வடக்கில் சேதமடைந்த வீடுகள், கட்டடங்கள் மட்டுமன்றி அந்தப் பிரதேச மக்களின் உடைந்த உள்ளங்களையும் மீண்டும் கட்டியெழுப்புவதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குறிக்கோளாகும் என்று வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் பொறியியல் துறை அமைச்சர் விமல் வீரவங்ச கிளிநொச்சியில் தெரிவித்தார். ஜனாதிபதியின் இக் குறிக்கோளை நிறைவேற்றுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்பட புதிய மக்கள் பிரதிநிதிகள் முன்வந்தமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் கிளிநொச்சியில் நடைபெற்றது. வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி வை. கேதீஸ்வரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அமைச்சர் இங்கு மேலும் உரையாற்றுகையில் :- இன்று நாம் இப்பிரதேசத்தின் கல்வி, வீடமைப்பு, சுகாதார, பெருந்தெருக்கள், இளைஞர் நடவடிக்கைகள் மற்றும் பொது வசதிகள் போன்ற துறைகள் தொடர்பாக மீளாய்வு செய்தோம். இங்கு மேலும் துரிதமாக மேற்கொள்ள வேண்டிய பல விடயங்கள் இருப்பது பற்றி சுட்டிக்காட்டப்பட்டது. எமது புதிய பாராளுமன்ற அங்கத்தவர்கள் ஒவ்வொரு துறைகளை பொறுப்பெடுத்து அந்தந்த துறை தொடர்பில் அவதானம் செலுத்தி செயற்பட தயாராக இருக்கின்றனர். இதற்காக பல அமைச்சுக்களின் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வீடமைப்பது பற்றி கருத்து தெரிவித்த அமைச்சர், இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தும் போது அவர்களுக்கான வீடுகளை அமைப்பதில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை துரிதமாக தீர்த்து வைப்பதற்கான வேலைத் திட்டம் ஒன்றை வடிவமைப்பதாகவும் அரச ஊழியர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய கிளிநொச்சி பிரதேசத்தில் சேவையாற்றும் அரச ஊழியர்களுக்கு வீடமைப்பு செயற்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படும் என்றும் கூறினார்.
வடக்கு, கிழக்கு பிரதேசங்களிலுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு உதவிகளையும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புக்களையும் அரசாங்கமே பெற்றுக்கொடுக்கின்றது என்று தெரிவித்த அமைச்சர் சில உதவிகள் நிவாரணமாக நன்கொடைகளாகவும் சில உதவிகள் அரசாங்கத்திடமிருந்தும் பெற்றுக் கொள்ளப்படுகின்றது என்றும் சுட்டிக்காட்டினார். கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான இந்த மீளாய்வு கூட்டத்தின்போது பின்வரும் விடயங்கள் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
கல்வி – உதித லொக்குபண்டார (எம்.பி),
சுகாதாரம் – டாக்டர் ரோஹன புஷ்பகுமார (எம்.பி), டாக்டர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே (எம்.பி)
வீடமைப்பு – அமைச்சர் விமல் வீரவங்ச, தேனுக விதானகம (எம்.பி.),
மீன்பிடி – அருந்திக பெர்னாண்டோ (எம்.பி),ஷெஹான் சேனசிங்க (எம்.பி),
பெருந்தெருக்கள் – பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகர, லொஹான் ரத்வத்தை (எம்.பி),
போக்குவரத்து – திலும் அமுனுகம (எம்.பி),
அத்தியாவசிய பொருட்கள் – ரொஷான் ரணசிங்க (எம்.பி),
பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் – கனக ஹேரத் (எம்.பி),
இளைஞர் விவகாரம், தொழிற் பயிற்சி – ஷாந்த பண்டார (எம்.பி)