ஜீ. எல். பீரிஸ் – ஹிலாரி இன்று சந்திப்பு

hilary-gl.jpgஅமெரிக் காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் இன்று வெள்ளிக்கிழமை அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டனைச் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். இச்சந்திப்பானது திட்டமிட்டபடி வொஷிங்டனிலுள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலகத்தில் (இலங்கை நேரப்படி) இன்று மாலை நடைபெறவிருப்பதாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்ரனின் விசேட அழைப்பினையேற்றே வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கடந்த 23ம் திகதி அமெரிக்காவுக்குப் பயணமானார்.  அமைச்சரின் அமெரிக்காவுக்கான விஜயத்தையடுத்து, அந்நாட்டு மக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான பயண எச்சரிக்கை அமெரிக்க அரசாங்கத்தினால் திரும்பப் பெறப்பட்டுள்ளமையானது பாரிய திருப்பு முனையாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தை கடந்த 25ம் திகதி செவ்வாய்க்கிழமை சென்றடைந்த அமைச்சர் பீரிஸ் ஐக்கிய நாடுகள் சபையின் செயலகத்துக்கு விஜயம் செய்ததுடன் அங்கு ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகளையும் சந்தித்து பேச்சு நடத்தினார்.

ஐ. நா. செயலாளர் நாயகத்தின் பிரதான ஆலோசகர் விஜே நம்பியார், பிரதி செயலாளர் நாயகம் ஷின் பாஸ்கோ உள்ளிட்ட ஐ. நாவின் பல சிரேஷ்ட அதிகாரிகளையும் அமைச்சர் சந்தித்து நாட்டின் சமாதானம், அபிவிருத்தி, புனர்நிர்மாணம், மீள்குடியேற்றம் ஆகியவை குறித்து கலந்துரையாடினார். இச்சந்திப்புக்களில் அமைச்சருடன் ஜ. நா.வின் இலங்கைக்கான தூதுவர் கலாநிதி பாலித கொஹன, பிரதி நிரந்தர பிரதிநிதி பந்துல ஜயசேகர மற்றும் கவுன்சிலர் மக்ஸ்வெல் கீகல் ஆகியோரும் பங்குபற்றினர்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் பீரிஸ் நியூயோர்க்கில் உள்ள சர்வதேச தந்திரோபாய கற்கைகளுக்கான கேந்திரத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டார். இதில் அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்; இலங்கை மக்கள் கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் காணமுடியாத சந்தோஷத்தை தற்போது அனுபவித்து வருவதாக கூறினார்.

சமாதான முன்னெடுப்பு, நிறைவடையும் கட்டத்தில் உள்ள மீள்குடியேற்றம், குறிப்பாக வடக்கில் அமுல்படுத்தப்பட்டு வரும் புனர்நிர்மாணம், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு இதனால் முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சாதகமான சூழ்நிலை, இலங்கை யாப்பில் புதிய திருத்தங்களை மேற்கொள்ளக்கூடிய சாத்தியக்குகூறுகள் உள்ளிட்ட பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது அமெரிக்காவின் தலைநகரான வொஷிங்டன் டி.சியை வந்தடைந்திருக்கும் அமைச்சர் பீரிஸ், வெளியுறவு அலுவல்களுக்கான அமெரிக்க காங்கிரஸின் பிரதிநிதி ஹோவோர்ட் பேர்மன், இராஜாங்க உப குழுவின் தலைவர் நீட்டா லோகேய், அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் செனற்சபை உறுப்பினர்களையும் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். வொஷிங்டனுக்கான இலங்கைத் தூதுவர் ஜஸிய விக்கிரமசூரியவும் இதில் கலந்துகொண்டார்.
 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • பல்லி
    பல்லி

    நேற்று அமெரிக்காவுக்கு ஜயா அறிவுரை சொன்னா போல் உள்ளது; இன்று அம்மாவுடன் அன்பாய் பேசுவார், நாளை என்னவோ??

    Reply
  • Rohan
    Rohan

    “நேற்று அமெரிக்காவுக்கு ஜயா அறிவுரை சொன்னா போல் உள்ளது; இன்று அம்மாவுடன் அன்பாய் பேசுவார், நாளை என்னவோ??”

    அவர் யாருடைய பொக்கற்றுக்குள் இருக்கிறார் என்பதைப் பொறுத்தது!

    Reply
  • BC
    BC

    திருமதி ஹிலாரி கிளின்டன் யாருடைய பொக்கற்றுக்குள் இருந்து இதுவரை தமிழ் ஆட்களிடம் அன்பாய் பேசினார்!?

    Reply