மேற்குலகு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை; பிரதமர் ஜயரட்ண விசனம்

deemu.jpgவிடு தலைப்புலிகள் அமைப்பு மீள் எழுச்சி பெறுவதற்கு தமது மண்ணைப் பயன்படுத்தும் தமிழர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கையை மேற்கு நாடுகள் மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் டி.எம். ஜயரட்ண வலியுறுத்தியுள்ளார்.வெளிநாடுகளிலுள்ள 15 இலட்சம் தமிழர்களில் சிலர் இலங்கையில் தமது சமூகத்துக்கு தனியான தாயகத்தை அமைக்கும் நோக்கத்துடனான பிரிவினைவாத இயக்கத்தை அமைப்பதற்கு திட்டமிடுவதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

எமக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்காக தமது மண்ணை அவர்கள் பயன்படுத்துவதை நிறுத்துவது தொடர்பாக மேற்குலகு போதியளவு நடவடிக்கைகளை எடுக்கவில்லையெனவும் பிரதமர் கூறியுள்ளார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற வெளிநாட்டு நிருபர்கள் சங்க பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.

மே 17 தொடக்கம் சுவிட்ஸ்லாந்தில் மூன்று நாள் நிதிசேகரிக்கும் நடவடிக்கையை புலிகளின் அனுதாபிகள் ஏற்பாடு செய்திருப்பதாகவும் இதில் வெளிநாடுகளிலுள்ள தமிழர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டிருப்பதாகவும் பிரதமர் கூறியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மேலதிக விபரம் எதனையும் தெரிவித்திருக்கவில்லை என்று ஏ.எவ்.பி. செய்திச் சேவை குறிப்பிட்டிருக்கிறது.

மற்றொரு நாட்டிற்கு எதிராக எமது மண்ணைப் பயன்படுத்துவதை நாம் அனுமதிப்பதில்லை. இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துவது தொடர்பாக போதியளவு நடவடிக்கைகளை மேற்குலகு எடுக்கவில்லை என்று நான் நம்புகிறேன். அவர்கள் இது தொடர்பாக அதிகளவு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜயரட்ண கூறியுள்ளார்.

அதேசமயம் 1983 இலிருந்து அமுலிலிருந்து வரும் அவசரகால ஒழுங்குவிதிகள் எதிர்வரும் மாதங்களில் படிப்படியாக நீக்கப்படும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.எவ்வாறாயினும் வெளிநாடுகளிலுள்ள தமிழர்கள் புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்க திட்டமிடுவதாகவும் இலங்கைத் தீவுக்குள் உள்ள செயலற்று இருக்கும் போராளிகளை இயங்கவைக்க முயற்சிக்கக்கூடும் என்றும் பிரதமர் தெரிவித்ததாக ஏ.எவ்.பி. செய்திச் சேவை தெரிவித்தது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *