறவிடப்பட்ட சிறுவர்கள்  தற்போது வவுனியா சிறுவர் இல்லங்களில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இச்சிறுவர்களை அடையாளம் காண உதவமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இறுதி யுத்தத்தின் போது அதிகளவிலான மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் பெற்றோரால் தவறவிடப்பட்ட சிறுவர்களும் சிகிச்சைக்காக வைத்தயசாலைகளில் சேர்க்கப்பட்டு, பெற்றோர் உறிவினர்களை இழந்த சிறுவர்களும் தற்போது வவுனியா சிறுவர் இல்லங்களில் சிறுவர் நன்னடத்தை பாராமரிப்பு திணக்களத்தினால் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

இச்சிறுவர்களை அடையாளம் காண உதவுமாறு பெற்றோர்கள், உறவினர்கள் கேட்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறான சிறுவர்கள் பலர் நீதிமன்றக் கட்டளையின் படி சிறுவர் இல்லங்களில் பாராமரிக்கப்பட்டு வரும் நிலையில், ஐந்து வயதிற்குட்பட்ட சிறுவர்கள் 26 பேரிடம் அவர்களது விவரங்கள் எதனையும் பெற முடியவில்லை. இதனால் அவர்களின் எதிர்காலம் குறித்து நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிரமங்கள் உள்ளதாக சிறுவர் நன்னடத்தைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அவர்களை அடையாளம் கண்டு, பெற்றோர் தொடர்பான தகவல்களை வழங்கும் போது அச்சிறுவர்களின் எதிர்கால நடவடிக்கைகளை  முறையாக மேற்கொள்ள முடியும் என தெரிவித்துள்ள சிறுவர் நன்னடத்தைப் பராமரிப்புத் திணைக்களம் இச்சிறுவர்களைத் தவறவிட்ட பெற்றோர்கள் அல்லது, பெற்றோரை இழந்த நிலையில் குழந்தைகளைத் தவறவிட்ட உறவினர்கள் வவுனியா மாவட்டச் செயலகத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த தாராகுளம் மக்களுக்கு 18 வருடங்களின் பின் குடியமர அனுமதி!

18 வருடங்களின் பின்னர் குடியமர அனுமதிக்கப்பட்ட தாராகுளம் மக்கள். தங்கள் பிரச்சனைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தெரிவித்துள்ளனர். யாழ்.நகரத்தின் மத்தியில் உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த தாராகுளம் மக்கள் தற்போது அப்பகுதியில் குடியேறி வாழ்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதி மக்கள் நேற்று (24-05-2010) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

அமைச்சரின் யாழ பணிமனையில் நடைபெற்ற சந்திப்பில் மக்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். தொடர்ந்து சுமார் பதினெட்டு வருடங்கள் அப்பகுதியில் வசிக்காத நிலையில். வீட்டு உறுதிகளை இழந்த குடியேற்றத்திட்ட உரிமையாளர்களுக்கு அதனைப் பெற்றுக்கொடுப்பதற்கும், சேதமடைந்துள்ள தங்கள் வீடுகளை புனரமைப்பதற்கும் உரிய உதவிகளை செய்து தருமாறு அம்மக்கள்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கேட்டுக்கொண்டனர்.

இது தொடர்பாக கவனம் செலுத்திய அமைச்சர் யாழ்.பிரதேசச் செயலர் மற்றும், வீடமைப்பு அதிகாரசபையின் யாழ்.பிராந்திய உதவிப் பொது முகாமையாளர் அகியோருடன் தொடர்பு கொண்டு விபரங்களைக் கேட்டறிந்து கொண்டதுடன், தாராகுளம் குடியேற்றத்திட்ட மக்களின் கோரிக்கைகள் விரைவில் தீர்த்து வைக்கப்படும எனவும் உறுதியளித்துள்ளார்.

சொந்த இடங்களில் வாழ வழிசெய்யுங்கள் உறவினர்களை கண்டுபிடிக்க உதவுங்கள் இடைத்தங்கல் முகாமில் உள்ளோர் தமிழ்க் கூட்டமைப்பிடம் கோரிக்கை

sa.jpg“சொந்த இடங்களில் நாங்கள் வாழ்வதற்கு வழி செய்து தாருங்கள், தடுப்பு முகாம்கள், சிறைகளில் உள்ளவர்களை விடுவிக்கவும் காணாமற்போனவர்களைக் கண்டுபிடிக்கவும் உதவுங்கள்” .இடம்பெயர்ந்து மீளக்குடியமர்த்தப்படுவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட வன்னி மக்களின் உருக்கமான வேண்டுகோள் இதுவே என்று தமிழ்க் கூட்டமைப்பு நேற்று திங்கட்கிழமை தெரிவித்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழு நேற்று கிளிநொச்சி மாவட்டத்தில் மீளக்குடியமர்த்தப்பட்ட பகுதிக்கான பயணத்தை மேற்கொண்டது. தர்மபுரம், கண்டாவளை முதலிய பகுதிகளுக்குப் பாராளுமன்றக் குழு விஜயம் செய்தது.மீளக்குடியமர்த்தப்படுவதற்காகக் கூட்டிவரப்படும் அகதிகள் மூன்று நாட்கள் தங்க வைக்கப்படுவதற்காக வைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாமுக்கும் பாராளுமன்றக் குழு சென்று பார்வையிட்டது. இடைத்தங்கல் முகாமில் மதியச் சாப்பாடாக சிவப்பு அரிசிச் சோறு, பலாக்கொட்டைக் கறியும் அவ்வகதிகளுக்கு வழங்கப்படுவதைக் காணக்கூடியதாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்க் கூட்டமைப்பின் 12 எம்.பி.க்கள் அடங்கிய குழுவினர் வன்னிக்கான நான்கு நாள் விஜயத்தின் இறுதி நாளான நேற்று திங்கட்கிழமை கிளிநொச்சி, திருவையாறு, தர்மபுரம், கண்டாவெளி மற்றும் பரந்தன் ஆகிய இடங்களுக்கு விஜயம் செய்தனர்.

இவ்விஜயம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவிக்கையில்;நேற்று கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயத்திலுள்ள இடைத்தங்கல் முகாம்களிலுள்ள மக்களைச் சந்தித்தோம். இங்கு நெட்டாகண்டல் சாந்தபுரம், செல்வபுரம் மக்கள் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமது சொந்த இடங்களை 15 தினங்களுக்கு முன்னர் பார்வையிடச் சென்றபோது வீடுகளில் கதவுகள், கூரைகள் கழற்றப்பட்டுள்ளதாகவும் அங்கு முகாம் அமைக்கும் நோக்கில் இவ்வாறு தமது வீடுகள் உடைக்கப்பட்டதாகவும் அம்மக்கள் எம்மிடம் முறையிட்டனர். தமக்கு பலநோக்குக் கூட்டுறவு சங்கத்திலிருந்து உணவு வழங்கப்படுவதாகவும் வாழ்வாதாரமான விவசாயத்தை மேற்கொள்ள முடியாமல் தேவைகளுக்குக் கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

இடைத்தங்கல் முகாம்களிலுள்ளவர்கள் தமக்கு தமது சொந்த இடங்களில் வாழவிடுமாறு கோரினர். இங்கிருப்பதைவிட தமது வீட்டு முற்றத்தில் இருக்கவிட்டாலே போதுமென்ற தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். எமக்கு இதுவே முதலில் தேவையானதால் இதற்கு நடவடிக்கையெடுக்குமாறு கோரினர்.

ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்கு

sri-lankan-railway.jpgவெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த ரயில் சேவைகள் நேற்று (24) முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ரயில் சமிக்ஞை விளக்குகள் சீர்செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே வர்த்தக அத்தியட்சகர் விஜய சமரசிங்க கூறினார்.

வெள்ளம் காரணமாக கரையோர வீதியிலும் புத்தளம் வீதியிலும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டதோடு நூற்றுக்கும் அதிகமான ரயில் சேவைகள் ரத்துச்செய்யப்பட்டன. ஆனால் நேற்று முதல் சகல ரயில் சேவைகளும் சுமுகமாக இடம்பெறுவதாக விஜய சமரசிங்க தெரிவித்தார்.

நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்கள் மூன்று மாத காலத்துக்குள் மீள்குடியேற்றம்

இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள சகல மக்களையும் எதிர்வரும் மூன்று மாத காலத்தில் மீள்குடியேற் றுவதுடன் மீள் குடியேற்ற பிரதேசங்களின் உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை துரிதமாக மேற்கொள்வதாகவும் அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

துரித மீள்குடியேற்றம் தொடர்பான விசேட உயர்மட்ட மாநாடு நேற்று வவுனியாவில் நடைபெற்றது. அமைச்சர்கள் உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டுள்ள இம் மாநாட்டில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன் அதற்குரிய நடவடிக் கைகளைத் துரிதப்படுத்துமாறும் சம்பந் தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

மீள் குடியேற்ற அமைச்சர் மில்றோய் பெர்னாண்டோ தலைமையிலான உயர் மட்டக் குழுவொன்று நேற்று வன்னிக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தது. இக் குழு இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களின் மீள் குடியேற்றம் மற்றும் அவர்களுக்கான தேவைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளதுடன் இவற்றை முறையாகச் செயற்படுத்தும் திட்டங்கள் தொடர்பாக ஆராயும் உயர்மட்ட மாநாடு ஒன்றையும் வவுனியா மாவட்ட செயலகத்தில் நடத்தியுள்ளது.

இம்மாநாட்டில் அமைச்சர்கள் மில்றோய் பெர்னாண்டோ, ரிஷாத் பதியுதீன், பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், வன்னி மாவட்ட எம். பி. நூர்தீன் மசூர், வவுனியா கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்கள், வன்னி மாவட்ட கட்டளைத் தளபதி, பிரதிப் பொலிஸ் மா அதிபர், திணைக்களத் தலைவர்கள், அரச உயரதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர். இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள வன்னி மாவட்ட மக்களை துரிதமாக அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்துவது சம்பந்தமாக இம் மாநாட்டில் முக்கிய கவனமெடுக்கப்பட்டுள்ளது.

மீள் குடியேற்றம் இடம்பெறும் பிரதேசங்களின் அடிப்படை வசதிகளைப் பெற்றுக் கொடுத்தல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களை மூன்று மாத காலத்திற்குள் மீள்குடியேற்றுவது தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன் அதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் பணிப்புரைகளை வழங்கியுள்ளனர்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த மீள் குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ மூன்று மாத காலத்தில் சகல மக்களையும் மீளக் குடியமர்த்துவதே அரசாங்கத்தின் நோக்கமெனவும் அதற்கான நிதியினை அரசு ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கண்ணி வெடி அகற்றும் நடவடிக்கைகளைத் துரிதப்படுதுதல், மீள் குடியேற்றம் தொடர்பில் 2010ம் ஆண்டுக்கான திட்டங்கள் குறித்தும் இம் மாநாட்டின் போது ஆராயப் பட்டுள்ளதுடன் மீள் குடியேற்றப்படும் மக்களுக்கான ஆரம்ப கொடுப்பனவுகள், வீடுகளை அமைப்பதற்கு வழங்க வேண்டிய உதவிகள் சம்பந்தமாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் பணிப்புரைகளை விடுத்துள்ளனர். செட்டிக்குளம் பிரதேச மக்களின் சுகாதார, பாதுகாப்பு சம்பந்தமாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன், அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோவின் கவனத்துக்குக் கொண்டு வந்ததுடன் சகல குறைபாடுகளையும் துரிதமாக நிவர்த்திக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மில்ரோய் உறுதியளித்தார்.

இம் மாநாட்டின் பின் அமைச்சர்கள் மடுத் திருத்தலதிற்கும் விஜயம் செய்ததுடன் அதனை அண்டிய பிரதேசங்களின் நிலைமைகளையும் நேரில் பார்வை யிட்டுள்ளனர்.

ஈழத்துத் தமிழ்நூல்களின் கண்காட்சியும் விற்பனையும் : என்.செல்வராஜா (நூலகவியலாளர்)

scan0004.jpgநூல்தேட்டம் வாயிலாக ஈழத்துத் தமிழ் நூல்களை பதிவுசெய்யும் எனது தொடர் பணியின் ஓரங்கமாக அண்மையில் இலங்கைக்கு விஜயம்செய்து பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் பிற நூலகங்களிலும் ஏழாவது தொகுதிக்கான நூல்களை தேடிப்பதிவுசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தேன். அவ்வேளையில் ஈழத்துத் தமிழ்ப் பதிப்பகங்கள் சிலவற்றுடன் தொடர்பினை ஏற்படுத்தியிருந்தேன். அவர்களின் வேண்டுகோளின்பேரில் ஒரு கலந்துரையாடலும் ஒழுங்குசெய்யப்பட்டது.
 
அதில் ஈழத்துத் தமிழ் நூல் வெளியீட்டாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் தமது வெளியீடுகள் புகலிடத்தைச் சென்றடையும் வாய்ப்பு இல்லாமை பற்றி குறிப்பிட்டார்கள். ஈழத்தின் போர்ச்சூழலால் எமது மக்களிடையே வாசிப்புக் கலாச்சாரம் அதள பாதாளத்தை நோக்கிச் சென்றுவிட்ட நிலையை அவர்கள் புள்ளிவிபரங்களுடன் குறிப்பிட்டார்கள். தாயகத்தில் மாத்திரம் நிலைபெற்ற விடயம் அல்ல இது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஒட்டுமொத்த ஈழத்துத் தமிழ் இனத்தையும் பாதிக்கும் விடயம்.
 
தரமான புத்தக விற்பனையாளர்கள் இல்லாத நிலையில் தனி மனித முயற்சியாகவாவது ஈழத்துத் தமிழ் நூல்களை புலம்பெயர்ந்த வாசகர்களிடம் எடுத்துச் செல்லும் பாரிய பொறுப்பொன்றையும் பரீட்சார்த்தமாக ஏற்றுக்கொண்டுள்ளேன்.
 
இதன் முதற்கட்டமாக லண்டனில் தேர்ந்தெடுத்த ஒரு வாசகர் வட்டத்தை உருவாக்கி அவர்களின் உதவியுடன் இலங்கைத் தமிழ் நூல்களையும் புகலிடத்து வாசகர் விரும்பும் நூல்களையும் லண்டனுக்கு வரவழைத்து விநியோகிக்கும் நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டு வருகின்றேன்.
 
அவ்வப்போது சிறிய புத்தக விற்பனை நிகழ்வுகளை ஏற்பாடு செய்து அதன்மூலம் ஈழத்து நூல்களை ஆர்வமுள்ள வாசகர்களிடம் சேர்ப்பிப்பது மற்றொரு முயற்சியாகும்.
 
இவ்வகையில் எதிர்வரும் ஜுன் 5ம் திகதி ஊடகவியலாளர் அ.மயூரனின் இராமாயணத்தின் வரலாற்று நம்பகத்தன்மை என்ற நூல் வெளியீட்டு நிகழ்வின்போது ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலய மண்டபத்தில் (London) சிறியதொரு நூல் கண்காட்சியும் விற்பனையும் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.
 
பிற்பகல் 3.00மணியிலிருந்து நூல்வெளியீட்டு நிகழ்ச்சி ஆரம்பமாகும்வரை இவ்விற்பனை இடம்பெறும். இந்நிகழ்வுக்காக கொழும்பிலிருந்து சேமமடு பொத்தகசாலையினரும் குமரன் புத்தக இல்லமும் தத்தமது அண்மைக்கால படைப்புக்களை அனுப்பிவைத்திருக்கிறார்கள். பல்துறைசார் நூல்கள் கொண்ட இத்தொகுதியில்  இருந்து நீங்களும் சில நூல்களைத் தேர்வுசெய்து கொள்வனவு செய்வீர்கள் என்று மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றேன்.
 
இது எவ்வித லாபநோக்கமும் இன்றி இடம்பெறும் ஒரு நிகழ்வு. நூலில் குறிப்பிடப்பட்ட இலங்கை விலையுடன் அதற்கான Air Fright செலவையும் சேர்த்த ஒரு தொகையே புத்தகத்தின் விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 
ஈழத்தின் அருகிவரும் புத்தக வெளியீட்டை புத்துயிர்பெறச் செய்யும் நோக்கிலும் புகலிடத்தில் ஒரு வாசிப்புக் கலாச்சாரம் உருவாகவும் இங்குள்ள வாசகர் வட்டங்களும் இலக்கிய வட்ட ஆர்வலர்களும் தமிழ்ப் பள்ளிகளும் தயவுசெய்து முன்வாருங்கள். உங்கள் வட்டத்தினருக்கும் புதிய நூல்களை அறிமுகப்படுத்த முயற்சிசெய்யுங்கள்
 
ஜுன் 5ம் திகதி ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தில் மாலை மூன்று மணியிலிருந்து சுமார் ஒன்றரை மணி நேரமாவது அங்கு காட்சிக்கு வைக்கப்படும் புதிய நூல்களை பார்வையிட்டு பெற்று குடும்ப நூலகங்களை உருவாக்க உதவுங்கள்.
 
அன்புடன்
என்.செல்வராஜா
24.05.2010

இந்திய அரசுடன் பேச்சுநடத்த தீர்மானம்

இந்திய மீனவர்கள் இலங்கை கரையோரப் பாதுகாப்புப் படையினரால் தொடர்ந்தும் கைது செய்யப்படுவதை தடுப்பதற்கு நிரந்தர தீர்வொன்றை காண்பதற்காக இந்திய அரசாங்கத்துடன் பேச்சு நடத்த கடற்றொழில் மீன்பிடி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்திய கடல் எல்லைக்குச் செல்லும் மீன்வர்கள் இந்திய படையினரால் கைதாவது அடிக்கடி இடம்பெறுவதால் இது தொடர்பில் நிரந்தர தீர்வு காண உள்ளதாக மீன்பிடி அமைச்சு உயரதிகாரி ஒருவர் கூறினார்.

இது தவிர இந்திய இலங்கை கடல் எல்லையை அறியக்கூடிய தன்னியக்க சமிக்ஞை முறையொன்றை அறிமுகப்படுத்தவும் அமைச்சு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சட்ட விரோதமாக இந்திய கடல் எல்லைக்கு செல்வதை தடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை உயர்மட்டக் குழுவொன்று விரைவில் இந்தியா செல்ல உள்ளதாகவும் அவர் கூறினார்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் பெண் புலி உறுப்பினர்களுக்கு தனியார் துறையில் தொழில் வாய்ப்பு

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் பெண் புலி உறுப்பினர்கள் நூறு (100) பேருக்கு தனியார் துறையில் தொழில் வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.

ஆடை இயந்திர தொழிற்பாட்டாளர்கள் என்ற அடிப்படையில் இந்த நூறு பேரும் எதிர்வரும் 31ம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் இரத்மலானையிலுள்ள ட்ரைஸ்டார் அபரல்ஸ் நிறுவனத்துடன் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் பெண் புலி உறுப்பினர்களிலிருந்து ஆடை இயந்திர துறையில் பயிற்சி பெற்ற நூறு பேர் இதற்காக தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருபவர்களுக்கு பயிற்சிகளை வழங்கிய பின்னர் தனியார் துறையில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் பிரிகேடியர் சுட்டிக்காட்டினார். தற்போது வழங்கப்பட வுள்ள தொழில் வாய்ப்பு தொடர்பாக குறித்த நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பின்னரே தொழில் வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.