“சொந்த இடங்களில் நாங்கள் வாழ்வதற்கு வழி செய்து தாருங்கள், தடுப்பு முகாம்கள், சிறைகளில் உள்ளவர்களை விடுவிக்கவும் காணாமற்போனவர்களைக் கண்டுபிடிக்கவும் உதவுங்கள்” .இடம்பெயர்ந்து மீளக்குடியமர்த்தப்படுவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட வன்னி மக்களின் உருக்கமான வேண்டுகோள் இதுவே என்று தமிழ்க் கூட்டமைப்பு நேற்று திங்கட்கிழமை தெரிவித்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழு நேற்று கிளிநொச்சி மாவட்டத்தில் மீளக்குடியமர்த்தப்பட்ட பகுதிக்கான பயணத்தை மேற்கொண்டது. தர்மபுரம், கண்டாவளை முதலிய பகுதிகளுக்குப் பாராளுமன்றக் குழு விஜயம் செய்தது.மீளக்குடியமர்த்தப்படுவதற்காகக் கூட்டிவரப்படும் அகதிகள் மூன்று நாட்கள் தங்க வைக்கப்படுவதற்காக வைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாமுக்கும் பாராளுமன்றக் குழு சென்று பார்வையிட்டது. இடைத்தங்கல் முகாமில் மதியச் சாப்பாடாக சிவப்பு அரிசிச் சோறு, பலாக்கொட்டைக் கறியும் அவ்வகதிகளுக்கு வழங்கப்படுவதைக் காணக்கூடியதாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்க் கூட்டமைப்பின் 12 எம்.பி.க்கள் அடங்கிய குழுவினர் வன்னிக்கான நான்கு நாள் விஜயத்தின் இறுதி நாளான நேற்று திங்கட்கிழமை கிளிநொச்சி, திருவையாறு, தர்மபுரம், கண்டாவெளி மற்றும் பரந்தன் ஆகிய இடங்களுக்கு விஜயம் செய்தனர்.
இவ்விஜயம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவிக்கையில்;நேற்று கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயத்திலுள்ள இடைத்தங்கல் முகாம்களிலுள்ள மக்களைச் சந்தித்தோம். இங்கு நெட்டாகண்டல் சாந்தபுரம், செல்வபுரம் மக்கள் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமது சொந்த இடங்களை 15 தினங்களுக்கு முன்னர் பார்வையிடச் சென்றபோது வீடுகளில் கதவுகள், கூரைகள் கழற்றப்பட்டுள்ளதாகவும் அங்கு முகாம் அமைக்கும் நோக்கில் இவ்வாறு தமது வீடுகள் உடைக்கப்பட்டதாகவும் அம்மக்கள் எம்மிடம் முறையிட்டனர். தமக்கு பலநோக்குக் கூட்டுறவு சங்கத்திலிருந்து உணவு வழங்கப்படுவதாகவும் வாழ்வாதாரமான விவசாயத்தை மேற்கொள்ள முடியாமல் தேவைகளுக்குக் கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
இடைத்தங்கல் முகாம்களிலுள்ளவர்கள் தமக்கு தமது சொந்த இடங்களில் வாழவிடுமாறு கோரினர். இங்கிருப்பதைவிட தமது வீட்டு முற்றத்தில் இருக்கவிட்டாலே போதுமென்ற தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். எமக்கு இதுவே முதலில் தேவையானதால் இதற்கு நடவடிக்கையெடுக்குமாறு கோரினர்.