இலங்கை யில் பாதுகாப்பு நிலைமை முன்னேற்ற மடைந்துள்ளதையடுத்து அமெரிக்கா விடுத்திருந்த பயண எச்சரிக்கையை அமெரிக்க ராஜாங்க திணைக்களம் ரத்துச் செய்துள்ளது. அமெரிக்க ராஜாங்க திணைக்களம் இது தொடர்பான அறிவிப்பை கடந்த புதன்கிழமை விடுத்துள்ளது.
‘2009 நவம்பர் 19 ஆம் திகதி இலங்கைக்காக விடுக்கப்பட்ட பயண எச்சரிக்கையை 2010 மே 26 ஆம் திகதி அமுலாகும் வகையில் ரத்துச் செய்யப்பட்டுள்ளது’ என்று ராஜாங்க திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2009 மே 18 ஆம் திகதி இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றியை பிரகடனம் செய்தது. யுத்தம் முடிவுற்றதாக பிரகடனப் படுத்தப்பட்டதையடுத்து புலிகள் இயக்கம் கொழும்பிலோ அல்லது இலங்கையின் வேறு எந்த இடத்திலோ எந்தவொரு தாக்குதலையும் நடத்தவில்லை என்று ராஜாங்க திணைக்களத்தின் அறிக்கைகளில் மேலும் கூறப்பட்டுள்ளது.
மோதல் முடிவுற்ற சில தினங்களில் இலங்கையில் சுற்றுலாப் பயணத்துறை முன்னேற்றம் காணத் தொடங்கியது. அது முதல் சுற்றுலாத்துறை தொடர்ந்து அபிவிருத்தியடைந்து வரும் நிலையில் கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது நடந்து முடிந்த சில மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.